தலைப்பு

வியாழன், 20 மே, 2021

எம பயத்தையும் கள்வர் பயத்தையும் போக்கும் உள்ளம் கவர் ஷிர்டி சாயி சத்ய சாயி!


தனது இரண்டு அவதாரங்களிலும் சுவாமி எவ்வாறு பக்தர்களுக்கு எதிர்வரும் ஆபத்தையும் பேரிடரையும் களைகிறார் என்பதற்கான உதாரண அனுபவங்கள் இதோ...


"யாமிருக்க பயமில்லை" என்கிறார் சுவாமி. தனது இரண்டு அவதாரங்களிலும் இதையே சுவாமி தனது வாழ்வாக்கினார். மூன்றாம் அவதாரத்திலும் இதையே தொடர்வார். இந்த நொடி வரை சுவாமி அண்டினோரை காப்பாற்றுகிறார். தீனரை கை தூக்குகிறார். உறவுகளால் கைவிடப்பட்டவர்களுக்கு உற்ற துணையாகிறார். வாழ்வில் எல்லாமே இழந்தவர்களுக்கு பக்குவம் தந்து சுவாமியே நிரந்தரம் என்பதை உணர்த்தி அவர்களுக்கு உறுதுணையாக... அதீத அன்பு செலுத்தி அபயம் அளிக்கிறார். அது இன்றளவும் தொடர்ந்து வருகிறது. 


சுவாமி பக்தர்கள் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. கவனமாக இருப்பது என்பது பயப்படுவது அல்ல... சுவாமி நொடிக்கு நொடி நம்மையே கண்காணிக்கிறார்.. கவனிக்கிறார்.. கனிவு பொழிகிறார்.. காப்பாற்றுகிறார்.. கைதூக்கி விடுகிறார்.

ஒரு முறை ஷிர்டி கிராமத்தில் காசிராம் என்ற தையல்காரர் வெண்ணுடையும்.. காவி உடையும் அணியும் சுவாமிக்கு பச்சை வண்ண உடை தைத்து அலங்கரித்து அழகு பார்க்கிறார்..


ஒருமுறை அவர் வேலை நிமித்தமாக காட்டு வழியே பயணம் செய்கையில் வழியோரம் காட்டு வாசிகளால் தாக்கப்படுகிறார்.. எதிர் தாக்குதல் நடத்தாமல் அந்த தாக்குதலை ஏற்கிறார். அவரின் உடைமைகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.. அய்யோ என அவர் அலறவில்லை.. சுவாமி மேல் இருந்த பக்தி அவருக்கு மனப்பக்குவத்தை அளித்திருந்தது. அவரின் ஒரு உடைமையை எடுத்த போது மட்டும் வீறு கொண்டு எழுகிறார். அது ஒரு சர்க்கரை சேகரிக்கப்பட்ட சிறு மூட்டை.. அவரது பயணத்தில் வழி நெடுக எறும்புகளுக்கு தூவுவதற்காக சாது ஜானகி தாஸ் பாபா சொல்லி இவர் செய்து கொண்டு வரும் பயண வழக்கம். அதை அந்த காட்டுவாசி கள்வர்கள் தொட்ட உடன் துடிதுடித்துப் போய்.. வாளால் இரண்டு கள்வர்களை எமலோகத்திற்கு அனுப்புகிறார். இவர் ஒருவர்.. அவர்களோ பலர் .. எந்த பயமும் அவருக்கு இல்லை.. உள்ளத்தில் சுவாமியை சுமக்கும் அவருக்கு பயமே இல்லை.. காசிராமை பின்னால் இருந்து மண்வெட்டியால் ஒருவர் அடிக்க...சாய்ந்த மரமாய் மண்மீது சரிகிறார்.. காட்டுவாசிக் கள்வர்கள் ஓடிவிடுகிறார்கள்.. தலை முழுக்க இரத்தம் பீறிட்டு ஓடுகிறது காசிராமுக்கு. அப்போதும் பயப்படவில்லை.. சம்பவம் முடிந்து வந்த ஊர்காரர்கள் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல இருக்கையில் தன்னை ஷிர்டிக்கு அழைத்துச் செல்லும் படி தளுதளுத்த குரலில் கூறுகிறார்.. சுவாமியின் காலடியில் கிடத்தப்படுகிறார்.. சுவாமியின் அருட்பார்வை படுகிறார்.. படிப்படியாக குணமாகிறார்.. பிறகு போலீஸாரால் அவரின் தீரச் செயல்களுக்காகப் பாராட்டப்படுகிறார்.

அந்த கொள்ளை சம்பவம் நிகழ்கிற போது ஷிர்டியில் சுவாமி மிக ரௌத்திரமாக கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அங்கும் இங்கும் வீசிய படியே ஆ.. ஊ என சப்தம் எழுப்பியபடி இருக்கிறார்.. அதுவே காசிராமுக்கு எதிர்த்துப் போராட துணிச்சல் அளிக்கிறது.


இதைப்போலவே தனது இரண்டாவது அவதாரத்தில் ஒருமுறை ஒரு பெரிய வீட்டில் முதியவர் ஒருவர் மட்டுமே இருப்பதை கண்காணித்து கொள்ளையர்கள் திடும் என பதில் ஏறி குதிக்கிறார்கள். கும் இருட்டு.. தெருவிளக்கு மங்கிய படி கொட்டாவி விடுகிறது. தடக் தடக் எனும் சத்தம்.. வீட்டிலிருக்கும் பெரியவர் கள்வர்கள் வந்துவிட்டதாக உணர்கிறார். மிகுந்த நம்பிக்கையோடு சுவாமியின் புகைப்படம் அருகே சென்று "சுவாமி சுவாமி" என்று மட்டும் சொல்லிய வண்ணம் கண்களை மூடிக் கொண்டிருக்கிறார். சில நிமிடங்களில் எல்லாம் அந்தக் கள்வர் சப்தமே இல்லை... நிம்மதியாக அந்தப் பெரியவர் உறங்கச் செல்கிறார்... வந்த கொள்ளையர்கள் இவர் சுவாமி சுவாமி என சொல்வதை கேட்டு வீட்டில் இவரை தவிற வேறு யாரோ இருப்பதாக நினைத்து அந்த இடம் விட்டு அகன்று விடுகிறார்கள்... இப்படிப் பல அனுபவங்கள் பல பக்தர்களுக்கு நேர்ந்திருக்கிறது.. சுவாமியிடம் நம்மையே ஒப்படைத்து விட்டால் ஒரு தூசி கூட அண்டாமல் நம்மை கண் இமை போல் காப்பாற்றுகிறார் என்பது இன்றளவும் நிதர்சன நிரந்தர அனுபவ சத்தியம்.


மூன்று சாயி அவதாரங்களும் ஒன்றே!! மூன்றின் அடிப்படை காவலும் .. அரணும் .. அறமும் ஒன்றாகவே இயங்குகிறது!

சுவாமியே சொல்கிறார் ஒவ்வொருவரும் இந்த மூன்றையுமே கடைபிடித்தால் என்னுடன் ஒன்றிவிடலாம் என்கிறார்..

அவை தான்

தூய்மை

பொறுமை

உறுதி

இந்த மூன்றில் ஒன்றி சுவாமியோடு நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!!


   பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக