தலைப்பு

சனி, 29 மே, 2021

ஒரு பென்சிலை வைத்தே ஆயுள் ரேகையை வரைந்த இறைவன் பாபா!


இறைவன் சத்ய சாயியால் இயலாதது எதுவுமில்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் இறைவன் சத்ய சாயிக்கு சிறு துரும்பும் அவர் புகழ்பாடும் வீணையாக மாறிவிடுகிறது என்பதற்கான ஆயுள் நீட்டிப்பு அனுபவப் பதிவு இதோ...


மனிதர்கள் கணிக்கும் ஜோதிடம் ... கைரேகை போன்றவை ஒரு வரையறைக்கு உட்பட்டதே! தீவிர ஆன்ம சாதனை போன்ற ஆன்மீகப் பயிற்சிகள்.. நேர்மை / ஒழுக்கம் போன்ற வாழ்வியல் நடைமுறைகளை...ஜபதியானம் போன்ற அகப்பயிற்சிகளை மேற்கொண்டால் தான் வாக்பலிதம் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே... இன்றைய சூழலில் அப்படி வாக்பலிதம் (சொல்வது நடக்கும்படியான) உள்ளவரோ... துல்லியமாக கணிப்பவரோ மிகவும் குறைவாகவே இருக்கின்றனர். இதுவும் கலியுகத்தின் ஓர் விசேஷம். பயிர்களும் பதர்களும் சேர்ந்தே வளர்வது வயல்வெளியின் குணம் போலவே...இது பூமியின் குணமும்...


ஹைதராபாத் நகரில் ஒரு சுவாமி பக்தர்.. என்.ஜி.ஓ. குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகிறார். என்.ஜி.ஓ வில் அதிக சம்பளம் எதிர்பார்ப்பது கடினம். அவருக்கு மூன்று குழந்தைகள். பல ஜோதிடர்கள் ஆயுள் ரேகையின் நீளம் குறைவாகவே இருப்பதால்... இவருக்கு குறைந்த ஆயுள் எனவும்.. "இனி ஆயுள் முடிகிறது" என வார்த்தை அணுகுண்டை வீசி எறிகிறார்கள். பொதுவாக யார் .. எந்த நேரத்தில் மரணமடைகிறார் என்பதை இறைவன் சத்ய சாயியை தவிர எந்த மனிதர்களாலும் கணிக்க இயலாது. மரணம் நிகழும் அந்த துல்லிய நேரம் பிரம்ம ரகசியம். 


மரணத்தின் தேதி மனிதனுக்கு தெரிந்துவிட்டால்.. இரண்டு நடக்கும். ஒன்று அந்த தருணம் வரை பயந்து நொந்து வாழ்ந்து கொண்டிருப்பான்.. இல்லை எனில் அதுவரை பலரை இம்சித்து வாழ்ந்திருப்பான். பந்தபாச கட்டுகளை விடமுடியாத பக்குவ நிலை இல்லாத காரணத்தினால் மட்டுமே மனிதனுக்கு அந்த கிளைமாக்ஸ் காட்சியின் நேரம் மறைக்கப்பட்டிருக்கிறது.

கை ரேகை ஜோதிடர்கள் இப்படி சொல்லிவிட அந்த சுவாமி பக்தர் மிகவும் பயந்தே போய்விடுகிறார். தன் குடும்ப சூழ்நிலை குறித்தும்.. குழந்தைகள் குறித்தும் வருத்தப்படுகிறார். கையில் மரணச் சான்றிதழ் போல் கைரேகையுடனே அதைப் பார்த்துப் பார்த்து வாழ்க்கையை சலித்தபடி... அனுதினமும் அலுத்தபடி வாழ்கிறார்.


சுவாமியின் புகைப்படத்தைப் பார்க்கிறார்.. கண்ணீர் பீறிட்டு கைகளை நனைக்கிறது.. கண்ணீர் பட்டாவது கைரேகைகள் வளர்ந்துவிடாதா என விசனப்படுகிறார். விதியின் ரதங்களில் ஏறிவிட்டால் வீடு தெருவுக்கு வந்துவிடுமே என கவலை கொள்கிறார். கவலை எனும் தவளை வீட்டுக்கும் வீதிக்கும் அலைந்தபடி இருக்கிறது. 

ஒருநாள் இரவு நெஞ்சம் அழுத்த அப்படியே சோகம் சுமந்த கண்கள் அயர தூங்கிப் போகிறார். சுவாமி கனவில் வந்து காட்சி தருகிறார். இவரைப் பார்த்து புன்னகை புரிகிறார். இவர் கனவிலும் அதே சோக மயம் தான். இரும்பை காந்தம் இழுப்பது போல் எப்போதும் கவலையை மனம் இழுத்துக் கொள்கிறது. உரிமையோடு சுவாமி இவரின் கைகளைப் பற்றுகிறார். 

சுவாமியின் கைவிரல் ஸ்பரிசம் பட்டு பூரித்துப் போகிறார் பக்தர். கைப்புண்ணுக்கு மயிலிறகு வைத்தியம் போல் சுவாமியின் தொடுகை அவரின் தொழுகைக்கு கட்டியங்கூறுகிறது. 


சுவாமி பக்தரின் கைகளை சற்று அழுத்துகிறார். சுவாமி என்ன செய்யப்போகிறார் என்பதை அறியாதவராக அவரையே பார்த்தபடி இருக்கிறார் அந்த பக்தர். சுவாமி ஒரு பென்சிலை எடுத்து அந்த பக்தரின் ஆயுள் ரேகையை நீளமாக்குவதற்கு அந்த பக்தரின் வலது உள்ளங்கையில் ஒரு கோடி கிழிக்கிறார். அந்த பென்சிலின் நேர்க் கோடு கைகளில் அழகாகப் பதிகிறது. சுவாமி மீண்டும் புன்னகை புரிகிறார். கனவு கலைகிறது. 

அதிகாலை சுவாமி கனவில் வந்தார் என்பதால் ஆனந்தப் பட்டு .. உற்சாகப்பட்டு எழுகிறார். குடும்பத்திற்கு சுவாமி வந்த அந்த கனவை பூரிப்போடு விவரிக்கிறார். கையில் ஆயுள் ரேகையை பென்சிலால் வரைந்தார் என கை அசைத்து சொல்லியபடி அதை விவரிக்கிறார். குடும்பம் அவர் உள்ளங்கையை உற்றுப் பார்க்கிறது. உண்மையிலேயே அவரின் ஆயுள் ரேகை வளர்ந்திருக்க ஒட்டு மொத்த குடும்பமுமே ஒரு நொடி ஸ்தம்பித்துப் போகிறது.. நொடிகள் உறைகின்றன... கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது... சுவாமியின் புகைப்படம் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறார். அன்று நெகிழ்ச்சியோடு இவரின் கண்ணீரால் வீட்டின் தரை மெழுகப்படுகிறது!!

(ஆதாரம் : ஞானியர் கண்ட ஞானக் கண்ணன் -2 ... ஆசிரியர் : சாயி சரஜ்... பக்கம் : 76)


இந்த மெய்சிலிர்க்கும் அனுபவத்திலிருந்து சுவாமி கனவில் வருவது பரம சத்தியம் .. அது கனவல்ல ஆன்மீக அனுபவ நிகழ்வு என்பது புலனாகிறது‌. அதே போல் சுவாமி கைரேகையை வளர வைத்துத் தான் மரண பயத்தை நீக்க வேண்டும் என அவசியமில்லை... ஆயுள் ரேகை நீளமாக இருப்பவர்களுக்கும் சிறுவயதிலேயே மரணம் சம்பவித்திருக்கிறது என்கிறபடியால்... ஒருவருடைய பயத்தை அதன் வேரிலிருந்தே சுவாமி களைகிறார். அதற்காக இந்த கைரேகை வரைதல் லீலை என்பதும் தெளிவாகிறது. ஜனனமும்...ஆயுளும்.. மரணமும் சுவாமியின் கையில் என்கிற போது சுவாமி பக்தர்கள் எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை...

சாயியின் அபயம் உணர்ந்தவருக்கு மாயையின் பயம் இருப்பதே இல்லை


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக