தலைப்பு

புதன், 5 மே, 2021

மாணவனின் கறைபடிந்த மனதை சலவை செய்த இறைவன் சத்தியசாயி!

மனித மனமே ஒரு குருக்ஷேத்ர போர்க்களம். அதில் அன்றாடம் நற்சிந்தனைகளுக்கும், தீய எண்ணங்களுக்கும் இடையே ஓயாத பாரதப் போர் நடந்து கொண்டிருக்கிறது. பாபா கூறுகிறார் "மனதை நீ உபயோகிப்பதால் , அதில் கறைகள் சேர்ந்துவிடுகிறது. அதை என்னிடம் ஒப்படைத்துவிடு. நான் அதன் கறை களை நீக்கி, தூய்மையாக்கித் தருகிறேன்... 


🌹த்ரையீ பிருந்தாவனத்தில் பாபா போதித்த மனத் தூய்மை:

பாபா பெங்களூர் பிருந்தாவன் வளாகம் வரும் போதெல்லாம், மாணவர்கள் மனம் குதூகலம் அடையும். தரிசனம், ஸ்பர்ஷணம், சம்பாஷணம் என்கிற முக்கனிச் சுவையில் அவர்கள் ஊறி திளைப்பதுண்டு. எத்தனை அற்புதங்கள், எத்தனை உபதேசங்கள் எத்தனை அன்பெனும் அருவி நீராட்டம். அத்தனையும் அவர்கள் இதயத்தில் இனிய தேரோட்டம். 

அப்படி ஒரு சமயம். பாபாவின் ப்ருந்தாவன வருகை. மாணவர்கள் கல்லூரி செல்லும் நேரம் தவிர , எந்நேரமும் பாபாவின் அருகாமையில் ஆனந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருநாள்,பக்தர்களுக்கு தரிசனம் அளித்து முடித்து விட்டு பாபா திரும்பி வந்து கொண்டிருந்தார். பூவினைச் சூழும் வண்டுபோல் மாணவர்களும் ஆசிரியர்களும் பாபாவை மொய்க்கத் தொடங்கினர். சிலர் பாபாவின் பொன்னடிக்கு கீழே அமர, மாணவர்கள் அவரை சுற்றி நிற்கலானார்கள். பாபாவின் நெருக்கத்தில் பல மாணவர்கள் நிற்க , ஒரு மாணவன் மட்டும் சற்றுவிலகி, பாபாவின் பார்வையைத் தவிர்த்து , சற்றே பின்வரிசைக்கு நகர்ந்தான்.

🌹உள்மனம் படிக்கும் உன்னத சக்தி:

அப்படி என்ன நேர்ந்துவிட்டது அந்த மாணவனுக்கு? அவன் மனதில் அப்போது , தூய்மையற்ற சில எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன. 

நம்மில் அனைவருக்கும் அவ்வப்போது இம்மாதிரி நிகழ்வதுண்டல்லவா. ஆனால் அந்த மாணவன் இந்த மன சஞ்சலத்தோடு எவ்வாறு பாபாவின் அருகாமைக்கு செல்வது - - அவர் இந்த எனது தூய்மையற்ற மன எணணங்களை துல்லியமாக அறிந்துவிடுவாரே என அஞ்சி சற்றே ஒதுங்கி நின்றான். ஆனால் பாபாவின் பார்வைக்கு எதுவும் தப்ப இயலுமா?. விரலசைத்து பாபா கூப்பிட்டார். "ஏய்  உன்னைத்தான்..அருகில் வா. எப்படி இருக்கிறாய்." " நலமாக இருக்கிறேன் ஸ்வாமி" என்று அந்த மாணவன் கூற, பாபா பலமாக அதை மறுத்தார் "இல்லை..இல்லை..இல்லை.. நீ நலமாக இல்லை. மனதில் இடர்பாடுகளும், துள்ளல்களும் உள்ளன." மாணவன் அதைக்கேட்டு மனம் கலங்கி தலை குனிந்தான். "ஆம் ஸ்வாமி" என்றான் முணுமுணுப்பாக. அவன் மனதில் பயம் தோன்றியது. பாபா என் எண்ண ஓட்டங்களை மற்றவர்களுக்கு கூறுவாரோ, கல்லூரியிலிருந்து நான் வெளியேற்றப் படுவேனோ போன்ற எதிர்மறை சிந்தனைகள் அவனுக்குள் தோன்ற ஆரம்பித்தன. அப்போது பாபா தம் கையிலிருந்த வெள்ளை கைகுட்டையை பிரித்து, கருணை பொங்க அந்த மாணவனைப் பார்த்து "உன் மனம் இந்த வெள்ளை நிற கைகுட்டையை போல அவ்வளவு தூய்மையானது" என்றார். மாணவனின் படபடக்கும் மனம் சாந்தி அடைய ஆரம்பித்தது. அக்கால கட்டத்தில் ஸ்வாமி வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை கொண்டிருந்தார். அவரது உதடுகள் ரம்மியமான சிவப்பு நிறத்தில் தோற்றம் அளிக்கும் பாங்கினை ரசிக்காதவர்கள் இல்லை. 

ஸ்வாமி அந்த கைகுட்டையால் உதடுகளை ஒற்றி எடுக்க, வெண்மையான அந்த கைகுட்டையின் ஓரத்தில் சிவப்பு நிறக் கரைகள் ரத்தினங்கள் போன்று பளிச்சிட்டன. பகவான் அந்த மாணவனைப் பார்த்து கூறினார், "நான் கைகுட்டையை உபயோகப் படுத்தியதால் இந்தக் கறை படிந்தது. அதுபோல மனதை நீ உபயோகித்ததால் வேண்டாத எண்ணங்கள் உருவாகின. கைகுட்டை கறை போக்க அதை சலவை செய்யவேண்டும். அதுபோல மனதின் கறை நீங்க, அதை என்னிடம் கொடுக்க வேண்டும். இந்த வகையில் உலகின் தலைசிறந்த சலவையாளன் நான்தான். உன் மனதின் கறை நீக்கி அதை தூயதாகவும் , புனிதமாகவும் ஆக்கி உன்னிடம் திருப்பித் தருவேன்." 

பகவானின் இந்த அற்புத விளக்கம் பரிபூரண சரணாகதி தத்துவத்தின் மகத்துவத்தை பறை சாற்றுகிறது அல்லவா? மாணவனும் இதைக்கேட்டு மனம் தெளிந்தான். அதன்பின் அவனது எண்ண ஓட்டத்தின் இடற்பாடுகள் அவனை விட்டு நீங்கிவிட்டன. 

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2020இல் திரு. பிஷு ப்ரஸ்ட்டி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து...

மொழிமாற்றம்: கவிஞர் குஞ்சிதபாதம் 


🌻 மாணவனை சாட்சியாக வைத்து, மாதவன் நமக்கு பறைசாற்றிய அறிவுரை இது அல்லவா. தவங்கள் இயற்றி, யோகங்கள் பயின்று மனதை அடக்க முயற்சிக்கலாம். ஒருவேளை அது சிலருக்கு சித்திக்கவும் கூடும். ஆனால் மனோ வலிமை குறைந்த இந்தக் கலியுகத்தில், எளியவர்களும் தீனர்களும் கடைதேற சுலபமான வழி உண்டா என பாரதியாரின் "மணி வெளுக்க சாணையுண்டு எங்கள் முத்து மாரியம்மா, மனம் வெளுக்க மார்க்கமுண்டோ" என்ற கேள்விக்கு பகவான் கூறும் எளிய வழிதான் இந்த "மனம் ஒப்படைப்பு" வழி. இதை எவ்வாறு செய்வது. சதா பகவான் நாமத்தை ஜெபித்ததன் மூலம். உதாரணமாக, சிவ ராத்திரி போன்ற புனித நாட்களில் நாம் அகண்ட நாம ஸ்மரணத்தில் ஈடுபடுவோமல்லவா- அதுவும் ஒரு "மன ஒப்படைப்பு" நிகழ்வுதான். கறை படிந்த மனத்தை அந்த கறைகண்டன் சிவபாபாவிடம் ஒப்படைத்து, நிறை மனத்துடன் வாழ்வோமாக. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக