தலைப்பு

செவ்வாய், 4 மே, 2021

பூஜையறை முதல் புட்டபர்த்தி வரை விசித்திர தரிசனம் அளித்த பாலாஜியான பாபா'ஜி!

சுவாமியைப் பற்றி தொடர் வதந்திகளையே கேள்விப்பட்டு பயந்து போய் இருந்த ஒரு வெகுளிப் பெண்மணிக்கு தன் தனிப்பெருங் கருணையால் தானே அவரது குலதெய்வம் திருப்பதி பெருமாள் என எவ்வாறு சுவாமி உணர வைத்தார் எனும் பரவச அனுபவம் சுவாரஸ்ரமாய் இதோ...


திருமதி பத்மாவதி குப்புசுவாமிராவ் அவர்களோடு நூலாசிரியர் 20.06.1988 அன்று புட்டபர்த்தியில் பேசுகிற போது அவர் பகிர்ந்த சுவாமி அனுபவம் இது!    

           பத்மாவதியோ மிகுந்த வெகுளி... யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுவார்... பாவம் அப்பாவி... சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் ஒரு அரசாங்க ஊழியரை திருமணம் செய்ததால் ஹைதராபாத் வருகிறார்...அங்கே அரசல் புரசலாக சிலர் சுவாமியைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள்.. "அந்த புட்டபர்த்தி சாமியாரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்... அவர் மாய மந்திரம் எல்லாம் தெரிந்தவர்... அவரை நம்பவே கூடாது... மோசடி செய்கிறார்... அவர் படம் எல்லா இடங்களிலும் விற்கிறார்கள்...வாங்கி மாட்டி நாம் அவரிடம் மாட்டிக் கொள்ளவே கூடாது!" என்கிறார்கள்... இந்தப் புறம்பேச்சு அடிக்கடி அக்கம் பக்கத்தில் நிகழும்... இவை யாவும் உண்மையென நம்பிக் கொண்டு பயந்து கொண்டிருந்தார் அந்த பத்மாவதி... 


பிறகு தெலுங்கானா கலகம் ஏற்பட‌...அரசு வேலை மாற்றலாகி பெத்தாபூருக்கு வருகிறார்கள். ஆடம்பரமான ஊராம் அது! இப்போது சுவாமி பக்தர்களால் நிரம்பி சாயி பஜனால் குதூகலமடைந்து கொண்டிருக்கிறதாம்! அன்றைய காலகட்டத்தில் சுவாமி என்றாலே தொடை நடங்கும் பத்மாவதி அக்கம் பக்கத்தினர் எவரிடமும் பேச்சு கூட கொடுக்கவில்லை... பிறகு சிறிது சிறிதாக 3 ஆம் வீட்டில் இருக்கும் பெண்மணியிடம் பழக ஆரம்பிக்க... அவர் வீட்டிற்கு ஒருநாள் செல்கிறார்... கதவு தட்டுகிறார்... அந்தப் பெண்மணி திறக்க.. வீடு முழுவதும் சுவாமியின் திருப்படம்... பத்மாவதிக்கோ உடம்பெல்லாம் நடுங்குகிறது... அய்யய்யோ இவரா.. என கால்களில் பசை தடவி ஒட்டியது போல் நின்ற கோலத்திலேயே நின்று கொண்டிருக்க... உள்ளே அழைக்கப்படுகிறார்... ஹும்ஹும் ஒரு அடி கூட உடம்பு நகரவில்லை... "இந்த சாமியாரையா வீடு பூரா மாட்டி வைத்திருக்கிறீர்கள்!" என வாயில் அடித்துக் கொள்கிறார்... "எங்கள் சுவாமியை பற்றி கேட்டாய் அல்லவா! வரும் வியாழன் வா.. உன்னை எங்கள் பூஜையறைக்கு அழைத்துப் போகிறேன்!" என்கிறார் 3 ஆம் வீட்டுப் பெண்மணி. இவர் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வருகையில் பேய் வீட்டைத் திரும்பிப் பார்ப்பது போல் ஒருமுறை பார்த்து விட்டு மூச்சிறைக்க வீட்டிற்கு வருகிறார். இரவெல்லாம் தூக்கமே இல்லை... இந்த வாரம் மட்டும் வியாழக்கிழமையே வராமல் நேரடியாக வெள்ளிக் கிழமை வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...! நாம் அந்த 3 ஆம் வீட்டம்மாவிடம் மாட்டாமல் தப்பித்து விடலாம் என்று நினைக்கிறார்... சரி அப்படி என்னதான் அந்த பூஜையறையில் அந்த சாமியார் படத்தைத் தவிற இருக்கப் போகிறது? என்ற ஆர்வம் எழுகிறது! 


வியாழக்கிழமை அன்று... கொஞ்சம் தைரியம் வரவழைத்து கதவைத் தட்டுகிறார் பத்மாவதி... அந்த கதவிலிருந்து வந்த சத்தத்தை விட தன் இதயத்திலிருந்து எழுந்த 'லப் டப்' சத்தமே அதிகமாகக் கேட்கிறது! கதவை திறந்து கைப்பிடித்து அழைத்துப் போகிறார் அந்த வீட்டம்மா... வீடு முழுக்க திரும்பி திரும்பிப் பார்க்கிறார்...ஒரே சுவாமி மயம்... பத்மாவதிக்கோ ஈரக்குலை நடங்குகிறது... ஒருவேளை வந்திருக்கக் கூடாதோ... அந்தப் பெண்மணி கையை இறுக்கமாய் பிடித்திருந்தபடியால் நழுவி ஓடவும் இயலாத சூழ்நிலை... அது பூஜையறை... சுவாமியின் பெரிய பெரிய திருப்படங்கள் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன... பெரிய பூஜையறை அது... அருகே ஒரு நாற்காலியும் திண்டும் இருக்கிறது... அருகே ஒரு ஈஸி சேரில் சுவாமி அமர்ந்தபடி பத்மாவதியை பார்த்து புன்னகை செய்து கொண்டிருக்கிறார்... மனப்பிரமையோ என மீண்டும் கண்களை கசக்கிப் பார்க்கிறார்... மீண்டும் அதே காட்சி... அய்யய்யோ சத்தியமாக மாட்டிக் கொண்டோம்... இவர் புட்டபர்த்தியில் தானே இருப்பதாக சொல்லியிருந்தார்கள்... இவரை இங்கே யார் அடைத்து வைத்திருப்பது? சுவாமியிடம் நெருங்காமல் 3 ஆவது வீட்டுப் பெண்மணியின் முதுகுக்குப் பின்புறமே ஒளிந்து கொள்கிறார்... எப்படியாவது இங்கிருந்து தப்பித்தாக வேண்டும் என நினைக்கிறார்... அடுத்த அறையில் ஆள் உயர சுவாமி படம்.. திக் என்று இருக்கிறது... அடுத்த அறையில் திருப்பதி  பெருமாள் சுவாமி என மற்ற படங்கள்... இந்தப் படங்களை எல்லாம் இங்கே வைத்துவிட்டு.. அவரை மட்டும் பூஜையறையில் ஏன் ? என இழுத்தபடி பேச... "அவர் தான் சாயிபாபா... எங்களுக்கு எல்லாமே அவர் தான்... எல்லா சுவாமியுமே அவர் தான்!" என தீர்க்கமாக அந்த வீட்டம்மா பேச... அவரையே வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறார்களே...இவர்களும் மோசமானவர்கள் தான் என பயந்து தலை தாழ்த்தியபடி பிரசாதம் எல்லாம் வாங்கி பறந்து வீட்டுக்கு வந்து விடுகிறார் பத்மாவதி! 


அதையே நினைத்துக் கொண்டிருக்கிறார்... "எப்படி அவர் அங்கே? நம்மைப் பார்த்து ஏன் புன்னகை செய்கிறார்..? நமக்குத் தான் அவர் என்றாலே பயம் அல்லவா...!" இதே சிந்தனை... "ஆனால் பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் அவர் பயங்கரமாக இல்லையே... சாந்தமாகத்தானே இருக்கிறார்... முகமும் தேஜஸாக இருக்கிறதே...!" என்று யோசிக்க ஆரம்பிக்கிறார்.. அடுத்த வியாழன்.. 3 ஆம் வீட்டுக்கதவு டக் டக்.. இப்போது பத்மாவதியின் இதயக்கதவு பதட்டமாக அடிக்கவில்லை... சுவாமி படங்களைப் பார்க்கிறார்.. இப்போது பயம் சற்று அடங்கி இருக்கிறது... பூஜையறைக்கு அழைத்துப் போகப் படுகிறார்... அவர் எங்கே...? அவர் எங்கே? என குழந்தை போல் கழுத்தை அங்கும் இங்கும் திருப்பிக் கொண்டிருக்கிறார்.. "என்ன தேடுகிறீர்கள்?"

"இல்லை... இங்கே ஒரு நாற்காலியும் திண்டும்..." என பத்மாவதி தேடி... 

"அதை ஆர்டர் கொடுத்து இனிமேல் தான் வாங்க வேண்டும்.. என் கணவரிடம் சொல்லிவிட்டேன்.. சுவாமி தான் வழி அமைக்க வேண்டும்!" என்கிறார்... பத்மாவதிக்கோ தூக்கிவாறிப் போடுகிறது... ஈஸி சேரில் அமர்ந்த சுவாமியையும் காணவில்லை... அப்போது தான் சுவாமி தனக்கு மட்டும் பிரத்யேகமாக காட்டிய தரிசனத்தை உணர்ந்து பரவசப்படுகிறார்... வீட்டுக்கு வந்து சேர்கிறார் ஈர விழிகளோடு... சுவாமியை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிட... 


"புட்டபர்த்திக்கு சென்று உங்கள் சுவாமியை தரிசிக்க வேண்டும் போல் ஏக்கமாக இருக்கிறது என்கிறார்" வெகுளியான பத்மாவதி! அப்பாவிகளை ஆண்டவன் தன் மடியில் அமர்த்திக் கொள்கிறான்.. தீனர்களைத் தன் தோள்களில் சுமக்கிறான்... வெகுளிகளுக்கு தன் இதயத்தில் இடமளித்து அபயமளிக்கிறான்.. சுவாமியின் சுபாவம் இது தான்!

     உடனே அந்த 3 ஆம் வீட்டம்மா பக்தர்கள் பயணிக்க இருந்த ஒரு பேருந்தில் அதற்கு ஏற்பாடு செய்ய... பத்மாவதி வீட்டில் ஒரே களேபரம்! கணவன் தாம் தூம்... "குழந்தைகளை யார் கவனிப்பது? பணம் என்ன கொல்லையில் காய்க்கிறதா? உனக்கு பொறுப்பில்லை! சாமியாரை எல்லாம் காலம் போன கடைசியில் பார்த்துக் கொள்ளலாம்..." என‌ சொற்போர் மூண்டதில் குருஷேத்திர களமாகிவிடுகிறது அவர் வீடு... அதை எல்லாம் சமாளித்து வருவதற்குள் பேருந்து புறப்பட்டு விடுகிறது.. தன் வளையல்களை ஒரு வீட்டில் அடமானம் வைத்து ரூ 150 பெற்று ஓடி வர.. சிலர் செல்ல வேண்டி இருந்த ரயில் பயணத்தில் இணைந்து கொள்கிறார்... அப்போது ஆசிரமத்தில் கேன்ட்டீன் வசதி இல்லை என்பதால் உணவுக்கான சில பாத்திரங்களோடு செல்கிறார்...

     

 மணல்வெளியில் சுவாமி பாதம் பதிக்க நடந்து வருகிறார்... "சுவாமியை தரிசனம் செய்த அதே நொடி.. தன் குலதெய்வம் திருப்பதி பெருமாளே சுவாமி என உணர்ந்து கொண்டு தெளிவாகிவிடுகிறார்...!" பிறர் சுவாமியிடம் கடிதம் கொடுப்பதைப் பார்க்க...5 கோரிக்கைகள் கொண்ட கடிதத்தை சுவாமி செல்லும் இடமெல்லாம் குட்டியைச் சுமக்கும் தாய் கங்காரு போல் கடிதம் சுமந்து செல்கிறார்... சுவாமி வாங்குகிற 5 ஆம் நாள்... அதற்குள்ளாகவே டான் டான் என அவர் கோரிக்கைகள் அவர் புட்டபர்த்தியில் இருக்கும் போதே நிறைவடைகின்றன... அருகே திருப்பதி சென்று சிலாரூபத்தை வணங்கிவிட்டு "பெருமாளே நீ தான் அந்த சுவாமி.. நீயே தான் அந்த சுவாமி... நீங்க ரெண்டுபேருமே ஒண்ணு தான்!" என அழுகிறார்... தலையை மழித்து இல்லம் வருகிறார்...

   என்ன நடக்கப் போகிறதோ சாயி ராம் என பயந்து கதவு தட்ட...அம்மா என குழந்தைகள் அணைக்க... சமையலறையிலிருந்து பூரிக் கட்டையோடு "பத்மா !" என கணவன் வேகமெடுக்க... "சாயிராம் " என கத்துகிறார்!  "பத்மா பயப்படாதே... டிஃபன் பண்ணிட்ருந்தேன்... உனக்கு ஒரு சந்தோஷமான செய்தி.. நம்ம பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு!" என பரவசப்பட்டுச் சொல்ல... பத்மாவதியோ சாயிராம் என கைகூப்பி... கண்கலங்க..."உன்னோட பக்தியால தான் இதெல்லாம் நடந்திருக்கு" என கணவர் சொல்ல... "சுவாமி தான் நடத்திருக்கார்... அவர் தான் நம்ம குல தெய்வம்!" எனப் பரவசப்பட... குடும்பமே சுவாமி பக்தராக மாறுகிறது... "பூந்தியாய் சிதறிப் போகிறவர்களையும் தன் அபயகரத்தால் ஒன்றுகூட்டிப் பிடித்து திருப்பதி லட்டுவாய் ஒன்றிணைப்பது சுவாமியால் மட்டுமே முடிகிற திருச்செயல்!


(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 1 / பக்கம் : 69 - 78 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


பூமி ஒரு புகார் பிரதேசம்...அதை பிரசாந்திப் பிரதேசமாய் மாற்ற சுவாமியால் மட்டுமே முடியும்! ஆகவே தான் சுவாமியே யாரைப் பற்றியும் புறம்பேசாதே அது பாவம் என்கிறார்‌! மனிதன் புறம் பேசுவதிலும் குற்றம் சொல்வதிலும் தனது நேரத்தை விரயப் படுத்தி... அகந்தையை அதிகப்படுத்துகிறான்... வெள்ளை இதயத்தையே சுவாமி தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார்! அதையே நாம் பத்மாவதி அனுபவத்தில் உணர்கிறோம்! அந்த பத்ம இதயத்தில் சுவாமி அமராமல் வேறு யார் அமர்ந்து விடுவார் அத்தனை வெளிச்சமோடு...! அத்தனை பேரானந்தத்தோடு...!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக