தலைப்பு

செவ்வாய், 25 மே, 2021

வாரியாருக்கு முருக தரிசனத்தை வாரி வழங்கிய வள்ளல் சாயி!


மிகப் பெரிய முருக பக்தரும்... கோவில் திருப்பணி மற்றும் சமூக சேவையாற்றிய அடியாரும்.. உபன்யாச நதியும்... தமிழ்க்கடலும்... இசையருவியும்...64 ஆவது நாயன்மாராய் போற்றி கொண்டாடப்படுகிற திருமுருக கிருபானந்த வாரியாருக்கு இறைவன் சத்ய சாயி நெஞ்சக்கனகல்லும் நெகிழ்ந்துருக முருகபிரானாய் தரிசனம் அளித்து தடுத்தாட் கொண்டார் எனும் பேரனுபவப் பதிவு இதோ...


பக்தியில்... சேவையில் உயர்ந்து மகானாய் பரிமளித்த வாரியார் சுவாமிகளை புட்டபர்த்திக்கு வர அழைப்பு விடுகிறது சாயி பரம்பொருள்... 

வாரியார் ஸ்வாமிகளுக்குச் சத்திய சாயியை பார்க்கவே நேரமில்லாது இருந்தது. ஒருவழியாகத் தனது வயது முதிர்ந்த காலத்தில் சத்திய சாயியைச் சந்திக்க சிலரோடு பெங்களூரு ஒயிட் பீல்டு ஹவுஸுக்குப் புறப்பட்டுச் சென்றார் வாரியார். அங்கு அவர் சிறப்பாகக் கவனிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டார்.


ஐந்து நாள்கள் ஆகியும் வாரியாரைச் சந்திக்க சத்திய சாய்பாபா வரவே இல்லை. அங்கு வாரியாருக்கு என்று எந்த வேலையும் இல்லை. பூஜை செய்வதும், உணவு உண்பதும், தூங்குவதுமாக நாள்களைக் கழித்தார் வாரியார். இது அவருக்குப் பிடிக்காத செயல். எப்போதும் பரபரப்பாகச் செயல்பட்டு வரும் வாரியார் ஸ்வாமிக்கு ஒரு கட்டத்தில் வெறுப்பு வந்து விட்டது. உடனே தன்கூட வந்தவர்களிடம் 'நாம் வந்து ஐந்து நாள்கள் ஆகி விட்டன. இங்கே சும்மாவே இருக்க எனக்கு விருப்பமில்லை. என்னுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் முருகனின் பணிக்காகவே ஒப்படைத்தவன் நான். எனவே கிளம்பலாம்' என்றார். அவருடன் வந்தவர்கள், 'நாளை காலை வரை பார்ப்போம், இல்லாவிட்டால் சொல்லிவிட்டு கிளம்பலாம்' என்றார்கள். வாரியாரும் ஒப்புக்கொண்டார். மறுநாள் காலை வாரியார் அருகே நடந்து கொண்டிருந்த பஜனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அக்கூட்டத்திற்கு வந்த ஸ்ரீ சத்திய சாய்பாபா, மெள்ள நடந்து போய் வாரியார் ஸ்வாமியின் அருகே சென்றார்.


வாரியாரிடம் 'நான் உங்களைச் சந்திக்கவில்லை என்று கோவமா? முருகனின் அருளால் உங்களிடம் எல்லாம் உள்ளது. உங்களிடம் இல்லாதது ஓய்வு ஒன்றுதான். அதைத்தானே நான் தர முடியும்' என்றார். இதைக்கேட்டு வியந்து போனார் வாரியார்.

ஆதாரம்: ஆனந்தவிகடன் செய்தி மடல்


பின்னர் 1984ல் சென்னையில் டி‌.வி ஆனந்தனைத் தலைவராகக் கொண்ட சமூகக் கூடத்தில் இறைவன் சத்ய சாயி விஜயம். வாரியாருக்கு அழைப்பு... சுவாமி அருகில் வந்து சௌக்கியமா எனக் கேட்கிறார்..

பிரபஞ்ச சௌக்கியத்தையே பராமரிக்கும் சாயி கடவுளைக் கண்ணாறக் காண்கிறார் வாரியார் சுவாமிகள்.. விபூதி சிருஷ்டி செய்து நெற்றி எங்கும் பூசிவிட்டு அவரிடம் "இதுவரை நீங்கள் பர்த்தி வந்ததே இல்லை கட்டாயம் புட்டபர்த்தி வாருங்கள்" என்று அழைப்பு விடுகிறார் இறைவன் சாயி...

பின்னர் சில நாட்கள் கழித்து பர்த்தி வருகிறார் வாரியார்... அவர் தங்கிய இடத்தின் அறையில் சத்ய சாயி படத்திலிருந்து விபூதி பொழிகிறது..
ஊருக்குக் கிளம்பலாம் என உத்தேசித்த சுவாமிகளின் முன்
அந்த விபூதிப் படத்திலிருந்து சத்யசாயி இறங்கி வந்து திருமுருகனாய்க் காட்சி அளிக்கிறார்...முருகனின் அலங்காரம்.. சுவாமியின் திருமுகம் என திவ்ய தரிசனம் காணக் காண.. முருகா என விழுந்து வணங்குகிறார்.. ஏன் இத்தனை தாமதம் என அழுகிறார்...

அதற்கு சுவாமியோ "உன் தொண்டு இன்னும் மீதம் இருந்ததால் என் பதம் அடைய உனக்கு இன்னும் காலம் இருந்ததால் காத்திருந்தேன்.. இப்போது காலம் கனிந்துவிட்டது வாரி.. என் பதம் அடைவாய் சீக்கிரம்" என்று சொல்லி மறைந்து விடுகிறார்....  அந்த நிறைதலில் வாரியார் சுவாமிகள் உறைய.. அவர் போட்டக் கூப்பாட்டில் வாரியார் அறையில் பக்தர் யாவரும் நிறைய அந்நாளே திருநாளாகிப் போயிருந்தது பிரசாந்தி நிலையத்தில்.. இந்த சம்பவம் நடந்ததோ காலையில்..  மாலை மீண்டும் சாயி தரிசனத்திற்கு வருகிறார் வாரியார் சுவாமிகள்... 


🌹 கிருபானந்த வாரியார் பாபாவைத் தரிசித்தபோது.... நடந்தது என்ன?


இந்த சாயி அனுபவமானது நேரடியாகக் கண்ட சுவாமி மாணவர்களில் ஒருவரது நேரடி சாட்சியப் பதிவின் தமிழாக்கம்...


அன்று மாலை பக்தர்கள் இறைவன் சத்யசாயி தரிசனத்திற்காக சாயி குல்வந்த் ஹாலில் அமர்ந்திருந்த சமயம். சுவாமி எந்நேரத்திலும் வரலாம் என்ற சூழ்நிலை.  திடீரென்றுஅந்த அமைதியான சூழலுக்கு குந்தகமாக சலசலப்பான வாக்குவாதங்கள் கேட்கத் தொடங்கின.

கிழக்குப் பிரசாந்தி கேட்டில் இருந்த சேவாதளத் தொண்டர் சுவாமி தரிசனத்திற்காக வந்த சிலரை அந்த கேட் வழியாக தரிசன ஹாலுக்குள் விட மறுத்தார். விவாதத்தில் ஒலித்த தமிழ்க் குரல்களைக் கேட்ட நானும் மற்றொரு மாணவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தோம்.அங்கே நாங்கள் கண்டதென்னவென்றால்...

திருமுருக கிருபாநந்ந வாரியார் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரது உதவியாளர் நாற்காலிக்குப்பின் நின்றிருந்தார். வாரியாரின் அருமை பெருமைகளை  நாங்கள் எடுத்துக் கூற சேவாதளத் தொண்டர் அவரை உள்ளே அனுமதித்தார். அவரை நாங்கள் மாணவர்களுக்கான பிரத்யேக அமருமிடத்திற்கு அழைத்துச் சென்று அமரவைத்தோம்.


நாற்காலியில் அமர்ந்தருந்த வாரியார் சுவாமி தரிசனத்திற்காக ஆவலுடன் காத்திருந்தார்.  தரிசனத்திற்கான இன்னிசை ஒலிக்க ஆரம்பித்தது. இறைவன் சத்ய சாயி யஜுர் மந்திரிலிருந்து புறப்பட்டு தரிசனப் பாதையில் நடந்து வேறெங்கும் செல்லாமல், நேராக கிருபாநந்த வாரியார் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரில் வந்து நின்றார். பக்திப் பரவசத்தில் இருந்த வாரியார், சுவாமி வந்ததை கவனிக்கவில்லை. நாங்கள் அதை எடுத்துக் கூறியதும் "முருகன் வந்தாச்சா.. எங்கே என் அப்பன்" என உணர்ச்சி வசப்பட்டார்.  சுவாமி தமது திருக் கரத்தால் வாரியாரின் கரத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு "முருகன் வந்திருக்கிறேன்" என்றார். பரவச நிலையை அடைந்த வாரியார்..


ஸ்வாமியின் திருமுடி , முகம், முகவாய், தோள்பட்டை, கரங்கள், மார்பு இவற்றை தொட்டு இறைவனின் அங்க லாவண்ய சௌந்தரத்தை மனமுருகி வர்ணித்து ஆனந்தப் பட்டார். 20 நிமிட நேரம் இவ்வாறு இறைவனுக்கும் அடியாருக்கும்  இடையே அன்புப் பரிமாற்றம் நடந்தது. பிறகு சுவாமி அதிக அளவில் விபூதியை சிருஷ்டித்து வாரியார் உடல் எங்கும் மழைபோல் வர்ஷித்தார். மேலும் தன் தெய்வீக அன்பின் வெளிப்பாடாக இனிப்பு மற்றும் விபூதி பிரசாதங்களை வழங்கி ஆசீர்வதித்தார். பிறகு சுவாமி  "வாரி திருப்தியா.. நான் இனி பிறருக்கு தரிசனம் தரப் போகலாமா?" என்று கேட்டு , வாரியாரின் தலை , முகம் மற்றும் கைகளைத் தொட்டு ஆசீர்வதித்தார்.


வாரியாரைக் கவனமுடன் அவர் தங்குமிடம் அழைத்துச் செல்லுமாறு எங்களிடம் கூறினார் சுவாமி. இறைவன் சத்யசாயியின்  நேர்த்தியான காவி நிற அங்கியில் அவர் சிருஷ்டித்த விபூதி துகள்கள் விழுந்து அங்கங்கே பிரகாசித்தன. அவரது மோகன முடியும் சிறிது கலைந்திருந்தது. இந்த கோலத்தில் ஒரு சுந்தரப் புன்னகையுடன் சுவாமி கூறினார்.. "இதுவே அன்பின் வெளிப்பாடான பக்தியின் தத்துவம்" என்றார் சுவாமி... பிறகுு அவரின் பார்வை அந்த சேவாதளத் தொண்டரின் மீது விழுந்த நிலையில் அத் தொண்டரும் தன் தவறை உணர்ந்தார். தரிசனம் முடிந்த நிலையில் வாரியார் ஸ்வாமிகளை
அவர் தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றோம்.


"முருகனே உங்களோடு இருக்கான்  கெட்டியாப் பிடிச்சுக்கோங்க"
என்று அப்போது அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட எங்களால் இன்னமும் மறக்க முடியவில்லை.... 

தமிழாக்கம் : திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 
சுவாமி வாரியாருக்கு முருகனாய்க் காட்சி கொடுத்ததை நாங்கள் எப்படி நம்புவது? என வாசிப்பவர்கள் நினைக்கலாம்..

வாரியார் பர்த்தியிலிருந்து புறப்பட்ட நாள் ஒரு சுவாமி பக்தை அங்கே நுழைகிறார்.. பக்தர் எங்கிலும் இதே பேச்சாய் இருக்கிறது..
விவரம் அறிந்து வியந்து பின்னாளில் டாக்டர் மிருணாளினி உதவியோடு வாரியார் சுவாமிகளை அவரது விட்டில் சந்தித்து அந்த அரிய லீலையை உறுதிப்படுத்துகிறார்.

அதை தனது  "ஞானியர் கண்ட ஞானக் கண்ணன்" புத்தகத்திலும் பதிவு செய்கிறார். (பக்கம்: 97)
அந்த பரம பக்தையின் பெயர் ஆர்.சரோஜினி சாய்ராம்... இந்த பழம்பெரும் பக்தை தற்சமயம் சென்னையில் வசித்துக் கொண்டிருக்கிறார்.  'ஸ்ரீ சத்ய சாயி யுகம் பிளாக்' சார்பாக இவர்களிடம் நாங்கள் நேரடியாக கேட்டு உறுதிப்படுத்திய பின்னரே  இதனை பதிவிடுகிறோம்... 


🌻 மத பேதமின்றி மனிதர்கள் நாம் பல இறை வடிவங்களை வணங்குகின்றோம்.. அதிலும் பல பேர் பல பேதங்களில் இவர் தான் கடவுள்... அவர் கடவுள் இல்லை என நிறைய வாதம் புரிவர் எந்த இறை அனுபவமுமே இல்லாமல்... எல்லா இறை வடிவங்களும் இறைவன் சத்ய சாயிடமே சங்கமிக்கிறது. அவரே எல்லா தெய்வங்களின் திரிவேணி சங்கமம். சுவாமியே பல்வேறு தெய்வரூபங்களை உள்வாங்கிய பரப்பிரம்ம ஸ்வரூபம்!!! 🌻 

2 கருத்துகள்: