தலைப்பு

திங்கள், 17 மே, 2021

பாபாவே சொன்ன பாபாவின் அவதார வைபவம்!


விண்ணில் இருந்து மண்ணில் வந்தான் எங்கள் சாயிநாதன். விந்தை புரியும் மாயன் - வேணு கோ பாலன். அவதாரர் எப்படி அன்னை ஈஸ்வராம்மாவின் அருந்தவப் புதல்வராக அவதரித்தார் என்ற அற்புத சரிதத்தை, அவரே கூற, அந்த அற்புத லீலா நாடகத்தை நாம் கேட்டு ஆனந்தமடைவோமாக....


🌹 ஒளிக் கீற்றாய் உள் புகுந்தான்... களி நடன கண்ணபிரான்:

பகவான் பாபா கூறுகிறார்... அப்போது புட்டபர்த்தி ஒரு குக்கிராமம். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஊர் மத்தியில் ஒரு கிணறு இருந்தது. ஒருநாள் அன்னை ஈஸ்வரம்மா அக்கிணற்றிலிருந்து தண்ணீர் முகர்ந்து திரும்பும்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது. குளிர்ந்த காற்று வீச, மிகப் பிரகாசமான ஒரு நீல நிற ஒளிப் பந்து ஒன்று ஈஸ்வரம்மா வின் உடலில் புக, இந்தக் காட்சியை சுப்பம்மாவும் காண நேர்ந்தது. இந்த நிகழ்வை இதுவரை கூறாமல், பகவான் இப்போது கூற காரணம் உண்டு.. மனிதர்கள் செய்யும் புனித செயல்களின் பலன் மகத்துவமானது என்பதை உங்களுக்கு அறிவிக்கவே இதை இப்போது கூறுகிறேன். 



🌹 சத்ய நாராயணன் என்று பெயரிடு:

பகவான் அவதரிப்பதற்கு முதல்நாள் மாலை, சுப்பம்மா வீட்டிற்கு அருகே பெத்த வெங்கமராஜூ நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்து சுப்பம்மா கூறினார் "நாளை பிறக்கப்போகும் உன் குழந்தைக்கு சத்யநாராயணன் என பெயரிடு". இதைக்கேட்ட பெத்த வெங்கமராஜு அவர்கள் இது அந்த முட்டாள் பெண்ணின் அர்த்தமற்ற பேச்சு என மனதுக்கள் நகைத்தவாறே நடந்து செல்லலானார். மறுநாள் காலை 3 மணிக்கு பிறகு, நன்முகூர்த்தத்தில் குழந்தை அவதரித்தது.


பிறந்த குழந்தை அழும் என்பது உலக நியதி. ஆனால் இந்தக் குழந்தையோ அழவே இல்லை. அருகில் இருந்தவர்கள் குழந்தை உயிருடன் இருக்கிறதா ? என ஐயப்பட்டனர். அன்னை ஈஸ்வராம்பாவும் இது போன்றே நினைத்தாள். பிள்ளையின் உயிர்ப்பு தன்மையை சோதிக்க, தன் கையால் குழந்தையைக் கிள்ளினாள். அப்போதும் அழாத குழந்தை , மெல்ல புன்னகைத்தது. பிறந்து சில மணித்துளிகளே ஆன ஒரு குழந்தை சிரிப்பது என்பது அதுவரை பூஉலகில் நடவாத அதிசயம். இந்த மர்மத்தை கண்டு வியந்த உறவினர் மேலும் சில கடும் முயற்சிகளைக் கையாண்டு குழந்தையை அழவைக்க முயன்று தோல்வியுற்றனர். பின்னர் குழந்தையான பாபாவின் மகத்துவத்தில் அவர்கள் உணர்ந்து அப்போதிலிருந்தே அவரிடம் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர். (மனம் நசுங்கி, உடல் நலிந்து வாய்விட்டு அழும். தீனர்களை கடைதேற்றி மகிழ்விக்க வந்த பாபா, சிரித்துக் கொண்டே பிறந்ததில் ஆச்சர்யம் என்ன) இவ்வாறாக சில காலம் கழிந்தது. பாபா அவதார பிரகடனம் செய்து தமது தெய்வீக நிகழ்வுகளை நிகழ்த்த ஆரம்பித்தார். இதற்கிடையில் சிலர் தங்களை சாய்பாபா என கூறி வலம் வந்தனர். அவர்களும் பாபா போன்று முடி வளர்த்து, பாபா போன்று உடை அணிந்து பாபா போலவே தோற்றம் அளித்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் பித்தலாட்டக் காரர்கள் என பாபா ஆணித்தரமாக சாடினார்.


இதற்கிடையில், கர்னம் சுப்பம்மா புட்டபர்த்தியில் பாபாவுக்கென ஒரு இருப்பிடம் கட்டித் தந்தார். பாபாவும் அதில் குடியேறினார்.பிறகு அங்கிருந்து பெங்களூருக்கு பலமுறை சென்று வந்தார். இதைக்கண்ட ஈஸ்வராம்மா , பகவானிடம் பதைப்புடன் வேண்டினார் "ஸ்வாமி நீங்கள் எங்கு வேண்டுமாலும் சென்று திரும்புங்கள். ஆனால் புட்டபர்த்தியைவிட்டு எங்கும் செல்லக் கூடாது". பகவானும் அதை ஒப்புக் கொண்டு அன்னையிடம் வாக்களித்தார். ( ஈஸ்வரம்மா அன்று கேட்ட வரம், இன்று புட்டபர்த்தி- சாயி பக்தர்களின் கைலாசமாக, சாயிராமனின் வைகுண்டமாக, புனித மெக்கா, மதீனா, குருத்வார், ஜெரூசலமாக மாறி மனித குலத்திற்கே ஒரு புகலிடமாக விளங்குகிறது அல்லவா..)



இதன்பின் பல மக்களும், அரச குடும்பத்தினரும் பகவானை தரிசிக்க புட்டபர்த்தி வந்தனர். கரை புரண்டோடிய சித்ராவதி நதியை கடந்து இங்கு வந்தனர். அது அவர்களின் பக்திக்கு பாங்கான எடுத்துக்காட்டு. அன்னையின் மகத்துவம் அளவிடற்கரியது. அன்னையர்கள் அனைவரும் சிறந்த குணவதிகளாய் இருந்து தக்க முறையில் தம் மக்களை வளர்த்ததினால் தான், பிள்ளைகளும் மிகச் சிறப்பாக விளங்கினர். அன்னையின் வாக்குக்கு கட்டுப்பட்டே நான் புட்டபர்த்தியில் நிரந்தரமாக தங்கினேன்.


🌻 சாய்ராம்.... மிக அற்புதமான நிகழ்வுகளை பகவான் விவரிக்க கேட்டோம். எவ்வாறு அவதாரம் நிகழ்ந்தது, மனித உருவில் வந்தபின் பாபா எவ்வாறு மேம்பட்ட குண நலன்களை தம் வாழ்வில் கைக்கொண்டு, MY LIFE IS MY MESSAGE என்ற பொற்பட்டயத்தை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார் என்பதை இந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. கேட்டால், படித்தால் மட்டும் போதாது YOUR LIFE IS MY MESSAGE என்று பாபா கூறியபடி வாழ்ந்து , அவரின் அருளைப் பெறுவோமாக. 🌻


ஆதாரம்: சுவாமியின் வீடியோ சொற்பொழிவிலிருந்து...

தமிழாக்கம்: திரு. N.குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக