தலைப்பு

ஞாயிறு, 2 மே, 2021

நான் சிவசக்தி ஸ்வரூபன்!


என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது. 

- ஸ்ரீ சத்ய சாயிபாபா


23-ஜுன்-1963 அன்று சுவாமி யாருக்கும் அந்தரங்க பேட்டி தரப்போவதில்லை என அறிவிக்குமாறு கூறினார். மாலை 6.30 மணி! திடீரென மயக்கமாக இருக்கிறதென்று கூறி கீழே விழுந்துவிட்டார். இடதுகாலும் விரலும் விறைத்துவிட்டன. இடது கைவிரல்கள் மூடிக்கொண்டன. முகம் கறுத்து, வாய் இடது பக்கம் இழுத்து விட்டது. இடது கண் பார்வை இழந்தது போல இருந்தது. நாடியின் ஓட்டம் 84-லிருந்து 100 வரை இருந்தது. பற்கள் கிட்டி உணர்வற்ற நிலையில் இருந்தார். யாருடைய நோயையோ பகவான் எடுத்துள்ளார் என்றும், “இறைவா, விரைவில் நோயை தீர்த்துக்கொள்ளுங்கள்” என்றும் பக்தர்கள் அவரை ப்ரார்த்தித்த வண்ணம் இருந்தனர். 

ஒரு பக்தர் மருத்துவர் ஒருவரை அழைத்து வந்தார். பாபா “கோமா” என்ற நிலையிலிருந்த போதிலும் மருத்துவர் ஊசியை எடுத்துவரும் சமயம் அவரது கை மருத்துவரின் கையை தள்ளிவிட்டது. இப்படியே மூன்று நாட்கள் கழிந்தன. செவ்வாய் கிழமை காலை உணர்வுகள் திரும்புவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. பாபா சைகையால் பேசினார். “இந் நோய் இன்னும் 12 நாள் நீடிக்கும். மருத்துவர்கள் என் தரிசனம் பெற்றுச்செல்லட்டும். நான் இந்த மூன்று நாட்களில் இருமுறை இருதய நோயால் பீடிக்கப்பட்டேன். வேறு யாராலும் இதை தாங்கி உயிர் வாழ முடியாது”, என்று கூறினார். எல்லோரும் அவரையே ப்ரார்த்தித்துக் கொண்டிருந்தனர். இப்படியே 14 நாட்கள் சென்றது. 

பிரசாந்தி நிலைய பிரார்த்தனை மண்டபம்

15வது நாள் (ஜூலை 06 - சனிக்கிழமை) குருபெளர்ணமி அன்று பிரார்த்தனை மண்டபத்தில் பாபா அனைவருக்கும் தரிசனம் தருவார் என அறிவிக்கச் சொன்னார் பாபா. அவரது சங்கல்பத்தின் படி பக்தர்கள் அவரை மாடியிலிருந்து கீழே கொண்டு வந்து அவரது ஆசனத்தில் அமர வைத்து சுற்றிலும்  தலையணைகளை வைத்தனர். அங்கே பாபா பதினைந்து நாள் தாடியுடன் கைகால்கள் இழுத்துக் கொண்டு காட்சியளித்தார். அதற்குப் பிறகு பக்தர்கள் அவரவர் இடத்தில் போய் நின்று கண்டனர். நகைப்புக்குரிய வண்ணம் ஏதாவது நடக்குமோ என்று பார்த்தவர்களுக்கு இந்த மாதிரி ஒரு நிகழ்வை அவர்கள் வாழ்நாளில் ஒருபோதும் பார்த்ததுமில்லை இனி பார்க்கப் போவதும் இல்லை என்ற வண்ணம் அற்புதம் அரங்கேறியது.


✍🏻 இந்த முக்கியமான சம்பவத்தை பாபாவின் வாழ்க்கை சரிதத்தை எழுதிய பேராசிரியர் கஸ்தூரி மேலும் விவரிக்கிறார்...


பாபா சைகையின் மூலம் ஒலிப்பெருக்கியை தன்னிடம் கொண்டு வருமாறு கூறினார்.  மிக மெதுவாக சன்னமான குரலில் மிகச் சிரமப்பட்டு வினுபிஸ்துண்டா என்று கேட்டார். ஆனால் உடன் இருந்த ஆரம்ப காலத்து பக்தர்கள் கூட புரிந்துகொள்ள முடியாத வகையில் அவர் பேசியது இருந்தது. அவர் என்ன பேசுகிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை.

பாபா மறுபடியும் அதே வார்த்தையை இருமுறைகள் சொன்னார். கடைசியில் யாரோ ஒருவர் அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு ஒலி பெருக்கியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 

பாபா கேட்டது உங்களால் நான் பேசுவதை கேட்க முடிகிறதா என்று. அவர் பேசுவதற்கே மிகவும் சிரமப்படுவது போல்தான் தோன்றியது. தனது செய்கையால் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வருமாறு கூறினார். அவர் அருந்துவதற்கு வெள்ளி டம்ப்ளரில் கிருஷ்ணப்பா என்ற பக்தர் குடிநீர் கொண்டு வந்தார்.  

ராஜா ரெட்டி என்பவர் அந்த டம்ளரை பாபாவின் வாயில் குடிப்பதற்கு வசதியாக வைத்தார். அவரது வலது கரம் டம்ப்ளர் அருகே சென்றது.  அதை பிடிக்க முயன்றார். தனது விரல்களை டம்ப்ளர் தண்ணீருக்குள் வைத்தார். விரல்கள் நனைந்தன... அந்த விரல்களிலிருந்து சில துளிகளை தன் நாவில் வைத்தார். பிறகு அந்த விரலில் இருந்த மீதி இருந்த தண்ணீரை தன் நெஞ்சருகில் தலையணை மேல்... செயலற்று இருந்த இடது கரத்தின் மேல் தெளித்தார். தனது நடுங்கும் விரல்களால் அதே போன்று இடது கால்கள் மீதும் தண்ணீர் தெளித்தார்.


பக்கவாதம் வந்த தனது இடது கையை வலது கையால் தடவி குணப்படுத்திக் கொண்டார். இப்போது தன் இரு கரங்களாலும் பக்கவாதம் வந்த இடது காலையும் தடவிக் கொடுத்தார். பாபா ஆசனத்திலுருந்து எழுந்தார்.  உடனே அவரின் இடப்புறம் வைத்திருந்த தலையணை கீழே விழுந்தது.

இப்போது பக்தர்கள் அனைவரும் அவரது தெய்வீகக் குரலை கேட்க முடிந்தது. பிரேம ஸ்வரூபலாரா (அன்பின் வடிவங்களை) என்று ஆரம்பித்து தனது வழக்கமான குரு பூர்ணிமா தெய்வீக உரையாற்றினார்.

என்னே ஒரு அற்புதம்...நமது பாபா ஆரோக்கியமாகவும் புனிதமான தனது தெய்வீகமான வடிவத்தில் மீண்டும் பக்தர்களுக்கு காட்சி தந்தார். 

அப்போது பாபா இவ்வாறு அறிவித்தார்!!! உங்கள் அனைவரிடமும் இது நாள் வரையில் ஒரு ரகசியத்தை நான் சொல்லாமல் இருந்தேன். அதற்குண்டான நேரம் இப்போது வந்து விட்டது. இதை அறிவிக்கவே இந்த புனித நாளை நான் தேர்ந்தெடுத்தேன்.


🌹நான் சிவசக்தி ஸ்வரூபன்:

சுவாமி மேலும் கூறினார்.... “கைலாயத்தில் இருக்கும் சக்தியை யாகத்திற்கு அதி தேவதையாக இருப்பதற்காக அழைக்க வந்த
பரத்வாஜ ரிஷியிடம், சக்தி எட்டு நாட்கள் காட்டிய பாராமுகத்தால் சிவனின் கோபத்துக்கு ஆளானால். சக்தியின் புரக்கணிப்பின் விளைவாக பரத்வாஜர் நினைவிழந்து விழுந்து விட்டார். உடலின் ஒரு பக்கம் செயலிழந்துவட்டது. சிவன் நீரைத்தெளித்து அவரை குணப்படுத்தினார். இன்று அவ்வாறே அந்நோயை சக்தி ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது. அவ்வாறே சக்தியின் (இடது பக்கம்) நோயை சிவனார் (வலப்பக்கம்) குணப்படுத்தியதை நீங்கள் பார்த்தீர்கள். பக்தனை காக்க நான் நோயை ஏற்றுக்கொண்டேன் என்பது நேர்முக காரணம். பாரத்வாஜருக்கு அளித்த வரமும் அதற்கு ஈடு செய்வதற்காக ஏற்றுக் கொண்ட துன்பமும் மறைமுக காரணம்” என்று சுவாமி கூறினார். 


பாரத்வாஜ முனிவரின் வேண்டுதலுக்கு இணங்கி சிவனும் சக்தியும் அவருக்களித்த வரத்தின் காரணமாக அந்த மாமுனிவர்  கோத்திரத்தில் நாங்கள் இருவரும் மும்முறை பாரத்வாஜ கோத்திரத்தில் அவதரிப்போம்.
சிவனாக இதே பாரத்வாஜ கோத்திரத்தில் சீரடி சாய்பாபாவாக அவதரித்தேன். இப்போது சிவ சக்தி ஸ்வரூபமாய் சத்யசாயியாக அவதரித்துள்ளேன்.

முழுமையான சக்தி ஸ்வரூபமாக எனது அடுத்த அவதாரம் மைசூர் பிராந்தியத்தில் கண்டிப்பாக நிகழும்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் சிலை போல அசைவற்று நின்றனர். மூச்சு விடவும் மறந்தனர். 

சுவாமி நிகழ்த்திய இந்த தெய்வீக நாடகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் தன் அவதாரத்தை பற்றிய ரகசியப் பின்னணியை பக்தர்களுக்கு தெரிவிக்கும் நாளாக அவர் தேர்ந்தெடுத்தது குரு பூர்ணிமா நாளைத் தான்.


ஒரு குரு என்பவர் சச்சிதானந்த நிலையை அடைந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஆனந்தத்தை வழங்குபவர்.
குரு என்பவர் காலம் நேரம் இடம் அனைத்தையும் கடந்தவர்.  குருவுக்கு மிஞ்சி எதுவுமே கிடையாது. எல்லையற்ற உண்மையை தனது உருவமாகக் கொண்டவர். அவர் பிறப்பு-இறப்பு என்ற சூழலை கடந்தவர். ஆரம்பம் முடிவு இரண்டுமே அற்றவர். அப்பேர்ப்பட்ட ஒரு குரு யாரென்றால் அவர் பரம்பொருள் ஒருவரே... 

குருவுக்கெல்லாம் குருவான ஜகத் குரு ஸ்ரீ சத்ய சாய்பாபா  தன்னுடைய அவதாரப் பின்னணியை அறிவிப்பதற்கு குரு பூர்ணிமாவை தேர்ந்தெடுத்ததில் வியப்பு எதுவுமில்லை.

தெய்வம் எட்டாக் கை தெய்வமாகவே இருந்தால் அதனை மானுடன் ஆதர்சமாகக் கொள்ள முடியாது. முற்றிலும் மானிடனாக வந்தாலும் நம்ப முடியாது. எனவே பெரும் சக்தியோடு தெய்வீகமும் காட்டி மானுடம் தன்னோடு சேர்ந்து பழகுவதற்கு மானிடமும் காட்டி அவர்களை செப்பனிட்டு சீர்படுத்த அவதாரமே தோன்றுகிறது.

சீரடியில் சிவ அவதாரம் இப்போது புட்டபர்த்தியில் சாயி சிவசக்தி அவதாரம்
இனி சக்தி அவதாரமாக பிரேம சாயிபாபா

மொழி பெயர்ப்பு : ரா. வரலட்சுமி, குரோம்பேட்டை

1 கருத்து:

  1. ஓம் ஷிரடி பாபாய நமஹ....ஓம் சத்யசாயிபாபாய நமஹ....ஓம் ப்ரேமசாயிபாபாய நமஹ....ஓம் த்ரிமூர்த்தயே நமஹ..🙏

    பதிலளிநீக்கு