தலைப்பு

சனி, 15 மே, 2021

செல்லப் பிராணி போல சுவாமியை பின் தொடர்ந்து குதித்தபடி சென்றது ஆத்ம லிங்கம்!

சுவாமியின் சிருஷ்டிப்பொருள் அவரிடமே எவ்வாறு சரணடைகின்றது என்பதைப் பற்றியும் அதில் பொதிந்திருக்கும் சூட்சுமம் பற்றியும் பரவச அனுபவமாய் இதோ...


கிருஷ்ணருக்கு பிறகு சுவாமியே பரிபூரண அவதாரம். ராமாவதாரம் கூட லிங்கத்தை பூஜை செய்தது. ஆனால் சத்யசாயி அவதாரம் அந்த லிங்கத்தையே சிருஷ்டித்தது. தசாவதாரங்களில் இது எந்த அவதாரத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு. 


பரப்பிரம்மமான சுவாமி நியமித்த அதிபதி தான் பிரம்மாவே தவிர சிருஷ்டியின் சூட்சுமத்தை .. மனித கர்மாவின் வழித்தொடர்ச்சியை .. எந்த நேரம் கருவில் மனித ஆன்மா குடிபெயர்கிறது போன்ற அதிசூட்சும ரகசியம் எல்லாம் மகான்களும் அறியாததே! சுவாமி மட்டுமே அதற்கான ஒரே காரண கர்த்தா!!

தானே சிருஷ்டி கர்த்தா என்ற காரணத்தினால் சிருஷ்டிப்பது சுவாமிக்கு இயல்பாகவே இருக்கிறது. சுவாமியின் சிருஷ்டிகள் என்பது மனிதப் பார்வைக்கு ஆச்சர்யமே அன்றி இவை எல்லாம் சுவாமியின் சாதாரண சுபாவங்களே...! பேரன்பின் பிரபாவங்களே...! 

சிவராத்திரி வைபவமும்... லிங்கோத்பவ கோலாகல கொண்டாட்டமும் மெய்சிலிர்த்துப் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அந்த நேரத்திலான பேரதிர்வலைகள் லிங்கோத்பவ தரிசனம் செய்தவர்களை கைலாய தரிசனம் போன்ற உந்துதலை ஏற்படுத்தி பரவசப்பட வைத்திருப்பதொன்றும் ஆச்சர்யமே இல்லை... 

விரல் வழி சிருஷ்டியையும்... வாய் வழி சிருஷ்டியையும் விழி வழி தரிசித்தவர்கள் எத்தனை பேறு பெற்றவர்கள். லிங்கம் என்பது விரி பிரபஞ்ச வடிவம். கோவில் சந்நதிகளின் லிங்கங்கள் எல்லாம் கருவெளியாய் ஆகர்ஷனம் செய்து நம்மை ஈர்க்கிறது. மனமற்ற நிலைக்கு நம்மை கடத்துவதற்கு பெரிய ஆன்ம சாதனமாய் லிங்க வடிவம் பயன்படுகிறது.



சுவாமி இப்படி பல லிங்க வடிவங்களை சிருஷ்டித்திருக்கிறார். அடிவயிறு குலுங்க.. நீர் அருந்தி ஆத்ம லிங்கத்தை பிரசவிக்கும் புனிதப் பொற்பொழுதுகள் இப்போது காணொளிகளில் காணும் பொழுது சிலிர்ப்பை நமக்கும் சிறப்பை சுவாமிக்கும்... நன்மையை நமக்கும் மேன்மையை சுவாமிக்கும் பெற்றுத் தருகிறது. ஹிரண்ய கர்ப்பத்திலிருந்து சுவாமி சிருஷ்டிக்கும் ஆத்ம லிங்கம் பேரதிர்வலைகள் சுமந்து பூமிக்கு வருகிறது. பிரபஞ்ச வடிவம் லிங்கம் .. அந்த லிங்கத்தையே தன் கர்ப்பத்தில் பரப்பிரம்மம் மட்டுமே சுமக்கிறது. 

சுவாமி மட்டுமே பரப்பிரம்மம் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டியதில்லை. 

சுவாமி இப்படி ஆத்ம லிங்கம் சிருஷ்டித்து அதை பல்வேறு காலக்கட்டங்களில் பலருக்கு பூஜை செய்ய அளித்திருக்கிறார். 


அவர்களும் சுவாமி சொல்லிய வண்ணமே பூஜை செய்து.. அபிஷேகம் செய்து அதன் நீரை அருந்தி இகபர சௌபாக்கியம் அடைந்திருக்கிறார்கள். 

இப்படி சுவாமி ஒரு பெண்மணிக்கு தனது ஆத்ம லிங்கம் வழங்கி பூஜா நியமங்களைக் கற்றுத் தருகிறார். அவரும் சுவாமி சொல்லிய வண்ணமே செய்கிறார். நாட்கள் நகர்கின்றன. அந்தப் பெண்மணிக்கு வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டியிருக்கிறது. ஆயினும் ஆத்மலிங்க பூஜையை மட்டும் அவர்கள் விடவில்லை. ஒரு முறை சந்தேகம் ஒன்று அந்தப் பெண்மணிக்கு எழுகிறது.. 


இனி ஆத்ம லிங்க பூஜையை நம்மால் இறுதி வரை செய்ய முடியுமா என்ற வினா நெஞ்சை இழுக்கிறது. சுவாமியிடம் நேர்காணல் பெறுகிறார்கள். இந்த வினாவை தவிர மற்ற எல்லா விஷயங்களையும் சுவாமியிடம் பகிர்ந்தபடி நேர்காணல் நிறைவடைகிறது. சுவாமி நேர்காணல் அறையை விட்டு மாடிக்கு நகர்கிறார். அய்யகோ ஆத்ம லிங்கம் பற்றி எதுவுமே சுவாமியிடம் கேட்கத் தோன்றவில்லையே என அந்தப் பெண்மணி யோசிக்க.. சுவாமி நகர்ந்து செல்வதற்கு பின்புறம் டங் டங் என பேரொலி கேட்கிறது.. என்ன சத்தம் இந்த நேரம் என அந்தப் பெண்மணி தனது பார்வையைப் பதிக்க லிங்கம் ஒன்று எம்பிக் குதித்து செல்லப்பிராணி போல் சுவாமியை பின் தொடர்கிறது. தனது கைப் பையை சோதிக்கிறார் அந்தப் பெண்மணி...அப்போது தான் பட்டுத் துணியில் வைத்திருந்த ஆத்ம லிங்கத்தை காணவில்லை.. உணர்ந்த அடுத்த நொடி சுவாமியைப் பின் நோக்கி மிக வேகமாய் ஓடுகிறார் அந்தப் பெண்மணி.. மூச்சு வாங்க "இது என் ஆத்ம லிங்கம்" என்கிறார். 

அதற்கு சுவாமி "என்னது.. இது உன்னுடைய ஆத்ம லிங்கமா?" என சுவாமி சத்தியம் பகர்கிறார். அந்தப் பெண்மணிக்கு தன் தவறு புரிகிறது. ஞானம் பிறக்கிறது. அதற்குள் சுவாமி அந்த ஆத்ம லிங்கத்தை எடுத்துக் கொண்டு மேல் மாடிக்கு சென்றுவிடுகிறார்.

(ஆதாரம்: ஸ்ரீ சத்ய சாயி கல்பத்ருவம் -- ஆசிரியர் : பிரஷாந்த் பிரபாகர் பாலேகர் -- பக்கம் : 32)

சுவாமியின் சிருஷ்டி சுவாமிக்கே சொந்தம். நம்மால் எதையும் உரிமை கொண்டாட முடியாது. மனிதர்கள் கூட சுவாமியின் சிருஷ்டியே... உறவுகள் அனைத்தும் தற்காலிக ஏற்பாடே.. இந்த பூமி என்பது கூட்டம் நடந்த பிறகு கலைந்துவிடும் தற்காலிக மேடையே...பேரிடர் காலத்து ஊரடங்கு போல சிறிது காலமே உறவுகள்.. ஆகவே பற்றற்று இருப்பதை தவிற வேறு எந்த உபாயமும் மனித இனத்திற்கு இல்லை. 

இல்லை பற்றோடு தான் இருப்பேன் என்றால் அதற்கான பாதகங்களையும்.. நோய்களையும் நாம் தான் அனுபவிக்க வேண்டும் ... 

பற்றில்லாமல் இருப்பது என்பது ஆரோக்கியமாக இருப்பது.. 

பற்றில்லாமல் இருப்பது என்பது ஆனந்தமாக இருப்பது...

பற்றில்லாமல் இருப்பது என்பது ஆன்மீகமாக இருப்பது...


   பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக