ஒரு ஆலமரத்தை ஆட்கொண்ட ஆண்டவன்:
ஸ்ரீநாரத முனிவரிலிருந்து.. சைதன்யர் தொடங்கி... இறைவனைப் புகழ்ந்து பாடுவதும்.. அந்த பேரருட் கருணையை இதயத்திற்கு எடுத்துச் சென்று பக்தியை வளர்ப்பதுமே பாரத பண்பாடு.
நமது பண்பாடே பண்ணிலிருந்து தான் ஆரம்பித்திருக்கிறது..
அந்தப் பண்ணிலிருந்து ஆரம்பித்தவை எல்லாம் விண்ணிலிருந்து வந்தவை...
பண் பாடு அதுவே பண்பாடு..
அதில் இறைவனின் சாந்நித்யங்களை எடுத்துச் சொல்வதும் உள்ளடங்கிவிடுகிறது.
பக்தியைப் பரப்புவதே முக்திக்கான முழுமுதல் வழி..
பக்தியைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து தொடரும் சந்ததிக்கு விட்டு பின் வழி விட்டுச் செல்வதே பிறவிகளின் பூர்த்தி..
உபன்யாசகர்கள் தனது வாய்மொழியால் தர்ம யாகத்தை வார்த்தவர்கள்..
வேதங்கள்..சாஸ்திரங்கள்.. புராணங்கள்.. இதிகாசங்கள்.. பகவத் பாகவதங்கள் என அனைத்தையும் உள்வாங்கி மக்களுக்கு எளிதாய் மிக சுவாரஸ்யமாய் இதயத்தில் பதியும் வண்ணம் பரப்பிய இன்னும் பரப்பும் மகானுபாவர்கள் பாரதத்தின் சுபாவங்கள்..
அந்த பிரபாவங்கள் பிரவாகங்களாய்... ஆன்மிக அருவியாய் பெருக்கெடுத்தவர்களில் ஓர் அரிய மகானுபாவர் ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ பாலகிருஷ்ண சாஸ்திரிகள்...
சனாதனத் தேரில் சென்று பாருங்கள் இவரின் கை ரேகைகள் நிரம்ப இருக்கின்றன..
அப்படிப்பட்டவரை நமது சனாதன சாரதி ஆட்கொள்ளாமல் இருப்பாரா?
பாலகிருஷ்ண சாஸ்திரிகள் அதற்கு முன் சுவாமியை தரிசித்தவர் இல்லை...
தன்னை சுவாமிக்கு தெரியுமா என்பதும் அறிந்தவர் இல்லை...
சாஸ்திரிகளுக்கு சங்கீத ஞானம் அதிகம்.. ஸ்வர மயமாய்ப் பாடுவார்.. அவர் பேசுவதே ஸ்ருதியோடு இதயத்தை சுண்டி இழுக்கும்..
அந்த ஆகம இதயத்தில் ஆலிங்கன சாயி பஜன் தடம் பதிக்காமல் இருக்க முடியுமா..?
அடடா என்ன ஆனந்தம் .. அதி அற்புதம் என சாயி பஜனை கேட்டு வியப்பார்...
இல்லத்தில் இவரின் குழந்தைகள் வைத்த சுவாமி படமிருக்கும்...
பஜனை ஆனந்தம் கதவற்ற காதுகளில் அது நுழைந்து இதயத்தில் சென்று சுவாமியை அமர்த்தும் ..
ஒரு முறை பெங்களூர் சுவாமி பக்தை தெலுங்கில் எழுதிய சாயி மாதா எனும் புத்தகத்தை சுவாமி ஆசீர்வதிக்க.. அது மிகவும் பரவி தெலுங்கு பேசும் பக்தரிடையே புகழடைந்திருந்தது..
இதைத் தமிழில் மொழி பெயர்த்தால் நன்றாக இருக்குமே என பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க சுவாமியிடமே அந்தப் பெண்மணி ஆவல் தெரிவித்தார்..
அதற்கு சுவாமி தாராளமாகச் செய்யலாமே.. இதை மொழிபெயர்க்க சென்னையில் ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் பாலகிருஷ்ண சாஸ்திரிகள் அவர்களிடம் போய்ச் சொல்லி எழுதி வாருங்கள் என்றிருக்கிறார் எல்லாம் அறிந்த எம்பிரான் சுவாமி..
இதைக் கேள்விப்பட்ட சாஸ்திரிகள்.. "யார் புட்டபர்த்தி சுவாமியா.
அவரே தான் சொன்னாரா.. அவருக்கு என்னைத் தெரியுமா?" என ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.
மகான்களின் மனதில் இருப்பதும் மகா கடவுளான நம் சுவாமிக்கே தெரியும்.
சாஸ்திரிகளும் பதினைந்து நாளில் அந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.
நன்றி கூறிய பெண்மணியிடம் பிரதிபலனாக ஒன்றும் வேண்டியதில்லை.. சுவாமியை தரிசிக்க அவரைச் சந்திக்க தெய்வ சந்தர்ப்பம் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.
அரிய சந்தர்ப்பம் அருட் சங்கல்பத்தால் அரங்கேறுகிறது...
எழுத வைப்பவரும்.. எழுதும்போதே முதலில் படிப்பவரும் நம் சுவாமியே என்பதால்..
சாஸ்திரிகள் சந்திக்கும் போது "பாஹ உன்னாரு சாஸ்திரிகாரு" என். மொழிபெயர்ப்புக்கு பந்நீர் மொழி தெளித்திருக்கிறார் சாயி பரந்தாமன்..
உருகிப் போயிருக்கிறார் சாஸ்திரிகள்..
உக்ரத்தையும் உருக வைக்கும் சுவாமி முன் ஆன்மீகப் பனிமலை உருகிப் போனதில் என்ன ஆச்சர்யம்?...
இறை உபன்யாசமான இந்த புகழ் வாய்ந்த ஆலமரத்திற்கு நான்கு விழுதுகள்..
பத்மா.. மௌலி.. சங்கரி.. காந்தன்..
இதில் பத்மா அம்மையாருக்கு சுவாமி மேல் தீவிர பக்தி.. சதா சுவாமி சிந்தனையே..
ஒருமுறை எண்பதுகளில்.. சுவாமி சுந்தரத்திற்கு வந்திருக்கும் போது பெரம்பூரிலிருந்து சுவாமியை தரிசிப்பதெற்கென்றே பத்மா வந்திருக்கிறார்..
விடியாத அதிகாலை இருண்டிருக்கும் என்றபடியாலும்... சுற்றி வரை எங்கும் அதிகக் கட்டிடமில்லாத அந்த காலத்து வனாந்தர பகுதியான சுந்தரத்திற்கு தனது மகளின் பயணத்திற்காக காரை தானே ஓட்டி வந்திருக்கிறார் சாஸ்திரிகள் ..
அப்பா நீ உள்ளே வர்லியா.. இது பத்மா
இல்லை அதனால் கூட்டம் கவனத்தை திசை திருப்பும்.. ஆரவாரமாகும் .. சுவாமிக்கு தொந்தரவாக இருக்கும்.. காரிலேயே காத்திருக்கிறேன்.. தரிசனம் செய்துவிட்டு வா என்றிருக்கிறார் தலைப்பாகைக் கட்டி யாருக்கும் அடையாளம் தெரியாமல் கார் ஓட்டிவந்த சாஸ்திரிகள்..
உள்ளே சுவாமியின் சொற்பொழிவு விடிகாலைக்கு வெளிச்சம் தருவதாய் அமைந்து கொண்டிருக்கிறது..
சுவாமி பேசுவது மிகத் தெளிவாய்க் கேட்கிறது சாஸ்திரிகளுக்கு..
சுவாமி மடை திறந்த வெள்ளமாய்.. ஆர்த்தெழும் அருவியாய் வேதம்.. உபநிஷத்.. புராணங்கள் போன்றவற்றை மேற்கோள் காட்டி அனாயாசமாக.. சர்வ சாதரணமாக.. தெய்வத்துவமாய் உரையாற்றுகிறார்.
அது உரை இல்லை மறை.
சாஸ்திரிகள் அந்த மறையை மறைந்திருந்து மறைவிடத்தில் கேட்கிறார்..
என்ன ஞானம் சுவாமிக்கு .. அபாரம்.. அபாரம்... எல்லாம் அறிந்து வைத்திருக்கிறாரே என வியந்து போகிறார் சாஸ்திரிகள்.
ஆரத்தி மணி சத்தம் கேட்கிறது..
இனி மகள் வருவாள் என சாஸ்திரிகள் நினைத்த அடுத்த நொடி..
இருட்டில் யாருக்கும் தெரியாமல் காருக்குள் இருந்த சாஸ்திரி காரின் அருகில் ஒரு வெளிநாட்டு கார் மின்னலாய் வருகிறது..
இருட்டு என்பது மனிதக் கண்களுக்குத் தான் கதவுகளை அடைக்கும்.. அதனால் கடவுள் வெளிச்சத்தை என்ன செய்துவிட முடியும்?
கதவைத் திறந்த உடன்
சாஸ்திரி காரு மீரு இக்கட உன்னாரா? என காரிலிருந்து காரு என கதவு திறந்து சாயி கடவுள் அழைத்து அவராகவே வரவேற்கிறார் சாஸ்திரிகளை..
இதை முற்றிலும் எதிரே பார்க்காத சாஸ்திரிகள் பதட்டத்தில் தனது கதவைத் திறந்து சுவாமி என இதயம் திறந்து அழைத்து சாஷ்டாங்கமாய் .. அந்த இருட்டில்.. அந்த ரோட்டில் ... அந்த மண்ணில் விண்ணிலிருந்து எழுந்த சுவாமியை புழுதி உடலில் பட புல்லரித்துப் போய் வணங்கியிருக்கிறார்..
கண நேரத்தில் காருக்குள் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார் சுவாமி.
கும்பிடவே போகாமல் தெய்வம் குறுக்கே வந்தது இப்படித்தான்.
இதுதான் நம் சுவாமியின் தனிப்பெருங்கருணை..
சுவாமி வேதங்களை.. வேத விற்பன்னர்களை.. சாஸ்திரங்களை.. சாஸ்திரிகளை.. தெய்வத் தொண்டு செய்யும் தெய்வானுகூலம் பெற்றவர்களை மதித்து வரவேற்கும் கடவுட் லட்சணம் இது..
சாமுத்ரிகா லட்சணத்தாலும் வரையறுக்க முடியாதது நம் சுவாமியின் முக அழகும்.. அக அழகும்
அது 1973... பத்மா அம்மையாருக்கு வயிற்றுப் பகுதியில் கேன்சர்.. மரணப் படுக்கையில் இருக்கிறார்...
சாஸ்திரிகளின் தம்பியான வள்ளீசன் தீவிர சுவாமி பக்தர் ..
தனது அண்ணனிடம்.. பாலு சுவாமியிடம் "பத்மாவைப் பற்றி சொல்வோம்" என தீவிர யோசனை சொல்லியிருக்கிறார் ஹைதராபாத்'திற்கு உபன்யாசம் செய்ய வந்தவரை..
அதே ஹைதராபாத்திற்கு தான் சுவாமியும் தரிசனம் தர வந்திருக்கிறார்..
இல்லடா.. வேணாம்.. இது அவ கர்மா.. இதப் போய்லாம் கேட்டு சுவாமியை தொந்தரவு செய்யக் கூடாது என மிக நிதானமாய் மிகத் தெளிவாய் சொல்லியிருக்கிறார் இதயத்தில் பழுத்த பழமான சாஸ்திரிகள்...
இவரின் தம்பியோ விடாப்பிடியாக இருக்க...
சரி என்று சென்றிருக்கிறார்..
ஹைதராபாத் ஷிவம் அதில் சிவனாய் நடந்து தரிசனம் தர வருகிறார் சுவாமி...
இவர் அருகிலும் வருகிறார்.. வந்து ஒரே ஒரு புன்னகை மட்டும் உதிர்த்து கடந்து சென்றிருக்கிறார்...
பாத்தியாடா .. அப்பவே சொன்னேன்ல.. இது அவ கர்மா.. ஆனா சுவாமியோட புன்னகை எங்கிட்ட ஒண்ணு சொல்லிப் போனது என்கிறார் சாஸ்திரிகள்
என்ன என்று கேட்ட தம்பியிடம்..
அவளுக்கு நான் நற்கதி அளிப்பேன்னு சுவாமி புன்னகையால பேசிட்டு போறார்டா என்கிறார்..
என்ன பக்தி.. என்ன ஞானம்..என்ன தெளிவு.. என்ன நித்சல உணர்வு... என்ன சரணாகதி...
அது தான் பாலகிருஷ்ண சாஸ்திரிகள்...
சாஸ்திரிகள் சுவாமியை தரிசனம் செய்த மூன்றாவது நாள் சுவாமி புன்னகையின் அர்த்தம் போலவே அவரது மகள் பத்மா சுவாமியின் பத்ம பாதம் அடைந்தார்..
சாஸ்திரிகள் வெறும் மனனம் செய்து சொற்பொழிவு ஆற்றியதில்லை...
சத்தியம் உணர்ந்தவர்.. உணர்ந்ததைப் பிரவாகமாய்ப் பேசுபவர்.. பேசுவதில் கேட்பவரை கண்கலங்கச் செய்து உணர வைப்பவர்..
இன்னும் யூட்யூப் காணொளிகளின் வாயிலாக... "வாயிலாக" உணர வைத்துக் கொண்டிருக்கிறார்...
சாஸ்திரிகளின் தியாகராஜ ராமாயணம் மிகப் பிரபலம்..
இப்படித் தான் நம் சுவாமி சமயப் பெரியவர்களை சமயம் பார்த்துப் பிறக்க வைத்து சமயம் வளர்க்க வைத்திருக்கிறார்..
வங்கியில் வேலை பார்த்த சாஸ்திரிகளுக்கு வைப்புத் தொகை வேத நெறி மட்டுமே..
காசோலை கடவுளருளே..
அதில் தான் சுவாமி சத் வாழ்க்கை என்று அவருக்கு கையெழுத்திட்டிருக்கிறார்..
வங்கி வேலை முடித்து மாலை உபன்யாசம் செய்யும் இடத்திற்கு விரைந்து.. உடுப்பு மாற்றி.. சந்தியா வந்தனம் செய்து..
மேடையில் அமர்ந்து தியான ஸ்லோகம் சொல்லும் போது தான் அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு சாஸ்திரிகளுக்கு தெரியும்...
சுவாமி உள்ளே பேசுகின்ற போது அவருக்கு உபன்யாசம் உபநிஷதமாய் வெளிவருகிறது...
இன்னமும் இப்படி ஒரு சில மகானுபாவர்கள் இருப்பதால் தான் நம்மையும் பார்த்து வானிலிருந்து மழை பொழிய அனுமதிக்கிறார் சுவாமி...
சுவாமியின் சத்தியங்களை உபன்யாசம் நிகழ்த்திய (தற்போது சத்ய சாய் யுகம் யூட்யூப் சேனலில்) திரு. ஜெயராம சர்மாவும் சாஸ்திரிகளின் ரத்த சம்மந்த உறவுக்காரரே... (தாயின் தம்பி)
ஒரு முறை வீட்டில் இருந்த வீணை எடுத்து கற்காத வீணையில் சுதி வைத்துத் தானே வாசித்திருக்கிறார்..
இசை மழையே பொழிந்திருக்கிறது..
ரொம்ப சுலபமா இருக்கேடா.. இது... இது தான் ஸ்வரம் என தந்திக்கு செய்தித் தந்தி அனுப்புவதாய் பேசியிருக்கிறார்.
சாயி சரஸ்வதி அவர் அகத்தில் குடி கொண்டிருந்த போது வீணை மழை அரிதானதில்லை தான்..
தனது தந்தையின் சுவாமி அனுபவங்களை .. அரிய நிகழ்வுகளை கண்ணில் நீர் ததும்ப .. நெஞ்சில் உருக்கமாய் பேசினார் மகன் திரு காந்தன்..
இவர் சுவாமி பக்தரா..
இவரின் சுவாமி அனுபவங்கள்?
ஆலமரத்தின் நிழலை சுவாமி காற்றலையோடு அனுபவித்தோம்.. அதன் விழுது பேசிய சுவாமி எழிலை..
மிக மிக விரைவில்..
முக்தியின் இலக்கியம் சுவாமி..
பக்தியின் இலக்கணம் பாலகிருஷ்ண சாஸ்திரிகள்
சாய்ராம்🙏🏻
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக