தலைப்பு

புதன், 26 மே, 2021

போலீஸ் அதிகாரிகளையே தனது கருணையால் கைது செய்த கடவுள் சாயி!

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் சாயி நினைவுகள்..

சுவாமி சங்கல்பித்தால் நிகழாததும் நடந்தேறும்... வாராததும் கையில் வந்து குடியேறும் என்பதை உணர்த்தும் உன்னதப் பதிவு இதோ...

நமது பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் புனித சத் சரிதத்தை வில்லிசை மூலம் வழங்கி வருபவரும், அகில இந்திய வானொலி நிலையம் புதுச்சேரியில் இயக்குனராக பணியாற்றி வருபவருமான சுவாமியின் அருமை பக்தர் ஸ்ரீ R.சாய்ராம் அவர்கள் தனது ஆத்மார்த்த அனுபவங்கள் உரையாடலில் தனக்கு 8 ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்த பதவி உயர்வை சுவாமி 24 மணி நேரத்தில் பெற்றுத் தந்ததாக மகிழ்ந்து கூறியிருந்தார் ஆம் உண்மைதான்.

சுவாமி இதுபோல் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவியுள்ளார். ஆனால் அனைத்தும் பதிவிற்கு வருவதில்லை. சாய்ராம் அவர்களின் உரையாடலை கேட்ட போது இது போன்ற பழைய நிகழ்வு ஒன்று என் நினைவிற்கு வந்தது.... நான் சேலம் சமிதி கன்வீனர் ஆக இருந்தபோது ஒரு வியாழக்கிழமை பஜன் முடிந்தபின்பு , போலீஸ் துறையைச் சார்ந்த சாய் அன்பர் இன்ஸ்பெக்டர் கதிர்வேல்(late) அவர்களை பேச அழைத்து, அவரது சாய் அனுபவங்களை கூறுமாறு கேட்டுக் கொண்டேன். 


அவர் கூறியதாவது: 

சேலம் கொட்டவாடி சமிதி கன்வீனர் திரு. கார்த்திகேயன் அவர்கள் எனது நண்பர். அவர் மூலமாக நான் சுவாமியை தெரிந்து கொண்டேன் அவருக்கு என் நன்றி! 

கொட்டவாடி சமிதி கன்வீனர் திரு. கார்த்திகேயன் சாய்ராம் 

நான் என் கல்லூரி படிப்பை முடித்ததும். திரு விஜயகுமார், ஐபிஎஸ் அவர்களின் உந்துதலால் நான் போலீஸ் வேலையில் கான்ஸ்டபிளாக உடனடியாக பணிக்கு சேர்ந்தேன். சிறப்பாக நான் பணியாற்றி வந்த நிலையில் நாங்கள் இரண்டு batch (ஆயிரம் பேர்) SI பணிக்கு தேர்வு செய்யப்பட்டோம். முதல் batch ஐநூறு பேருக்கு SI ஆணை வழங்கப்பட்டது. எங்களது batchக்கு ஆர்டர் வழங்கும் நிலையில் ஆட்சி மாறியதால் சில காரணங்களுக்காக எங்களது பிரமோஷன் நிறுத்தப்பட்டது. சில ஆண்டுகள் ஓடி விட்டன. ஒருமுறை சுவாமி கொடைக்கானல் சென்று விட்டு பெங்களூர் திரும்பிக் கொண்டிருந்தார். நானும் சில போலீஸ்காரர்களும். சுவாமியின் பந்தோபஸ்து (பாதுகாப்பு) பணிக்கு சென்றிருந்தோம். ஓசூர் எல்லையுடன் திரும்பி வரவேண்டிய நாங்கள் அதிர்ஷ்டவசமாக பெங்களூர் வரை செல்ல வாய்ப்பு கிடைத்தது. 

மறுநாள் சுவாமி அன்புடன் எங்களுக்கு நேர்காணலும் தந்தார். எங்களுடன் Photographer என்ற முறையில் கார்த்திகேயனும் நண்பர் கிருஷ்ணமூர்த்தி (Salem DSC) அவர்களும் உடன் இருந்தனர். நேர்காணல் அறைக்கு வந்த சுவாமி எங்களை இன்னும் அருகில் வருமாறு அழைத்தார். சுவாமியை அருகில் பார்ப்பது எங்களுக்கு புதியது. எங்களில் பெரும்பாலானோருக்கு சுவாமியை தெரியாது. சுவாமி அன்புடன் எங்களைப் பார்த்து தமிழில் பங்காரு என்ன வேண்டும்? கேளுங்கள் என்றார். யாரும் பேசவில்லை. அப்போது சுவாமி ஒரு போலீஸ்காரரை பார்த்து இந்த சுவாமிக்கு பந்தோபஸ்து வேலைக்கு வந்திருக்கோம், இவர் நமக்கு என்ன கொடுப்பார்? என கூறினாயே இப்போது கேளு என்றார்! 


நாம் பேசியது இவருக்கு எப்படி தெரியும் என அந்த போலீஸ்காரர் பயந்து நடுங்கி விட்டார். சுவாமி அன்புடன் அவருக்கு ஒரு தங்க செயினை சிருஷ்டி செய்து கொடுத்தார். 

சற்று தைரியம் பெற்று ஒரு போலீஸ்காரர், சுவாமி எனக்கு எட்டு ஆண்டுகளாக குழந்தை இல்லை என்றார். சுவாமி விபூதி சிருஷ்டி செய்து கொடுத்து அடுத்த ஆண்டு குழந்தை பிறக்கும் கவலைபடாதே என்றார்! உடனே மற்றொரு போலீஸ்காரர் சுவாமி எனக்கும் குழந்தை இல்லை என்றார். இப்போதுதானே கல்யாணமாச்சு பொறுமையாக இரு என்றார் சுவாமி. எல்லோரும் சிரித்தனர். 


அப்போது சுவாமி என்னை பார்க்க நான் தயக்கத்துடன் எனக்கு SI ஆர்டர் நின்று போச்சு சுவாமி என்றேன். சுவாமி, கவலைப்படாதே, நான் இருக்கிறேன் உனக்கு ஆர்டர் வந்துகொண்டிருக்கிறது. ஜூன் மாதம் நீ SI ஆவாய் சந்தோஷமா என்றார். நான் மேலும் சுவாமி எனக்கு கல்யாணம் தள்ளி போயிட்டு இருக்கு என்றேன். சுவாமி கல்யாணமா நடக்கும். அட்வான்ஸ் கங்கிராஜுலேசன் என்று கூறி பக்கத்தில் அழைத்து ஒரு வைர மோதிரத்தை சிருஷ்டி செய்து கையை நீட்டு எனக்கூற நான் வலது கையை நீட்ட சுவாமியே இடது கை மோதிர விரலில் போட்டுவிட்டார். மோதிரம் விரலின் நடுப்பகுதியில் லேசாகத் தடுக்க சுவாமி தன் கையால் மோதிரத்தை தடவ அது லாவகமாக சென்று கச்சிதமாக விரலில் உட்கார்ந்து கொண்டது.

பின் எங்கள் அனைவரையும் ஆசிர்வதித்த பகவான், அனைவருக்கும் சபாரி பேண்ட், ஷர்ட் கொடுத்து தைத்துக் கொள்ள பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். இவை அனைத்தும் மே மாதம் நடந்தது. பெங்களூரிலிருந்து நான் வீட்டிற்கு வந்த மறுநாள் எனக்கு சுவாமி கூறியபடி SI வேலைக்கு ஜூன் மாதம் சேர வேண்டும் என ஆர்டர் தபாலில் வந்திருந்தது. ஆனந்த அதிர்ச்சியில் திகைத்து விட்டேன். சுவாமி வாழ்த்திய படி அதே ஆண்டு நவம்பரில் எனது திருமணமும் சிறப்பாக நடந்தது. SI பணியாணை தற்போதைக்கு வராது இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று பலரும் கூறி வந்த நிலையில் சுவாமியின் கருணையால் எனக்கு SI ப்ரோமோஷன் கிடைத்தது. எனக்கு வாழ்வு கொடுத்த பகவானுக்கு நன்றி! என்று கூறி சுவாமியின் படத்தை வணங்கி தனது உரையை நிறைவு செய்தார்.

மேலும் சுவாமி ஆசீர்வதித்த அதே நேரத்தில் சென்னையில் எங்கள் பைலை பார்த்த தலைமை அதிகாரி , உடனடியாக இவர்களுக்கு ப்ரோமோஷன் வழங்கவும் என கோப்பில் கையொப்பம் இட்டு உத்தரவிட்டுள்ளார் என்பது பின்னர் தெரியவந்தது என்றார். 

அந்தர்யாமியாகவும் கருணையே வடிவாகவும் எப்பேர்ப்பட்ட சுவாமி நமக்கு கிடைத்துள்ளார். நாயகனாக இருக்கும் அவரே சேவகனாக கீழே இறங்கி வந்து நமது தேவைகளை கேட்டுக்கேட்டு நிறைவேற்றுகிறார். 


இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம். ஜெய் சாய்ராம்!

தொகுத்தளித்தவர்: S. Ramesh, Ex-Convenor, Salem Samithi. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக