தலைப்பு

வெள்ளி, 28 மே, 2021

தனது அங்கியை கத்தரித்து தோரணமாக்கி பாடம் புகட்டிய பாபா!


சேவை எவ்வாறு தலைக்கு ஏறிவிடுகிறது என்பதையும்... அந்த சேவா அகந்தையை சுவாமி எவ்வாறு மாற்றி உணரச்செய்து விநயம் தந்து குணமளிக்கிறார் என்பதையும் தெளிவுற விளக்கும் அனுபவப் பதிவு இதோ...


மனித சேவைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தது தசாவதாரங்களில் சத்யசாயி அவதாரம். சேவா செய்வது புறத்தே ஆயினும் அது அகத்தே வேலை செய்கிறது. அகந்தையை கரைக்கிறது. வெறும் ஏவுதல் அல்ல... தானே அந்த சேவாக்களில் ஈடுபட்டு முன்னுதாரணமாக திகழ்ந்து பல்வேறு இளைஞர்களை ஊக்கப்படுத்தி சேவாக்களை செய்வதே சிறந்த தலைமைப் பண்பும்.. உலகம் எதிர்நோக்குவதும்...

அறம் வீட்டிலிருந்தே துவங்குவது போல் சேவை அகத்திலிருந்து துவங்க வேண்டும். எவர் மனதையும் நோகடிக்காமல் பேசுவது என்பது சேவாக்களில் மிகச் சிறந்த சேவா. மென்மையோடு செய்யப்படும் சேவையே சேவா. அதுவே திருப்பணி. மென்மையே மேன்மை. சிறிதளவாயினும் சேவா தேனாய் இனிக்க வேண்டும். பற்றின்மையை வளர்ப்பதற்குத் தான் சுவாமி சேவாவை முன்னிறுத்தினாரே தவிற வேறு எதற்காகவும் அல்ல... பல வகைகளில் சேவாக்கள் இருக்கின்றன... சேவா தளத் தொண்டர்கள் இருக்கிறார்கள். 24/7 புட்டபர்த்தியில் அத்தகைய சேவாதள தொண்டர்களாகிய தியாகிகளாலேயே சுவாமியின் ஆசிரமம் இயங்கி வருகிறது‌. 

சுயநலத்தை அறுத்தால் தான் சுயம் பிரகாசிக்கும். அதை வாழ்க்கையாக மனிதருக்குள் செய்து காட்டியவர் இறைவன் சத்யசாயி ஒருவரே! அற்புதங்களில் .. மகிமைகளில் சுவாமி நிகழ்த்திய ஆகச் சிறந்த மகிமை.. அற்புதம் யாதெனில் சேவா தளத் தொண்டர் படையை அவர் உருவாக்கியதே!! 

1940ல் இருந்து சுவாமி வெள்ளை நிற அங்கியையே அணிகிறார். 1940 முதல் 1946 வரை வெண்ணிறம் தான். 1946ல் நவராத்திரி வைபவம் முன்னிட்டு குப்பம் குடும்பத்தினர் வந்தார்கள். சௌபாக்கியவதி ராதம்மா சுவாமிக்காக பல வண்ண நிறப் பட்டாடைகளை தர அன்பின் அடையாளமாக நவராத்திரி விழாவில் அவை யாவையும் ஒவ்வொரு நாளும் அணிந்து கொள்கிறார். அதன் பிறகு தான் சுவாமி காவி உடை அணிய ஆரம்பிக்கிறார். பிறந்தநாளில் வெண்மை -- கிருஷ்ண ஜெயந்தியில் மஞ்சள் -- பட்டமளிப்பு விழாவில் வெல்வெட் -- என ஒருசில முக்கிய தினங்களுக்கு மட்டும் வானவில் நிறங்களை வானமாகிய இறைவன் சத்யசாயி அணிந்து கொண்டு பக்தரின் இதயத்தை அபகரிக்கிறார்.

ஒருமுறை சுவாமிக்கு அங்கி அளிக்க விரும்புவதாக ஒரு பெண்மணி சேவா கோரிக்கை விடுக்கிறார். சுவாமியும் சம்மதித்துவிட அந்தப் பெண்மணிக்கு தலை கால் புரியவில்லை. அங்கிக்கான துணி எடுப்பதிலிருந்து.. தையல் பணி என ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்ய ஆரம்பித்தார். சுவாமியின் ஜோதிர் தேகம் அந்த அங்கியை அணியப்போகிறது.. அந்த அங்கி இறைவனின் ஸ்பரிசம் பெறப்போகிறது என்ற பூரிப்பில் சேவாவை திறம்பட செய்து முடித்து சுவாமிக்கு அளிக்கிறார். சுவாமியும் ஏற்றுக் கொள்கிறார். அந்தப் பெண்மணிக்கு பெருமை தாளவில்லை. ஆசிரமம் முழுவதும் தண்டோரா அடித்து சொல்லாத குறையாக அனைவரிடமும் சென்று தானே சுவாமிக்கு அங்கி அளித்திருப்பதாகவும்.. சுவாமிக்கு அது பேரழகாக இருக்கிறது என சொல்லத் துவங்கி இருக்கிறார். 

மனம் இங்கே தான் சரிந்து விழுகிறது. குழந்தைக்கு எத்தனை லிட்டர் தாய்ப்பால் கொடுத்தோம் என்ற கணக்கை ஒருபோதும் ஒரு தாய் வெளியே சொல்வதில்லை.. தாய்ப்பாலுக்கு அவள் கணக்குப் பார்ப்பதுமில்லை.. அதுபோலவே சேவா தளத் தொண்டர்கள் சேவா ரீதியாக செய்யும் செலவையும்‌.. சிரமத்தையும் வெளியே சொல்வது அறம் அல்ல.. அது அகந்தையையே வளர்க்கக் கூடியது. எதற்காக சேவா செய்கிறோமோ அகந்தை வந்து அதன் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கிறது.

இப்படி அந்தப் பெண்மணி மூலை முடுக்கின்றி எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்துவிட.. அவளின் அகந்தையை நொடிப்போதில் உணர்ந்த சுவாமி.. அவள் அளித்த அங்கியை கத்தரி கொண்டு நன்றாக வெட்டி .. தோரணமாக்கி வாசலிலேயே தொங்கவிட்டிருக்கிறார்.

பெருமை பேசி வந்த அந்தப் பெண்மணிக்கு பேரதிர்ச்சி அந்த தோரண வாயிலில் ஆடிக் கொண்டிருந்தது‌. தன் தவறை உணர்கிறாள். அழுது கரைகிறாள். அவள் அளித்த அங்கியை மட்டுமல்ல தானே அளித்தோம் என்ற அகந்தையையும் சுவாமி கத்திரிக்கோலால் வெட்டி வீழ்த்திவிடுகிறார்.

(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயி கல்பத்ருவம் -- ஆசிரியர் : பிரஷாந்த் பிரபாகர் பாலேகர்... பக்கம் : 190)


கதை போல் வாள் போல் அம்பு வில் போல் சத்ய சாயி அவதாரத்தின் மிகப்பெரிய ஆயுதம் கத்திரிக்கோலே.. அந்த சூட்சும ஆன்மீக கத்திரிக்கோல் வைத்துத்தான் சுவாமி பந்தபாசத்தை கத்தரிக்கிறார்... சீனச்சுவராய் நீளும் அகந்தையை வெட்டி வீழ்த்துகிறார். சரணாகதி அடைந்த தன் பக்தர்களுக்கு எதிராக செலுத்தப்படும் பாசக்கயிறையே அந்தக் கத்தரிக்கோல் வைத்துத்தான் கத்தரிக்கிறார்.

பக்குவமடைந்த மனம் சுவாமியின் சங்கல்பத்தை முழுமையாக ஏற்று தனக்குள் சமாதானமடைந்து குறையொன்றுமில்லை மறை மூர்த்தி சுவாமி என நிறைவான பெருவாழ்வு வாழ்கிறது. பக்குவமற்றது தான் குறைபட்டுக் கொண்டு மாயையில் மூழ்குகிறது.


பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக