தலைப்பு

திங்கள், 31 மே, 2021

EP 3: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! - போகர் நாடி & சிவநாடி


5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... போகர் மற்றும் சிவநாடியை வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....


✋ நாடிகள்:

நாடிகள் பாடல்களாய் ரகசியங்களை உள்ளடக்கி இருக்கின்றன... வெளிப்படையாக சொல்வதன்றி பாடல் வடிவில் சொல்வது தமிழர் மரபு. அது விடுகதையாகவும் விடைகளை தன்னகத்தே மறைத்தபடி சுவாரஸ்யப்படுத்தும்.. சில பாடல்கள் பளீச்சிடும்படி புரியும்.. சில மனிதர்களுக்கு கைரேகையை பயன்படுத்தி நாடி வாசிப்பதும் உண்டு.. எல்லா மனிதர்களுக்கும் ஓலைகள் ஓலைகளாய் நாடி இருக்க வேண்டிய அவசியமில்லை... 
முக்கியமாக ரிஷிகள் என்பவர்கள் தெய்வீகம் / ஆன்மீகம் / மருத்துவம் சார்ந்த விஷயங்களையே பாடல்களாக நாடிகளின் வடிவில் எழுதி வைத்திருக்கிறார்கள். 

போகர்:



போகரை தெரியாத தமிழர் இல்லை. பழனிக் காற்றலை அவரின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கின்றன..மருத்துவ குணங்கள் மிகுந்த நவபாஷாண முருகன் சிலையை அவரே அங்கு பிரதிஷ்டை செய்தவர். மாபெரும் சித்தர்.. சித்த மருத்துவரும் கூட ... இதோ போகர் இறைவன் ஸ்ரீ சத்ய சாயியை பற்றி நாடிகளில் குறிப்பிட்ட சில முக்கிய சுவாரஸ்ய பாடல் வரிகளை மட்டும் பார்ப்போம்...

போகர் நாடி:

அறுபடென சிங்கார தில்லை ஈசா
சாட்சி பட சிவனின் மூல நட்சத்திரத்தில் உதித்திட்ட பாலகனுக்கு
மண்ணுலகில் சந்திரனுடன் அரவு சேர
ஞான வழி மார்க்கம் தன்னில் கொண்டிட்டான் ஈர்வழி சொல்லிடவே
என ஆரம்பிக்கிறார்..



ரிஷிகள் பெரும்பாலும் சுவாமியை சிவனே என்று தான் ஆரம்பிக்கிறார்கள்..  போகரோ சுவாமியை சாதாரண சிவன் என்று சொல்லாமல் தில்லை ஈசா என்கிறார்... வெட்ட வெளிதான் சிதம்பர ரகசியம். ஆகாய ஸ்தலம் தான் சிதம்பரம்.‌ ஆகாயமே அனைத்திற்கும் ஆதாரம். பிரபஞ்ச இயக்கத்தின் நடன உருவகத்தை பெரும் சாட்சியாக இருப்பது தான் நடராஜர் சிலை.. சுவாமியே அனைத்தையும் ஆட்டி வைக்கிறார் என்பதற்காக தில்லை ஈசா என்கிறார் போகர்.

சாட்சி பட என ஆரம்பித்து திங்களும் அரவு சேர என்பதோடு இணைத்துப் பார்க்கையில்.. சுவாமி ஒரு திங்கட்கிழமையே அவதரித்தார்.. அதையும் உணர்த்தி...அரவும் அதற்கு சாட்சியாக இருக்கிறது என்கிறார் போகர்.. ஆம்.. சுவாமி பஞ்சணையில் சாட்சியாக இருந்ததே அதே அரவு (அரவம்- பாம்பு) தான்.
சிவனின் மூல நட்சத்திரம் என்கிறார்.. இதில் தான் போகரின் தமிழ் விளையாட்டு.. நாம் உடனே மூல நட்சத்திரம் இல்லையே என்போம்.. அவரும் அதைக் குறிப்பிடவில்லை.. சிவனின் நட்சத்திர மூலம் என்பது திருவாதிரை.. அதையே தான் மறைமுகமாகச் சுட்டுகிறார். இப்படி சுவாமியின் அவதார ரகசியங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூத்திரங்களாக சுருக்கி அதை நாமே புரிந்து கொள்ளும்படி விட்டுவிடுவதும் சித்தர்கள் விடுக்கும் சுவாரஸ்யங்கள்.



மேலும்..
அன்பு நிலை யோகம் கொண்டு வையக்கத்தில்
பல உள்ளங்களை கவரும் நிலை கொண்டார்
என போகர்...அன்பு நிலையால் சுவாமி அகிலத்தை கவர்ந்து அண்டத்தை ஆட்சி செய்கிறார் என்கிறார். அதற்கு நாம் அனைவருமே சாட்சியாக இருக்கிறோம்.

என் மாயை விலகியது என சுவாமி சொன்ன அந்த கமலாபுர சம்பவத்தை எப்படி போகர் இரண்டடியில் வர்ணிக்கிறார் பாருங்கள்...

பூர்த்திநிலை அவன் தனக்கு மாயை விலகி
மாயனவன் தோன்றாநிலை இது கால் உண்டு சொல்ல
பூர்த்தி நிலை என்பது பூரண நிலை.. முழுமை என்றும் சொல்லலாம்.. மாயனவன் என்கிறார்.. கிருஷ்ணரை மாயவன் .. மாலோலன் என்று தான் உரைப்பர். அது மாயங்கள் புரிவதால் மட்டுமல்ல.. சுவாமியை யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது என்பதால் தான் மாயவனவன் என்கிறார் போகர். 
ரிஷிகள் பெரும்பாலும் நாடிகளில் சுவாமியை சிவனில் ஆரம்பித்து அம்பாளில் அவரை சரிபாதியாக்கி கிருஷ்ணரே சுவாமி என்பதை வாசிக்கும் நமக்கு உணர்த்துகிறார்கள்.



அவர் அகவை தன்னில் குறைவு சொல்ல
ஒளடதத்தை எடுத்துரைப்பார்
என்கிறார் போகர்...
அகவை என்றால் வயது.. சுவாமியின் தோற்றப் பொலிவை கண்டு வியக்கும் பலர் இது தான் சுவாமியின் வயது என கணிக்கமுடியாத அந்த நிலையைத் தான் 
அகவை தன்னில் குறைவு சொல்ல என்கிறார்.
நாற்பது வயதிலும் இருபது வயது போன்றிருந்தவர் இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே!!
ஔடதத்தை எடுத்துரைப்பார் என்கிறார்..
இந்த வரி ஒன்று போதும் .. வீரியம் மிகுந்த வரி.. எப்பேர்ப்பட்ட சித்தர் போகர் என்பதை உணர்ந்து உணர்ந்து வியந்து போனேன்..
வள்ளுவரே இரண்டடியில் தான் எடுத்துரைக்கிறார்.. ஆனால் போகரோ ஒரே வரியில் ஒட்டுமொத்த அவதாரத் தன்மையையே வெளியே காட்டுகிறார்..
ஔடதம் என்றால் மருந்து.. அதை எடுத்துரைப்பார் என்கிறார்.. போகர் அறியாத மருந்தே இல்லை.. அவருக்கு தெரியாதா இறைவன் ஸ்ரீ சத்ய சாயி எந்த ஔடதம் தனை எடுத்துரைப்பார் என..
அது தான் ஞான மருந்து...
ஆத்ம ஞானம் ஒன்றே மருந்துகளில் எல்லாம் மிகச் சிறந்த மருந்து... அதுவே பிறவாமைக்கு அழைத்துச் செல்கிறது. 
ஞானத்தை சுவாமி வழங்குவார் என்பதைத் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துச் சொல்கிறார் போகர்.

(போகர் நாடி படிக்கப்பட்ட இடம் : வைத்தீஸ்வரன் கோவில்.. பார்க்கப்பட்ட நாள்: 25.05.2011)


இப்படி போகர்... சுவாமியை, அவரது அவதாரத்தினை தனது தமிழ் நடையால் அவருக்கே உரிய பாணியில் சுவாரஸ்யப் படுத்துகிறார். எல்லா ரிஷிகளும் உணர்ந்தது ஒரே சுவாமியை மட்டுமே.. தங்களது எழுத்து நடையால் அந்தப் பேரனுபவத்தை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகிறார்கள். மற்றபடி சுவாமி ஒன்றுதான்.. மூன்று சாயி அவதாரமாயினும் ரிஷிகளுக்கும்.. மகான்களுக்கும்.. உணர்ந்த பக்குவமானவர்களுக்கு சுவாமி ஒன்று தான்.. ஜோதியில் பேதமில்லை என்பது தான் சித்தர்கள் உணர்த்திடும் சாராம்ச ஞானமே!!!


சிவநாடி:
சிவநாடி வாசிக்கையில் ஆச்சர்யமாக இருந்தது அதில் சுவாமியின் ஒரு பாக சக்தி அம்சத்தைப் பற்றிக் குறிப்பிட்டது தான்..
சிவனே கூறாமல் யார் சக்தியை பற்றி கூற உரிமை உண்டு எனும் வகையில்.. உட் பொருள் வைத்து எழுதப்பட்ட பாடல் இதோ

கேட்டிட்ட வடிவமதும் வந்துதிக்க நாளனதில்
அழகனின் திருஉருவ மேனி சொல்ல
மேனியதில் அங்கத்தில் சுவையோகம் உண்டு சொல்ல என்கிறது சிவநாடி...

ரிஷிகளும்.. வெங்குசா போன்ற மகான்களும் வேண்டி கேட்ட பின்னரே சுவாமி எடுத்த வடிவம் என்பதைத் தான்.. கேட்டிட்ட வடிவமதும் என்கிறது சிவநாடி.
அழகனின் திருவுருவ மேனி என சுவாமியை பேரழகராய் வர்ணிக்கிறது ...
ஓம் ஸ்ரீ சாயி சுந்தர ரூபாய நமக என்ற அஷ்டோத்திர சத நாமாவளியே நினைவுக்கு வருகிறது...



மேனியதில் அங்கத்தில் சுவையோகம் உண்டு சொல்ல என்கிறது சிவநாடி 
அங்கம் என்பது உடம்பின் பாகங்கள்...
ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு சுவை..
சுவாமியின் விழிகளில் மௌன சுவை... மொழிகளில் ஞான சுவை... கரங்களில் சேவா சுவை.. சிரிப்பினில் ஆன்ம சுவை ... கால்களில் கால சுவை... முகத்தில் இதய சுவை ... கேசத்தில் பிரபஞ்ச சுவை என அறுசுவையும் ஆன்மீக சுவையாக சுவாமிக்கு சுவை யோகம் இருக்கிறதென புதியதொரு ஆன்ம சாளரத்தை திறந்து விடுகிறது சிவநாடி ...

சிவநாடி வாசித்து முடிக்கையில் அந்த சுவை இன்னும் இதயத்திலேயே தங்கி சுவாமியை அணு அணுவாக மேலும் ஆன்மாவில் கண்மூடி அனுபவிக்க வேண்டும் என்பதையே உள்ளத்தில் உணர்த்துகிறது...
உண்மையில் சுவாரஸ்யம் மிகுந்தவை தான் நாடி வாசிப்புகள்...

நாடியின் துடிப்புகள் தொடரும்...

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக