தலைப்பு

ஞாயிறு, 16 மே, 2021

தன்னுடைய ஷிர்டி சாயி அவதார பக்தனுக்கு இந்த ஜென்மத்தில் பணிவிடை செய்த சத்யசாயி!


சுவாமி நம் மேல் பொழியும் அன்பிற்கு தகுந்த காரணம் இருக்கிறது.. வெளியே பார்க்க ஒரு சில பேர்களிடம் அதிக அன்பு காட்டுவது போல்.. ஒரு சில பேர்களை பாரா முகமாய் நடத்துவது போல் தோன்றும்.. அதற்கான நுட்ப காரணம் பொதிந்த உன்னத வாத்ஸல்ய அனுபவம் இதோ...


வெகு காலத்திற்கு முன்பு சுவாமி சென்னைக்கு காரில் பயணிக்கிறார். சுவாமியோடு பயணிப்பதெல்லாம் பக்தர்களுக்கு பரவசம். கொடுத்து வைத்தவர்கள் எல்லோரும் சுவாமியின் பயணத்தில் தங்களுக்கான இருக்கையை கொடுத்து வைத்தவர்கள். சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் அதற்கானவர் பெயர் எழுதியிருக்கிறது என்கிறது திருக்குரான். அது போல் யாரார் எத்தகைய அனுபவங்களை சுவாமியிடமிருந்து அனுபவிக்க வேண்டும் என்பதை ஏற்கனவே சுவாமி சங்கல்பித்திருக்கிறார்.

அந்த அற்புத பயணத்தின் கார் ஓட்டுநர் பெயர் கிருஷ்ணன். சாரதிக்கே சாரதியாக அந்தப் பயணத்தில் இருக்கும் பெரும்பேறு பெற்றவரானார். நீண்ட நெடும் பயணம் அது. கழுத்தைத் திருப்பாமல் ஓட்ட வேண்டியது டிரைவரின் பயணக் கடமை. அமர்ந்தபடி பேசிக் கொண்டு வருபவர்கள் போல் டிரைவர்களால் சகஜமாகப் பேச முடியாது.. முழு கவனமும் சாலையின் மீதே இருக்க வேண்டும். இப்படி கண்ணும் கருத்துமாய் இருந்து கார் ஓட்டுகிறார் கிருஷ்ணர். 


சற்று நேரத்திற்குப் பின் டிரைவர் கிருஷ்ணருக்கு நீண்ட பயணத்தால் பின்னங்கழுத்து வலிக்கக் கூடாதே என தன் தாமரைக் கைகளை தலையணை போல் அவரின் பின்புற கழுத்தில் வைத்து இதம் செய்கிறார். இது பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது..

சங்கு சக்கரம் தாங்கிய அதே கரம் தான்.. அணிலுக்கு முதுகு தடவி விட்ட அதே கரம் தான்.. துரௌபதிக்கு ஆடை தந்த அதே கரம் தான்... தீயிலிருந்து குழந்தையைக் காப்பாற்றிய அதே கரம் தான்... பூக்களைத் தூவி சாயிபாபா என தெலுங்கில் தரையோவியம் தீட்டிய அதே கரம் தான்.. இப்போது டிரைவருக்கு இதமாக தன் கரத்தை தலையணையாக்கி இதம் செய்தது..

டிரைவர் கிருஷ்ணனுக்கு பசியெடுக்கவே.. சுவாமி எனக்கு பசிக்கிறது என்கிறார் கிருஷ்ணன். உடனே சுவாமி சுடச்சுட ஜிலேபி சிருஷ்டி செய்து அவருக்கும்.. காரில் இருந்தவருக்கும் தருகிறார்.

அந்தப் பயணத்தில் மழை பீடிக்கிறது.. உடனே சுவாமி தன் கரங்களால் கார் கண்ணாடியை துடைத்து அந்தக் காரோட்டுதலை கிருஷ்ணனுக்கு ஏதுவாக்கித் தருகிறார் சுவாமி. அது சுவாமி கரம் அல்ல..டிரைவர் கிருஷ்ணனின் அளவில் அது வரம்.

டிரைவர் கிருஷ்ணா புட்டபர்த்தியில் இருக்கும் போதும் அவர் விருப்பங்களை எல்லாம் சுவாமி நிறைவேற்றிய வண்ணம் இருப்பார். தன் தட்டிலிருந்தே தனக்கு அளித்த உணவை தன் கையாலேயே டிரைவர் கிருஷ்ணனுக்கு அளிப்பார்.

இதனால் சுற்றி இருக்கும் சில பக்தர்களுக்கு பொறாமை பொத்துக் கொண்டு வருகிறது...

பொறாமை அடைவதற்கு அதிக அறிவு தேவை இல்லை.. முட்டாள்களே பொறாமைப்படுவர். பொறாமை .. சந்தேகம் எல்லாம் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். பொறாமை எனும் சிறகுகளால் மட்டுமே வதந்திப் பறவை வீதி உலா வருகிறது. பொறாமையால் தனக்கும் பிறருக்கும் எந்த நன்மையும் இல்லை. ஒருவரைப் பற்றி அவதூறுகளை பொறாமை எனும் கரங்கள் வாரி இறைக்க அதற்கு பிரதிபலனாய் பாவ கர்மாக்களை அள்ளி எடுத்துச் செல்கின்றன...

இப்படி பொறாமை கொண்ட ஒருவர் .. ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும்.. அவரை எப்படி சுவாமி பக்தர் என அழைப்பது? அவர் சுவாமியிடம்... "ஏன் நீங்கள் கிருஷ்ணனுக்கு போய் இத்தனை அன்பு காட்டுகிறீர்கள்?" எனக் கேட்கிறார்.

மனிதர்கள் பொதுவாக அந்தஸ்து உள்ளவர்களிடமே அன்பு செலுத்துவார்கள். தனக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கிறது என்றால் மட்டும் அன்பே வடிவாய் மாறிப் போவார்கள். எளிய மக்களை மனிதர்கள் எறும்பாய்க் கூட மதிப்பதில்லை.. ஒருவர் பணம் வைத்திருந்தால் முகம் எல்லாம் மனிதர்க்கு பிருந்தாவனமாகிவிடுகிறது. பதவியில் இருந்தால் அவர்கள் வருகின்ற சாலையிலேயே விழுந்து புரள்வார்கள். சுயநலம் எப்போதும் அன்பு என்ற முகமூடியையே அணிந்து கொள்கிறது. அந்த சுயநலத்திற்கு முதுகு மட்டுமே இருக்கிறதே தவிர முதுகெலும்பு இல்லை.

அப்படிப் பட்ட ஒருவர் சுவாமியிடம் கேட்க.. டிரைவர் கிருஷணனைப் பற்றிய பூர்வ பிறவி ரகசியத்தை சுவாமி முதன் முதலாகச் சொல்கிறார்..


சுவாமியின் முந்தைய அவதாரத்தில் அவர் ஷிர்டியில் இருக்கின்ற சமயத்தில்.. பலர் ஆரம்பத்தில் சுவாமியை பைத்தியம் என்று நினைத்தனர். (பூமி எனும் பைத்தியக்கார விடுதியில் அவதாரங்கள் வருகிறபோது மனிதப் பைத்தியங்கள் இப்படியே அபத்தமாய் நடந்து கொள்கின்றன) பைத்தியம் என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல் கல்லால் அடித்தனர். அந்த கொடுமையான சமயத்தில் ஒரு சிறுவன் ஓடி வந்து சுவாமியை அணைத்துக் கொண்டு "இவர் பைத்தியம் இல்லை.. இவரை அடிக்காதீர்கள்.. இவர் மகாத்மா" என பரமாத்மா சுவாமிக்காகப் பரிவோடு பேசி.. அவரை பாதுகாக்க முயன்ற சிறுவன் தான் அவனின் அடுத்த பிறவியில் டிரைவர் கிருஷ்ணனாக பிறந்தது.. ஆகவே சுவாமி அவரிடத்தில் அத்தனை பேரன்பைக் காட்டுகிறார். 

(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயி கல்பத்ருவம் -- ஆசிரியர் : பிரஷாந்த் பிரபாகர் பாலேகர் -- பக்கம் : 30)


சுவாமி ஒரு காரியம் செய்கிறார் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சுவாமி ஒரு காரியம் செய்யவில்லை என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூர்வ தொடர்பின்றி சுவாமி யாரையும் தன் பக்தராக்குவதில்லை... பித்தளைகளை சோதிக்க வேண்டிய அவசியமில்லை.. பங்காருக்களைத் தான் சோதனை செய்ய வேண்டும்.. புடம் போட வேண்டும் .. 


சுவாமி புடம் போடும் போதே தெரிந்து விடும் .. பங்காரு யார்? பித்தளை யார் ? என... வெறும் ஏங்குவதாலோ... துக்கப்படுவதாலோ கர்மாக்களை நாம் தாண்டுவதில்லை... சுவாமியின் பாதத்தில் சரணாகதி அடைந்துவிட்டோம் என்பதை நமக்குள் நாமடைந்த சமாதானமே எடுத்துக் காட்டுகிறது.. நம் பாத்திரத்தை நமது ஆன்ம சாதனையால் / பரிபக்குவத்தால் பெரிதாக்க வேண்டுமே அன்றி இவ்வளவு தான் தருகிறது என கங்கையை குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை...


 பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக