தலைப்பு

சனி, 22 மே, 2021

விஞ்ஞானத்தின் விதிகளை மீறி பாபா செய்த புகைப்பட அற்புதங்கள்! 

நம் மனதில் உள்ள எண்ணங்களைத் துல்லியமாக படம் பிடிக்கும் பாபா ஒரு தெய்வீகப் புகைப்படக்காரர். தம் சங்கல்பம் என்னும் காமிராவில் நம் மனமென்னும் Negative படச்சுருளைப் போட்டு, தெளிவான படமாக அதை மாற்றி, நம்மை மகிழ்விப்பார். பாபாவின் காமிரா கைவண்ணத்தை , சுவாரஸ்யமான நிகழ்வுகளாக இனி காண்போம்.... 


🌹பாபாவின் விநோதமான புகைப்பட தயாரிப்பு முறை.... 

பெங்களூரிலிருந்து வந்திருந்த புகைப்படக்காரர் அன்று காலை முதல் பரபரப்பாக பாபாவை புகைப்படங்களாக எடுத்ததில், புகைப்படச்சுருள் முழுதும் படப்பதிவு செய்யப்பட்டு , அதற்குமேல் பதிவு செய்ய இயலாமல் முடிந்துவிட்டது. மாலை, பாபா வழக்கம்போல பக்தர்கள் புடைசூழ சித்ராவதி நதிக்கரைக்கு புறப்பட்டார். புகைப்படக்காரரை நோக்கிய பாபா "என்னை புகைப்படம் எடுங்கள்" என, அவரோ தன் கைகளைப் பிசைந்தபடி, "ஸ்வாமி புகைப்படச் சுருள் கைவசம் இல்லை" என்றார். "ஐயோ பாபம்" என்ற பாபா, கேமராவின் மாடல், புகைப்படச் சுருளின் ISO அளவுகள் போன்ற தொழில்நுட்ப வினாக்களைக் கேட்டபின், தம் கை அசைவில் அந்த கேமராவிற்கு ஏற்ற புகைப்பட சுருளை ஸ்ருஷ்டித்து அளித்தார். பெற்றுக்கொண்ட அந்த புகைப்படக்காரர், மகிழ்வுடன் அச்சுருள் முழுவதும் போட்டாக்களைப் பதிவு செய்தார். 



இதன் பின்னர் பாபா அந்த நபரை பார்த்து "இப்போது நான் தந்த புகைப்பட பதிவுச் சுருளை, திருப்பிக் கொடு" என்றார். செய்வதறியாது திகைத்த அவர், வேறு வழியின்றி காமராவைத் திறந்து, உள் இருக்கும் சுருளை எடுத்து பாபாவிடம் தந்தார். அனைவரும் திகைத்தனர். வெளிச்சம் பட்டால் அந்த சுருளில் உள்ள போட்டோ பதிவுகள் அழிந்துவிடுமே என அஞ்சினர் சுருளை வாங்கிய பாபா இடது கரத்தால் அதை தமது பின்புறத்தில் மறைத்து வலது கரத்தால், அதில் பதிவு செய்யப் பட்டிருந்த புகைப் படங்களை ஒவ்வொன்றாக எடுத்து தந்து கொண்டே இருந்தார். இவ்வாறு அனைத்து புகைப்படங்களும், இருட்டு அறையோ, ரசாயன கலவையோ இல்லாமல் சித்ராவதி நதிக்கரையான வெட்டவெளி ஸ்டுடியோவில் பாபாவின் மகிமையில் உருவாக்கப்பட்டு, பக்தர்களைக் குதூகலத்தில் ஆழ்த்தியது.



🌹பக்தைக்கு இரங்கிய பக்தவச்சலன் பாபா:

மற்றுமொரு அதி அற்புத போட்டோ கதையை இனி காண்போம். சித்ராவதி செல்லும் வழி, கணவனை இழந்த ஒருஅபலைப் பெண் அங்கு ஒரு குடிசையில் வசித்து வந்தாள். அவள் பாபா சித்ராவதி செல்லும்போது அவரை வணங்கி தினமும் ஒரு கூடை நிறைய துளசி தளங்களை சமர்ப்பித்து வந்தாள். இதைக்கண்டு இதயம் நெகிழ்ந்த பாபா அவளை ஒருநாள் தம் குழுவுடன் சித்ராவதி கரைக்கு வருமாறு அன்புடன் அழைத்து, அவளது கோரிக்கை எனக் கேட்டார். யாராலும் நிறைவேற்ற இயலாத ஒரு கோரிக்கையை அந்த பெண்மணி பாபாவிடம் கேட்டாள். சுற்றி இருந்த பக்தர்கள் திகைக்க, பாபா புன்னகையுடன் சித்ராவதி நதியின் மணலிலிருந்து ஒரு போட்டாவை இழுத்து எடுத்து அவளிடம் தந்தார். 



🌹அவளது கோரிக்கையும், பாபாவின் லீலையும் என்ன? 

1924ம் ஆண்டு இறந்தவிட்ட அவளது கணவனின் புகைப்படத்தை அந்த அபலைப் பெண்மணி கேட்க,1946ம் ஆண்டு பாபா அதை சிருஷ்டித்து அப்பெண்மணியை மகிழ்வித்தார். 


இதில் மாபெரும் விந்தை என்னவென்றால் 1924 ஆண்டுகளில் எங்கும் போட்டோ ஸ்டுடியோக்கள் நிறுவப்படவில்லை, மற்றும் பாபா பிறந்ததோ 1926 ம் ஆண்டு. பாபாவின் சிருஷ்டிக்கும் வல்லமை, உயிருள்ள மற்றும் ஜடப்பொருட்களையும் ஊடுருவி இருப்பதை இது காட்டுகிறது அல்லவா?


🌻 விஞ்ஞான விதிகள் மாறாதவை. ஆனால் மெய்ஞான போதகரான பாபாவின் சங்கல்பம் அனைத்து விதிகளையும் தாண்டி, அற்புதங்களை செய்யவல்லது. நமக்கு தேவையற்ற வேலை அதை ஆராய்வது. நமக்குத் தேவையானது பக்தியும் பரிபூரண சரணாகதியும்தான் .


ஆதாரம்: Chitravathi Days of Sathya Sai Baba (1940-1953) - Radiosai

மொழிமாற்றம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக