சிவபெருமான், திருவிளையாடல் புராணத்தில், சூலைநோய் கண்டு துடித்த, மருள்நீக்கியார் என்ற இயற்பெயர் கொண்ட, திருநாவுக்கரசரை, நோய் நீக்கி ஆட்கொண்டார்.
நம் கலியுக சாயி, அருணாச்சல பிரதேச, ஆதிவாசி தலைவரின் சூலை நோய் நீக்கி ஆட்கொண்ட நவீன திருவிளையாடல், இதோ!
மறுசீரமைப்புக்கு முன்னர், அருணாசலப் பிரதேசம் அசாமின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது அங்கிருந்த பழங்குடியின மக்கள், தனி மாநிலம் கோரி கொரில்லா போராட்டங்களை நடத்தினார்கள். இதனால் மிகுந்த பொருட் சேதமும் உயிர்ச் சேதமும் ஏற்பட்டது.
அசாம் மாநிலத்தின் உள்துறை செயலாளராக இருந்தவர், மிகவும் நல்லவர், சாயி பக்தர். அவர் பழங்குடியினரின் அன்பை பெறுவதற்காக, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், பாதைகள் போன்ற பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து, அவர்களது அன்பை பெற முயற்சி செய்தார். இருந்தாலும், அவர்கள் மனநிறைவு அடையவில்லை. முக்கிய காரணம், பழங்குடியினரின் முக்கிய தலைவர் ஒருவர் மிகப்பெரிய வயிற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மிகச்சிறந்த மருத்துவர்களை வைத்து, டெல்லியில் இருந்து அழைத்து வந்து, அவருக்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதனால் அவர்கள் நம் மருத்துவ முறை மீது நம்பிக்கை இழந்திருந்தனர். "மனித பிரயத்தனங்கள் பயன் தராத போது இறைவனே காப்பாற்றுவார்", என்பதை உணர்ந்த ஹோம் செகரட்டரி, உடனடியாக பாரத் தர்ஷன் என்ற பெயரில், முக்கிய தலைவரையும், அவரது உறவினர்கள் என 29 பேரை சுற்றுலாவாக புட்டபர்த்தி அழைத்து வந்தார்.
தரிசன ஹாலில் அவர் அமர்ந்திருந்த போது, பகவான் நேராக அவரிடம் வந்தார். ஹோம் செகரெட்டரி, பகவானிடம் பணிவாக, "நாங்கள் அசாமில் இருந்து வந்திருக்கிறோம்.", என்று கூறினார். சுவாமி, உடனடியாக அவர்களை நேர்காணல் அறைக்கு அழைத்தார்.
ஹோம் செகரெட்டரி, பகவானிடம், "சுவாமி! இவர் முக்கிய பழங்குடி இனத் தலைவர். தீராத வயிற்று வலியால் அவதிப்படுகிறார். இவரது நோயை நீக்கி, மாநிலத்தில் அமைதி ஏற்பட உதவ வேண்டும்.", என பணிவுடன் வேண்டிக் கொண்டார்.
சுவாமி, "கண்டிப்பாக குணமடைவார், கவலைப்படாதே!", எனக்கூறி பழங்குடியினர் தலைவர் பக்கம் திரும்பினார். அவர்கள் மொழியில் அவர்களிடம் பேசத் தொடங்கினார். பழங்குடியின மக்கள் தலைவருக்கு விபூதி வரவழைத்து கொடுத்து, "இதை சாப்பிடு, உன் வயிற்று வலி தீர்ந்து விடும்.", என்றார்.
மேலும் 9 அங்குல விட்டமுள்ள ஒரு தாமிரத் தகட்டை கை அசைவில் வரவழைத்தார். அதில் சூரியன் மற்றும் சந்திரனின் சிற்பங்கள் அழகாகச் செதுக்கப் பட்டிருந்தன.அதை அவர்களின் கவனத்திற்கு சுவாமி கொண்டு சென்றார்.
அவர்கள் மொழியில் அதைக் காண்பித்து,தோனோ போலோ என்றார். அவர்கள் ஆரவாரம் செய்தனர். தோனோ போலோ என்றால் சூரியனும் சந்திரனும் என்று பொருள். பழங்குடியினர், அவர்கள் கிராமத்தில் ஒரு கோவிலை கட்டி கொண்டிருந்தனர். அந்த கோவிலுக்கு தோனோ போலோ என்று பெயர். சுவாமி அதை குறிப்பிட்டதும் அவர்கள் ஆரவாரம் செய்தனர்.
"இந்த தாமிர தகடை நீங்கள் கட்டிக்கொண்டிருக்கும் கோவிலின் அடியில் பிரதிஷ்டை செய்யுங்கள். தெய்வீக அருள் பெருகும்.", எனக் கூறி ஆசிர்வதித்தார்.
சுவாமி அவர்கள் அனைவருக்கும் விபூதி பிரசாதம் தந்து, ஆசீர்வதித்து, கேன்டீனுக்கு சென்று சாப்பிடுமாறு கூறி அனுப்பி வைத்தார். அவர்கள் கேன்டீனுக்கு சென்று சாப்பிட அமர்ந்தனர். பழங்குடி இனத் தலைவர் எதிரே சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தட்டிலிருந்த, வெண்மையான, வட்ட வடிவமான பொருள் தனக்கு வேண்டும் என்று கேட்டார்.
அது இட்லி. அவருக்கு இட்லி, சட்னி, சாம்பார் பரிமாறப்பட்டது. அதை அவர் சாப்பிட்டார். சுற்றி இருந்தவர்கள் பயத்துடனும் கவலையுடனும் அவரைப் பார்த்தார்கள். ஏனென்றால், அவர் திட உணவாக எதை சாப்பிட்டாலும் உடனடியாக வாந்தி எடுத்து கடுமையான வயிற்று வலியால் கத்துவார். அலறுவார். அதனால் மீண்டும் அது போல ஏதேனும் நடந்து விடுமோ என அருகில் இருந்தவர்கள் பயந்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை.
இட்லி சாப்பிட்டு முடித்ததும், மீண்டும் இட்லி வேண்டுமென கேட்டார்.மீண்டும் அவருக்கு இட்லி பரிமாறப்பட்டது. இவ்வாறு ஆக மொத்தம் முப்பத்தி இரண்டு இட்லிகள் சாப்பிட்டார். அவருக்கு எந்தவிதமான வாந்தியோ, வயிற்று வலியோ வரவில்லை. வயிற்றுவலி நீங்கியதால் பழங்குடியின தலைவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அவர் தனது சகாக்களிடம், சுவாமியின் போட்டோவை காண்பித்து, "இவர் சாதாரணமானவர் அல்ல. இவர் கடவுளே! வெகு நாட்களாக என்னை கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த வயிற்றுவலியை ஒரு சில வினாடிகளில் குணப்படுத்தி விட்டார். இவர் தம் அருளால் நமக்கு நல்லதே நடக்கும்.", என்றார்.
அவர்கள் மகிழ்வுடன் அசாம் புறப்பட்டு சென்றனர்.
பித்தனோ, ஜடாமுடிக்கு சொந்தக்காரன்!
நம் சாயி சித்தனோ, சுருள் முடிக்கு சொந்தக்காரன்!
பித்தனோ,விபூதி பூசி திரிபவன்!
நம் சாயி சித்தனோ,விபூதி தந்து அருள்பவன்!
ஆதாரம்: தபோவனம், P225 to 228
நன்றி: S. Ramesh - Ex-Convenor, Salem Samithi
🌻 இறைவன் சத்ய சாயி அன்றி வேறொரு இறைவன் எங்குமில்லை. அவரே எல்லா தெய்வ ரூபங்களாகவும் திகழ்கிறார். ஷிர்டி சாயி பிரேம சாயி என தன் அவதார விஜயங்களை நிகழ்த்துகிறார். அந்த பிரசாந்தியையே அவர் அஸாம் மாநிலத்திற்கு அருளிச் செய்தது. அது அற்புதம் நமக்கு. அது சர்வ சாதாரணம் இறைவன் சத்ய சாயிக்கு. 🌻
Though posted already a great post.
பதிலளிநீக்கு