தலைப்பு

ஞாயிறு, 16 மே, 2021

கொரோனாவை எதிர்த்து சத்ய சாயி அமுதம் தரும் சேவாதள தொண்டர்களுக்காக பிரார்த்தனை அரைகூவல்!


மெய்சிலிர்க்கும் வண்ணம் உயிரையே துச்சமாக மதித்து கொரோனா காலத்தில் உணவு சேவை ஆற்றிவரும் சேவா தளத் தொண்டர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்ய வலியுறுத்தும் உணர்வுப்பூர்வமான பதிவு இதோ....

அனைவருக்கும் சாய்ராம், மனிதகுல சேவையில் முதன்மையாக செயல் புரிவது சத்யசாயி நிறுவனம். அதிலும் பேரிடர் என்றால் எந்த நேரமும்  பாய்ந்தோடி வந்து முதலில் உதவிக்கரம் நீட்டுவது சத்ய சாயி நிறுவனமே... இப்போது ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய இக்கட்டில்... பேரிடரில் .. சொல்லொண்ணா துயரத்தில் இந்தப் பூமியே செய்வதறியாது ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. பிரார்த்திக்கும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்களே புனிதமானவை என்பது நிறுவனத்தின் ஆத்மபிடம். அந்த சத்தியக் கோட்பாட்டில் .. இறைவன் சத்யசாயி வழிமுறையில் 24/7 இயங்குகிறார்கள். கொரோனாவின் கோர தாண்டவத்தின் இரண்டாம் அலைவீச்சின் தொடர்ச்சியாக  கடந்து வரும் நாட்களில் தமிழ்நாடு சத்ய சாயி நிறுவனங்கள் காலத்தின் தேவைக்கேற்ப "ஸ்ரீ சத்ய சாய் அமுதம்" என்ற ஒரு உன்னத சேவையை தொடங்கி உள்ளது என்பதை நாம் அறிவோம்... தொற்று நமக்கு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய சூழலில் தங்களின் மற்றும் தங்கள் குடும்ப நலனையே பின்னுக்கு தள்ளி பகவானின் சேவையே முக்கியம் எனும் அடிப்படையில் பல சாயி சேவாதள தொண்டர்கள் இந்த உன்னத சேவையில் கலந்து கொண்டுள்ளனர். அதில் கொரோனா தொற்று உள்ள நோயாளிகளின் குடும்பத்திற்கே ஒருவேளை நல்ல ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய மதிய உணவை அளித்து வருகின்றனர். இது  மனிதகுலத்துக்கே இவர்கள் ஆற்றிடும் மாபெரும் சேவை..

இதை சாதாரணமாய் வாசித்து கடந்து போய்விட முடியாத ஒரு சேவா வேள்வி அவர்கள் ஆற்றிக் கொண்டிருப்பது... உயிரை துச்சமாய் மதித்து களத்தில் இறங்கும் இராணுவ வீரர்களாய் சேவா தளத்தொண்டர்கள் கொரோனா பேரிடர் கால உயிர் காப்பு சேவையில் இறங்கி இருப்பது பிரம்மிக்கத் தகுந்தது.. சுவாமியின் பூரண அனுகிரகம்.. காவல் .. உந்து சக்தி.. இயக்கத்திறன் போன்றவை அவர்களுக்கு நிரம்ப வேண்டும்.. பல கொரோனா நோயாளிகள் ஆரோக்கியம் பெற்று திரும்ப வேண்டும்.இந்நேரம் அவர்களுக்காகவும் நாம் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். மூச்சுக் காற்றில்லா முற்றுகைப் போராட்டத்தில் கொரோனாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அவர்கள். ஆரோக்கியமே முதல் சுதந்திரம் எனும் சத்தியம் அவர்களது சத்ய சாயி சேவையால் உலகம் உணரவேண்டும். அருஞ்சேவை ஆற்றும் அந்த ஆருயிர் சேவா தளத் தொண்டர்களுக்காக நாம் மனமுருகி வேண்டுவது நம் தலையாய கடமை. சுவாமியின் நீள் கரங்களாக அவர்கள் இப்போது தொண்டாற்றிக் கொண்டிருப்பது நம் அனைவருக்கும் சேர்த்துத்தான். அவர்களின் பாதுகாப்பான சேவா பாதையில் நமது பிரார்த்தனை தடமும் பதிந்திட வேண்டும். ஆகவே "ஸ்ரீ 
சத்ய சாய் அமுதம்" கொண்டு செல்லும் அந்தத் தூய சேவாதளத் தொண்டர்களின் ஆரோக்கியத்திற்காக அனைவரும் சுவாமியிடம் பிரார்த்தனை செய்வோம்.. 🙏 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக