தலைப்பு

செவ்வாய், 11 மே, 2021

கொரோனா Vs சாயி சரணா


தொன்று தொட்டு வந்த நம் பாரத வாழ்வியல் முறை.. இப்போது தொற்றி உள்ள கொரோனா.. சுவாமி வழியில் நாம் அதை எதிர்த்து எழுப்ப வேண்டிய தடுப்புச் சுவர் ... மேலும் ஆத்ம ஆரோக்கிய விசாரணை பற்றியதான ஒரு ஆழமான விழிப்புணர்வு பதிவு.. 

உலகம் ஒரு விசித்திரமான மேஜிக் மேடை..
அதை விட அதி விசித்திரமானது இயற்கை...
மனிதர்கள் இந்த உலகத்தை நிஜம் என்று நினைத்து விடுகின்றனர்.

அந்த நினைப்பின் நீட்சியே தங்களை நிரந்தரமானவர்கள் எனவும் நினைக்க வைக்கிறது.

எல்லா மனிதர்களுக்கும் தாங்கள் நிரந்தரமானவர்கள் என்ற உணர்வு உண்டு..

அது எங்கிருந்து வருவது என்பது மட்டும் அவர்களுக்கு தெளிவாகத் தெரிவதில்லை.

அது மனதிலிருந்து வருவதல்ல... ஆன்ம அதிர்வலைகளின் பிரதிபலிப்பே அந்த "நித்யத்துவம்" என்ற உணர்வு...

ஒரு காலத்தில் பாரதவாசிகள் பரபரப்பானவர்களே அல்லர்.

இரண்டு மந்திரங்கள் அவர்களின் அதாவது நமது முன்னோர்களின் தினசரி வழிபாட்டு நேரங்களில் இடம் பெற்றன..

ஒன்று : லோகா சமஸ்தா சுகினோ பவந்து
இரண்டாவது : சர்வே ஜனா சுகினோ பவந்து

இதையே தமிழில்
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே" என தாயுமானவ சுவாமிகள் முன் வைக்கிறார்.

இது தான் பாரதவாசிகளின் சுவாசம்.
பாரத வாசிகளின் ரத்தம்.
பாரத வாசிகளின் அடிப்படை குணம்.
பாரத வாசிகளின் பிறவி புத்தி.

நீங்கள் எந்த நோயை எடுத்துக் கொண்டாலும் பாரதத்தில் தோன்றியதாக இருக்காது.

நம் முன்னோர்களுக்கு எந்த வியாதியும் இல்லை...

இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தார்கள்.
சூரிய நமஸ்காரம் செய்தார்கள்.
பிராணாயாமம்.. யோகம் பழகினார்கள்.

நான்கு தொழில் வர்ணத்தவரும் பேதமின்றி அவரவர்க்கே உரித்தான வழிபாடுகள் புரிந்தனர்.

தனக்கென தனிப்பட்ட தனித்துவமான நேரங்களை தினசரி ஒதுக்கினர்.
வழிபாடு செய்தனர்.

அவர்களும் கடல் கடந்து வாணிபம் செய்தனர்.

புத்தர் காலத்திலேயே சீன தேசத்து "பட்டுப் பாதை" இருந்தன

ஆனால் இப்போது போல் இத்தனை பரபரப்போ... மன உளைச்சலோ நம் முன்னோர்களுக்கு இருந்ததே இல்லை.

"தனியா வந்தோம்.. தனியாத் தான் போகப்போறோம்" என்ற அடிப்படை அறிவு அந்தக் காலத்தில் அனைவருக்குமே இருந்தது.

எளிமை இருந்தது.

அவர்கள் வாழ்ந்தார்கள்.
நாமோ இன்று வாழ்வதாக காட்டிக் கொள்கிறோம்.

அடுத்தவர்களிடம் காட்டிக் கொள்வதற்கே நாம் அதிகமாய் செலவு செய்கிறோம்.

பொதுவாக நம் தாயின் அருமை நமக்கு தெரியாதது போலவே
பாரத பண்பாட்டின்.. ஒழுக்கத்தின்
.. வாழ்க்கை முறையின் அருமை தெரியாமல் வளர்க்கப்பட்டது நமது துரதிர்ஷ்டமே.

நமது சுவாமி பாலவிகாஸ் என்ற செயல்முறை ஞான போதிப்பு வகுப்புகளை மட்டும் நிகழ்த்திருக்காவிட்டால் இன்னும் நம் மூளை செயற்கைத்தனத்தால் செல்லரித்தே போயிருக்கும்.


மனிதன் சரியாக இருக்கும் மட்டும் கடவுள் அவன் இதயத்துக்குள்ளேயே இருந்துவிடுகிறார்.

மனிதன் என்று தடம் புரள்கிறானோ.. கடவுள் மண்ணில் இறங்கி வரவேண்டி இருக்கிறது.

நமது சுவாமி எப்போதும் பாரதப் பண்பாட்டையோ அதன் கலாச்சாரத்தையோ விட்டுக் கொடுத்ததே இல்லை.

சாப்பாட்டை சாக்கடையில் கொட்டினால் சமைத்தவளுக்குத் தான் வலி எடுக்கும் என்பது போல்..

மிக ஆழமாய் அர்த்தமாய் உலகம் முழுதும் பரவி இருந்த பாரத கலாச்சாரம் சிறுகச் சிறுக மலிந்து போனதை.. நலிந்து போனதைக் குறித்து இறைவன் சத்ய சாயி வேதனைப்படாமலா இருப்பார்?

அந்தக் கருணையையே கண் கலங்கச் செய்யும் படிதான் நம் வாழ்க்கை முறை இருக்கிறது..

பேதங்கள் (பிரிவினைகள்) .. துவேஷங்கள் (வெறுப்பு)... வஞ்சனை ... சதி... கட்டுகளற்ற காமம்... கொடிய பகை..
எல்லாவற்றையும் மிஞ்சிய நடிப்பு.. போலித்தனம்.. பிறரைப் பற்றி தேவையில்லாத கற்பனை...
இவை எல்லாம் எவ்வளவு கொடிய வைரஸ் என்பதை உணராமல் அதை தினந்தோறும் வளர்க்கிறோம்..

மனிதப் பிறவி எவ்வளவு மேன்மையான பிறவி.
நாம் அதை எவ்வளவு அலட்சியமாக.. மிக மிகக் கேவலமாக வாழ்கிறோம் என்பதை நினைத்துப் பார்ப்பதே இல்லை...

நாம் கடவுளிடமே நடிப்பவர்கள் ..

கடவுளையும் நம் வேண்டுதலுக்கு வளைக்கப் பார்க்கும் சுயநலவாதிகள்...

சந்தர்ப்பம் கிடைத்தால் கடவுளையே விழுங்கத் துடிக்கும் ஆணவக்காரர்கள்...

கருணையே வடிவான சுவாமி எத்தனையோ முறை எவ்வளவோ முறை சத்தியம் பகர்ந்து வந்தபோதும் அதை எல்லாம் அலட்சியப்படுத்தி எதையும் கடைப்பிடிக்காமல் இருக்கும் முட்டாள்கள்.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார் வள்ளலார்..

அப்படிப் பார்த்தால் நாம் நம்முடனேயே கலவாமை கொள்ள வேண்டும்...

இப்படியாக
தேசம் என்றிருந்தது மோசம் என்ற நம்மால் மட்டுமே நாசம் என்றானது .

ஏதோ "கொரோனா" பீடித்திருக்கிறது என பயப்படுகிறோம்... நாமே நடமாடும் கொரோனாக்கள் என்பதை உணராமல்...

"90 சதவிகிதம் நோய்கள் மனம் சார்ந்தவை" என இறைவன் சத்ய சாயி மொழிகிறார்..


நம் மனதில் ஒரு வைரஸ் கிடங்கே இருக்கிறது...

நாம் பெரிய சந்தேகப்பிராணிகள்..
அப்பிராணிகள் போல நடிப்போம்...

கடவுள் சத்ய சாயி எத்தனையோ பக்தர்க்கு எவ்வளவோ மகிமைகள் புரிந்தும்..
அந்த மகிமைகள் அனுபவித்த பலருக்கு கொரோனா தொற்றவில்லை என்றாலும் கொரோனா பயம் தொற்றி இருக்கிறதா இல்லையா? ...
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்...

பிரகலாதனாய் நாம் காட்டிக் கொண்டது போதும்...

பூரண சரணாகதியை நாம் இன்னும் சுவாமியிடம் செலுத்தவில்லை.

பொய் சொல்ல வேண்டாம்..

எத்தனையோ முறை சுவாமி நம்மைக் காப்பாற்றி இருக்கிறார் .. அதை உணர்த்தியும் இருக்கிறார்.

அப்படி இருந்தும் நமக்கு நன்றியே இல்லை...
நெஞ்சைத் தொட்டுக் கேளுங்கள்..

சுவாமி நமக்கு வழங்கிய நவவித கோட்பாடுகளில் எத்தனைக் கோட்பாடுகளை கடைபிடிக்கிறோம்... ?


கூட்டிப் பார்த்தால் (ரெண்டோ.. மூன்றோ) தேரவே மாட்டோம்..

கடைபிடிப்பதும் இல்லை.
கடவுள் சத்ய சாயியின் கருணை மட்டும் வேண்டும்..
எவ்வளவு பேராசைக்காரர்கள் நாம்..

வேலையே செய்யாமல் ஊதியம் மட்டும் பெறுவது எவ்வளவு பெரிய அறமற்ற செயல்..

வேலையே செய்யாமல் ஊதியம் கேட்பது நியாயமா? கொழுப்பல்லவா...?

ஆனாலும் இறைவன் சத்ய சாயி நம் மீது கருணை காட்டுகிறார்..

இருந்தும் இன்னமும் பயப்படுகிறோம்.

உண்மையில் நாம் எந்த வகைப் பிறவிகள்? பிராணிகள்? ஜந்துக்கள்?

நாளை வேறொரு வைரஸ் வரும்.. அதற்கும் பயப்படுவோம்.

என்ன இவன்.. கொரோனாவுக்கு ஆறுதல் சொல்வானென்றால்... சகட்டு போக்கில் சொல்கிறான் என வாசிப்பவர்கள் நினைக்கலாம்.

சகட்டுப் போக்கில் சொல்லவில்லை.
சத்தியம் சொல்கிறோம்.

இறைவன் சத்ய சாயி அனுமதியோடே.. அவரின் சங்கல்பப்படியே அனைத்தும் மிக மிகச் சரியாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்
சத்ய சாயி பரிபூரணமான இறைவன் என்பது போலவே
நீங்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் நிகழ்ந்தவை / நிகழ்பவை/ இனி நிகழப்போகிறவை எல்லாம் சுவாமியின் சங்கல்பமே...

உண்மையில் இது ஒரு இக்கட்டான சூழ்நிலை தான்..
நமக்கு மிக மிகத் தேவையான சூழ்நிலை தான்.

இந்தத் தனிமைப்படல்...

தனிமைப்படுதல் என்பது தூய்மைப்படுதல் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சுவாமி நமக்கு உள்ளே தான் பேரமைதி இருக்கிறது என்கிறார்..

எத்தனைப் பேர் உள் நோக்கி பயணித்தோம்...? பயணிக்கிறோம்?

காமம் , கிரோதம், மோகம், லோபம், மதமாச்சர்யத்தை விட்டு சுத்தப்பட வேண்டிய நேரம் இது...

Social Distancing என்கின்றனர்.

சித்தர்கள் அதைத் தான் கடைப்பிடித்தனர்.

மனிதர்கள் வைரஸ் என்று அவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது..

சில திகம்பர சாதுக்கள் மனிதர்கள் முன் வரவே அஞ்சுவார்கள்.

கோப்பெருஞ்சோழனும்.. பிசிராந்தையாரும் தனித்திருந்தனர்.

அவர்கள் இருந்தது உயிர் நீக்க.. நாம் இருக்கப் போவது புத்துயிர் பெற...

இந்த வைரஸ் நீர்த்துளியால் சிறகுக் கட்டிக் கொள்கிறது...

தும்மினாலும் .. இருமினாலும் தொற்றிக் கொள்கிறது...

கொஞ்சமா .. நஞ்சமா நாம் இயற்கையைக் கொன்று குவித்தது...?
இயற்கைக்கு நாம் எத்தனை நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறோம்..

எத்தனை மரங்களைக் கொன்றிருக்கிறோம்..

சுவாமி பக்தர்களில் அசைவ பட்சிகள் யாருமில்லை...
என்றாலும் ஒட்டுமொத்த உலகத்தவர் எத்தனை உயிரை வதை செய்திருக்கின்றனர்?

கோபத்தில் பேசிய வார்த்தையும் .. தீவிரவாதி கைகளில் வைத்திருக்கிற துப்பாக்கியும் ஒன்றுதான்.

எனவே எந்த பாரபட்சமும் இல்லாமல் இயற்கை நம் மேல் தொடுத்த போர் இது..



சுவாமி அனுமதி இல்லாமலா இவை எல்லாம் நிகழ்கிறது என இன்னமும் நினைக்கிறீர்கள்?

உலக மனித இனமே உணர வேண்டிய காலகட்டம் இது...

மனித மனம் திருந்த வேண்டிய காலகட்டம் இது.

இந்த 14 நாட்கள் கூட இன்னும் நீடிக்கலாம்..

இந்த வைரஸ் க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை...

மனிதர்களின் பார்வையில் கொரோனா ஒரு வைரஸ்..

ஒட்டு மொத்த இயற்கையின் பார்வையில் மனிதன் தான் வைரஸ்...

உண்மை கசக்கத்தான் செய்யும்.

சத்திய வரிகள் விழிப்படைய வைக்க வேண்டுமே தவிர பிறரின் எதிர்ப்பார்ப்புக்கு தீனி போட நினைப்பது இன்னும் அறியாமையில் நம்மை ஆட்படுத்திவிடும்.

நாம் திருந்தியே ஆக வேண்டும் ..
நம் அகந்தை கரைந்து காணாமல் போக வேண்டும்.
நம் சுயநலம் சுக்கல் நூறாய் உடைபட வேண்டும்.

சுவாமி பரீட்சை வைத்துத் தான் பாடம் நடத்துவார்..

இது நமக்கு தரப்பட்ட பலப் பரீட்சை..

14 நாட்களும் தனிமைப்படுங்கள்.

உறவே ஆயினும் உடல் அளவில் தூரப்படுங்கள்.


தனக்குள் தானாய் நிறைந்திருப்பது சூடாக ஒரு கப் காஃபி அருந்துவதை விட சுகம்..

தியானித்திருப்பது மோகித்திருப்பதை விட ஆன்ம லாபம்...

உயிராற்றலை அதிகப்படுத்துவோம்.

சுவாமியின் நவவித கோட்பாடுகளைப் பழக்கப்படுத்துவோம்.

சுவாமி விபூதி.. சுவாமி காயத்ரி.. சுவாமி சஹஸ்ரநாமம்.. சுவாமி இலக்கியங்கள்.. சுவாமி அனுபவங்கள் (யு டியூப் காணொளிகள்).. சத்ய சாயி யுகம் பிளாக்..
சுவாமி பஜனை ..‌ ஜோதிர் தியானம்...
இதற்கே 24மணி நேரம் போதாது.

நாம் வைத்திருக்கும் சுவாமி படம் வெறும் படமல்ல...
அது சுவாமியே..

இந்தத் தனிமைப்படல் அதை எல்லாம் இனி உங்களுக்கு உணர்த்தும்.

சுவாமி விபூதியை ஒரு சிட்டிகை எடுத்து வாயில் போட்டு சுவாமி எனை தூய்மைப்படுத்து என வேண்டுவோம்..

வேறு வழியே இல்லை..
வேறு தப்பித்தல் இல்லை.
வேறு மாற்றுவழி இல்லை.

பயந்து செத்தாலும் மீண்டும் இதே கொரோனா வைரஸ் மண்ணில் தான் பிறந்தாக வேண்டும்...

இணையதளத்தில் நாம் இணைந்திருப்பதால் கொரோனா பரவுவதை விட அதைப் பற்றிய செய்திகளும்.. சாவு எண்ணிக்கைகளுமே வேகமாய்ப் பரவும்..

பீதியடையாதீர்கள்..

சுவாமி பாதம் எனும் நீதியை அடைந்து..

நமக்குள் நாமாய் காலங்கள் கழிப்போம்...

மனிதன் நிலாவைப் போல..
நிலாவுக்கென சுய ஒளி இல்லை சூரிய ஒளியையே கிரகித்து மண்ணில் வெளிச்சம் பாய்ச்சுகிறது..

மனிதனோ இறைவன் சத்ய சாயி இடமிருந்து ஆற்றல் கிரகித்து வாழ்கிறான்...

எப்போது அந்த ஆற்றலை சுயநலமாய்.. ஆணவமாய்.. முட்டாள்தனமாய் தவறாகப் பயன்படுத்துகிறானோ அப்போது இயற்கை இத்தகைய கடும் போர்களை அவனுக்கு எதிராய் நடத்துகிறது.

இது  மனிதன் எனும் நிலாவுக்கு பிடிக்கப்பட்ட கிரகணம்..

கிரகண காலத்தில் பொதுவாக நம் முன்னோர்கள் என்ன செய்வார்களோ அதைச் செய்ய வேண்டும்..

இந்த உலகமே நம் குடும்பம்.
சுவாமியே இந்த குடும்பத்தின் ஒரே தலைவன்.

சுவாமி எங்களைச் சுத்தப்படுத்து என வேண்ட மனம் வராத யாருக்கும்..
சுவாமி எங்களைக் காப்பாற்று என வேண்டிக் கொள்ள தார்மீகமாய்க் கூட உரிமையோ .. தகுதியோ இல்லை..

இந்தத் தனிமைப்படுதல் என்பது லஷ்மண ரேகை என நம் பாரதப் பிரதமர் சொன்னது உண்மைதான்..

லஷ்மண ரேகை மட்டும் வரைந்தால் போதாது நமக்குள் இருக்கும் சத்ய சாயி ராமனை வைத்து தீய குணங்கள் எனும் இராவணாதி சேனைகளை துவம்சம் செய்வோம்...

சாயி தியான பினா நிவாரண நஹி

 பக்தியுடன்
வைரபாரதி ✍🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக