தலைப்பு

செவ்வாய், 11 மே, 2021

பாய்ந்து வரும் புலியோடு காட்டில் தனியாக மாட்டிக் கொண்ட சுவாமி நண்பர்கள்!

நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு என்று பாடினார் மகாகவி பாரதியார். இறைவனை நம்புவது.. அந்த நம்பிக்கையே சரணாகதியை நோக்கி நம்மை நகர்த்தும் .. எப்படி தன் பால்ய நண்பனான ஒரு பக்தரை சுவாமி காப்பாற்றி கரைசேர்த்தார் என்பதை உணர்த்தும் உன்னதப் பதிவு இதோ...


சுவாமி இது என் வாழ்க்கை நான் நினைத்தவற்றை எல்லாம் நீ செய்ய வேண்டும் என்பது ஆசை. சுவாமி இது உன் வாழ்க்கை நீ நினைத்தவற்றையே இங்கு செயல்படுத்து என்பதே பக்தி. அதுவே சரணாகதிக்கான பாதையை திறந்து வைக்கிறது. அப்படி ஒரு பக்தர் .. சுவாமியின் பால்ய காலத்து நண்பர். பெயர் குப்புசாமி. சுவாமியும் இவரும் ஒரே பள்ளி வகுப்பறை. 

ஒருமுறை அவர் "சுவாமி நாங்கள் உன் பக்தர்கள்.. உங்களை உயிருக்கு உயிராக நேசிக்கிறோம்.. சமயம் வரும் போது உங்களுக்காக நாங்கள் உயிரையே தருவோம்" என உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். அதற்கு சுவாமி "நீ உனக்காக மட்டுமே பேசு.. அனைவர் சார்பாகவும் பேசாதே.. உன் சுமைகளை நான் சுமப்பேன்.. மற்றவர்களுக்கு நீ ஏன் உத்தரவாதம் தருகிறாய்?" என சுவாமி தீர்க்கமாய்ப் பேசுகிறார்.

பாசம் பதறும்.. பக்தியே நிதானப்படும். பாசம் மற்றவரின் கர்மாவுக்காக கடவுளோடு வக்கீலாக வாதாடும். ஞானம் மௌனமாய் சாட்சியாய் பற்றின்றி அனைத்தையும் பார்க்கும். அதுவே உள்ளத் தெளிவு. சுவாமி அப்படி ஒரு தெளிவு தருபவர். 

சில நாட்களுக்குப் பிறகு அடர்ந்த வனாந்தரத்தில் சுவாமி தன் நண்பரான குப்புசாமி மற்றும் இதர நண்பர்களோடு வெகு தூரம் நடந்து செல்கிறார். அனைவரையும் ஜாக்கிரதையாக இருக்கும்படி சொல்கிறார். திடீரென்று சுவாமி "புலி வருகிறது.. எல்லோரும் ஓடிவிடுங்கள்.. என் மேல் பாயப் போகிறது.. என்னை தின்று விடும்" என அலறுகிறார்.. உறுமலோடு ஒரு புலி ஓடி வருகிறது .. நண்பர்கள் எல்லோரும் சிதறு தேங்காய் போல திசைக்கு ஒருவராய் விழுந்தடித்து ஓடுகிறார்கள். புலி அருகே வருகிறது.. அந்த நேரத்திலும் சுவாமியின் கால்களை இறுகப் பிடித்தபடி பயந்து கண்களை மூடியவாறு இருக்கிறார் குப்புசாமி.. நீ போகலாம் என்கிறார் சுவாமி.. புலி பூனையாய்ப் பின்வாங்கி வந்த இடத்தை நோக்கி சமர்த்துப் பிள்ளையாய் நகர்கிறது... 


நீ மட்டும் ஏன் ஓடவில்லை எனக் கேட்கிறார் சுவாமி... "இந்த குப்புசாமி நீங்கள் இருக்கும் இடத்தில் தான் இருப்பான்.. அது ஒன்றே எனக்கு பாதுகாப்பு" என்கிறார் அந்த ஆத்மார்த்த பக்தர். அது தான் சரணாகதி. இதை ஒருவேளை திரும்பிப் போன அந்தப் புலி கேட்டிருந்தால் கூட மீண்டும் வந்து சுவாமியின் காலடியிலேயே தவம் கிடந்திருக்கும்...

என்ன நடந்தாலும்.. ஏது நடந்தாலும் அதை அப்படியே ஏற்பேன்.. பக்தியிலிருந்து பின் வாங்கவே மாட்டேன்.. பயப்படவோ கவலைப்படவோ மாட்டேன் என்றிருப்பதே சரணாகத பக்தி. அது கல்வியால் வருவதில்லை... பணத்தால் வருவதில்லை.. அது தியாகத்தால் மட்டுமே வருகிறது. சுயநல எண்ணங்களை தியாகம் செய்வதால் மட்டுமே இது சாத்தியம். 


1976ல் அதே குப்புசாமிக்கு உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் தீவிர ஆய்வுக்குப் பின்னர் அவருக்கு ரத்தப் புற்று நோய் என்பதை உறுதி செய்கிறார்கள். இதை கேள்விப்பட்ட குப்புசாமி சுவாமியிடம்..."இந்த ஜென்மத்தில் நான் எந்த பாவமும் செய்யவில்லை.. அப்படி இருக்க இப்படி ஒரு நோய் வந்திருக்கிறதென்றால் என் வினைப் பயன் என்பது புரிகிறது.. ஆகவே உங்கள் காலடியிலேயே உயிரை விடப் போகிறேன்" என உறுதி பேசுகிறார் குப்புசாமி.

எந்த மனிதரும் பூர்வ கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும். அதை புலம்பிக் கொண்டே அனுபவிக்கிறோமா.. இல்லை முழு மனதோடு ஏற்று அமைதியாக அனுபவிக்கிறோமா என்பது அவரவர் பக்குவத்தைப் பொறுத்தே இருக்கிறது. ஒரு சிலருக்கு சுவாமி வினையை மாற்றுகிறார். ஒத்திப் போடுகிறார். உண்மையான பக்தர் இது தொடர்பாக எதையும் சுவாமியிடம் கோரிக்கை வைப்பதில்லை. 

குப்புசாமி யின் பக்திப் பூர்வமான வார்த்தையைக் கேட்ட சுவாமி "நான் உன்னை என்னோடு அழைத்துக் கொண்டு வந்தது (சுவாமியும் குப்புசாமியும் ஒரே நாளில் பிறந்தவர்கள்) உன்னை புலிக்கு இரையாக்குவதற்கோ.. பாதி வழியில் விட்டுச் செல்வதற்கோ அல்ல.. இன்றிலிருந்து உன் கேன்சர் கேன்சல்" என்கிறார். பூரண ஆரோக்கியம் திரும்புகிறது.

பிள்ளைப் பிராயத்திலிருந்தே குப்புசாமிக்கு சுவாமியிடம் இருந்த திட நம்பிக்கை... பக்தி என்பது தெய்வீகமானது. அது சிறுவனாய் இருக்கையிலேயே இடப்பட்ட வீரிய விதை.. விருட்சமாக எழுந்து சரணாகத சரிதத்தை எழுதியபடி இருந்தது.

(ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயி கல்பத்ருவம்-- ஆசிரியர் : பிரசாந்த் பிரபாகர் பாலேகர் -- பக்கம் -- 112) 

மனிதன் நினைப்பதெல்லாம் நடக்க வேண்டிய அவசியமே இல்லை.. நடப்பதில் எல்லாமே இறைவன் நினைப்பே .. நடக்கையில் நமக்கு வேண்டியதும் இறைவன் நினைப்பே... நடப்பது எதுவாயினும் அதை முழுதாய் ஏற்கிற போதே அமைதியையும்... பிரசாந்தியையும் மனிதனால் அனுபவிக்க முடிகிறது. இறைவன் சத்யசாயியிடமே யாவற்றையும் விட்டுவிட்டு வாழ்வை விருப்பு வெறுப்பின்றி சாட்சியாய்ப் பார்ப்பதை விட மெய்ஞானம் வேறெதுவுமில்லை...

  

பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக