தலைப்பு

திங்கள், 3 மே, 2021

உனக்குத்தான் என்னை பிடிக்காதே!


யாரோ ஒருவர் சொல்வதற்காக எல்லாம் கார்மேகம் கலைந்து போனால் மண் வறண்டு விடும் அல்லவா.. அப்படியே இறைவனிடம் மனிதனுக்கான பக்தியும்... இறை வடிவங்கள் வெவ்வேறாயினும்.. இறை சக்தி ஒன்று தான் எனும் ஆழ்ந்த புரிதலுக்குப் பிறகு புயலடித்தும் அசையாத சிகரம் போல பக்தியில் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதைக் கற்பிக்கும் நிதர்சன அனுபவப் பதிவு இதோ...

நானும் எனது மனைவியும் என் நண்பரின் வீட்டிற்கு சென்றபோது பகவான் ஒரு அற்புத சம்பவத்தை எங்கள் வாழ்வில் அரங்கேற்றினார். மன்னிக்கவும் சற்று நீண்ட பதிவு தான் இருந்தாலும் சுவாரசியம் குறையாது... 

என்னுடைய நெருங்கிய நண்பரான திரு K. தியாகராஜன் அவர்கள் பெங்களூருவில் போட்டோகிராபி தொழில் செய்து வந்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருவில் ஒரு புதிய ஸ்டூடியோ ஒன்றை நிறுவினார். அந்த ஸ்டுடியோவில் சத்ய சாயி பாபாவின் படத்தை  ஒன்றையும் மாட்டியிருந்தார். அந்த கடையை வாடகைக்கு கொடுத்த பில்டிங்கின் உரிமையாளருக்கு சத்திய சாயி பாபா மீது நல்ல அபிப்பிராயம் இல்லாத காரணத்தால் ஒருமுறை பாபாவின் படத்தை பார்த்து கிண்டல் செய்திருக்கிறார். அதற்கு என் நண்பரோ அடுத்த நாளே சத்ய சாயி பாபாவின் படத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் சீரடி பாபாவின் படத்தை மாட்டினார்.


கிட்டத்தட்ட இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு என் நண்பர் அவர்களது குடும்பத்துடன் புட்டபர்த்திக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்யச் சென்றிருக்கிறார்.  இரவில் போய்ச் சேர்ந்ததால் அருகில் இருந்த ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்து, அடுத்த நாள் காலை  தரிசனத்திற்கு சென்றுள்ளார். சுவாமியின் புகைப்படத்தை ஒன்றையும்  கொண்டு சென்றிருக்கிறார். சுவாமி தரிசனத்திற்கு வரும் போது முடிந்தால் அவரிடம் கையொப்பம் பெற வேண்டும் என்பதே அவரின் விருப்பம். என் நண்பரோ ஐந்தாவது வரிசையில் ஒரு மூலையில் அமர்ந்து இருந்தார். தரிசனத்திற்கு வந்த சுவாமி சற்றும் எதிர்பாராத நேரத்தில் என் நண்பரை நோக்கி விரைந்தார்.  என் நண்பரோ சுவாமியை நமஸ்காரம் செய்துவிட்டு தன் கையில் இருந்த புகைப்படத்தை சுவாமியிடம் கொடுத்தார்.  அதற்கு சுவாமி "கையொப்பம் வேண்டுமா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு என் நண்பர் ஆம் சுவாமி என்று பதில் உரைக்க உடனே சுவாமி 'இந்த புகைப்படம் வேண்டாம், உனக்கு வேறொரு புகைப்படத்தில் கையொப்பமிட்டு தருகிறேன்' என்று தன்னுடைய உதவியாளரை அழைத்து  நேர்காணல் அறையில் ஒரு புகைப்படம் கொண்ட ஒரு கவர் ஒன்றை வைத்துள்ளேன் அதை எடுத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார்.


அந்த உதவியாளரோ உடனே சென்று அந்தக் கவரை எடுத்துக்கொண்டு வந்து சுவாமியிடம் கொடுத்திருக்கிறார்.  அதை வாங்கிக்கொண்ட சுவாமி என் நண்பர் வைத்திருந்த பேனாவை வாங்கி கையப்பமிட்டு கொடுத்து இருக்கிறார்.  அந்தப் புகைப்படத்தை பெற்றுக்கொண்ட என் நண்பருக்கு பெரும் அதிர்ச்சி. ஏனென்றால் அந்தப் புகைப்படத்தில் இருந்தது சீரடி சாய்பாபாவின் உருவம். என் நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை குழம்பிக் கொண்டிருந்த அந்த நொடியில் சுவாமி "உனக்குத்தான் என்னைப் பிடிக்காதே!" என்றார். சுவாமியின் சக்கர நாற்காலி அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது.


அப்போதுதான் என் நண்பருக்கு எல்லாம் ஞாபகம் வந்தது. ஐயோ நாம் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம். அடுத்தவருக்காக நம்முடைய சுவாமியின் புகைப்படத்தை மாற்றி பெரிய தவறு செய்துவிட்டோம் என்று அப்போதுதான் நண்பருக்கு உரைத்தது. பின்னர் அந்த தரிசனத்தில் அமர்ந்திருந்த அவர், கண்ணீர் மல்க சுவாமியிடம் மனதளவில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். சுவாமி எனக்கு இந்தப் புகைப்படம் வேண்டாம். உங்களுடைய புகைப்படம்தான் வேண்டும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று. அப்படியே நேரம் ஆக ஆக தரிசன நேரமும் முடிந்தது என் நண்பரும் மனவருத்தத்துடன் பெங்களூரு புறப்பட்டு வந்துவிட்டார். 

அவர்கள் வந்து சேர்ந்த அந்த நேரம் பார்த்து நானும் என் மனைவியும் எதேச்சையாக நண்பரின் குடும்பத்தை பார்க்க அங்கு சென்றிருந்தோம். என் நண்பரோ நடந்தவற்றை எல்லாம் வருத்தத்துடன் எங்களிடம் சொல்லிக் கொண்டே இருந்தார் பின்னர் சுவாமி கையொப்பமிட்ட அந்தப் புகைப்படத்தை எங்களுக்கு காண்பிப்பதற்காக நாங்கள் பேசிக்கொண்டிருந்த அந்த அறையில் இருந்த ஒரு பெட்டியைத் திறந்து பார்த்த என் நண்பர் 'சுவாமி... சுவாமி... ' என்று  அழுதுகொண்டே கத்தினார்.  எனக்கும் என் மனைவிக்கும் ஒன்றும் புரியவில்லை. 


பின்னர்தான் புரிந்தது சுவாமி கையொப்பமிட்ட அந்த சீரடி பாபா புகைப்படம் மறைந்து, அதற்கு பதிலாக அவர் முதலில் எந்த புகைப்படத்தை சுவாமியிடம் கொடுத்தாரோ அந்த புகைப்படத்தில் நம்முடைய சத்ய சாயி பாபாவின் கையொப்பம் இருந்திருக்கிறது.  இதை பார்த்துக்கொண்டு  இருந்த எனக்கு யாரோ ஓங்கி கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. குற்ற உணர்ச்சி குறுகுறுத்தது.  ஆம் அவர் செய்த அதே தவறை நானும் செய்திருந்தேன். எனக்கு சுவாமியை பிடித்தாலும்கூட என்னுடைய ஆபீஸ் கணினியின் வால்பேப்பராக சீரடி சாயிபாபாவின் படத்தைத்தான் எப்பொழுதும் வைத்திருப்பேன் ஏனென்றால் மற்ற நண்பர்கள் யாரேனும் ஏதேனும் செய்வார்களோ என்ற ஐயம். எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து உள்ளேன் என்பதை  அப்பொழுதுதான் நான் புரிந்துகொண்டேன். பின்னர் நான் முழு சாயி பக்தனாக  மாறினேன்.  எங்கும் சுவாமியை பார்க்க ஆரம்பித்தேன் அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பதை உணரத் தொடங்கினேன்.

 - ஜெய்கிருஷ்ணன் M.S (Jaykay M.S)
சத்ய சாயி யுகம் வாட்ஸ் அப் குரூப்ஸ் 


🌻ஒரு பக்தருக்கு சுவாமி தரும் அனுபவம் மூலம் இப்படி எண்ணற்ற பக்தர்களை மாற்றுகிறார்.. சுவாமி நிகழ்த்தும் பேரற்புதம் என்பது ஒரு வாகனமே.. அந்த வாகனத்தில் பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏற முடிகிறது.. அந்தப் பயணச்சீட்டே பக்தியும்... விடாப்பிடியான நம்பிக்கையும்.. மற்றவர்கள் வீணாக சந்தேகப்பட்டு வாகனம் வந்தும் கூட ஏறாமல் ஜென்ம ஜென்மமாக காத்திருக்கிறார்கள்...காலம் காற்றாகிறது... பிறவி பாழாகிறது.. பக்தியே மனிதப்பிறவிக்கான வெகுமதி எல்லாம்...!! அதையே அதனிலிருந்து வரும் சரணாகதியையே பக்தர்களிடம் சுவாமி விரும்புவது... 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக