தலைப்பு

திங்கள், 31 மே, 2021

உலகப் புகழ்பெற்ற சரோட் கலைஞருக்கு நேர்ந்த ஸ்ரீசத்யசாயி நேர்காணல் அனுபவம்!

Sarod maestro Ustad Amjad Ali Khan 

உள்ளூர் ஜீவன் முதல் உலகப் புகழ் மனிதர் வரை யாவரையும் சமமாக பாவித்து கருணை காட்டுபவர் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி. அப்பேர்ப்பட்ட இறைவன் உலகப் புகழடைந்த சரோட் இசைக்கலைஞரை எவ்வாறு அரவணைத்து ஆசீர்வதித்தார் என்பதை விளக்கும் அற்புத அனுபவம் இதோ...


இசை இறைவனோடு இணைந்தது. இசையால் இறைவனை அடைவது சுலபமானது. ஆகவே தான் இறைவன் ஸ்ரீ சத்ய சாயியும் பஜன் மலர்ச்சியை நிகழ்த்தினார். இறைவனுக்கும் மனித இதயத்திற்கும் பாலமாக பஜன் திகழ்கிறது. பல இசைக் கலைஞர்கள் இறைவன் ஸ்ரீ சத்யசாயியை உணர்ந்திருக்கிறார்கள். அதில் வாத்திய கலைஞர்களும்.. பாடகர்களும் அடங்குவர். 

பல்வேறு விதமான இசை நிகழ்வுகளை சுவாமி முன் அரங்கேற்றி இருக்கிறார்கள் அவர்கள். 


அந்த வரிசையில் சரோட் நரம்பிசைக் கருவியில் உலகப் புகழடைந்தவர் உஸ்தாத் அம்ஜத் அலிகான் சாஹேப்‌. க்யா பாத் ஹை.. வாரே வா போன்ற சிலிர்க்கும் மொழியையே இவர் இசைக்கும் போது பலரும் சொல்வர். இசையை ரசிப்பவர் எளிதாக இறைமையில் தோய முடிகிறது. 1976ல் ஒருமுறை சரோட் இசைக்கலைஞரான உஸ்தாத் அவர்கள் இசை நிகழ்ச்சிக்காக பெங்களூர் சென்று அவருடைய நண்பரான போலீஸ் கமிஷனர் ரஹீம் நிஜாமுதீனை சந்திக்கச் செல்கிறார். அப்போது அவரோ புட்டபர்த்திக்கு சென்று கொண்டிருக்கிறார். அவரோடு இணைந்து இவரும் புட்டபர்த்திக்கு வருகிறார். 
சுவாமி ஒருவரை தன் பக்கம் அழைத்துக் கொள்ள சங்கல்பித்துவிட்டால் எப்படியும் அழைத்துக் கொள்வார்.. யார் மூலமாகவும் அழைத்துக் கொள்வார்...இருவரும் புட்டபர்த்தி வருகிறார்கள். சுவாமி அந்த நரம்பிசை வல்லுநரான உஸ்தாத் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கிறார். முதலில் அவரும் மற்றவரோடு வந்து மந்திரில் அமர்ந்து கொள்கிறார். புன்முறுவலோடு வந்த சுவாமி அனைவரையும் உற்று நோக்குகிறார். நாற்காலியில் பூவாய் அமர்ந்து கொள்கிறார். அப்போது தனது வலது கை சூழல சூடான லட்டுவை உருவாக்கி எடுக்கிறார். அதிலிருந்து நெய் ஒழுகுகிறது.. உஸ்தாத் பக்கம் திரும்பிய சுவாமி இது சுத்தமான நெய்யால் உருவாக்கப்பட்டது" என்கிறார். தனக்கு நெய்யினால் செய்த இனிப்புகள் பிடிக்கும் என இவருக்கு எப்படி தெரியும் என்று அந்த இசைக்கலைஞர் ஆச்சர்யப்படுகிறார். அவர் வாசிக்கும் சரோட் இசைக்கருவியே அவரின் இதயமாகி மெல்லிய பரவச இசையை அவருக்குள் வாசிப்பது போல் ஓர் இறைப் பரவசம் ஏற்படுகிறது. 
சுவாமி இவரை தனியாக நேர்காணல் அறைக்கு அழைத்துப் போகிறார். உஸ்தாத் அவர்களோ பலவித எண்ண சூழலில் இருக்கிறார். உள்ளே இருக்கும் அறைக்கு போனவுடன் சுவாமி "கவலைப்படாதே ... அந்த அஸ்ஸாமிய பெண்ணை நீ திருமணம் செய்து கொள் .. அவள் உனக்கு ஏற்றவள்" என்கிறார். இதை கேட்ட உஸ்தாத் அவர்களுக்கு ஆச்சர்யம் தாளவில்லை.. சுவாமி பகிர்ந்த விஷயம் இதுவரை ஒருவருக்குமே அவர் சொல்லாதது.. எவருமே அறியாதது.. இப்படி இருக்க எப்படி தன் மனதின் அடியாழத்தில் உள்ளதை இப்படி துல்லியமாகச் சொல்கிறார் எனவும்.. நிகழப்போவதையும் ஆசீர்வதித்து விட்டார் எனவும் நன்றிப் பெருக்கால் உஸ்தாத் கண் கலங்குகிறார்.. 

Sarod maestro Ustad Amjad Ali Khan with wife Subhalakshmi Barua

அப்போது அவரின் நாசியானது சரோட் இசைக்கருவியாக மாறி சுவாசத்தை இசையாக நேர்காணல் அறை முழுவதும் கசிந்து கொண்டிருந்தது...

ஆதாரம் : ஸ்ரீ சத்ய சாயி கல்பத்ருவம் / ஆசிரியர்: ஸ்ரீ பிரஷாந்த் பிரபாகர் பாலேகர் / பக்கம் : 39இறைவன் ஸ்ரீ சத்ய சாயி அறியாதது ஏதுமில்லை... ஆகவே தான் அவர் அந்தர்யாமி.. அவர் பரப்பிரம்மமே எனும்படியால் அவரே சர்வாந்தர்யாமியாக நீக்கமற நிறைந்திருக்கிறார்... அவர் சங்கல்பத்தால் மட்டுமே ஒவ்வொன்றும் இயங்குகிறது..ஒவ்வொன்றும் துவங்குகிறது.. ஒவ்வொன்றும் விரைகிறது..‌ ஒவ்வொன்றும் நிறைகிறது... இப்படி இருக்க மாயக் கவலைகள் விட்டு அவரின் தூய சரணங்களைப் பற்றி வாழ்வை கடைத்தேற்றுவது மட்டுமே மெய்ஞானம் எல்லாம்... இசை மௌனத்திலிருந்து ஜனனமாகிறது... மீண்டும் மௌனத்தோடே அது சரணமாகிறது!! அந்த சுத்த சித்த ஞான மௌனமே சுவாமி...!!

 பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக