தலைப்பு

சனி, 1 மே, 2021

ஆலங்குடி குரு பகவானால் சாயி பரபிரம்மத்திடம் சரணடைந்த அன்பர்!


நமது ஸ்ரீ சத்ய சாயி யுகம் குழு உறுப்பினர் ஜோதிடர் சரவணன் அவர்களின் அனுபவ பக்கங்களிலிருந்து... 

2001 ல் 'தஞ்சையைச்' சேர்ந்த அன்பரொருவர், வெளிநாடு செல்வதற்காக, 'சென்னையைச்' சேர்ந்த ஏஜென்ஸி மூலம் ஏற்பாடு செய்திருந்தார்.
தஞ்சையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அறிமுகத்துடன், ஒரு ஆலோசனைக்காக, என்னைக் காண வந்திருந்தார்.

வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறதா...? எனக் கேள்வி ஒன்றை முன்வைத்தார். அவருக்குத் தற்போது வெளிநாடு செல்லும் வாய்ப்பு இல்லை என்பதையும்... தஞ்சையிலேயே இன்னும் ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒரு தொழில் வாய்ப்பு கூடி வரும் என்பதையும்... தெரிவித்தேன்.


அதன் பின்னரே, தனக்கு அனைத்து ஏற்பாடுகளும் ஆகி விட்டது எனவும்... ஒரு Cross reference க்காக என்னிடம் வந்ததாகவும் தெரிவித்தார். இருந்தாலும்... ஆலங்குடியிலிருந்து அருள் செய்யும், 'ஆபத்சகாயேஸ்வரரையும்'... 'குருபகவானையும்' பிரார்த்தனை செய்துவிட்டு செல்லும் படி கூறினேன். தஞ்சை நண்பரின் அறிவுறுத்தல் படியும், அவர் தரிசனத்தைப் பூர்த்தி செய்துவிட்டுச் சென்றார்.

காலம் கடந்தது... பத்து மாத இடைவெளியில் மீண்டும் என்னைக் காண வந்திருந்தார்... பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி... சென்னையில் நேர்ந்ததை விவரித்தார் :


அவர் பணம் கொடுத்த எஜென்ஸி, பிரச்சனைகளில் சிக்கி, இவர் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பணத்தைத் திருப்பித்தர ஏஜென்ஸி, கொடுத்த நாட்கள் மாதங்களாகின. சென்னையில் ஒரு 'மேன்ஷனில்' தங்கி கையிலிருந்த பணத்தையும் கரைத்துக் கொண்டிருந்தார். இறுதியில் வெளிநாடும் செல்ல முடியாது... ஊருக்குத் திரும்பி வந்து தனது மனைவி, இரு குழந்தைகளையும் நேர் கொள்ள முடியாது... தன்னையே, மாய்த்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டார்.


மேன்ஷனில், பரபரப்பு ஓய்ந்தபின், கதவைச் சாத்திக் கொண்டு, அவரது முடிவை மேற்கொள்ளும் நேரத்தில் கதவு தட்டப் பட்டது. பக்கத்து அறையில் இருக்கும் அன்பரொருவர்... ஒரு பத்திரிக்கையுடன் வந்திருந்தார். அது 'நாரதகான ஸபாவில்' அன்று மாலை நடக்கும்... 'புட்டபர்த்தி பகவானின்' ஆராதனை விழாவுக்கான அழைப்பிதழ். 'மாலை விழாவுக்கு வாருங்கள்...அது உங்களுக்கு ஒரு மாற்றமாக இருக்கும்...!' என்று சொன்னபோது... ஏதோ ஒரு உள்ளுணர்வில், தனது தற்போதைய முடிவைத் தள்ளி வைத்தார்.
மாலை ஆராதனைக்குச் சென்று அங்கு நிகழ்ந்த பஜனைகளில் மூழ்கி, 'கூட்டுப் பிரார்த்தனை' நேரத்தில் தனது பிரார்த்தனையை, மனதார வைத்தார்.

இரவு தூக்கமின்றித் தவித்தவருக்கு... காலை 'மேன்ஷன் மேனேஜர்' ரூமிலிருந்து 'தொலைபேசி' வந்திருப்பதாக அழைப்பு வந்தது. பேசியவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது... அந்த ஏஜென்ஸியிலிருந்துதான் போன். 'அலுவலகம் வந்து, அவர் செலுத்தியிருந்த தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு வந்ததுதான் செய்தி'.

மேற்கண்ட செய்தியைச் சொல்லி... அந்த 'விழா அழைப்பிதழைக்' காட்டினார். கவரிலிருந்து அதை எடுக்கும் போது... அதனுடன் 'புட்டபர்த்தி பகவானின் திருவுருவப்பட ஸ்டிக்கர்' ஒன்று வந்து விழுந்தது. அது அதுவரை அவரது கண்ணில் படவில்லை... அதிலிருந்த வாசகம்... WHY FEAR, WHEN I AM HERE(நான் இருக்க பயமேன்)... 


ஆலங்குடி குருபகவான் போன்ற நவகிரகங்கள் சத்யசாயி பரப்பிரம்மத்திற்கு கட்டுப்பட்டவர்கள்..
என் அனுகிரகம் இருக்கும் போது நவக்கிரகம் என்ன செய்யும்? என சுவாமியே பலமுறை சத்தியம் பகிர்ந்திருக்கிறார்..
எந்த தெய்வங்களை வழிபட்டாலும் பரிபூரண அவதாரமான சுவாமியிடமே அந்த வழிபாடும்.. அந்த வழிபாட்டால் நிகழும் வழிகாட்டுதலும் நகர்த்திக் கொண்டு செல்லும்..‌
இவ்வாறே இந்த அன்பருக்கு நிகழ்ந்த அற்புதமும் சிலிர்க்க வைப்பவை.. சுவாமியிடம் பூரண சரணாகதி அடைந்துவிட்ட பிறகு கர்மாவை குறித்த அச்சமும் நின்று போய்விடுகிறது... அதன் இயக்கத்தோடு எந்த பற்றுதலும் விலகிவிடுகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக