தலைப்பு

வியாழன், 27 பிப்ரவரி, 2020

கிரேஸி கிரியேஷன்ஸ் இயக்குநர் திரு. S.B. காந்தன் அவர்களின் சாயி அனுபவங்கள்!


🌹கலை விழுதை ஆட்கொண்ட சாயி:

சுவாமி தியானத்தில் வழிநடத்துகிறார்.. எழுத உந்துகிறார்..
பயணத்தை சவுகரியப்படுத்தி அனுபவங்களைப் பதிவேற்றம் செய்யும் பாக்கியம் தருகிறார்..

பக்தர்களின் அனுபவங்களை பதிவாக்குவது அணில் சேவை அல்ல.. கனல் சேவை .. பலர் இதய விளக்கில் ஆன்ம ஜோதி அணையாமல் அது சுடரை இடரின்றி ஒளிர வைக்கிறது...

விரலை அசைவித்து பக்தர்களின் குரலை எழுத்தாக்குகிறார்.
எழுத்தால் சுவாமியின் சாந்நித்யம் மேல் சிலர் கொண்டிருக்கும் சந்தேகங்களைத் தாக்குகிறார்..

சிறுவயதில் பெற்ற தாயைப் பிரிந்த அடியேனின் வெறுமைப் பொழுதை தாயுமானவ சாயி வந்திரங்கி வெளிச்சப் பொழுதாக்கினார்.
தாயின் மரணப் பிரிவு அடியேன் மேல் உமிழ்ந்த எச்சிலை தன் பச்சிளம் கையால் சுவாமியே துடைத்தார்..

அடியேனை சிரிக்க வைக்க ஒரு நாடகக் குழுவையே நடத்தினார்..

அந்த கேசட்டை கேட்கிறேன்..

சாய்ராம்
கிரேஸி கிரியேஷன்ஸ் வழங்கும்
மதில் மேல் மாது

"சாய்ராம்" என்ற உடன் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது..
மதில் மேல் பூனை தானே.. என்று சிரிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது..
சிலிர்ப்பையும் ... சிரிப்பையும் ஒன்றிணைந்த கலவையாக்கி அடியேன் கவலையை சலவைக்குப் போட்டு இதயத்தை லேசாக்கினார் என் தாய் சாய்...

அந்த கிரேஸி கிரியேஷன்ஸ் இயக்குநரை சந்திக்க சுவாமி அனுமதித்தார்...
அவரின் பெயரை நாடகத்தில் பார்த்திருக்கிறேன்..

பிற்காலத்தில் இன்னார்(பிரம்மஸ்ரீ T.S பாலகிருஷ்ண சாஸ்திரிகள்) மகன் என.. இன்னார்(T. S. B. K மெளலி) தம்பி என தகவல் சேகரித்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்..


சாய்ராம் என்ற ஒலி நாடா குரல் இதோ அடியேனிடம் நேர்காணலில் பேசப் போகிறது...

பிள்ளையார் சுழி பாபா சுழியானதால் பலரின் தலைச் சுழியை ஆச்சர்யங்களாய் மாற்றி இருக்கிற அந்த நாடகக் குழுவின் இயக்குநர்..

நிச்சயம் சுவாமி பக்தர் தான் இந்தக் குழுவில் தலையாய ஒருவர் எனக் கருதிய காலம் உண்டு...

பேசிய பிறகு இந்தக் குழுவில் பலரும் சுவாமி பக்தர் என அறிந்து பூரித்து போனேன் தற்போது..

திரு S.B.Khanthan சாய்ராம்..
கிரேஸி கிரியேஷன்ஸ் இயக்குநர்..

இவரை முதன்முதலில் சுவாமி சந்திக்க வைத்தது அடியேனை சுந்தரத்தில்...

இவரின் தந்தையைப்  போன்று இவருடைய உருவம்...
பணிவான நடை.. அணுகுகையில் கனிவான மனம்...

ஆச்சர்யங்கள் பல மேடையில் அரங்கேற்றிக் கொண்டிருந்தும் அலட்டல் இல்லா அற்புத ஆன்மா..

பார்வையால் அளவெடுத்தேன்...

சாய்ராம் என்றேன்..
சாய்ராம் என்றார்..

அதே குரல் தான்..
ஒலிநாடாவில் கேட்ட அதே குரல்..
எனை சிலிர்க்க வைத்தக் குரல்..

சிரிக்க வைக்கும் குரல்களை செதுக்குகின்ற குரல்..

எண்ணங்களை பரிமாறுவதற்கு முன் எண்களைப் பரிமாறினோம்...
ஆனால் பல நாட்களாய் யுகம் வாட்ஸ்அப் குழுவில் காந்தன் சாய்ராமை சேர்க்க மறந்து போனேன்..

சுவாமி ஒரு நாள் தியானத்தில் நினைவுபடுத்தினார்..

உடனே யுகத்திற்கு வர அழைப்பு விடுத்தேன்..
அந்த அகம் இணைந்து கொண்டது..

நேரில் சந்தித்து அனுபவம் கேட்பதற்கு நேரம் கேட்க அழைக்கையில்..

அழைபேசி எடுக்கவில்லை அவர்...

பிறகு அவரே அழைத்து.. மன்னிக்கவும் சார் வெளியில் இருந்தேன் என்றார்..

"மன்னிக்கவும்"
ஒரே ஒரு சிறு வார்த்தை தான் ஆனால் அதில் ஒரு கோடி பணிவுக்கடல் பள்ளி கொண்டிருந்ததை உணர்ந்து அவரின் உள்ளம் வணங்கினேன்..

பெரியவர்கள் தாங்கள் நடந்து காட்டுவதன் மூலமாகவே மௌனமாய் அறிவுரை வழங்குகிறார்கள் நமக்கு.

நேரம் குறித்தோம்... மலர் மேல் பனி அமர்ந்து ஈரம் குறிக்க அவரின் இல்லம் விரைந்தது..

ஒரு பெண்மணி வரவேற்றார்கள் .. பிறகு அவரின் மகள் என தெரிவித்தார்..
அவரின் மகளுக்குப் பிறகு அவர்களின் மகள் வரவேற்றாள்..

பூ நடந்து வந்து வழிபோக்கனிடம் விசாரிப்பதாய் இருந்தது...

அந்தக் குழந்தை ஒரு டப்பாவைத் திறந்து பாதாம் பருப்பு வேண்டுமா என்றது...
எந்தத் குழந்தையாவது எதையாவது தருமா?

ஆச்சர்யப்பட்டும்.. அதே சமயம் தயங்கியும் வேண்டாம் என்றேன்..
பிறகு அந்தக் குழந்தை என் கையில் ஒரு உலர்ந்த திராட்சை வைத்து சாப்பிடு என்றது...

குழந்தையும் சுவாமியும் ஒன்று..
சுவாமி பிரசாதமாய் உண்டேன்..

அந்தக் குழந்தைக்கு என்ன ஒரு கருணை..

சுவாமியின் கருவிகள் தான் எத்தனை..

காந்தன் சாய் ராமின் பேத்தி என்பது அந்தக் குழந்தை நடந்து கொண்டதிலேயே புரிந்து போனது..

வரவேற்பறை முழுதும் அரிதான படங்கள்..
அதில் பிரதானமாய்..

இவரும் இவரின் இன்னொரு பாதியும் இருக்கும் புகைப்படம்..
இவரின் மனைவி புகைப்படமோ என நீங்கள் நினைக்கலாம்...
இல்லவே இல்லை...

காந்தன்.. கிரேஸி மோகன்...
ஒட்டிப் பிறக்காத இனிப்பான  இரட்டைக் குழந்தைகளின் பெரிய படம்..


என்ன இவன் சுவாமி அனுபவம் ஆரம்பிக்காமல் எதை எதையோ சொல்லி இழுக்கிறான் என நீங்கள் நினைக்கலாம்..

இல்லவே இல்லை.. சம்மந்தம் இருக்கிறது..

அனுபவம் என்பது ஏதோ ஒன்றிரண்டு நிகழ்வில் முடிந்து போவதல்ல..

சுவாமி பக்தர்கள் அனுபவங்களால் மட்டுமல்ல நடத்தையாலும் அளவெடுக்கப்படுகிறார்கள்

இந்தப் பதவியில் இருக்கிறேன்.. இத்தனை ஆண்டு பக்தனாய் இருக்கிறேன் என்பதில் அல்ல பக்தி தீர்மானிக்கப்படுவது

நடத்தையால்  ..
அணுகுமுறையால் ...
அன்பால்.. அனுகூலத்தால் தான் சுவாமி பக்தி என்பது உயிர் வாழ்கிறது..

சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும்படி உடையாலும்.. நடையாலும் வந்தார் காந்தன் என்கிற ஸ்ரீகாந்தன் சாய்ராம்..

அந்த ஸ்ரீ யே பிற்காலத்தில் சிரி என்றாகி பிறருக்கு நாடக கலையாய்ப் பரவ
காந்தன் மட்டும் காந்தமாய் ஒட்டிக் கொண்டது...

அருகே அமரச் சொன்னார்..

அமுத நீரான அனுபவம் சொல்வதற்கு முன் தேநீர் வந்தது..

அனுபவம் சொல்லிக் கொண்டே இருந்தார் சுடச் சுட ...

தேநீரோ ஓடிய மின்விசிறியில் ஆறிக் கொண்டிருந்தது..

குடிக்கட்டுமா என சைகை காட்டினேன் .. தாராளமாக என்றார்...

பாபா என்று பேச ஆரம்பித்த உடன் குருவி கூடு கட்டிக் கொள்வது போல் கண்ணீர் கூடு கட்டிக் கொண்டது காந்தன் சாய்ராமின் கண்களில்...

பிரம்மஸ்ரீ பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் கடைக் குட்டி திரு காந்தன்.. 

இவரின் இல்லத்தில் சுவாமி பக்தி .. இவரின் மூத்த சகோதரியால் முதன்முதலில் வந்திருக்கிறது..

அவர்களின் பெயர் அமரர் திருமதி பத்மா சாய்ராம்...

சுவாமி இந்த பத்ம பாதம் வைத்தே இவர்களது இல்லத்திலும் உள்ளத்திலும் நுழைந்திருக்கிறார்..

எழுபதுகளில் ஒரு மாணவனை பெற்றோரும்.. உறவினரும்... நண்பர் மற்றும் சுற்றங்களும் பொதுத் தேர்வின் மதிப்பெண்களை வைத்தே கணக்கிடுவார்களாம்..

காந்தன் சாய்ராம் தொடர்ந்தார்...

சங்கீத பரம்பரை என்பதால் இசைக்கு மயங்காத திசையே இல்லை என்பது போல் சுத்தமான இசைக்கு நிசப்தமான இதயங்கள் நீந்தி இருக்கின்றன...

சாம கானத்திற்கு மட்டுமல்ல சாய் பஜன் எனும் தேவ கானத்திற்கும் உருகிப் போயிருக்கிறார்கள்..

மாதவா.. கேசவா.. என்று பஜன் பாடிக் காட்டினார்...

பக்தி அலை முகத்தில் அடித்தது.. தேநீர் அலையை பருகிவிட்டு கோப்பையை ஓரமாக வைத்தேன்..

என் இதயக் கோப்பை அவரின் அனுபவங்களால் நிரம்பிக் கொண்டே இருந்தது..

சாய் பஜனில் தான் முதலில் மனதைப் பறிகொடுத்திருக்கிறார் காந்தன் சாய்ராம்..

அப்போது பொதுத் தேர்வுக்கான (10th) விடுமுறை காலம்...
பரிட்சைக்கான விடுமுறை என்பது அடியேன் அளவில் சுடுமுறையாகவே இருந்திருக்கிறது..

அந்த சமயத்தில் பாபா வந்திருக்கிறார் என அக்கா அழைக்க அதிகாலை அப்பாவுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருவரும் சாயி இறைவனை தரிசிக்க சென்றிருக்கிறார்கள்.

நாவுக்கரசரை அவரின் சகோதரி சிவனிடம் வழிநடத்தியது போல்
பத்மா அக்கா காந்தன் தம்பியை சிவனிடம் வழிநடத்தி சென்றிருக்கிறார்..
கதாப்பாத்திரங்களே மாறி இருக்கின்றன..

கடவுள் அதே சாந்நித்யமாய் அப்போது நாத முனி பங்களாவில் தங்கி இருந்திருக்கிறார்..

அது 1971. அது வரை படத்தில் பார்த்து வேண்டி வந்த காந்தன் சாய்ராம் ..
அன்று அந்த இடத்தில் தரிசிக்கப் போகிறார்..

மாடியிலிருந்து ஜெக ஜோதியாய் இறங்கி வருகிறார் சுவாமி..

இரங்கி வருவதற்கே இறங்கி வந்த இறைவன் அல்லவா சாயி...

சூரியன் நிச்சயமாய் தான் வெறும் ஜெராக்ஸ் காப்பி தான் என சுவாமியின் தேஜோமய ஒளியில் கண்கூசிக் கறுத்துப் போயிருக்கும்..

காந்தன் சாய்ராம் சுவாமியை தரிசிக்கிறார்..

இறை காந்தம் மனித காந்தத்தை இழுத்துக் கொண்டிருக்கிறது

அந்த நொடி
அதே நொடி

I made my life.. I made my exam.. என்ற தன்னம்பிக்கை கதவு திறந்து உள்ளத்தின் உள்ளே பேசுகிறது அவருக்கு...

தன்னம்பிக்கையும்.. தெய்வ நம்பிக்கையும் இரு பக்கத்தின் ஒரு நாணயமே..

ஒன்றில்லாமல் ஒன்றில்லை...

தெய்வ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கை வெறும் கூச்சலிடும் திமிராய்த் திரிந்து போகிறது..

அந்த நாள்.. காந்தன் சாய்ராமின் வாழ்க்கையை தீர்மானித்த நாள்..
தான் என்னவாக வேண்டும்.. என்னவாக வளர்வோம் என உறுதியேற்க உரம் தர வரம் தந்த நாள்..

பிறகு பரிட்சை.. மூன்று மணி நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலேயே முடித்துவிடுகிறார்...

எல்லாம் சரியாக எழுதி இருக்கிறோமா..
சரி பார்க்கிறார்.. எல்லாம் சரியே..

சரியின் தரிசனம் பெற்றபிறகு விடைத்தாளில் சரிகள் எப்படி சரிந்து போகும்?
கலர் பென்சிலால் தாளை அலங்கரிக்கிறார்.. அப்படி இழுத்தும்  இரண்டு மணி நேரமே..

சுலப பிரஸ்ஸன்னரை தரிசித்தபின் பரிட்சை மிக மிக சுலபமாகவே இருந்திருக்கிறது...

தேர்வு முடிந்துவிட்டது..

அப்போது பரிட்சை முடிவுகள்  சிறு புத்தகமாக (booklet) கைகளில் வருமாம்..
அதைப் பிரிக்கிறார்..

அதைச் சொல்லும் போதே கண் கலங்குகிறது அவருக்கு..
காந்த இரும்பு கூழாய்க் குழைகிறது...

I Saw My Baba There என்றார்..
அவர் கண்களில் சத்தியம் கண்டு மெய் மறந்தேன்...

அந்தக் காலத்தில் விவேகானந்தா கல்லூரியில் BCom மிற்கு இடம் கிடைப்பது மிகக் கடினம்..

இவரே முதலாவதாய் அந்த இடத்திற்கு தேர்வாகிறார்..

Be Calm என இவர் BCom ஆரம்பித்து

கிரேஸி கிரியேஷன் இயக்குநராய் ஆட்டுவிக்கும் வரை CA பயின்று ஆடிட்டராய் பணிபுரிந்திருக்கிறார்..

இவருக்கு மூளை அதிகம்.. ஆனால் கனமே இல்லை..
இது தானே சுவாமி சங்கல்பம்..

கிரேஸி கிரியேஷன்ஸில் எல்லா நாடகமும் நவம்பர் 23 (பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள்) அன்றே முதன்முதலாய் அரங்கேற்றி இருக்கிறார்கள்.


Beware of Madhu நாடகம்.. மூன்று கதாப்பாத்திரங்களும் இரட்டை வேடம்...
மோகன் சரியா வருமா..

'நவம்பர் 23 ஆரம்பிக்றோம்ல சரியாய் வரும்' என
இவரின் கேள்விக்கு
கிரேஸி மோகன் அண்ணா ஒரு நொடி கூட சிந்திக்காமல் பதில் சொல்லியிருக்கிறார்.

அத்தனை பக்தி சுவாமி மேல்..
தெனாலி ராமன் தான் மறுபிறவி எடுத்து கிரேஸி மோகனாய்ப் பிறந்தாரோ எனத் தோன்றும் அடிக்கடி எனக்கு..

கிரேஸி மோகன் தமிழ்நாட்டு லாஃபிங் புத்தா...

அந்தத் தெறிப்பு.. அந்தப்  பொழிவு.. தெய்வாம்சம் இல்லாமல் வர வாய்ப்பே இல்லை‌..

75 பக்கம் தேவையான ஒரு நாடகத்திற்கு 300 பக்கம் தருவார் மோகன் சாய்ராம்..
அதை எடிட் செய்வது இயக்குநர் காந்தன் அவர்களே..

எப்படி எடிட் செய்வது? எல்லாமே நன்றாக இருக்குமே எனக் கேட்டு.. உங்களின் தீர்மான சமயத்தில் சுவாமி வழிகாட்டுதலை உணர்ந்திருக்கிறீர்களா என அடியேன் கேட்ட போது அதைச் செய்வதெல்லாம் சுவாமி தானே என்றார்..
அந்த Divine flow வே எடிட் செய்கிறது என்கிறார்..

சர்வ சத்தியம்..

ஆட்டி வைப்பவர் சுவாமி தானே...

சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தில் கிரேஸி மோகன் அண்ணா மீசையை எடுக்க மறுத்து விட்டார்.. மூக்கு கண்ணாடி வேறு.. காந்தன் சாய்ராம் எவ்வளவு சொல்லியும் மறுக்கிறார்...

அதற்காகவே ஒரு வசனம் சொல்கிறார்..

கிருஷ்ணருக்கு மீசையா.. நான் இப்படி ஒரு கிருஷ்ணர பாத்ததில்லயே என மாது பாலாஜி சாய்ராம் கேட்க..

நீ பார்த்தசாரதி பெருமாளை பார்த்ததில்லையா என பதில் கேள்வி கேட்கிறார் மோகன் சாய்ராம்..

அந்த Presence of Mind தான் சுவாமி...

அப்போ கண்ணாடிக்கு என்னடா சொல்லப்போற என காந்தன் சாய்ராம் கேட்க..
மோகன் சாய்ராம்..

கடவுள என்னன்னு சொல்லுவா ...

God is love 

ஆமா God is Love. . but Love is blind .. so God is blind .. அதுக்குத் தான் இந்தக் கண்ணாடி எனப் பேசி அரங்கத்தையே கரவொலியால் அதிர வைத்திருக்கிறார் மோகன் சாய்ராம்..

Divinity is Spontanity ...

இதற்காகத் தான் இந்த சம்பவம் விளக்கினேன்..

யோசிப்பவர்கள் யாசிப்பவர்கள்.. சுவாமி அருள் இருந்தால் நேசிப்பு ஒரு நொடியில் நிகழ்கிறது..

காந்தன் சாய்ராம் சுந்தரம் செல்லும் வழி எல்லாம் சுந்தர சுவாமியை தரிசிக்காமல் வருவதில்லை.. ஆண்டுதோறும் சுவாமி காலண்டரை சுவற்றிலும் தனது இதயத்திலும் மாட்டிக் கொள்கிறார்..


சுவாமி மேல் அவருக்கான நன்றி உணர்வு மேலோங்கியது அவர் பேசப் பேச..
ஆம் நன்றி உணர்வே பக்தி உணர்வு..

பிறகு பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்..

சாஸ்திரிகளின் இல்லம் என்பதால் சந்நதியில் நுழைவதாய் பவ்யமாய் அடிமேல் அடி எடுத்து வைத்தேன்...

பூஜையறையில் சுவாமி... எல்லாம் புன்னகைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றபடி அமர்ந்திருந்தார்.. 


விழுந்து வணங்கினேன்..

காந்தன் சாய்ராமையும் சேர்த்து..

அவரின் மூத்த சகோதரர் மௌலி அவர்களின் பெரிய ரசிகன் அடியேன்...
அவரின் சுவாமி அனுபவமும் கேட்க வேண்டும்..

ஒரு குடும்பத்தில் இப்போது ஒருவர் பக்தியாய் இருப்பதே பெரிய விஷயம்..
இதை வாசித்தால் கிரேஸி மோகன் சாய்ராம் இப்படித் தான் கமென்ட் செய்திருப்பார்..

ஒரு குடும்பத்தில் ஒருவர் பக்தியாய் இருப்பது பெரிய விஷயமல்ல.. இந்தக் காலத்துல ஒரு குடும்பமாய் இருப்பதே பெரிய விஷயம் என்று..

அதில் அனைவரும் சுவாமி பக்தியாய் இருப்பது சுவாமி சங்கல்பம்...
உதாரணக் குடும்பம் இவருடையது...

கிரேஸி கிரியேஷன்ஸ் அதே மோகன காந்தத்தோடு இப்போதும் அனைவரையும் இழுக்கிறது..

ஏழாவது சுவை நகைச்சுவை.. அதுதான் உயிர்ப்போடு அடியேனையும் வாழ்விக்கிறது...

வாழ்க்கை ஒரு நாடக மேடை.. அதில் கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகமாய் வாழ்ந்தோமானால் மனம் லேசாகிறது.. சுவாமி அருள் ஜுஸாகி ஆன்ம தாகம் தணிக்கிறது...

பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக