தலைப்பு

சனி, 8 மே, 2021

என்னிடம் பயணச்சீட்டு வாங்காமல் எப்படி நீ மேல் உலகம் செல்லலாம்!

- சேஷகிரி ராவுக்கு இருமுறை உயிர் நீட்டித்த சத்ய சாயி பாபா.

மாண்டவர் மீண்டதை புராணங்களில் படித்திருப்போம். ஆனால் உலகின் மாறாத நியதியான, மாண்டவர் மீள்வதில்லை  என்ற விதியை இறைவனைத் தவிரயாராலும் மாற்ற இயலாது.கலியுக அவதாரமாகிய நம் ஸ்வாமி, நாம் வாழும் காலத்திலேயே, நம் கண்முன்னே, எத்தனைபேர்களை அவர்கள் மரணத்திலிருந்தும், அதன் விளிம்பிலிருந்தும் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம். தெய்வத்தை தவிர யாரால் இந்த அறபுதத்தை செய்யமுடியும்.? 

இப்படிப்பட்ட வியப்பூட்டும் அற்புதங்களில் ஒன்றுதான் சேஷகிரிராவ் அவர்களின் சரித்திரம். பரமபாவனமான பாபாவின் கருணா விலாசத்திற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு. அவர் இறைவனின் பூர்ண  அவதாரம் என்ற அசைக்கமுடியாத பேருண்மைக்கு இமாலயச் சான்று. மந்திரம், கண்கட்டு என்று மாய்மால ஓலமிடும் பொய்யர்களுக்கு ஒரு சாட்டையடி. இனி பேராசிரியர். N. கஸ்தூரி அவர்கள் தமது "சத்யம் சிவம் சுந்தரம்" புத்தகத்தில் விவரித்துள்ள, பகவான் பாபாவின் ஒரு அற்புத உயிர்நீட்டித்த சம்பவம் பற்றி பார்ப்போம்... 

திரு.சேஷகிரி ராவ் பகவானின் , பழைய மந்திரத்திலும் பின்னர் பிரசாந்தி நிலையத்திலும் , 14 ஆண்டுகள் தொடர்ந்து பூஜை செய்யும் பாக்கியம் பெற்று பகவானின் அன்புக்கு பாத்திரமானவர். ஒரு சமயம் அவர் தவறி கீழே விழுந்து அடிபட்டதால், உடல்நிலை மோசமாகி இறப்பின் விளிம்பிற்கு தள்ளப்பட்டார். பகவானுடன் இருந்து, கைங்கர்யம் செய்த புண்ணியத்தின் பலனாக அவர் முனிவர்களுக்கு ஒப்பான ஞானம் பெற்றார். அதனால் , தமது இறப்பை அவரே அறிவித்தார் ."பஞ்ச பூதங்களின் சேர்க்கையான இந்த உடல் , பஞ்ச பூதங்களோடு மறுபடியும் சேர்கிறது. நான் விடுவிக்கப்பட்டேன்" இந்த ஈசாவாஸ்ய உபநிஷத் வாக்கியங்களை அவர் உதடுகள் உச்சரித்தன. அருகிலிருந்த திரு. கஸ்தூரி   அவர்கள் சேஷகிரி ராவின் இந்த வைராக்யத்தைக்கண்டு வியந்து நின்றார்.

ஊசலாடும் உயிரோடு படுத்திருந்த சேஷகிரிராவ் பற்றி அறிந்த பாபா, அவரது அறைக்கு விரைந்து வந்தார். எவரையும் "பங்காரு"என பாசமுடன் அழைக்கும் பாபா அன்று மிகவும் கண்டிப்பான குரலில் கோபித்து பேசத் துவங்கினார். "இந்த பிரயாணத்தை, என்னிடமிருந்து பயணச்சீட்டு வாங்காமல் துவக்க உனக்கு என்ன தைரியம்.எழுந்திரு. உனக்கிடப்பட்ட சேவையைத் தொடர்ந்து செய். நீ மதியம் பிரார்த்தனைக் கூடம் வந்து ஹாரத்தி எடுக்க வைண்டும்." அருகில் இருந்தவர்கள் பாபாவின் இந்த  கடும் சொற்களைக் கேட்டு திடுக்கிட்டனர். ஆயின் யார் அறிவர் இறைவனின் திரு உள்ளத்தை? வியப்புடன் மற்றவர்கள் நோக்க சேஷகிரிராவ் தம் இறைவனின் கட்டளையை ஏற்றார். மரணத்திலிருந்து  மர்மமான முறையில் உடனடியாக மீண்டு, அன்று மதியமே பஜன் நாமாவளியில் பங்கு கொண்டு , ஹாரத்தியும் எடுத்தார். இறைவனின் கட்டளைகள் விநோதமாக இருக்கலாம். ஆனால் அதை ஏற்று நடக்கும்போது ஏற்படும் பலன் அமிர்தத்தைவிட அளவிட முடியாத ஆனந்தத்தை அளிக்கும். ஒருமுறையல்ல... இரண்டாம் முறையும் உயிர்காத்த பாபா:

இதன்பிறகு  சேஷகிரிராவ் அவர்கள் ஆறுமாதங்கள் எவ்வித உபாதையும் இன்றி , பகவான் சேவையில் ஈடுபட்டார். ஆனால் பிறகு,திடீரென அவர்உடல் நிலை நலிவுற்று மிகவும் மோசமடையத் தொடங்கியது. அதனால் அவர் சத்யசாயி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவரது நினைவுகளும் நலிவுற்ற நிலையில், அவரது உடல்நிலை காண்போரை கண் கலங்க வைத்தது. அவரது சகோதரர் , அவரை பெங்களூர் விக்டோரியா மருத்துவ மனைக்கு  அழைத்துச்சென்று சிகிச்சை அளிப்பதாக , பாபாவிடம் கூறினார். அதற்கு பாபா கூறினார். "கவலை வேண்டாம். அவருக்கு இப்போது ஒன்றும் நேராது. அவரது கர்மவினை துன்பங்கள் எல்லாம் அவர் இப்போது அனுபவிக்கட்டும். பின் ஒரு சமயம், அவர் சந்தோஷமாக தன் முடிவை சந்திப்பார். இல்லையெனில் ஆறு மாதங்களுக்கு முன்பே கீழே விழுந்து உயிர் ஊசலாடிய நிலையில் அவரை போகவிட்டிருப்பேனே." இந்நிலையில் ஒரு மாத காலம் படுக்கையில் இருந்த சேஷகிரிராவ் அவர்கள் , திடீரென பூரண உடல் நலம் பெற்று, தமது தினசரி வாழ்க்கையை சகஜமாகத் தொடரலானார். ஆறுவார காலம் ஆனந்த வாழ்வில் திளைத்தார். பிறகு உடல் நலிவுற்று , தன் மகனின் பரிவான தொண்டோடு படுக்கையில் தம் வாழ்வை கழிக்கலானார்.

பக்தனின் வாயில்.. பாபா பரிவோடு புகட்டிய பால்:

இவ்வாறு இருக்கையில், ஒருநாள் மாலை பாபா சேஷகிரிராவ் படுத்திருந்த அறைக்கு சென்றார். உடன் சென்றிருந்த கஸ்தூரி அவர்களிடம் சூடாக ஒரு கப் பால் கேட்டு வாங்கி, ஒவ்வொரு ஸ்பூனாக எடுத்து, சேஷகிரி , சேஷகிரி என அழைத்து, "பாலைக் குடி... உனது பாபாதான் இதை உனக்கு புகட்டுகிறேன்." என்று கப் முழுவதையும் புகட்டி விட்டார். 


எத்தனை ஜென்மத்தில் குவித்த புண்ணியமோ, இந்த ஜென்மத்தில் அவர் செய்த பாபா சேவையோ . அத்தனைக்கும் வட்டியும் முதலுமாக
சாயி மாதாவின் கரங்களால் கடைசிக் காலத்தில் அமிர்தமான பாலை அருந்தும் பாக்கியம் பெற்றார். பாபா எழுந்தார். கதவின் அருகே சென்றதும் திரும்பினார்.  "இப்போது நீ போகலாம்" என்றார். சேஷகிரிராவ் தமது இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்தார். ஒரு மணி நேரத்தில் அவரது உயிர் பிரிந்து, பாபாவின் திருவடியில் அடைக்கலமானார். 

ஆதாரம்: “Sathyam Shivam Sundaram”, Vol-II by Prof. N. Kasturi. Page: 224-225. (Chapter: ‘Signs and Wonders’)
தமிழில் தொகுத்து வழங்கியவர்: திரு. குஞ்சிதபாதம். 

🌻 இறைவன் அறிவார் நம் பிறப்பும்  இறப்பும். இடையில் வாழும் நம் வாழ்க்கை பிறருக்கு உதவியாக, மற்றவர்க்கு இடையூறின்றி(Help ever ..Hurt never) இருக்கவேண்டும். திரு. சேஷகிரிராவ் போன்று இறை சேவையில் அனைவரும் ஈடுபட்டு உய்ய இயலும். எப்படி?  மானவ சேவையே மாதவ சேவை என பாபா கூறுகிறார் அல்லவா. மானவ சேவையில் ஈடுபடுவோம் , சாயி மாதவனின் அருள் பெறுவோம். ஜெய் சாய்ராம்.🌻

1 கருத்து: