தலைப்பு

வியாழன், 27 மே, 2021

EP 1: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! - அகஸ்திய நாடி


5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... அகஸ்திய நாடி வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....


நாடிகள்:

பாரதத்தின் மிகப் பெரிய‌ பொக்கிஷம் நாடிகள். நாட்டின் கை நாடியாக இருப்பது நாடி. ரிஷிகள் ஓலைச்சுவடியில் எழுதி வைத்ததில் ஆன்மீக ரகசியங்கள் அதிகம். 

பிரம்ம ரகசியம் / பிரபஞ்ச‌ ரகசியம் யாவற்றையும் சிறு கீற்றாய் பாடல் வடிவில் எழுதி வைத்திருக்கிறார்கள். ரிஷிகளால் தான் இறைவனை மனிதனைக் காட்டிலும் ஆழமாக உணர முடிகின்றன. அந்த பேருணர்தலின் வெளிப்பாடே இந்த நாடிகள். எந்த நாளில்...எந்த இடத்தில் எந்த நபரால் கேட்கப்படும்.. யாரைப் பற்றியது.. அவர்களின் வாழ்வில் நிகழ்வது வரை ரிஷிகள் எழுதி வைத்திருப்பார்கள்.. சுவாரஸ்யம் மிகுந்தது நாடி வாசிப்பும்.. நாடி சிரவனமும்...! 


சுவாமியும் நாடிகளும்:

சத்ய சாயி இறைவன் என்பதற்கான அத்தாட்சியாக விளங்குவது மகான்களின் தியான அனுபவங்கள்/ பக்தர்களின் வாழ்வியல் அனுபவங்கள்... இவற்றோடு சேர்ந்து ரிஷிகளின் நாடிப் பதிவுகளும் நிறைந்து வழிகின்றன... நிறைவேற வேண்டிய ஆசைகள் எதுவுமில்லை எனும் படியால் ரிஷிகளுக்கு பொய்களை எழுத வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் வருங்காலங்களை தியானத்தில் கண்டதை ... உணர்ந்ததை பாடல் வழியே வெளிப்படுத்தியதை நாடிகள் என அழைக்கிறோம். நாடிப் போய் வாசிப்பைக் கேட்பதால் அதன் பெயர் நாடி.. உடம்பில் 72,000 நாடிகள் இருக்கின்றன.. நரம்புகள் சந்திக்கும் இடம் நாடி... கை மணிக்கட்டில் துடிப்பதை நாடித்துடிப்பு என்போம் .. அப்படி முக்கியமானது ஓலைச்சுவடி நாடியும்... 

சில மனிதர்களைப் பற்றியே நாடி இருக்கும் போது இறைவனைப் பற்றி இருக்காதா என்ன? பெரும்பாலும் நாடிகள் வைத்தீஸ்வரன் கோவில் சாலைகளில் வாசிக்கப்படுகின்றன.. சுவாமியைப் பற்றிய பேருண்மைகளை நாடிகள் சுமக்கின்றன.. அவ்வகையில் எந்தந்த ரிஷிகள் ஓலைச்சுவடிகளில் சுவாமியை  நாடிக் குறிப்புகளாய் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.. ஒவ்வொரு நாடிகளிலும் ஏராளமான பாடல்கள் சுவாமியைப் பற்றி இருக்கின்றன.. அதில் முக்கியமான/ சுவாரஸ்யமான பாடல் வரிகளை மட்டும் பார்ப்போம்... 


அகஸ்திய நாடி:

அகஸ்தியர் மாபெரும் முனிவர். தமிழ் ரிஷி. குறுமுனி / கும்ப முனி என்றும் இவரை அழைப்போம். யோகக் கடலின் தரை தொட்டவர். சிவனையும் சக்தியையும் தனது தாய் தந்தையராகக் கொண்டவர். அப்பேர்ப்பட்ட முனிவர் சிவசக்தி அம்சமான இறைவன் சத்ய சாயியை எவ்வாறு விவரிக்கிறார்.. விளக்குகிறார்.. இதோ...

அருள் ஞான தத்துவத்தின் பொருளே நாதா என்று தான் ஆரம்பிக்கிறார் அகத்தியர்.

ஆனந்தக் கூத்திட்ட நடன ஈசா என சுவாமியை சிவனாக வர்ணித்து...

பரம்பொருளாய் பக்தி கொண்டோர்க்கு... என பரம்பொருளே இறைவன் சத்ய சாயி என்கிறார். 

சுவாமியின் சிவசக்தி அம்சத்தை தனக்கே உரிய பாணியில் எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்..


ஈசா உனை ஈசா இணை பாகம் ஒரு உடலே சக்தி

இது தான் அகத்தியரின் தமிழ் வலிமை.. சுவாமி தான் சிவசக்தி என்பதை ஈசா உனை ஈசா இணை என்கிறார் ... அந்த இணைக்கு சுவாமிக்கு சுவாமியே இணை என்பதும்.. சுவாமியின் சரிபாதி இணை சக்தி என்பதும் தெளிவுற புலனாகிறது.

இக்கலியில் யான் அறியா சூட்சுமங்கள்

நேசமது கொண்ட நிலை கேட்க வந்தேன்

என்று தனக்கும் தெரியா ரகசிய சூட்சுமங்களை பரம்பொருளான சத்யசாயியிடம் கேட்டறிகிறேன் என்கிறார்‌ அகத்தியர்.

ஆருடப் பலன் சித்தி சுத்த செகமாளும் சத்யனே என சுவாமியின் நாமத்தைக் கொண்டாடி நாடி பதிக்கிறார் அகத்தியர்.

இதில் சித்தி என்பது மனம்.. தூய மனதால் இந்த உலகத்தையே ஆள்பவர் சுவாமி.

சுவாமியின் உருவத்தை எப்படி விவரிக்கிறார் பாருங்கள்...

சுத்த செயல் பாபா நாமம் கொண்ட மைந்தன்

சுத்த மனத்தால் சுத்த செயல் புரியும் பரம்பொருளே பாபா எனும் நாமம் தாங்கி மைந்தன் எனும் இளவயது நிலையில் அருள்பாலிக்கிறார் சுவாமி என்கிறார் அகத்திய முனி. சுவாமியின் வயதறியா தோற்றம் இங்கே சர்வ சாட்சியாய் கண்முன்  நிறைகிறது.

சுவாமி நிலாவில் காட்சி தந்ததை இவ்வாறு வர்ணிக்கிறார் அகத்தியர்

கூட ஒரு முழுமதி நாள் உருவம் மாறா

காட்சி தர மெய் உடலே பலர் காண்பர்

முழுமதி என்பது பௌர்ணமியை குறிக்கிறது. 

பொதுவாக ஒவ்வொரு நாடி வாசிப்புக்கும் என்ன பலன் என்பதையும் ரிஷிகள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.. அப்படி

பலன் கேட்க வந்தவனோ சத்யன் ஆசி

நல்வாக்கு உரைத்தபடி அடைவான் திண்ணம் என்கிறார்.. 

அகத்திய நாடியின் கூடுதல் சிறப்பு சுவாமி தியானத்தில் தோன்றி அருள்பாலிப்பார் என்பதை ...


பக்தனாய் சீடர் பல தடத்தில் தடம் நாடி

அருளாசி இறையே சொல்ல

தனித்தொரு தியானத்தில் உருவக்காட்சி

திடமாக பலர் காண திண்ணம் திண்ணம்

மிகவும் ஆச்சர்யமாக இருந்தது இதை வாசிக்கையில்... சுவாமி தனது பக்தர்களின் தியானத்தில் வந்து அருள் பாலிப்பதை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே தனது அகக் காட்சியில் அகத்தியர் தரிசித்திருக்கிறார் என்றால் அகத்தியரின் மகிமையை யார் தான் அளக்க இயலும்!!!

(அகஸ்திய நாடி பார்க்கப்பட்ட இடம் : வைத்தீஸ்வரன் கோவில்... பார்த்த நாள் : 25/05/2011)

ஒவ்வொரு ரிஷிகளும் ஒரே பரம்பொருளான இறைவன் சத்ய சாயியை  போற்றிப் புகழ ஒரே வித இறை அம்சத்தையே பாடல்கள் வடிவில் பல்வேறு விதங்களில் வழங்கி இருக்கிறார்கள்..

யோகம் தான் நாடி வாசிப்பதும்.. நாடி கேட்பதும்.. 

யோகம் சொல்லும் நாடிகள் நன்மை அளிக்கின்றன...

ஆனால் காகம் சொல்லும் நாடிகளைக் கேட்டிருக்கிறோமா??

அடுத்த பகுதியில் 

நாடியின் துடிப்புகள் தொடரும்... 


   பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக