சுவாமியின் சாந்நித்யம் சம்பவமாகிறது ... அதுவே நமக்கு அனுபவமாகிறது... மனித வாழ்வில் எல்லா நிகழ்வையும் சுவாமியே நிகழ்த்துகிறார்.. காலம் வருகையில் அதை உணர்த்துகிறார்.. ஆச்சர்யமான சுவாமி அனுபவங்கள் அநேகம்... பிரபலங்களும்... சராசரிகளும் சுவாமியின் பார்வையில் சமமானவர்களே... இந்த பக்தர்க்கு நிகழ்ந்திருப்பது ஆச்சர்யமான அனுபவங்கள்.. ஒவ்வொரு சுவாமி அனுபவமும் ஒவ்வொருவிதமான பகவத் கீதை உரை..
நீங்கள் வாசிக்கும் அனுபவமோ நேசிக்கும் சுவாமியை இன்னும் இன்னும் நெருக்கத்தில் அழைத்து வருகிறது..
நமக்குத் தான் சுவாமி நிகழ்த்தும் அனுபவங்கள் ஆச்சர்யங்கள்.. சுவாமிக்கு இது அன்றாட நிகழ்வுகளே!
நமக்குத் தான் சுவாமி நிகழ்த்தும் அனுபவங்கள் ஆச்சர்யங்கள்.. சுவாமிக்கு இது அன்றாட நிகழ்வுகளே!
சுவாமி யாசகமாகவும்.. வாசகமாகவும்... சூசமாகவும் வந்து அருள் புரிகிறார்.
இல்லத்தில்
தந்தையும் அடியேனும் என்றபடியால் உணவருந்த உணவு விடுதிக்கே செல்வேன்.
சில விடுதிகளின் உணவுகள் வயிற்றில் புளியைக் கரைக்கும்.
என்னடா செய்வது. எங்கே செல்வது என யோசித்த காலங்கள் அவை.
அடியேன் அருகில் அணுகுண்டு வீசினாலும் பொறுப்பேன்... பூண்டுகள் குழம்பிலோ கூட்டிலோ இருந்தால் அரை கிலோமீட்டர் தாண்டி வந்துவிடுவேன்.
அசுரர்களின் பற்களே பூண்டுகள் என் வரையில். அந்த வாசனையே பிடிக்காது.
பிராணாயாமத்திற்கும்.. தியானத்திற்கும் அவை உகந்தவை அல்ல...
பாட்டி வளர்ப்பு என்பதாலும் இப்படி...
என்ன சுவாமி செய்வது என மிதி வண்டி அழுத்தி கொஞ்ச தூரத்தில் வலது பக்கம் திரும்பினேன்..
ஆச்சர்யம் தாளவில்லை..
அந்தக் கடையின் பெயரை வாசித்து உடனே உள்ளே சென்றேன்...
என்று சுவாமியிடம் உணவுக்காக கவலைப் பட்டேனோ அன்று தான் கடையைத் துவங்கி இருந்தார்கள் ...
உள்ளே சென்றதும்.. சுவாமி படம் தரிசித்தது தான் தாமதம்..
சுவாமி இது உன் கிருபையே என உருகினேன்..
நீயே அன்னபூரணி..
இனி இதுவே அடியேன் உணவு அறை.. உன் சங்கல்பம் என சுவாமியை நினைத்துப் பூரித்தேன்..
அன்றிலிருந்து தினந்தோறும் அடியேன் மதிய உணவு சுவாமி உணவகத்தில் தான்
அந்தக் கடையின் பெயர் ஸ்ரீ சாயி புட்ஸ்...
அவர்களின் ஊர் அச்சிறுபாக்கம். பழம்பெரும் சிவ ஸ்தலம் அச்சிறுப்பாக்கம்.
அங்கே மிகப் பிரபலமான கணபதி ஹோட்டல் நடத்துவது இவர்கள் சொந்தங்களே.
மூன்று தலைமுறையாக நளபாகத் தொழில்.
அனைவரும் சுவாமி பக்தர்கள்.
உங்கள் குடும்பத்தில் யார் முதலில் சுவாமி பக்தரானது என உணவருந்திக் கொண்டே கேட்டேன்..
எனக்குத் தான் சுவாமி முதலில் அருளினார் சாய்ராம் என்றார் ரவி சாய்ராம்..
மிக மிக சுறுசுறுப்பானவர்..
ஒருமுறை அடியேனிடம் சுவாமி மோதிரம் கேட்டார் இவர். பிறகு நம் சுந்தரத்திலிருந்து சுவாமி வழங்க வைத்தார்..
சுவாமியை விரல்களில் தாங்கிக் கொண்டே தான் அந்தக் கை அனைவருக்கும் உணவைப் பரிமாறிக் கொண்டிருக்கிறது.
சுவாமி மோதிரம் தாங்கிடும் அனைத்து கரமும் வெறும் கரமல்ல அது சுவாமியின் வரம்..
அடியேன் சாதத்தில் சாம்பாரை ஊற்றிய போது...
பேச ஆரம்பித்தார் திரு ரவி சாய்ராம்
திரு. ரவி சாய்ராம்
அவர்களின் குடும்பமே சுவாமிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட குடும்பம்
இப்படி நிகழ்ந்திருக்க..
ஒரு பஜனைக்கு.. அவர்கள் அழைக்காமலேயே கால்கள் தானாய் சென்றிருக்கிறது...
ரவி சாய்ராமுக்கு பஜனையின் இறுதியில் பிரசாதம் வழங்கப்பட்டிருக்கிறது.
தொன்னையை ஏந்துகிறார்..சரியாக இவர்கள் அதில் பிரசாதம் இட ஒரு சிட்டிகை விபூதியோடு அந்த சுண்டல் பிரசாதம் இவருக்கு விழுந்திருக்கிறது..
எடுத்து வந்த பாத்திரத்திலும்.. ஏந்திய தொன்னையில் இல்லாத விபூதி.. வழங்கும் போது
சுண்டலின் மேல் சிட்டிகை விபூதி கண் சிமிட்டிக் கொண்டிருக்கிறது..
மிகுந்த ஆச்சர்யத்துடன் ரவி சாய்ராம் அதை அப்படியே சாப்பிடுகிறார்..
அன்று இரவு.. நதியாய் ஒருக்களித்து புரண்டு படுத்த ரவி சாய்ராமின் வயிற்றில் யாரோ கம்பு சுற்றி வித்தை காட்டுவது போல் இருந்தது...
வயிற்றை தடவுகிறார்..
சில நொடிகளில் இவரின் வயிற்றுப்புற அருகாமையில் சுவாமி நின்ற கோலத்தில் சதை உடம்பாய் காட்சி தருகிறார் ... இவரால் நகரவே முடியவில்லை..
அப்படியே சுவாமியை கண்கலங்கி தரிசனம் செய்திருக்கிறார்..
அன்றிலிருந்து தான் சாய்ராம் சுவாமி பக்தனானேன் என்றார்..
சாப்பாட்டில் அடியேன் மோர்க்குழம்பிற்கு வந்திருந்தேன்...
தனது தாய் என்றால் அவருக்கு உயிர்.
அம்மாவைப் பற்றிப் பேசும் போதே கண்கலங்குகிறார்.
இவருக்கு அம்மாவைப் பிடித்திருக்கிறது என்பதால் சுவாமியின் அருள் இவரைப் பிடித்திருக்கிறது.
திரு ரவி அவர்களின் தாய் தந்தையர்
தாய் தனது இறுதி நொடியை அடைந்து இடு காடு செல்கிறாள்.
இவரே குடும்பத்தில் கடைக்குட்டி . செல்லம் அதிகம். தாளவில்லை..
அதே நாள் நள்ளிரவு இடுகாட்டுக்குள் செல்கிறார் அழுதுகொண்டே.
பங்காரு அங்க ஏன் போற.. நில்லு.. இப்ப அங்க போகக் கூடாது என சுவாமி இடுகாட்டு முகப்பில் உடம்பும் உயிருமாய் காட்சி தந்து தடுத்து நிறுத்துகிறார்.
இல்ல சுவாமி என் அம்மா எப்படி இருக்கான்னு பாக்கனும்.. இது ரவி சாய்ராம்.
பங்காரு சொன்னா கேளு.. உன் அம்மா திருப்தியா இருக்கா.. அவ அன்னபூரணி .. ஊருக்கெல்லாம் படி அளந்திருக்கா..
எனத் தோளைத் தொட்டு சமாதானம் செய்திருக்கிறார்..
அந்த கும் இருட்டில் வெளிச்சமாய் சுவாமி காட்சி அளித்தது இதமாக இருந்திருக்கிறது அவருக்கு.
பிறகு தட்டுத்தடுமாறி வீடு வந்து சேர்ந்ததும்... அண்ணன்மார்கள் எங்கே சென்றாய் எனக் கேட்டதற்கு அவர் சமாளித்ததும்.. வேறெங்கோ பயணித்த உணர்வாய் அடுத்த நாள் காலை எழுந்த பிறகே நேற்றைய சம்பவங்கள் நினைவுக்கு வர...
இவர் உடல் முழுதும் சுவாமியின் விரல் பதிந்த விபூதித் தடங்கள் சொல்லியது.. நேற்று நடந்தது கனவல்ல.. நேரடிப் பதிவுகள் என...
இதைச் சொன்ன போது சுவாமியின் கருணை நினைத்து அடியேன் உருகினேன். மோர்க்குழம்பு தேன்குழம்பானது.
ஒருநாள்.. இவர் தந்தை வழக்கத்திற்கு மாறாக காவி வேஷ்டி அணிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார்.
பொதுவாக இவர் தந்தை வெள்ளை வேட்டி மட்டுமே அணிந்திருப்பார் சமையல் வல்லுநர் என்பதால் ...
என்னப்பா இது? என இவர் கேட்க...
சுவாமி கொடுத்தார்டா என்றிருக்கிறார் தந்தை.
சட்டென ரவி சாய்ராம் உடல் சிலிர்க்கிறது.. ஒரு அரிய அற்புத அனுபவம் நேர்ந்திருக்கிறது..
இவர் தந்தையின் தலை சுவாமி தலையாகவும்.. உடல் தந்தையுடையதாகவும் மாறிப் போக...
உடனே புல்லரித்துப் போய் பாத நமஸ்காரம் செய்திருக்கிறார்..
அடியேன் இதை காட்சிப்படுத்திப் பார்க்க அமானுஷ்யமாய் .. அரிய அற்புதமாய்த் தோன்றியது ...
இவர் பாத நமஸ்காரம் செய்து எழுந்து பார்க்க பழைய தந்தை உருவம் வெள்ளை வேட்டியோடு தெரிகிறது என கண்ணில் நீர் தேங்க சொல்லி முடித்தார்..
அடியேனும் தயிர்சாதம் முடித்து கை கழுவப் போனேன்...
மாயை எனும் எச்சில் கையை விட்டு கொட்டும் நீரில் போய்க் கொண்டிருந்தது..
சுவாமி அற்புதங்கள் ஏராளம்.. எல்லா அற்புதமும் நமக்கு ஐந்து விஷயத்தை உணர்த்துகிறது
1.சுவாமி கடவுள்
2.சுவாமி கண்காணிக்கிறார்
3.சுவாமி கவனிக்கிறார்
4.சுவாமி காப்பாற்றுகிறார்
5.சுவாமி கைவிடவே மாட்டார்
என்பதை...
இந்த சத்தியம் உணர உணர ...
சாய் புட்ஸ்'சின்
இலைவாழை விருந்தாய் இதய வாழையில் பக்தி சுடச் சுட சரணாகதியைப் பரிமாறும்..
முற்பிறவிகளும் சேர்ந்து இப்பிறவியில் சுவாமி அருள் உண்டு பசியாறும்
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக