தலைப்பு

செவ்வாய், 4 மே, 2021

ஸ்ரீ சத்ய சாயி அருளிய ஷிர்டி சாயி சரித ரகசியம்!


இறைவன் சத்ய சாயி வெளிப்படுத்திய தனது பூர்வ அவதார ஷிர்டி சாயியின்  வெளிவராத பரவச சரிதம் இதோ.. 

ஷிர்டி சாயியின் பால லீலைகள் யாருக்கேனும் தெரியுமா?
பால்ய பாதைகள் யாரேனும் அறிந்திருக்க முடியுமா?
இல்லை. ஷிர்டி சாயியின் தீவிர பக்தர் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குக் கூட இது தெரிந்திருப்பதில்லை.

ஷிர்டி சாயியின் தாய் தந்தை பெயர் கூட தெரியவில்லை.
காரணம் ஷிர்டி சாயி பொதுவெளியில் யாரிடமும் அதை வெளிப்படுத்தியதில்லை.
ஓரிரு பேருக்கு சொல்லி இருக்கிறார். அதுவும் பொது வெளியில் வரவில்லை.

அவர் சிறுவயது பையனாக ஷிர்டியில் தென்பட்டு பாய்ஜாம்மா போன்ற மகா பக்தர்கள் உணவிட்டாலும் .. ரகசியமாய் அவ்விடம் வந்தவர் ரகசியமாய்க் காற்றில் மாயமாகி மீண்டும் முதிர் வயதுத் தோற்றத்திலேயே தன்னை ஷிர்டியில் வெளிப்படுத்துகிறார்.

அவரது ஜனன ரகசியம் முதல் பல்வேறு மகிமைகள் தொடங்கி தாய் தந்தை பெயர் வரை அடுத்த முறை அவதரிக்கையிலேயே வெளிப்படுத்துகிறார்..

இறைவன் ஷிர்டி சாயி ஸ்ரீ ராமரைப் போலவே பல விஷயங்களில் தன்னுள் தான் நிறைந்து செழுத்த அவதாரம்‌.
ராமர் தான் அவதாரம் எனப் பல இடங்களில் வெளிப்படுத்தவில்லை. ஒரு சில முனிவர்கள் மட்டுமே  உணர்ந்திருந்தனர்.
ஷிர்டி சாயியோ ஒரு சில பேர்களுக்கு ஆழமாய் உரைத்திருக்கிறார். உரைத்ததோடன்றி உணர்த்தியும் இருக்கிறார்.

மனிதர்கள் பொதுவாக ஆடம்பரத்திற்கு மயங்குபவர்கள். ஆடம்பர வாழ்வே பெரிது என நினைக்கும் தற்குறிகள்.
வாழ்க்கை என்பது நடத்தையில் இருக்கிறதே தவிர காட்டிக் கொள்வதில் இல்லை.. அடக்கத்தில் இருக்கிறதே தவிர அலட்டுவதில் இல்லை..

இதை உணர்த்தவே ஷிர்டி சாயி ரூபம்.


இறைவன் சத்ய சாயியோ கிருஷ்ணரைப் போல் லீலா விநோதத்தில் கவர்ந்திழுத்து காலடியில் ஆணவ மனத்தை கிடத்தி.. அதை ஒடுக்கி கீதை உரைத்து ஆன்ம முன்னேற்றத்தில் உயர்த்துபவர்.

சத்ய சாயி ரூபமே லீலா விநோதமானது தான்.

இறைவன் சத்ய சாயியே தன் முந்தைய அவதார ரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கிறார்.

சத்ய சாயி சித்ராவதி தீரத்தில் உதித்தது போல்.. ஷிர்டி சாயி கோதாவரி தீரத்தில் உதித்தவர்.

இறைவனுக்கு ஒரு இடம்.. ஒரு மரம் ஒரு நதி மையமாக இருக்கும்.

ஷிர்டி சாயிக்கு ஷிர்டி.. கோதாவரி நதி.. வேப்பமரம்.
சத்ய சாயியிக்கு புட்டபர்த்தி.. சித்ராவதி நதி.. கல்ப விருட்சம்...
கிருஷ்ணருக்கு .. துவாரகை... யமுனா நதி.. தேவதாரு விருட்சம்.

இப்படி ஒரே இறைவனே மீண்டும் மீண்டும் அவதரித்து தனக்கான இடம்.. நதி.. விருட்சம் இவற்றை தன் மையமாகக் கொள்கிறார்.

ஷிர்டி சாயியின் தாயின் பெயர் தேவகிரி அம்மா.. பார்வதி பக்தை. தந்தை கங்கா பாவாடியா .. சிவ பக்தர்.. அந்தணர் குலத்தில் பிறந்தவர். பரத்வாஜ கோத்திரம்.


28 செப்டம்பர் 1835ல் மகாராஷ்ட்ர புனித மண்ணில் மன்மாட் கிராமத்திற்கு அருகே உள்ள பர்த்ரியில் பிறந்தவர்.
இது இறைவன் சத்ய சாயி சொல்லியே உலகத்திற்குத் தெரியும்.

ஷிர்டி சாயியே ஒரு பக்தரிடம் பர்த்ரியில் பிறந்த நான் மீண்டும் பர்த்தியில் பிறப்பேன் என்றிருக்கிறார்.

ஓம் ஸ்ரீ ஸாயி பர்த்ரி ஷேத்ர நிவாஸினே நமஹ என இறைவன் சத்ய சாயி அஷ்டோத்ரத்திலும் இடம் பெறுகின்ற உயரிய பர்த்ரி ஷேத்ரம்.

பர்த்ரி.. பர்த்தி.. எத்தனைப் பெயர் பொருத்தம்.
ஷிர்டி சாயி... சத்ய சாயி எனும் அவதார உயிர்ப் பொருத்தம் போல் இந்த உயர்ப் பொருத்தம் உவகைத் தரக்கூடியது.

பக்தி என்பது சரணாகதி அடைந்த பின்னரே கனியக் கூடியது.
அதுவரை காய்த்திருக்கும் கனியாவதற்கு காத்திருக்கும்.

அரை குறை பக்திதான் தொட்டதிற்கெல்லாம் சந்தேகப்படும்.
நேர்மையான பக்தியோ அது என்னவென்பதை ஆத்ம விசாரணையாவது மேற்கொள்ளும்.

அப்படி நெஞ்சத் தவிப்பு கொண்ட ஷிர்டி சாயியின் நேரடி பக்தர் பலர் சத்ய சாயிடம் விசாரணை மேற்கொள்ள இருவரும் ஒருவரே என தெள்ளத் தெளிவாய் உணர்ந்திருக்கிறார்கள்.

ராமராய் வந்தவர் கிருஷ்ணராய் வந்திருக்கும் பூமியில்.. அவரே ஷிர்டி சாயியாய் வந்தும் சத்ய சாயியாய் அருள் புரிந்து கொண்டும் இருக்கிறார்.

மனிதனின் எண்ணம் மறுபிறவி எடுக்க வைக்கிறது. அவனைக் கரையேற்றி பிறவாமை தருவதற்காக கடவுளும் மறு அவதாரம் எடுத்து வரவேண்டி இருக்கிறது.

தேவகிரி அம்மாவுக்கு வரம் தர இறைவன் முனிவர் ரூபத்தில் இல்லம் வருகிறார். பசிக்கிறதாம். உடனே உணவு பரிமாறுகிறார்.
காலை அழுத்தி விட வேண்டும் என்கிறார்.

சோதிப்பது என்பது இறைவனுக்கு சக்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல்‌..
தேர்ந்தெடுத்தவர்களுக்கே எப்போதும் தேர்வுகள் வைப்பார்.

 பார்வதி தேவியிடம் யாரேனும் ஒரு தாசியை அனுப்பு என தேவகிரி வேண்ட..
பின்கதவு தட்டப்படுகிறது.
அலங்கார பூஷணியாக தாசி வருகிறாள்.
மீண்டும் உள்கதவு தட்டப்படுகிறது.


சிவ பார்வதி தரிசனம் பெறுகிறாள் தேவகிரி. வரம் வினவ.. இறுதி சடங்கிற்கு ஒரு ஆண் மகவு.. கன்யா தானத்திற்கு ஒரு பெண் மகவென தேவகிரி கேட்பதால்  குழந்தை பாக்கியம் தந்துவிட்டு மறைகிறார்கள். மூன்றாம் குழந்தையாக நானே பிறப்பேன் என இறைவன் சொல்ல.. அதைக் கணவரிடம் சொல்ல நம்ப மறுக்கிறார் அந்த சிவ பக்தர்.

இறைவன் சொல்வது போலவே இரண்டு குழந்தை பிறக்கிறது. மூன்றாவது கருவில் இருக்க...
கணவர் மனைவியின் சிவபார்வதி தரிசனம் உண்மை என்று உணர தவத்திற்கான தாகம் மேலோங்க..
வனபிரஸ்த வாழ்க்கைக்காக விடை பெறுகிறார். நிறைமாத கர்ப்பிணியான தேவகிரியும் பின் தொடர்கிறாள்.

அவளுக்கு கிடைத்ததே நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஆறாத தவிப்பே அவரின் புறப்பாட்டிற்குக் காரணம்.


செல்லும் வழியிலேயே இறைவனைப் பிரசவிக்கிறாள். ஆரத் தழுவி கொஞ்சுவதற்குக் கூட நேரமில்லை. புடவைத் தூளியில் கட்டி தேவதைகள் இறைவனைப் பார்த்துக் கொள்ளட்டும் என கணவன் பாதையே கடவுளின் பாதை எனப் புறப்படுகிறாள் அந்தப் புனிதவதி..

தேவகிக்கு மட்டும் தன் கிருஷ்ண குழந்தையைக் கொஞ்சுவதற்கு நேரம் கிடைத்ததா?

கடவுள் குழந்தையாக அந்த மரத்தடியில் புத்த அவதாரம் போல் படுத்திருக்கிறார்.
வெய்யிலுக்கு பாம்பு குடைப் பிடிக்கிறது.
இறைவன் சத்ய சாயி குழந்தையாக இருக்கும் போது ஓலைப் பாயில் சுருண்டிருந்ததும் இதே பாம்பு தான்.

அந்த வழி வரும் ஒரு இஸ்லாமிய தம்பதிகள் குழந்தையை எடுத்து வளர்க்கிறார்கள். பாபா என அழைக்கிறார்கள். (1835 - 1839 ஆண்டுகள் இஸ்லாமியர் இல்லத்தில் வாழ்ந்தார்)

இறைவன் மனிதனுக்கு எழுதும் வாழ்க்கைத் திரைக்கதையே அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் போது தன் வாழ்க்கைத் திரைக்கதையை எவ்வளவு சுவாரஸ்யமாக எழுதி இருப்பார்.

எல்லாம் இறைவனின் சங்கல்பத்தில் நடக்கும் இறைவனின் பிரபாவங்கள். 


குழந்தையோ மசூதியில் சிவலிங்க பூஜை செய்யும்.. கோவிலில் குரான் ஓதும்.
மதங்களை ஒன்றுபடுத்தவே இறைவன் அவதரித்தார். அது எத்தனை மங்குனிகளுக்குப் புரிந்ததெனத் தெரியவில்லை.

இதே கல்யாண குணம் தான் இறைவன் சத்ய சாயியிடமும்.

புரிந்து கொள்ள முடியாதவர்கள் தம்பதிகளை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். வளர்ப்புத் தந்தை இறக்கிறார். வளர்ப்புத் தாய்  குழந்தை இறைவனை சிரமப்பட்டு வளர்க்கிறார்.

ஒருமுறை பந்தய கோலி விளையாட்டில் குழந்தை இறைவன் ஜெயிக்க.. சாளக்கிராமம் வைத்து விளையாடிய பையனின் சாளகிராமத்தையும் ஜெயிக்க..  அதைத் தர மறுக்கிறார் இறைவன். சிறுவன் அழ.. ஊர் கூடுவதற்கு முன்..
அந்த சாளகிராமத்தை வாய்க்குள் குழந்தை இறைவன் (பாபா) விழுங்க..

இறைவன் சத்ய சாயியே அந்த விழுங்கிய சாளகிராமத்தை லிங்கோத்பவமாக நம்மிடையே லிங்கோத்பவ லீலாவை பற்பல முறை புரிந்திருக்கிறார்.


ஆ காட்டு என வாய் திறக்கச் சொல்கிறாள் கூட விளையாடிய அந்தச் சிறுவனின் தாயான சௌகார் அம்மா.
கொடுத்து வைத்தவள் அந்த நொடி யசோதையாகிறாள்.
 குழந்தை இறைவனோ தன் முந்தைய அவதார லீலையைப் புரிகிறார்.
இறைவன் சத்ய சாயியும் பால சாயியாக இருக்கையில் ஏராளமான கிருஷ்ண லீலை புரிந்திருக்கிறார்.
(ஆதாரம்: அன்யதா சரணம் நாஸ்தி, சத்ய சாயி ஆனந்த தாயி போன்ற சாயி இலக்கியங்கள்) 

வியப்பதற்கு ஒன்றுமில்லை.

கிருஷ்ணர்.. ஷிர்டி சாயி.. சத்ய சாயி மூவரும் ஒருவரே.

அண்டமே தெரிகிறது. மயங்கி விழுகிறாள்.
ஊருக்கு மீண்டும் கண். மீண்டும் வதந்தி. மீண்டும் பிரச்சனை.
வளர்ப்புத் தாயோ சமாளிக்க முடியாமல் குழந்தை இறைவனை (பாபாவை) ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்க்கலாம் என முடிவு செய்கிறாள்.

முந்தைய இரவே நாளை நான் உன் ஆசிரமம் வருகிறேன் என சிவபிரான் கனவில் தோன்றி அறிவிக்க அடுத்த நாள் வரும் குழந்தை இறைவனை (பாபாவை) ஆரத் தழுவி மெய் சிலிர்த்து வளர்க்க ஆரம்பிக்கிறார். அவர் தான் வெங்குசா எனும் மகான். (1839 - 1851 ஆண்டுகள் மகான் வெங்குசா பாதுகாப்பில் வளர்ந்தார்)


இதை எல்லாம் இறைவன் சத்ய சாயி தெரிவித்தபிறகே உலகத்திற்கு தெரியும்.

(ஆதாரம் : சத்யம் சிவம் சுந்தரம் - பாகம் 1. ஆசிரியர் ஸ்ரீ கஸ்தூரி சாய்ராம்) 

சுவாமி சுவாமி என விடாப்பிடியாய் இன்னும் நிறைய கேட்டிருந்தால் சொல்லி இருப்பார் தன் பூர்வ அவதாரம் பற்றி இறைவன் சத்ய சாயி.

எத்தனை திருப்பங்கள் இறைவனின் வாழ்வில்.. கவனியுங்கள்!
ஏழ்மையில் தான் மகிமையாய் அவதரித்தார்கள் இரண்டு சாயியும்.

எளிமையிடம் தான் இறங்கி வருகிறான் இறைவன்.

ஆடம்பரத்தில் அவதரித்த சித்தார்த்தனும் எளிமையைத் தேடித்தான் புத்தராய் திரும்பி வருகிறார்...

ஆணவமற்ற எளிமையில் தான் எல்லாமே இருக்கிறது!

எத்தனையோ ஒற்றுமை ஷிர்டி சாயி சத்ய சாயி வாழ்வில்...

மகாபாரத போரே நடக்கிறது.. நிதானமாய்த் தான் கையாண்டார் கிருஷ்ணர்.
நாளை நீயே அரசன் .. அதற்கும் நிதானம்.
நாளையே கானகம் புக வேண்டும் .. அதற்கும் நிதானம். அதுதான் ராமர்.

இப்படித்தான் ஷிர்டி சாயியும் சத்ய சாயியும்..
எல்லாம் அறிந்த இறைவன்..
எல்லாம் நடத்தும் இறைவன் ஏன் பதட்டப்பட வேண்டும்?

அப்படிப் பதட்டப்பட்டால் ஒன்பது கிரகமும் ஒன்றை ஒன்று உரசிக் கொள்ளாதா?

சத்தியம் வளரும்

பக்தியுடன்
வைரபாரதி 

1 கருத்து: