தலைப்பு

வியாழன், 13 பிப்ரவரி, 2020

நீங்கள் உண்ணும் உணவுக்கும் தெய்வ பக்திக்கும் சம்பந்தம் இருக்கின்றது!


பக்தர்: ஒருவனுக்கு இறைவனிடம் பக்தி எப்படி ஏற்படுகிறது?

பாபா: தன்னம்பிக்கை உண்டாவது அவசியம். உணவே ஆரம்பகட்டம். இந்த உடல் உணவால் உண்டாக்கப்பட்டது. ஆரோக்கியமில்லாவிடில் எந்தவிதச் செயலும் சாத்தியமில்லை.

வயிறு 4 பாகங்களுடன் கூடியது. கால்பாகம் வாயுவும் கால்பாகம் உணவும் மற்ற அரைபாகம் நீரும் கொண்டதாகும். இக்காலத்தில் மிக அதிக அளவில் உணவு உட்கொள்கிறார்கள். அந்நிலையில் தண்ணீருக்கு இடமே இல்லை. இந்தியாவில் அரிசியும், கோதுமையும் அடிப்படை உணவாகும். மிதமாக உட்கொண்டால் அவை சிலாக்கியமானதே. ஆனால் மக்கள் மிக அதிக அளவு உணவு அருந்துவதன் மூலம், அந்த மந்தமானவர்களாகிறார்கள். மிதமான உணவு உட்கொள்வது, வியாதிகள் வராமல் தடுக்கும். ஸ்வாமி இந்தியாவில் பல்வேறு பாகங்களுக்கு பயணம் செய்தாலும், உணவின் மூலம் அவருடைய ஆரோக்கியம் பாதிக்கப்படுவதில்லை.ஸ்வாமியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது, தனது பக்தனின் வியாதியை தான் ஏற்றுக் கொள்ளும் பொழுதுதான். இல்லாவிடில் அவர் எப்பொழுதும் பாதிக்கப்படுவதில்லை. அளவுக்கு மேல் பால் அருந்துவது தீங்கானது. அது ரஜோ குணத்தை வளர்க்கும்.

பக்தர்: பாபா, இது எனக்காக சொல்கிறேன், மற்றவருக்காக அல்ல, எனக்காக மட்டுமே. என் உணவில் மாமிசம் முக்கியம். மாமிசம் என் உணவாகும்.

பாபா: உணவு உடலுக்கு முக்கியமானது. பிறப்பெடுப்பதற்கும் உணவே காரணம். தாயும், தந்தையும் உணவில் போஷிக்கப்பட்டு பிறகு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள். பெற்றோர்கள் உணவினால் வளர்ந்தவர்கள். இந்த உடல் முழுவதுமே ஒரு உணவுக் கூட்டாகும். உண்ணும் உணவின் தன்மையை பொறுத்தே, உனது மனதில், அத்தன்மையான எண்ணங்கள் தோன்றுகின்றன. நீ பால், பழம் போன்ற குளிர்ச்சியை உண்டாக்கும் உணவை உட்கொண்டு, உஷ்ணந்தரும் வெங்காயம் போன்றவற்றை விலக்கி, சாத்வீக உணவு உட்கொண்டால், சாத்வீக எண்ணங்கள் மனதில் தோன்றும். மாமிசம் ரத்தத்திற்கு அளிக்கும் குணங்கள், அதீத உணர்ச்சி, மற்றும் அவ்வகையைச் சார்ந்தவைகளாயாகும். மீன் உண்பதால், அருவருக்கத்தக்க எண்ணங்கள் உதிக்கின்றன.மீன் எப்பொழுதும் தண்ணீரிலேயே இருந்தாலும் அது  துர்வாசனை உள்ளதே.

பக்தர்: ஆட்டு மாமிசம் பற்றி..

பாபா: உடல் மீது தனிப்பட்ட கவனம் செலுத்துவோருக்கு, பலமாக இருக்க விரும்புவோர்க்கு, மாமிசம் புசித்தல் தேவையே. ஆனால் ஆன்மீக மார்க்கத்தில் நாட்டம் உள்ளோருக்கு அது நல்லதல்ல.

பக்தர்: ஆனால் மாமிசத்திலிருந்து கிடைக்கும் புரதச்சத்து தேவையில்லையா?

பாபா: ஆம். மாமிசத்தின் மூலம் உடலுக்குப் புரதச்சத்து கிடைக்கும். ஆனால் மனதைப் போஷிக்கும் சத்து அதில் இல்லை. நீ ஆன்மீகப் பாதையில் நாட்டமிக்கவரானால்,மாமிசம் புசிப்பது வீண். ஆனால் உனக்கு உலக வாழ்வில் பற்றுதல் மிகுதியாயிருந்தால், மாமிசம் புசிப்பது தேவை இருக்கலாம். இதில் மற்றுமொரு ஆன்மீக காரணமும் இருக்கிறது. ஒரு பிராணியை வதை செய்யும் பொழுது, நீ அதற்கு மனக்கஷ்டமும் உடல் நோவும் தந்து, அதை அழிக்கிறாய். இறைவன் எல்லா உயிரிலும் இருக்க நீ எப்படி அம்மாதிரி உபாதை கொடுக்கலாம்? சிலசமயம் எவராவது ஒரு நாயை அடித்தால், அது அழுகிறது. உடல் உபாதையை மிகவும் உணர்கிறது.வதைபடுமானால் இன்னும் எந்த அளவுக்கு உடல் வலியும் கஷ்டமும் அதற்கு இருக்கும்? மிருகங்கள் மனிதர்களுக்கு உணவாவதற்காக இவ்வுலகில் தோன்றவில்லை. தங்கள் வாழ்வின் மூலம் தங்களுடைய ஊழ்வினையை தீர்த்துக் கொள்ளவே அவை இவ்வுலகிற்கு வருகின்றன. ஒரு மனிதன் இறக்கும் பொழுது,நரிகளும் மற்ற மிருகங்களும் அப்பிணத்தை தின்னலாம். ஆனால் நாம் இவ்வுலகிற்கு வந்தது, அவைகளுக்கு உணவாவதற்காக அல்ல. அதை போலவே மனிதன் மிருகங்களை புசிக்கிறான். ஆனால் அவை மனிதனுக்கு தங்களை உணவாக அளித்துக் கொள்ள இங்கு பிறக்கவில்லை. ஆனால் நாம் மாமிசம் புசிப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டு விட்டோம்.

பக்தர்: ஆனால் நாம் பால், மிருகத்தினின்றும் பெறப்பட்டாலும் அதை அருந்துகிறோமே!

பாபா: பசுக்கள் அளிக்கும் எதுவுமே, சிறிதளவு பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி முதலியன ஆன்மீக நோன்பிருப்பவர்களுக்கு உகந்த உணவே. அதனால் பசுவுக்கு தீங்கு எதுவும் இல்லை; சாதகனுக்கு அதனால் நன்மையே ஆகும். கலியுகத்திற்கு முன்,5680 வருடங்களுக்கு முன், துவாபரயுகத்தில் பால் எல்லோரும் விரும்பும் உணவாக இருந்தது.

ஆதாரம்: பகவானுடன் உரையாடல் என்ற புத்தகத்திலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக