தலைப்பு

சனி, 29 மே, 2021

EP 2: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! - காகபுஜண்ட நாடி


5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... காகபுஜண்ட நாடி வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....


✋ நாடிகள்:

நம் கை மணிக்கட்டின் அளவிற்கே இருக்கும் ஓலைச்சுவடிகளில் பதிகின்றவை நாடிகளாக அழைக்கப்படுகின்றன... பேப்பர் இல்லாத காலத்தில் காய்ந்த பனை ஓலைகளால் எழுதப்பட்ட எழுத்துக்களும்.. அவை எழுதிய விதமும் சாதாரணமானவை அல்ல... 

பெரும் உழைப்பும்.. ஈடுபாடும்.. அதிக நேரமும் ஆகக்கூடியது. பேனாவில் எழுதுவது போன்று சுலபமானதல்ல... இறைவன் சத்ய சாயி இயற்கையின் தாய்.. அவரை.. அவர் பேரவதார மேன்மைகளை இயற்கையோடு இயற்கையாக பனை ஓலைகளில் எழுதி வைத்திருப்பது எத்தனைப் பொருத்தம் 


🌹 ரிஷி காகபுஜண்டர்:

 

யுகம் ஆரம்பித்த காலத்திலிருந்தே இருக்கும் அற்புத ரிஷி காகபுஜண்டர். காகத்தின் வடிவத்திலும் காட்சி புரிவார். பல யுகங்களை சாட்சியாகப் பார்த்தவர். அஷ்டமா ஸித்தி கைவரப் பெற்றவர்கள் தான் அத்தனை ரிஷிகளும்.. அந்தப் பேராற்றல் தந்த பேரிறைவனை அவர்கள் பதிந்து வைக்காமல் யாரால் பதிவு செய்ய முடியும்!! இதோ காகபுஜண்டர் பேரிறைவன் சத்யசாயியை பற்றி சுவடிகளில் பகிர்ந்த முக்கியமானவை... சுவாரஸ்யமானவை மட்டும் பார்ப்போம்


🌹காகபுஜண்ட நாடி:


உள்ளத்தால் தொட்டனையே உலகத்தோர் உள்ளத்தை

வளமென்னும் வாழ்வு தர வந்தனை பரிவொத்த வடிவன்னை

இப்படியே ஆரம்பித்து சுவாமியை வடிவன்னையாக வர்ணிக்கிறார் காகபுஜண்ட ரிஷி..

உலகத்தோர் உள்ளத்தை தன் பேரன்பால் சுவாமி உள்ளத்தால் தொட்டவர் என்பதை உள்ளபடி உரைக்கிறார் ரிஷி. 


🌹சூரியனுக்கே சுவாமி தரும் ஒளி:


உதிக்கும் ஒளியவன் நாளது கதிரொளியோன் என்று சூரிய ஒளி குறித்து ஆரம்பிக்கும் பாடலில் 

அளிக்கும் ஆனந்தம் எண்ணிலடங்காது* என சூரிய குணத்தை குறிப்பிட்டு ...சூரிய குணம் என்பது கிருஷ்ணர் குணம்.. சந்திர குணம் ராமரின் குணம். 

காணும் தளமெல்லாம் பூரணம் கூட்டுவது

தானொத்து எண்ணிலடங்கா நிறைவுடையோன்

நின்ற ஒளியுடையோன் ஏற்றமிகு-- அருளும்

எப்படி சூரியனுக்கும் சுவாமிக்கும் பொருந்தும் படியாக ஒரே பாடலில் உணர்த்துகிறார் பாருங்கள்..

அடுத்தது தான் கிளைமாக்ஸ் 

சாயி அருளொளியின் வழி நியதி என முத்தாய்ப்பாக முடி சூட்டுகிறார்.

சுவாமியின் அருள் எனும் பேரொளியின் நியதிப்படி தான் சூரியனே பிரகாசிக்கிறான் என்கிறார் காகபுஜண்டர்..

இந்தப் பாடலை அவர் ஓலைச்சுவடியில் எழுதிக் கொண்டிருந்தபோது சூரியனைப் பார்த்தபடியே எழுதி இருக்க வேண்டும் என ஒரு நிமிடம் என் இதயம் நின்று துடித்தது.🌹முதலான முடிவும் -- முடிவான முதலும்:

மனிதன் அறிந்திருக்கும் எல்லா அறிவியல் ஞானங்களையும் கடந்த முடிவான ஆன்ம ஞானம் தான் நம் சாயி

எனும் ஆழமான மெய்யியல் கருத்தை விதைக்கிறார் ரிஷி. மேலும் 

இவரின் பிறப்பே சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வில் ஆன்மீகத்தை ஒரு பகுதி ஆக்கி அவனை முழுமையடையச் செய்வதற்கே என்கிறார்.

இது இப்போது நிதர்சனமாக நம்மால் உணரப்பட்டு.. அனுபவிக்கப்பட்டு வருவதால் நாம் ஒவ்வொருவருமே இதற்கு வாழ்வியல் சான்று.


🌹 சுவாமியின் அவதார நட்சத்திரம்:

சுவாமி தன் ஒவ்வொரு அவதார அம்சத்தையும் தானே தேர்ந்தெடுத்து பூமியில் இறங்குகிறார். இதுவே சுவாமியின் மூன்று அவதாரங்களிலும் தொடர்கின்றன... ரூபம்/ நட்சத்திரம்/ ஸ்தலம் / அவதார நோக்கம்/ சங்கல்பம் என சுவாமியே முடிவு செய்கிறார்.. இதை தீர்க்க தரிசனமாய்ப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே உணர்ந்த ரிஷி இதோ...


விதித்தவளே விளம்புவேன் புஜண்டன் யாம்

ஆகுமாம் ஆதிரையிலே அம்பலத்துக் கூத்து கொள்ளும்

ஆதி அருட் பொருளாம் ஈசன் அவன் உவந்த ஒளியே!

காணும் கலியில் கால ஒளியோன் ஆவான் சாயி

கருத்துடன் எண்ணுவோர்க்கு ஆதியருள் பகவன்

ஆனந்த அரவிலே துயில் கொள்ளும் அரங்கனும் ஆவான்

இதை விட எவரால் தெள்ளத்தெளிவாக சுவாமி இறைவனே என்பதை உணர்த்தமுடியும்!!

ஆதிரையிலே அம்பலத்து கூத்து கொள்ளும் ஆதி அருட் பொருள் என்கிறார் புஜண்டரிஷி. 

திருவாதிரை நட்சத்திரத்தைத் தான் ஆதிரை என்பர். சுவாமி அவதரித்த நட்சத்திரம் அது. 

சுவாமி எப்போதும் லீலா நாடக சாயியே என்பதை அம்பலத்து கூத்து என சிவனோடு சேர்த்து நம் சிவசக்தி அம்சனை கொண்டாடுகிறார் ரிஷி.

கால ஒளியோன் ஆவான் சாயி என சுவாமியின் பேரிறைவப் பேராற்றலை அப்படியே பதிவு செய்கிறார் ரிஷி.

ஓம் ஸ்ரீ சாயி ஆதி புருஷாய நமக என சுவாமி அஷ்டோத்திரத்தில் வரும்.. அதையே புஜண்ட ரிஷி ஆதியருள் பகவன் என்கிறார்..

ஆதி பகவன் முதற்றே உலகு என திருவள்ளுவர் குறிப்பிட்டதும் இறைவன் சத்ய சாயியை தான் என்பது புஜண்ட ரிஷி பாடல் வழி சாட்சியமாக அமைகிறது!!

ஆனந்த அரவிலே துயில் கொள்ளும் என்ற வரியில் சுவாமி குழந்தையாக இருக்கையில் அரவம் ஒன்று சுவாமியே அரங்கன் என்று புரிந்து தன்னையே மெத்தையாக்கிய சம்பவம் அனைவருக்கும் தெரியும். அதையே புஜண்ட ரிஷி கூறி.. சுவாமியை பெருமாள் என்கிறார்‌ . இந்தப் பாடல்வழி சிவ-விஷ்ணு பேதமும் நீங்கி விடுகிறது. சுவாமியே சர்வதேவதா அதீத ஸ்வரூபம் என்பதும் புரிகிறது.


🌹சுவாமி இறைவனே... சித்தர் இல்லை:


பேரானந்தப் பரவசத்தினால் பாருலகோருக்கு பலவிதம் அளிக்க

சித்தர் எனச் சொல்லுவார் உத்தம சோதியில் ஒன்றாதார்

என்கிறார் புஜண்ட ரிஷி .

பலவிதம் அளிக்க என்பது சுவாமியின் பேரிறை சிருஷ்டியைக் குறிக்கிறது.

சித்தர் இல்லை சுவாமி.. அப்படி நினைப்பவர் சுவாமியின் பேரொளியோடு ஒன்றாதவர் என்கிறார் ரிஷி.

காணுபவர் தம் இச்சைக்கு உவந்து

வேணுவாறு வேடிக்கைகள் காட்டீனீரோ

என்கிறார் இன்னொரு பாடலில்..

இதையே தான் கம்பர் 

அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே என்கிறார். அந்த அலகிலா விளையாட்டு தான் யுகம் யுகமாய் சுவாமி புரிந்து வருகின்ற திருலீலைகள்.


🌹சுவாமியின் முந்தைய அவதாரம் பற்றி...


சிந்தனையில் ஒன்றி சிறப்புற்று

நிறை நலங்கள் அளிக்கும் உத்தம ஒளி

ஒளிமயமாய் சீரடி என்னும் அருள் தலத்திலே எழுந்து

ஒளிகண்டு வணங்குவார் வழிகண்டு

 என சுவாமியின் முந்தைய அவதாரமான ஷிர்டி சுவாமியை உத்தம ஒளி என்கிறார். சுவாமியை ஆதி ஒளி எனவும்...ஷிர்டி சுவாமியை உத்தம ஒளி எனவும் குறிப்பிட்டு ஒளிமயத்தில் பேதமே இல்லை என்பதை மறை கருத்தாக எடுத்துரைக்கிறார் ரிஷி.


🌹ஸ்ரீ கிருஷ்ணரும் சத்யசாயியும் ஒன்றே!!


காணும் நல் கலியோட்டம் அது தன்னில் எனத் தொடங்கும் பாடலில்

கோவர்த்தன கிரியை குடையாகக் கொண்டு என துவாபர யுக மலையையே கண்ணன் குடையாக்கிய சம்பவத்தைக் குறிப்பிட்டு...

இன்றைய நாளில் அதைப் போல் என்ன குடை? என்று ரிஷியே கேட்டுவிட்டு அவரே பதில் சொல்கிறார்...

தன் அருட் குடையின் கீழாக

ஆனந்த மயமாக அடைந்தாரை எல்லாம்

ஒளிமயமாய் ஜீவ ஒளியில் உவந்து

ஒன்றிக் காக்க வந்த ஒளிமயமாகும் சாயி

என அதே கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்தவரே இந்தக் கலியில் அருட்குடையை அனைவருக்குமாக பிடித்திருக்கிறார் என ஆழமாய்... தீர்க்கமாய்ப் பதிவு செய்கிறார் புஜண்ட ரிஷி.


🌹நொடியில் தோன்றி மறைதல்:

இக்காலத்தில் கண்கட்டி வித்தை செய்பவர் போல்

தோற்றமது காட்டி என ஆரம்பிக்கும் பாடலில் .. சுவாமி புரிவதெல்லாம் வெறும் கண்கட்டி வித்தையா என மாயையில் மனிதர் இருக்க.. இல்லை என்பதை அடுத்த வரியிலேயே...


தோற்றமே தொடராது காண கண்முன் படீரென்று வந்து கணத்திலே மறைவர் என சுவாமியின் இறைப்பேராற்றலை எடுத்துரைத்து...

ஆன்ம ஒளிக்கு ஆதாரமாகி

அண்டமெல்லாம் அருள்நோக்கினால்

நோக்கும் அன்னையே வடிவமாகும் சாயி

என்று சத்யசாயி இறைவனே என்கிறார்.


🌹விஷம் வைத்தவருக்கும் விநயமான சாயி:

இது சுவாமி வாழ்வில் நிகழ்ந்த சம்பவம். ஒரு பெண்மணி சுவாமிக்கு விஷம் வைத்த வடை தந்து அவரை உலகிலிருந்து விடை பெற வடை பெற வைத்தார். அதை புன்னகைத்து உண்டு.. அதை முழு வடையாக வெளியே எடுத்து.. அந்தப் பெண்மணியை தன் பேரன்பால் தன் பேராற்றலை உணர்த்தி சுவாமி நல்வழிப்படுத்தியதை...


ஆலகால விடமுண்டோன்

அன்னவரைக் கண்டு புன்முறுவல் பூக்கும் சாயி

ஓர் பூரணத்தைப் பெற்ற பேரருள் ஒளியன்றோ என்கிறார்.

இந்தப் பாடலில் அந்த அன்னவர் தான் விஷ வடை கொடுத்த அந்தப் பெண்மணி.. விடம் என்பது விஷத்தை குறிக்கிறது. 

புன்முறுவல் பூக்கும் சாயி என்பதிலிருந்து சுவாமியின் அவதார லீலைகளை எல்லாம் தவத்தில் கண்ணாற கண்டே புஜண்ட ரிஷி புளகாங்கிதம் அடைந்து எழுதியிருக்கிறார் என்பதை பாடல் வழியே புரிந்து கொள்ள முடிகிறது.

(நாடி படிக்கப்பட்ட இடம்: தாம்பரம். படிக்கப்பட்ட நாள் : 26.03.1991)


இவர் காக புஜண்ட ரிஷி அல்ல.. கடல் புஜண்ட ரிஷி என்று தான் அழைக்க வேண்டும். கடல் போன்ற பாடல்கள் சுவாமியைப் பற்றி இடம் பெற்றிருக்கின்றன.. அதில் ஓர் துளியையே தந்திருக்கிறோம்...

ஒரு பானை சோறுக்கு ஒரு பருக்கை பதம் போல்... ஒரு பூமி கடலுக்கு ஒரு துளி பதம் என்பதாக பேரிறைவன் சத்யசாயியை பற்றிய காகபுஜண்ட ரிஷி நாடி காலம் கடந்தும் நிலைத்து நின்று சுவாமி இறைவனே என்பதை வீசும் காற்று விஸ்வாசத்தோடு உணர்த்திக் கொண்டே இருக்கும்...

நாடிகளின் துடிப்பு தொடரும்...


பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக