தலைப்பு

செவ்வாய், 4 மே, 2021

இறைவன் பக்தர்களுக்கு கொடுக்கும் சோதனை நன்மைக்கே!


வலி வருகிறது என்றால் வலிமை வரப் போகிறது என அர்த்தம். துயரம் வருகிறது என்றால் உயரம் வரப் போகிறது என அர்த்தம். இறைவன் சத்ய சாயி தண்டிப்பது போல் நம்மை செதுக்குகிறார். பிரபஞ்ச சிற்பி அவர். இதோ அவரே விவரிக்கிறார்.. 

சிறு தவற்றுக்கு கூட கடுமையான தண்டனையை அளிப்பவரே உண்மையான குரு. இத்தகைய கடும் தண்டனை காரணமாக பாவம் செய்வதையும், அதன் விளைவையும் அனுபவிக்கும் முகாந்திரம் இராது. ஆனால் பெரும் தவறுகளுக்கு குருவிடமிருந்து தண்டனை இல்லை. பெரும் தவறுகள் புரிந்துள்ள மனிதருக்கு, அவற்றின் விளைவுகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி, என் அருளைப் பெறுவது தான். இக்காலத்தில் சீடர்கள் குருவின் அறிவுரைகளை பின்பற்றுவது இல்லை. அதேசமயம், அதற்காக தண்டனை  ஏற்கவும் விரும்பவில்லை. குருவின் ஆணையை பின்பற்றாத சீடர்களுக்கு, தண்டனை அவசியம். இரும்பு துண்டு பழுக்க சிவந்திருக்கும் போது, சம்மட்டியால் அடி; அப்போதுதான் உனது தேவைக்கு தகுந்தாற் போல அதை சுலபமாக வளைக்க முடியும். குளிர செய்த பின், அதே இரும்புத் துண்டை வளைக்க முடியாது. ஆகவே, செய்யும் தவறுகளுக்கு அல்லது ஆணைகளை பின்பற்றாத போது, உடனுக்குடன் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.


மன தவறுகளுக்கு, வெளிப்புற தண்டனையும் அவசியமாகிறது. உள்ளிருக்கும் வலியை நீக்குவதற்கு ஒரு மருத்துவர் தோலை வெட்டி திறந்து வெளிப்புற வலியை ஏற்படுத்துகிறார். உள் வியாதியை குணப்படுத்துவதற்கு இன்ஜக்ஷன் கொடுக்கிறார். அந்த வலி தான் உனக்கு நல்ல பயனை அளிக்கிறது. குழந்தை பெறும் போது தாய்க்கு எவ்வளவு நோவு உண்டாகிறது. ஆனால் குழந்தை பிறந்ததும் அவளுக்கு ஏற்படும் மகிழ்ச்சி எத்தனை மிகுந்தது! ஒருவேளை வலியில்லாமல் குழந்தை பெற்றால், தத்தெடுத்த குழந்தையிடம் கொள்ளும் அன்புதான் அவளுக்கு இருக்குமோ என்னமோ! இந்த பெரும் துன்பமே முடிவில் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுபோல, இந்த மன வேதனைதான் உன்னை நேரான வழியில் கொண்டு செலுத்துகிறது. ஒரு புடலங்காயின் அடியில் ஒரு  கனத்த கல்லைக் கட்டும் போது தான் அது நேராக வளர்கிறது. சிறிய கல்லை கட்டினால் அது நேராக வளராது. ஆகவே சீடர்கள் தண்டனை அவர்களின் நன்மைக்காகவே என்று உணர வேண்டும். என் முன்னால் கூடியிருக்கும் மாணவர்கள், பக்தர்கள் அனைவரும் வெண் உடை தரித்திருக்கிறார்கள். அவர்கள் உடைக்கு தக்கவாறு, அவர்கள் மனமும் தூய தாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும். அவர்கள் நடத்தையும் அவ்வாறே இருக்கவேண்டும்.

ஆதாரம்: சாயி அருளமுதம் || கொடை - 1994 (தொகுக்கப்பட்ட அருளுரைகள்)

பசும்பாலை காய்ச்ச வேண்டும். அப்போதே பருக முடியும். இறைவன் சத்ய சாயி நம்மை ஏற்றுக் கொள்ள சோதனைகள் நிகழ்த்துகிறார். ஊசி வலிக்கிறதே என்றால் வியாதி எப்படி குணமாகும்?
உருக்கி வார்த்தால் தான் தங்கம் நகையாகிறது.. வலித்து வலிமை பெற்றால் தான் உள்ளம் சொக்கத்  தங்கமாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக