தலைப்பு

ஞாயிறு, 23 மே, 2021

ஒரு டாக்குமென்ட்ரி படத்தால் தன் முந்தைய அவதாரத்திற்கே அழைத்துப் போன சத்யசாயி!


இறைவன் ஷிர்டி சாயியே சத்யசாயி என்பதற்கான காட்சிப்படிம‌ உத்தரவாதமும்.. சான்றாகவும் அனைவருக்கும் தெளிவுற விளங்குகிற அற்புத சம்பவம் இதோ... 

இறைவன் யுகம் தோறும் அவதரிக்கிறார். எப்போது அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போது அதை வேரோடு சாய்க்க இறைவன் கீழ் இறங்குகிறார். கலியின் விசேஷமே பழுத்துப் போன அதர்ம அட்டூழியங்கள் தான். ஆகவே தன் அவதாரத்தை ஷிர்டி சாயி, சத்யசாயி என இரண்டாக வகுக்கிறார்.. கலி போல் திரேதாவும் துவாபரமும் அத்தகைய கொடூர யுகங்கள் அல்ல... வரப்போகின்ற கிருத யுகத்தின் (சத்ய யுகம்) கடவுளாக பிரேம சாயி தன்னை பிரகடனப்படுத்துவார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ப்ருகு-- அகஸ்தியர்-- வசிஷ்டர்-- சுகமுனிவர்களால் கோரைப்புல்லால் ஆன பத்திரத்தில் சமஸ்கிருத மொழியில் ஷிர்டி சாயி -- சத்யசாயி-- பிரேம சாயி அவதாரங்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது.


May 12, 1968


🏚️ தர்மஷேத்ரம் (மும்பை) நிறுவுவதற்கு முன்னால் நிகழ்ந்த அற்புத சம்பவம் இது..

ஒருமுறை சுவாமி மும்பை அந்தேரியில் மோடி என்ற ஒருவரின் பங்களாவில் இருந்த போது பாண்டுரங்க தீக்ஷிதர் தனது மனைவியோடு சுவாமி நேர்காணலுக்கு அழைத்ததற்காக வந்திருக்கிறார்கள்...

ஆனால் மாலை வரை அவர்களுக்கு சுவாமி தரிசனம் கூட தரவில்லை... இருவரும் கால் வலிக்க வலிக்க சுவாமிக்காக காத்திருந்தபடி நின்று கொண்டிருந்தனர். இறுதியில் மூன்றுமணிக்கு "என்ன தீட்சித் ! எப்படி இருந்தது உபவாசம்" என்றபடி சுவாமி கேட்கிறார். "இன்று வியாழக்கிழமை அல்லவா.. நல்லது. என்ன தவம் செய்திருக்கிறாய்.. வா!! உள்ளே போகலாம்"* என நேர்காணல் அழைத்துச் செல்கிறார். அங்கே ஒருமணி நேரம். கால்வலி எல்லாம் கடல் கடந்து போகிறது.. மின்சாரப் பரவசம் உடல் முழுதும் பக்திப் பரவசமாக இருவருக்கும் பரவுகிறது.. இத்தனை மணி நேரம் நின்று கொண்டிருந்த நினைப்பே இல்லை.. கற்பூரம் நெருப்பாக மாறுவதற்கு ஒரு நொடிக்கும் குறைவாகவே ஆகிறது. அப்படி பக்தி இதயம் சுவாமியை அனுபவிக்க அனுபவிக்க கடந்த காலம் எல்லாம் கரைந்து போகிறது.. நேரம் உறைந்து போகிறது.. கண்கள் குளமாகிறது.. இதயம் பலமாகிறது... சுவாமியின் கருணை சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட ஆன்மாக்களாய் அவர்கள் இருவரும் திளைத்துப் போகின்றனர்.


Pandurang Dixit 


நான்கு மணிக்கெல்லாம் திடீரென சுவாமி "நீ ஷிர்டி சாயியின் டாக்குமென்ட்ரி படம் எடுத்திருக்கிறாயே.. அதைக் கொண்டு வா.. நான் பார்க்க வேண்டும்" என்கிறார்.

தீட்சித் அந்தப் படத்தை இரண்டு நாளைக்கு முன்னர் தான் பிராசசிங்'க்காக (processing) சோதனைச் சாலையில் (lab) தந்திருந்தார். உண்மையில் அது பிரின்ட்டாக கையில் வர ஒருவாரம் ஆகும். ஆனால் சுவாமி கேட்டவுடனே ஒருவாரம் ஆகும் சுவாமி என்றெல்லாம் சொல்லாமல் உடனே அந்த lab ஆபீசுக்கு பயணிக்கிறார். அது தான் பக்தி.. சுவாமி ஒன்று பணித்தால் அதை நிறைவேற்ற வேண்டும். சுவாமியின் உபதேசங்களை அப்படியே விருப்பு வெறுப்பின்றி கடைப்பிடிக்க வேண்டும்.

தீட்சித் அந்த ஆபிசுக்கு சென்றவுடன் பரதன் ராம பாதுகையை சுமந்தது போல் தலைமேல் அந்தப் படப் பெட்டியைச் சுமந்து அங்கிருந்த ஆபீஸ் உதவியாளர் தந்துவிடுகிறார். 7நாள் ஆவது எப்படி 2 நாளில் முடிந்தது என்று வியந்து போகிறார் தீட்சித்...முதன்முறையாக அவர்கள் புது டெக்னிக்கல் பிராஸசிங் செய்ததால் 2 நாளிலேயே தரமுடிந்தது என அவர் அறிந்து சுவாமியை எண்ணிப் பரவசப்படுகிறார்.



சுவாமி அறியாதது ஏது? சுவாமி கால நேரம் எல்லாவற்றையும் கடந்த சர்வ வியாபி எனும் பரம சத்தியத்தை உணர்ந்தபடியே சுவாமிக்கு படம் காட்ட விரைகிறார்.

விளக்குகள் அணைக்கப்படுகின்றன.. சுவாமி மத்தியில் அமர அனைவரும் அவரைச் சுற்றி அந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அந்த டாக்குமென்ட்ரி ஷிர்டி சுவாமி பற்றியது.. ஷிர்டியை சுற்றியது‌.. ஒவ்வொரு காட்சியாக ... ஒவ்வொரு கேமரா கோணமாக மாற‌மாற .. சுவாமி அதனை தத்ரூபமாக விவரிக்கிறார்.. அந்த காட்சியின் சம்பவப் பின்னணியை விளக்குகிறார்.



ஷ்யாம் சுந்தர் என்ற குதிரையின் சிலை படத்தில் தோன்றியவுடன் "இந்த குதிரை அதற்கும் முந்தைய ஜென்மத்தில் ஷ்யாம் என்ற பெயருள்ள சமையல்காரனாக இருந்தது.. அதன்பிறகு அந்த ஆன்மா குதிரையின் வயிற்றில் பிறந்ததால் சாயி அதற்கு ஷ்யாம் சுந்தர் எனப் பெயர் வைத்தேன்" என்கிறார்.

துவாரகா மாயியில் சாயியின் பெயின்ட்டிங் காட்சியாக படத்தில் தோன்றுகிறது போது "காகா ஜெயகர் என்னிடம் பலமுறை வரைவதற்கு கேட்ட பிறகே சம்மதித்தேன்... நான் அவர் முன் இரண்டு நாள் முழுவதும் உட்கார்ந்திருந்தேன்... அப்படியே இந்த பெயின்டிங்கை அவர் வரைந்தார்" என்கிறார்.

சுற்றி இருந்தவர்கள் பரவச மா கிறார்கள். இப்படி அங்குல அங்குலமாக அந்த டாக்குமென்ட்ரி நகர யாவற்றையும் சுவாமி விவரிக்கிறார். படம் முடிந்த பிறகு...

"நான் ஏன் இந்தப் படத்தைப் பார்த்தேன் தெரியுமா? இந்தப் படத்தைப் பார்த்து என் பிறந்தநாளைக் கொண்டாடினேன்" என்கிறார்.

நவம்பர் 23 தானே சுவாமிக்கு பிறந்தநாள்.. இன்று கொண்டாடினேன் என்கிறாரே என அவர்கள் மனதில் நினைக்க.. அடுத்த நொடியே சுவாமி "எனக்கில்லை .. என் முந்தைய உடலுக்கு" என்கிறார்.

(ஆதாரம்: ஸ்ரீ சத்ய சாயி கல்பத்ருவம் -- ஆசிரியர் : பிரஷாந்த் பிரபாகர் பாலேகர் -- பக்கம் : 95)



சுவாமி அந்த டாக்குமெண்ட்ரியில் விளக்கியதை கேட்ட அனைவரும் ஷிர்டி அவதாரத்திற்கே அழைத்துச் செல்லப்பட்டதாய் உணர்ந்ததற்கு காரணம் சுவாமி கருணையே... இரண்டு அவதாரமும் ஒன்றே எனும் ஆழமான தெளிதலை அவர்கள் அடைந்தார்கள்.. இதை வாசித்த நாமும் அடைந்திருப்போம்... 

சாயியின் மூன்று அவதாரங்களும் ஒன்றே!! இறைவன் வானம் விட்டு பூமி வந்தது அனைத்து ஜீவராசிகளுக்காக... 

விளக்கு வடிவங்களில் வித்தியாசம் இருந்தாலும் ஜோதியில் வித்தியாசம் இல்லாதது போல்.. அவதார தோற்றங்களில் சிறு சிறு வித்தியாசங்கள் இருப்பினும் இறைப் பேராற்றலுக்கும்.. சுவாமியின் பெருங்கருணைக்கும் வித்தியாசம் என்பதே எப்போதும் இல்லை!

விளக்கின் ரூப பேதங்களில் சிக்கியவர்கள் அலாவுதின் போல் விளக்கை தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஜோதியை நெருங்கியவர்கள் மட்டும் அதனோடு ஐக்கியமாகி விடுகிறார்கள்!!!


 பக்தியுடன்

வைரபாரதி

1 கருத்து: