தலைப்பு

செவ்வாய், 15 ஜூன், 2021

101-150 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!


இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..📝 
நிகழ்வு 101:

ஆகஸ்ட் 2000இல், நான் எனது குழு உறுப்பினர் ஒருவருடன் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தேன். அவர் ஸ்வாமி இன்ஸ்டிடியூட்டில் எம்.பி.ஏ. பயின்றவர். அவர் எனக்கு நெருக்கமான சக ஊழியர் மட்டும் அல்லாமல், ஸ்வாமி எப்போதும் என் கூடவே இருக்கிறார் என்பதை உணர்த்தும் ஒரு காரணமாகவும் இருந்தார். ஸ்வாமி எனக்குக் கொடுத்திருந்த தங்கச் சங்கிலி தொலைந்துபோன பின் ஓர் இரவு ஸ்வாமி எங்கள் இருவருக்கும் தனித்தனியே கனவில் வந்து, எங்கள் வாழ்க்கை மற்றும் வேலை குறித்தும் நீண்ட நேரம் பேசினார். மறுநாள், நாங்கள் இருவரும் அந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டபோது, எங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் அலுவலக விஷயங்கள் குறித்து மிக முக்கியமான அறிவுரைகளை ஸ்வாமி வழங்கியுள்ளதை நினைத்து ஆச்சரியப்பட்டோம்.
சரியாக ஒரு வருடம் கழித்து நான் இன்ஸ்டிடியூட்டில் ஒரு விரிவுரை நிகழ்த்த வந்திருந்தபோது ஸ்வாமி எனக்கு இன்டர்வியூ அளித்தார். அப்போது, முன் வந்த கனவில் நடந்தவைகளை ஒன்றுவிடாமல் ஒப்பித்தார்! மேலும், அவர் எப்போதும் என்னுடனே இருக்கிறார் என்பதை மறுபடியும் எனக்கு உணர்த்தும் வண்ணம், தொலைந்துபோன அதே சங்கிலியை மீண்டும் வரவழைத்துக் கொடுத்தார்! அவர் ஸர்வ வ்யாபி, மற்றும் ஸர்வ வல்லமை படைத்தவர், என்ற உண்மைகளை என் வாழ்வில் முதன்முறையாக, அவரது பரிபூரண அன்பின் வெளிப்பாடாக, அவர் எனக்கு உணர்த்தினார்.

ஆதாரம்: பிப்ரவரி 2020 ஸனாதன ஸாரதி இதழில், ஒரு பக்தர், 
ஸ்ரீ. என்.டி.அருண் குமார் அவர்கள் எழுதிய பதிவு.

📝 நிகழ்வு 102:

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை த்ரயீ ப்ருந்தாவனில் உள்ளே புல்வெளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஸ்வாமியின் தரிசனத்திற்காகக் காத்திருந்தோம். அன்று பதினைந்து நிமிடங்கள் தாமதமாகியதால், எங்களில் பலர், படித்தல், எழுதுதல் அல்லது த்யானம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தனர். நான் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். அப்போது  எறும்பு ஒன்று, புல்வெளிக்கும், ஸ்வாமி நடப்பதிற்காகப் போடப்பட்டிருந்த சிவப்புநிற விரிப்பிற்கும் இடையே மேலும் கீழுமாக நகர்ந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன். அதன் முயர்ச்சியில் எந்த ஒரு நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. அது எதனையும் எடுத்துக் கொண்டு செல்லவும் இல்லை. நான் சில நிமிடங்கள் அதை கவனித்து கொண்டிருந்தபோது த்ரயீயின் கதவுகள் திறக்கப்பட்டு ஸ்வாமி மெதுவாக அந்த சிவப்புநிற விரிப்பின்மீது ‘மிதந்து’ வந்தார். அவர் என்னருகில் வந்து கொண்டிருந்தபோது, நான் அந்த எறும்பை ஸ்வாமியின் பாதையிலிருந்து தள்ளிவிட முயற்சித்தேன். ஸ்வாமி மேலும் அருகில் வந்தபோது என் கவனத்தில் ஒரு பாதி ஸ்வாமியின் மீதும் மற்றொரு பாதி எறும்பின் மீதும் இருந்தது. அந்த எறும்பின் மேல் ஸ்வாமி கால்வைத்துவிடக் கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஸ்வாமி என் முன்னால் நின்றுகொண்டு, மாணவர்களுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த ஒரு ஆசிரியரிடம் பேசினார். அந்தக் கணங்கள் முழுவதும், எறும்பு ஸ்வாமியின் கால்களின் அடியில் மாட்டிகொண்டதைப் போல் தோன்றியது. அந்த எறும்பிற்காகக் கவலைப்பட்டுக் கொண்டே நான் பாதநமஸ்காரம் செய்து கொண்டேன். பின்னர் ஸ்வாமி நடக்க ஆரம்பித்தபின் அந்த எறும்பு திரும்பவும் புல்வெளியை நோக்கிச் செல்ல ஆரம்பித்ததைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுப்போனேன்! அந்த எறும்பிற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதே நேரத்தில் இரண்டு அடிகள் எடுத்துவைத்திருந்த ஸ்வாமி, மீண்டும் என் பக்கமாகத் திரும்பி, “அதிகூட ஸ்வாமி நமஸ்காரம் கோசமே ஒச்சிந்தி ( அதுவும் ஸ்வாமி நமஸ்காரத்திற்காகவே வந்தது)” என்றார்!!!

ஆதாரம்:  செப்டம்பர் 2017 ஸனாதன ஸாரதி இதழில் முன்னாள் மாணவர் டாக்டர். ஈரோடு என். ப்ரபாகரன் அவர்களின் பதிவு.


📝 நிகழ்வு 103:


ஒரு தடவை ஸ்வாமியுடன் கொடைக்கானல் சென்றிருந்தபோது, ‘ஸாயி ஸ்ருதி’யில் ஒருநாள் காலையில் இது நடந்தது : திடீரென்று மழைத் தூரல் ஆரம்பித்தது. ஸ்வாமி போர்ட்டிகோவிற்குச் சென்று வெளியே பார்த்தார். பக்தர்கள் அனைவரும் முழுமையாகக் குழுமியில்லாததால், அவர் உள்ளே வந்து எங்களுடன் பேசுவதைத் தொடர்ந்தார். சிறிதுநேரம் கழித்து அவர், ”நான் வெளியே சென்று தரிசனம் கொடுக்க வேண்டும்“ என்றார். அப்போது, அங்கிருந்த முதியவர் ஒருவர், “ஸ்வாமி! பக்தர்கள் அங்கு இல்லை” என்றார். உடனே ஸ்வாமி, ”இல்லை, இல்லை! நான் சற்று முன்னால் பக்தர்கள் வரிசையில் உள்ளே வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்” என்றார். பக்தர்களை தரிசனத்திற்கு உள்ளே அனுமதிக்கும் பொறுப்பில் இருந்த இந்த முதியவர், மேலும், “ஸ்வாமி! நீங்கள் போர்ட்டிகோவிற்குச் சென்று திரும்பியதை மட்டும் பார்த்த நான், தரிசனம் முடிந்துவிட்டது என்று நினைத்து அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டேன்” என்றார். இதைக் கேட்ட ஸ்வாமி மிகவும் கோபமுற்றார். அன்றே எங்கள் கொடைக்கானல் வாசம் முடிந்து விடுமோ என்று நாங்கள் பயந்தோம். ஸ்வாமி அவரை நோக்கி, “உனக்கு ஏதாவது தயை உள்ளதா? என் பக்தர்கள், அங்கே காலை 4 மணி முதல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைக் கல் நெஞ்சம் கொண்டவன் என்று நினைத்தாயா? சிறிய ஒரு மழைத்தூரலால் நான் என் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பதைத் தடுத்துவிட முடியுமா? அவர்கள் எந்த அளவிற்கு மனம் வருந்தியிருப்பார்கள்? ஸ்வாமியிடம் தன்னுடைய கஷ்டங்களைத் தெரிவித்து ஆறுதல் பெறலாம் என்று எத்தனை பக்தர்கள் நம்பி வந்திருப்பார்கள்? உன்னுடைய அக்கறையின்மையால், அவர்கள், தாங்கள் இறக்கிவைக்க நினைத்த பாரத்தை இதயத்தில் சுமந்துகொண்டு, வெறும் கைகளுடன் திரும்பச் சென்றிருப்பார்கள்!”

ஸ்வாமி அன்று முழுவதும் உணவு உட்கொள்ளவில்லை. ஏனென்றால், பக்தர்களின் கவலைகளையும், துன்பங்களையும் தான் எடுத்துக்கொள்வதே அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதனால் பக்தர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அவரது உணவாகும் என்பதை அவரே பலமுறை கூறியிருக்கிறார்!

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2012இல் நடைபெற்ற கோடைகால வகுப்பில் திரு.டி.ரவிகுமார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.


📝 நிகழ்வு 104:


பர்த்தியில் ஸ்வாமியின் பிரம்மாண்டமான பிறந்த நாள் விழா (55வது என் நினைக்கிறேன்) நடந்துகொண்டிருந்த சமயம். ஒரு இடத்தில் கழிவுநீர் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியே வர ஆரம்பித்தது. அந்த இடம் முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அங்கு வந்த ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த சேவா தலத் தொண்டர் ஒருவர் சற்றும் யோசிக்காமல் தன் சட்டையைக் கழற்றிவிட்டு, மூடியைத் திறந்து உள்ளே குதித்து, அடியில் சென்று அடைப்பை நீக்கினார். அவரது உதவியால் அந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்தது. விழாக்காலம் முடியும் வரை திரும்பவும் அந்தப் பிரச்சனை மீண்டும் தலையெடுக்கவில்லை. அந்தக் காலங்களில், பண்டிகைகள் முடிந்தபின்னர் ஸ்வாமி, அப்போது பணியாற்றிய சேவா தலத் தொண்டர்களுக்கு பாத நமஸ்காரம் அளிப்பது வழக்கம். இந்தத் தடவையும் அவர்கள் ப்ரசாந்தி நிலையம் மந்திரத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். மேலே குறிப்பிட்ட சேவா தலத் தொண்டரிடம் வந்து, ஸ்வாமி, “அன்று நீ செய்த அந்த ஒரு செயல் மட்டுமே போதும், உனக்கு மறுபிறவி இல்லை!” என்று கூறினார்!. ஸ்வாமியை நாம், “ஸுலப ப்ரஸன்னாய நமஹ” என்று வணங்குகிறோம். அவர் எளிதில் திருப்தி அடையக் கூடியவர். நாம் செய்யும் செயலின் அளவை அவர் பார்ப்பதில்லை. ஆனால் அதன் உயர்ந்த நோக்கத்தையும் தரத்தையுமே அவர் எதிர்நோக்குவார். அவர் திருப்தி ஆகிவிட்டால் மிக உயர்ந்த பரிசை நமக்கு அளிப்பார். “ஸர்வ கர்ம பகவத் ப்ரீத்யார்த்தம்” (நமது அனைத்து செயல்களும் அவரைத் திருப்திப் படுத்துபவையாக இருக்கட்டும்) என்ற வாக்கியத்தை நாம் நடைமுறைப் படுத்துவோமா? 

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2012இல் நடைபெற்ற கோடைகால வகுப்பில் திரு. அமேய் தேஷ்பாண்டே அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.


📝 நிகழ்வு 105:


ஓரு நாள் மூத்த பக்தர்களுள் ஒருவரான ஸ்ரீ. வி.கே.நரசிம்மன் அவர்களுக்கு ஸ்வாமி வேலை ஒன்றை அளித்தார். மறுநாள் ஸ்வாமி அவரிடம், வேல முடிந்ததா என வினவினார். அவரது வெறித்த முகத்தைப் பார்த்தவுடன் ஸ்வாமிக்கு விளங்கிவிட்டது. “ஏன் அந்த வேலையை இன்னும் முடிக்கவில்லை?” என்று கேட்டார். அவர், “ஸ்வாமி, நான் மறந்துவிட்டேன்” என்று பதிலளித்தார். ஸ்வாமி சிறிது கோபத்துடன், “பல்லாயிரக்கணக்கானோர் என்னிடமிருந்து அவ்வப்போது வருகின்ற சிறு ஏவல்களுக்காக் காத்திருக்கின்றனர். அப்படி இருக்கும்போது நீ எவ்வாறு என்னுடைய கட்டளையை மறக்கலாம்?” என்று கேட்டார். அவர் உடனே மறதி மற்றும் வயது போன்ற காரணங்களைச் சொல்லிவிட்டு, மேலும், “அனைத்துமே தங்கள் விருப்பப்படி தான் நடக்கின்றன. நான் மறந்துபோனதும் தங்கள் சங்கல்பமாகும். ஏனெனில் தாங்கள் ஒரு மாயா ஸ்வரூபி. அந்த மாயைதான் நான் மறந்துபோனதற்குக் காரணம், ஸ்வாமி!” என்று பதிலளித்தார். அதற்கு ஸ்வாமி மிகுந்த வேகத்துடன், “நான் மாயஸ்வரூபன் அல்ல. நான் ஜ்யோதிஸ்வரூபன். நிழலுக்காக சூரியனைக் குறை சொல்லாதே. நிழலுக்குக் காரணம் சூரியன் அல்ல. பொருள் தான் காரணம், உன் மனம் என்னும் பொருள்“ என்றார்!

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2012இல் நடைபெற்ற கோடைகால வகுப்பில் திரு. கே.எம்.கணேஷ் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.


📝 நிகழ்வு 106:


ஸ்வாமி ப்ருந்தாவனதில் இருந்தபோது, கீழே விழுந்து இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிலநாட்களுக்குப் பிறகு ஒருநாள் ஸ்வாமி தன் கைகளால் தொட்டு ஆசீர்வாதம் செய்வதற்காக மைசூர்பாக் நிறைந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றேன். அவர் , “மிகவும் எண்ணெய் நிறைந்து இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, அதைத் தொடாமல், அப்படியே “கொடுத்துவிடு” என்று கூறினார். நான் கீழே வந்த பிறகு, மற்றவர்களுடன் பேசி, இனிமேல் ஒவ்வொரு ப்ரசாதத் துண்டையும் ப்ளாஸ்டிக் பை ஒன்றில் போட்டு பேக் செய்துவிட்டு ஸ்வாமியிடம் ஆசி வாங்கலாம், அப்போது அவர் தொடுவதற்கு சாத்தியம் அதிகம் என்று முடிவு செய்தோம். அடுத்த தடவை ஆப்பிள் பழம், ப்ரசாதம் ஆயிற்று. நான் ஒரு தட்டு நிறைய ஆப்பிள் பழங்களை எடுத்துக்கொண்டு ஆசி பெறுவதற்காக அவரிடம் சென்றேன். ஒரு பழத்தைத் தன் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு “மிகவும் கனமாக இருக்கிறது” என்றார். உடனே என் மனதில், “ ஸ்வாமி உடல் ரீதியாக பலவீனமாகிவிடார். அதனால், இந்த ஆப்பிள் பழமும் கனமாகத் தோன்றுகின்றது போலும்” என்று நினைத்தேன். என் எண்ணங்களை அறிந்த ஸ்வாமி உடனே என்னிடம், “அப்படி இல்லை, நான் இங்கே மாடியிலிருந்து கீழே இருக்கும் ஒருவருக்கு ஒரு பழத்தைத் தூக்கிப் போட்டேன் என்று வைத்துக் கொள். அவர் அதனை சரியாகப் பிடிக்காவிட்டால், வேறு எங்கேயாவது உடலில் பட்டுக் காயமாகிவிடும்“ என்றார்! இவ்வாறு தான் உடல் அவஸ்தைப் படும் நேரத்தில் கூட அவர் மனதில் பிறரது சுகம் தான் மேலோங்கி இருந்தது. ‘முழுமைத் தன்மை’ அடைவதே கலாச்சாரத்தின் இறுதி நோக்கம் ஆகும். ஸ்வாமி தன் வாழ்க்கையின் ஒவ்வொறு நொடியையும் ஒரு முழுமைத் தன்மையுடன் வாழ்ந்து காண்பித்தார்.

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2012இல் நடைபெற்ற கோடைகால வகுப்பில் திரு.டி.ரவிகுமார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.


📝 நிகழ்வு 107:

ஒரு தடவை கொடைக்கானலுக்குச் சென்றிருந்தபோது இது நிகழ்ந்தது: நாங்கள் மதிய உணவிற்காக அமர்ந்திருந்தோம். உணவு பரிமாறப் பட்டிருந்தது. ஸ்வாமி, நாங்கள் அனைவரும் “ப்ரம்மார்ப்பணம்” சொல்வதற்காகக் காத்திருந்தார். நான் சொல்லி முடித்துவிட்டுக் கண்களைத் திறந்தபோது, ஸ்வாமி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தேன்! ஆச்சரியமும் ஆனந்தமும் கலந்த ஒரு மன நிலையுடன் அவரைப் பார்த்த போது அவர் ஏதோ என்னிடம் மிகவும் தீவிரமான ஒரு கருத்தைச் சொல்லப் போகிறார் என்று எனக்குத் தோன்றியது. அவர் என்னைப் பார்த்து, “ஏன், உன்னால் இந்த ஸ்லோகங்களை சொல்லி முடிக்கும் வரை ஒரு சில நிமிடங்கள் அமைதியாக அசையாமல் உட்கார முடியாதா?” என்று கேட்டார்! உடனே நான் அதிர்ந்துபோனேன்! நான் என்ன செய்தேன் என்று எனக்கு ஞாபகம் வரவில்லை! ஆனால், அந்த சில நிமிடங்களில் என்னையும் அறியாமல், என் மூக்கையும் முதுகையும் சொறிந்திருக்கிறேன்! அதை ஸ்வாமி பார்த்திருக்கிறார்! “ப்ரம்மார்ப்பணம் சொல்லும்போது நீ சிறிதும் அசையாமல் இருக்கவேண்டும். ஏனெனில் அந்தநேரத்தில் நீ இறைவனுக்கு உணவைப் படைக்கிறாய்!” என்று அறிவுறித்தினார். நான் ஸ்வாமியுடன் அருகில் இருந்த நேரத்தில் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் இதுவாகும்.

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2012இல் நடைபெற்ற கோடைகால வகுப்பில் டாக்டர்.என்.சிவகுமார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.

/span>


📝 நிகழ்வு 108:


நான் பாஸ்டன் செல்வதற்காக, ஃப்ராங்க்ஃபர்ட்டிலிருந்து முதல் கட்டப் பயணமாக வாஷிங்டன் (டல்லெஸ்) சென்றடைந்தேன். கஸ்டம்ஸ் செயல்முறைகள் முடிந்த பின்னர் அந்த விமான நிலையத்தில் கடல்போல் தோன்றிய பயணிகள் கூட்டத்தின் நடுவே நான் சென்றுகொண்டிருந்தேன். திடீரென்று மக்கள் கூட்டத்தின் மத்தியில் நான் ஸ்வாமியைக் காண்கிறேன்!! தரிசன நேரத்தைத் தவிர வேறு எங்காவது நான் ஸ்வாமியைப் பார்க்க நேர்ந்தால் நாம் பயந்துவிடுவோம்! அங்கே ஸ்வாமி என்னிடம், “நீ என்னிடமிருந்து சென்று எட்டு வருடங்கள் கழிந்துவிட்டன. மீண்டும் என்னிடம் வா!” என்று சொல்லிவிட்டு மறைந்துவிடுகிறார்!! நான் எனது உணவு, விமானம் புறப்படும் நேரம் இவற்றையெல்லாம் மறந்து ஒரு மன அதிர்ச்சியில் அமர்ந்திருந்தேன். நான் இருந்த அந்த சோம்பேறித்தனமான மன் நிலையிலிருந்து என்னை விழிப்புணர்வுக்குக் கொண்டுவருவதற்காகவே அவர் என்னிடம் வரவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்று நினைக்கிறேன். நான் ஏன் இந்த அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறேன் என்றால், நாம் உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் ஸ்வாமியினுடைய வட்டத்தினுள்தான் இருக்கிறோம் என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். அவரது வழிகாட்டுதலுக்கு ஏதுவாக, நாம் நம் மனதை அமைதிப்படுத்தி அவரை உணர்வு பூர்வமாக மனதில் வைத்திருக்கவேண்டும். நீங்களும் என்னைப்போல் ஒரு முழுமைத்தன்மை அடையாத ‘அரைகுறை’யாக இருந்தால், தேவையான நேரத்தில் அவரே கடிவாளம் போட்டு நம்மை அவர்தம் பக்கம் இழுத்துக் கொள்வார்!

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2012இல் நடைபெற்ற கோடைகால வகுப்பில் திரு.தாமன் ஹெஜ்மாடி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.


📝 நிகழ்வு 109:


1991இல் எம்.பி.ஏ. பட்டப் படிப்பு மாணவர்களுக்கு நேர்ந்த அனுபவம் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. ஸ்வாமி அவர்களைத் ‘த்ரயீ’ யினுள் அழைத்து அவர்களுக்கு வயிறு நிறையும்படியாகத் தின்பண்டங்களை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சிறிதும் உட்காரவே இல்லை. நின்றுகொண்டே இருந்தார். இதைப் பார்த்த மாணவர்கள் கவலையுற்று ஸ்வாமியை தனது இருக்கையில் அமரும்படி மன்றாடினர். ஆனால் ஸ்வாமியோ “எனக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லை” என்று கூறிவிட்டு சுமார் 45 நிமிடங்கள் நின்றுகொண்டே மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டிருந்த மாணவர்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் தவித்தனர். பொறுக்க முடியாமல் அவர்கள் ஸ்வாமியிடம், உட்காருமாறு கெஞ்சினர்.

ஆனால் ஸ்வாமி, “உங்கள் யாருக்கும் புரியவில்லை” என்று சொல்லிவிட்டு, அவரது சிம்மாசனத்தில் இருந்த தலையணையை மெதுவாக அகற்ற உத்தரவிட்டார். மாணவர்கள் அதை எடுத்தபோது, குழவி ஒன்று, தலையணியின் அடியில் சிறிய கூடு கட்டிக் கொண்டிருந்ததைக் கவனித்தனர். அதனை சுட்டிக் காட்டிய ஸ்வாமி, “நான் அதன்மேல் அமர்ந்திருந்தால், அந்தக் குழவியும் அதன் குட்டிகளும் நசுங்கி இறந்துபோயிருக்கும்” என்றார்!

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2011இல் நடந்த ‘ப்ரசாந்தி வித்வன் மஹாசபா’வில் ஸ்ரீ.அமேய் தேஷ்பாண்டே அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து📝 நிகழ்வு 110:


1997இல் எனது ஏழு வயதில் என் தாயை இழந்தேன். என் தந்தை மதுவிற்கு அடிமையாக இருந்ததால் அவரால் என்னை சரியாக வளர்க்க முடியவில்லை. மொரிஷியஸ் அரசு என்னை ஒரு காப்பகத்தில் சேர்த்தது. அங்கே எனக்கு அமைந்த ஒரு ஆசிரியை முதலில் கற்றுக்கொடுத்த பாட்டு, ‘மானஸ பஜரே குரு சரணம்’ என்பதாகும்! ஒரு வருடத்திற்குப் பிறகு நான் ‘ஆனந்தம்’ என்று அழைக்கப்பட்ட மற்றொரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டேன். முதலில், அங்கு செல்வதற்கு நான் மிகவும் தயக்கம் காட்டினாலும், முந்தைய ‘ஸாயி மாணவி’யான ஜயா கூஞ்சுள் என்ற என்பவர் என்னை அன்புடன் வரவேற்றார். நான் அங்கு தங்கியிருந்த காலத்தில், கட்டுப்பாடுகளுடன் வாழும் முறை, மற்றும் ஸ்வாமியின் எதிர்பார்ப்புகளின்படி நடந்துகொள்ளும் முறை பற்றி நன்கு அறிந்துகொண்டேன். ஆனால், ‘சரணாகதி’ என்பது எனக்குக் கடினமாகத் தென்பட்டது.“ஸ்வாமி என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரா? நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று அவருக்குத் தெரியுமா?” என்ற கேள்விகள் என் மனத்தில் எழுந்தன. 2007இல் பர்த்தியில் நடைபெற்ற அகில உலக இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு ஸ்வாமியை முதன்முறையாகப் பார்த்தேன். ஸ்வாமி என்னிடம் வந்து, “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அதற்கு என் பின்னால் அமர்ந்திருந்த ஒரு இளைஞன், “மொரிஷியஸ்” என்று பதிலளித்தான். ஸ்வாமி மேலும் அருகில் வந்து, “ஏன் வாழ்க்கையைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்? நான் எப்போதுமே உன்னைக் காத்தருள் புரிந்திருக்கிறேன். மேலும் தொடர்ந்து காப்பேன்!” என்று அபரிமிதமான அன்புடன் மொழிந்து ஆசீர்வதித்தார். அந்தக் கணத்தில் என் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. அவர் எப்போதும் என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். சத்ய “உன்னிடம் எப்போது அதிகம் கொடுக்கப்படுகிறதோ அப்போது உன்னிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும்”  என்று ஸ்வாமி கூறுவார். என்னுடைய வாழ்வில் இது ஒரு மகத்தான உண்மை என்பதை நான் உணர்ந்தேன். ஸ்வாமியின் ஆன்மீகப் பணியில், மொரிஷியஸ் நாட்டின் ஸாயி இளைஞர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக என்னை ஸ்வாமி தேர்ந்தெடுப்பார் என்று நான் நினைக்கவே இல்லை.

ஆதாரம்: நவம்பர் 2016 ஸனாதன ஸாரதி இதழில், ஸ்ரீ. அஜெய் புஸ்ஸாவன் என்ற பக்தர் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 111:


இந்த நிகழ்வு 1961இல் நடந்தது. ஒரு ஸனாதன ஸாரதி இதழில், ஸ்வாமி,ஒரு அழகான சிறு குழந்தையின் தலையை அன்போடு தட்டுவது போன்ற ஒரு ஃபோட்டோ , அட்டைப் படமாகப் போடப்பட்டிருந்தது. அதன் அடியில் ‘ஸ்ரீ ஸத்ய ஸாயி மாதா’ என்று எழுதப்பட்டிருந்தது. அச்சிற்குச் செல்வதற்கு முன்னால் திரு.கஸ்தூரி அவர்கள் , இதழை ஸ்வாமியிடம் எடுத்துச் சென்று ஒப்புதல் பெறுவது வழக்கம். ஸ்வாமி அந்தப் படத்தைப் பார்த்தவுடன், புன்முறுவலுடன், “கீழே நீ என்ன எழுதியிருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஸ்வாமியின் தாயன்பினைக் காட்டுவதால், ஸ்ரீ சத்ய சாயி மாதா என்று எழுதியுள்ளேன்” என்றார். அப்போது ஸ்வாமி, மிகவும் பொருள் அடங்கிய ஒரு வரியைக் கூறினார். ஸ்வாமி, “ஏன் ‘ஸாயி’ என்று எழுதியுள்ளாய்?” என்று கேட்டுவிட்டு, “ஸத்ய மாதா என்றாலே போதுமானது. குழந்தைகளை சுமந்து பெற்றெடுக்கும் உலகியல் தாய்கள் யாரும் நிஜமான தாய்கள் அல்ல. நான் மட்டும் தான் உண்மையான தாய்” என்றார்! இந்த அறிவிப்பைக் கேட்ட கஸ்தூரி அதிர்ந்து போனார்! 

அவருக்கே பின்பு இவ்வாறு தோன்றியது: ஏனெனில், உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை, அனைத்துப் படைப்புகளும், பிரபஞ்சத்தின் தாயின் கருப்பையில் தோன்றி, பின் அவளின் உள்ளேயே ஐக்கியமாகிவிடுகின்றன!

 ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2011இல் நடந்த ‘ப்ரசாந்தி வித்வன் மஹாசபா’வில் ஸ்ரீ. சஷாங்க் ஷா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.


📝 நிகழ்வு 112:

நான் பர்த்தியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயின்று கொண்டிருந்தபோது இந்நிகழ்வு நடந்தது. எங்கள் பிறந்தநாள் ஆசீர்வாதத்திற்காகச் சென்றிருந்தோம். எங்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு புகைப்படங்களில் எழுதிக் கையொப்பம் இட்ட பின்னர் ஸ்வாமி எங்களுக்கு விபூதி வரவழைத்து, எங்களது மிகச்சிறிய உள்ளங்கைகளில் வைத்தார். அருகில் இருந்த ஒரு மூத்த மாணவர், விபூதியைப் பொட்டலம் செய்வதற்காக எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். எனது  அப்பாவித்தனத்தாலோ அல்லது அறியாமையினாலோ, எப்படி அதை ஒரு பொட்டலமாக மடிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். அருகிலிருந்த எனது சகோதரர்கள் அழகாக மடிப்பதைப் பார்த்த எனக்கு வெட்கமாகவும் கவலையாகவும் இருந்தது. என்னை நேசிக்கும் ஒரு அன்பான நண்பனைப் போல, எனக்கு மிகவும் தேவையான அந்த நேரத்தில் ஸ்வாமி தன் கைகளை என்னிடம் நீட்டி, விபூதி நிறைந்த அந்த காகிதத்தைத் தன்னிடம் கொடுக்கச் சொன்னார். பிறகு எவ்வாறு பொட்டலம் செய்யவேண்டும் என்று எனக்குப் படிப்படியாகச் செய்து காண்பித்து, பொட்டலத்தை என்னிடம் கொடுத்தார். இன்றுவரை நான் அதை நினைத்துப் பார்க்கும்போது, எத்தகைய ஒரு நண்பனை இழந்து நிற்கிறேன் என்ற ஏக்கம் நிறைந்த எண்ணம் மேலிடும். ஆனால் உடனே அந்த எண்ணத்தை ஈடுகட்டும் வகையில், அவரது அளவுகடந்த அன்பும் பாதுகாப்பும் எப்போதும் நம்முடனே உள்ளது என்ற நம்பிக்கை மேலோங்கும்.

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2011இல் நடந்த ‘ப்ரசாந்தி வித்வன் மஹாசபா’வில் ஸ்ரீ. சௌரப் குமார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.


📝 நிகழ்வு 113:

பழைய காலத்தில் ஸனாதன ஸாரதி அலுவலகம், ப்ரசாந்தி மந்திரத்தின் அருகிலேயே இருந்தது. ஒருநாள் திரு.கஸ்தூரி அவர்கள் அலுவலகத்தின் வாசலிலே நின்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் அவரிடம் வந்து, ஸ்வாமி பற்றிய புத்தகம் ஏதேனும் உள்ளதா என் வினவினார். அதற்கு கஸ்தூரி , “மாத இதழ் தவிர வேறு எந்த புத்தகமும் தற்போது இல்லை” என்று கூறினார். மந்திரத்தின் முதல் மாடியில் இருந்து ஸ்வாமி இந்த உரையாடலைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே ஸ்வாமி, கஸ்தூரியைத் தன்னிடம் வருமாறு பணித்தார். அந்த நபர் கஸ்தூரியிடம் என்ன கேட்டுக் கொண்டிருந்தார் என வினவினார். அதற்கு அவர், “ஸ்வாமி பற்றிய புத்தகம் ஏதேனும் இருக்கிறதா“ என்று கேட்டதாகக் கூறினார். ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு, ஸ்வாமி, “நீ அதற்கு என்ன பதில் கூறினாய்?” என்று கேட்டார். அதற்கு , கஸ்தூரி அவர்கள், “ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டேன்” என்றார். ஸ்வாமி உடனே, “அது சரியான பதில் ஆகாது. ‘புத்தகங்களிலிருந்து ஸ்வாமியைப் புரிந்து கொள்ள முடியாது’ என்று நீ சொல்லியிருக்கவேண்டும்” என்றார்! இதைக் கேட்ட கஸ்தூரி ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்!

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2011இல் நடந்த ‘ப்ரசாந்தி வித்வன் மஹாசபா’வில் டாக்டர் பி.எல்.ராணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.

📝 நிகழ்வு 114:

ஸ்வாமியின் 60-வது பிறந்தநாள் வைபவத்தின் போது, கூட்டுத்திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தர்மாவரத்திலிருந்து ஸ்வாமி சிவப்பு நிற பட்டுப் புடவைகளுக்கு ஆர்டர் செய்திருந்தார். ஸ்ரீ. குடும்ப ராவ் அவர்கள் அங்கு சென்று புடவைக்கட்டுகளை எடுத்து வந்தார். மாணவர்கள் அந்தக் கட்டுக்களைப் பிரிக்கும் போது, ஒவ்வொரு கட்டின் மேல் மற்றும் அடிப்பகுதிகளில் பட்டுப் புடவைகளும் நடுவில் பருத்திப் புடவைகளுமாக வைத்துக் கட்டி ஏமாற்றியிருப்பதை கவனித்தனர். உடனே இந்த விஷயம் ஸ்வாமியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஸ்வாமி உடனே குடும்ப ராவை அழைத்துக் காண்பித்தார். உடனே அவர், அந்தப் புடவைகளை சப்ளை செய்தவரைக் கோர்ட்டில் கூண்டில் நிறுத்திவிடுவதாகச் சற்று கோபத்துடன் கூறினார். ஸ்வாமி அவரை நோக்கி, அமைதியாக, “கவலைப்படாதே! அவருடைய கர்மாவே அதற்கு பதில் கொடுத்துவிடும்” என்றார் ! சிறிது யோசனை செய்து பாருங்கள்! கடவுளையே ஏமாற்றும் செயலை ஒருவர் செய்யத் துணிந்துள்ளார்!  
ஸ்வாமி உடனே உள்ளே சென்று பணம் எடுத்துக்கொண்டுவந்து குடும்ப ராவிடம் அளித்து, புதிதாக வேறொருவரிடமிருந்து புடவைகளை வாங்கி வருமாறும், இந்த தடவை அனைத்துமே பட்டுப் புடவைகளாக இருப்பதை உறுதி செய்து கொள்ளும்படியும் பணித்தார். ஆனால், இப்போது சிவப்பு நிறத்திற்கு பதிலாக, பச்சை நிறமே கிடைத்தது! நாம் நல்லது செய்ய நினைத்தாலும் உலகம் சில நேரங்களில் நமக்கு ஒத்துழைப்பு தருவதில்லை !!
ஆனால் ஸ்வாமி இந்த விஷயத்தில் என்றுமே சமரசம் செய்ததில்லை.

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2011இல் நடைபெற்ற கோடைகால வகுப்பில் திரு. ஸஞ்ஜய் ஸஹானி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.


📝 நிகழ்வு 115:

ப்ருந்தாவனத்தில் ஸ்வாமி இருக்கும்போதெல்லாம் மாலையில் ‘த்ரயீ’ யில் தினமும் ஸ்வாமி மாணவர்களுடன் உரையாடுவது வழக்கம். ஒருநாள், ஒரு மாணவர் தன் கையில் ஸ்வாமிக்குத் தான் எழுதிய கடிதத்தை வைத்துக்கொண்டு, ஸ்வாமியிடம், “ஸ்வாமி அடிக்கடி தீய எண்ணங்கள் வந்து என்னைத் தொந்தரவு செய்கின்றன” என்று கூறினார். தன்னுடைய கஷ்டங்கள் அனைத்தையும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஸ்வாமி ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவர் அந்த கடிதத்தை வாங்கிக்கொண்டு, அதனை நன்றாக சுருட்டி, திரும்பவும் அந்தக் கடிதச் சுருளை அந்த மாணவரிடம் திரும்பக் கொடுத்தார். நம் எல்லோருக்கும் இந்த அனுபவம் உண்டு: நமக்குக் கிடைத்த ஒரு புதிய காலண்டர் சுருளைத் திறக்க முயற்சிக்கும்போது, அது மீண்டும் சுருண்டுவிடும். அந்த மாணவர் கடிதத்தைத் திறக்க இரண்டு தரம் முயற்சித்தும் அது சுருண்டுகொண்டது. ஸ்வாமி அந்தக் கடிதத்தைத் திரும்பப் பெற்று அதனை எதிர்திசையில் மீண்டும் சுருட்டினார். அந்தக் கடிதம் இப்போது சுருளாமல் நேராக நின்றது. அப்போது ஸ்வாமி, “உன்னுடைய விரும்பத்தகாத தீய எண்ணங்களுடன் சண்டை போடுவதற்கு பதிலாக, நல்ல செயல்களில் ஈடுபட ஆரம்பித்துவிடு!” என்ற சூத்திரத்தை உதாரணத்துடன் விளக்கினார்!

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2012இல் நடைபெற்ற கோடைகால வகுப்பில் திரு. கே.எம். கணேஷ் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.


📝 நிகழ்வு 116:

ஸ்வாமி என்னை முனைவர் பட்டம் பெறுவதற்கான முயற்சி செய்யுமாறு கூறினார். அதற்கு நான் ,”ஸ்வாமி, எனக்கு இந்தப் பட்டம் எல்லாம் வேண்டாம்” என்று சொன்னேன். ஸ்வாமி மறுபடியும், “நான் சொல்வதைக் கேள். பிஹெச்.டி செய்” என்று வலியுறித்தினார். வெறுத்துப் போயிருந்த நான், வாழ்க்கையின் அல்லல்களிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி, அவைகளிலிருந்து தப்பி ஓடிவிடுவதுதான், என எண்ணினேன். ஸ்வாமியிடம், “ஸ்வாமி, எனக்கு ஸன்யாஸம் கொடுத்துவிடுங்கள், நான் எங்கேயாவது உட்கார்ந்து த்யானம் செய்கிறேன். எனக்கு இந்த மேல் படிப்பு எல்லாம் வேண்டாம்“ என்று உரைத்தேன். யாராலும் ஸ்வாமியை ஏமாற்ற முடியாது! எனக்கு ஏற்பட்ட இந்த எண்ணம், வாழ்க்கையின் மீது ஏற்பட்டிருந்த ஒரு வெறுப்பின் காரணமாகவே அன்றி, உண்மையாகவே இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்ற ஆன்மீக உந்துதலால் அல்ல என்பது ஸ்வாமிக்கு நன்றாகவே தெரியும்! ஆகையால் அவர், “மரியாதையாக வாயைப் பொத்திக்கொள். நேராகச் சென்று துணை வேந்தரைப் பார்” என்றார்.
மூன்று வருடங்கள் கழிந்து, நான் என் முனைவர் பட்டப் படிப்பை முடிக்கும் தறுவாயில், எனக்கு ஒருவிதமான மனநோய் ஏற்பட்டது. அந்த நாட்களில் எந்த ஒரு சின்ன விஷயத்திற்கும் ஸ்வாமியிடம் சென்று கேட்கும் அரிய வாய்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆகையால் நான் ஸ்வாமியிடம் சென்று என் சிக்கல்களை விவரித்தேன். அவரது பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் சிறிய இன்டர்வியூவில் நடந்த உரையாடல்களை அவர் ஞாபகத்தில் வைத்திருந்தார்! 
“அன்று நீ ஸன்யாஸம் வேண்டும் என்று கேட்டாய். இப்போது ஸன்யாஸியாகவே வாழ்ந்து விடு! எதற்காகக் கவலைப்படுகிறாய்? எது தேவையோ அதை மட்டும் செய்துவிட்டு சந்தோஷமாக இரு. உன் தேவைகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும். எந்த ஒரு பயமும் இல்லாமல் வாழ்க்கையை நடத்து. சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் வாழ். எந்த விதமான தொடர்புகளையும் வைத்துக்கொள்ளாதே“ என்று அறிவுரை வழங்கினார்.

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2012இல் நடைபெற்ற கோடைகால வகுப்பில் டாக்டர். ஸஞ்ஜய் மஹாலிங்கம் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.


📝 நிகழ்வு 117:

நான் ஸாயி குல்வந்த் ஹாலில் செக்யூரிடி பணியில் ஈடுபட்டிருந்தேன். அன்று என்னருகில் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தைகள் அமர்ந்திருந்தனர். அது ஒரு பெரிய குழுவாக இருந்தது. அந்தக் குழுவிலிருந்து ஒரு பெண்மணி , தாங்கள் முதல் தடவையாகப் பர்த்திக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், ஸ்வாமியிடம் உரையாடுவதற்கான வாய்ப்பு கிட்டுமா என வினவினார். அதற்கு நான், ‘அது நம் கையில் இல்லை’ என்றும், ‘நீங்கள் முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு அதிருஷ்டம் இருந்தால் கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்றும் கூறினேன். மேலும் ஸ்வாமி அருகில் வந்தால் அவரிடம் எப்படிப் பேசவேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முற்பட்டேன்!
“ உங்களைப் பார்த்தவுடன், ஸ்வாமி, நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று கேட்பார். அதற்கு நீங்கள் உடனே ‘ரஷ்யா’ என்று சொல்லவேண்டும். பிறகு, ‘நீங்கள் எத்தனை பேர்?’ என்று கேட்பார். அதற்குரிய பதிலை அளித்துவிடுங்கள். அவர்கள் உடனே என்னுடன் சேர்ந்து பயிற்சி செய்து பார்த்துக்கொண்டனர்! 
அத்துடன் நிற்கவில்லை. அங்கிருந்து நகர்ந்து சென்று தரிசனம் முடித்து விட்டுத் திரும்பும்போது அவர்களிடம் மீண்டும் வந்து, ‘நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்' என்று ( நான் சொல்லிக்கொடுத்த முதல் கேள்வியை) கேட்டார்! அதற்கு அவர்கள், ‘முப்பத்தி ஐந்து’ என்று (இரண்டாவது) பதிலை அளித்தனர்!! இது ஒரு சிறு நிகழ்வாக இருந்தாலும் இதிலிருந்து நான் மிகப்பெரிய பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். “என் செயல்பாடுகளை உன்னால் யூகிக்க முடியும் என நினைத்துவிட்டாயா? தயவு செய்து என்னைப் பற்றி நீ வைத்திருக்கும் தவறான அனுமானங்களை மாற்றிக்கொள்” என்று ஸ்வாமி எனக்கு அறிவுறுத்துவது போல் இருந்தது.

ஆதாரம்: ப்ரசாந்தி வித்வன் மஹாசபா, 2011 இல் செல்வி. யு. ஸுமா ராவ் அவர்களின் உரையிலிருந்து.


📝 நிகழ்வு 118:

ஸ்வாமி ‘ஆபத்பாந்தவர்’ ஆவார்; நம்மைப் பேரழிவிலிருந்து காப்பாற்றுபவர். தன் பக்தர்களின் துன்பங்களைத் தான் எடுத்துக் கொண்டு அவர்களைக் காப்பதற்கு எப்போதும் தயாராக இருப்பவர். 

எனது மாமா ஸ்வாமி தரிசனத்திற்காக ப்ருந்தாவனம் சென்றிருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஸ்வாமி தன் கையைத் தொடும்படி அவரிடம் கூறினார்.  ஸ்வாமியின் கை கொதிக்கும் அளவிற்கு சூடாக இருந்ததை உணர்ந்ததும் அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது! அப்பொழுது தான் அவருடைய அம்மாவைக் காப்பாற்றியதாகக் கருணை ததும்பும் முகத்துடன் தெரிவித்தார். பிறகு மாமா என் பாட்டியைத் தொடர்பு கொண்டு வினவினார். எனது பாட்டி அவரது தினசரி பூஜையைச் செய்துகொண்டிருந்தபோது, விளக்கிலிருந்த நெருப்பு அவரது புடவையில் பட்டு தீ பற்றிக்கொண்டது. அவர் அந்தக் கணத்தில் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் திடீரென்று ஒரு நொடியில் (அவரது முயற்சி இல்லாமலேயே) அந்த தீ அணைக்கப்பட்டது! இதைத்தான் ஸ்வாமி கூறியிருக்கிறார்! எப்போதும் நம்முடனே இருக்கும் பகவானின் ‘காக்கும் கரங்களே’ இந்த அற்புதத்தை நிகழ்த்தி அவரைக் காப்பாற்றியிருக்கின்றன!

ஆதாரம்: டிசம்பர் 2019 ஸனாதன ஸாரதி இதழில் திரு. ஃபல்குனா அவர்களின் பதிவு.📝 நிகழ்வு 119:

நான் ப்ரசாந்தி நிலையத்தில் ஹாஸ்டல் வார்டனாக இருந்த போது, ஒரு தடவை மாணவர்கள் சிலர் ஏதோ ஒரு குறும்புத் தனமான செயலைச் செய்து விட்டதால் ஸ்வாமி கோபமுற்றார். அந்தக் கோபத்தின் விளைவை நான் முதலில் சந்திக்க வேண்டியதாயிற்று. ஸ்வாமி என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். பிள்ளையார் சதுர்த்தி விழாக் காலம் வந்தது. இறுதி நாளில் மாணவர்கள் அனைத்து சிலைகளையும் ஒரு ஊர்வலத்தில் எடுத்து வந்து, ஸ்வாமியிடம் ஆசி பெற்ற பின் அவைகளைக் கரைப்பதற்கு எடுத்துச் செல்வது வழக்கம். இதற்கு முன் ஒருநாள் நான் கல்லூரியிலிருந்து மதிய உணவிற்காக ஹாஸ்டல் நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு மாணவன் வழியில் என்னை சந்தித்து, ஹாஸ்டல் வாயிலில் என் அம்மா எனக்காகக் காத்துக்கொண்டிருப்பதாகக் கூறினான். அவர் ப்ரசாந்தி சேவைக்காக டெல்லி சேவாதள உறுப்பினர்களுடன் சேர்ந்து ப்ரசாந்தி நிலையம் வந்துள்ளார். என்னைச் சந்திக்க கொளுத்தும் வெயிலில் நடந்து வந்ததற்காக என் தாயைக் கடிந்துகொண்டேன். அன்று ஒரு தேங்காயை வாங்கி, ப்ரசாந்தி நிலையத்தில் நுழைவு வாயிலின் அருகில் உள்ள பிள்ளையார் சன்னிதியில் உடைத்தவுடன் அதனுள் ஒரு பூ இருந்ததை என் தாய் பார்த்துள்ளார். உடனே அருகில் இருந்த சிலர், இது ஒரு நல்ல விஷயத்திற்கான அறிகுறி என்று கூறியுள்ளனர். அதனால், தேங்காய் ப்ரசாதத்தை எனக்குக் கொடுப்பதற்காக அன்புடன் என்னைத் தேடி வந்துள்ளார். இதனைக் கேட்டவுடன் நான் மிகவும் உணர்ச்சிவசப் பட்டேன். வினாயகரின் ஆசி எனக்கு மிகவும் உள்ளதாக நினைத்துக் கொண்டு, அன்று மாலை, சிலைகள் கரைப்பது தொடர்பான சில கருத்துக்களை ஸ்வாமியிடம் நானே கேட்டுவிடுவது என்ற தைரியமான முடிவெடுத்தேன்.( அவர் என்னிடம் பேசுவதில்லை என்பதை ஞாபகப் படுத்துகிறேன்). பல மாதங்களில் முதன்முறையாக அன்று தான் ஸ்வாமி என்னிடம் பேசினார்! அன்று நான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்: “முதன் முதலில் உன்னைப் பெற்றெடுத்த தாயிடம் நீ ஆசி பெற்றுக்கொள்; பின்னர் தெய்வத்தாயின் ஆசி தானாக உன்னைத் தேடிவரும்”. 

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2011இல் நடைபெற்ற கோடைகால வகுப்பில் திரு. ஸஞ்ஜய் ஸஹானி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.


📝 நிகழ்வு 120:

இந்தோனஷியாவில் உள்ள பாலி என்ற நகரத்திற்கு இளைஞர்கள் மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக நான் சென்றிருந்தேன். மாநாடு முடிந்தவுடன் நாங்கள் அனைவரும் பாலியில் உள்ள ஸாயி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே ஒருவர் அந்த மையத்தின் வரலாற்றைக் கூறத் தொடங்கினார்.  ஒரு கட்டிட வடிவமைப்பாளரிடம் இந்த அழகிய ஸாயி கோவிலின் கட்டுமானப் பணி ஒப்படைக்கப் பட்டது. அவர் ஸ்வாமியைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. கட்டி முடிக்கப்பட்டவுடன் அங்கிருந்த ஸாயி பக்தர்கள் ஸ்வாமியின் ஒரு பெரிய படத்தை அந்த கூடத்தில் உள்ள பீடத்தில் நிறுவினர். ஸ்வாமியின் அந்த அழகான படத்தை அப்போது பார்த்த வடிவமைப்பாளர், “ஓ! இவருக்குத் தானா நீங்கள் இந்தக் கட்டிடத்தைக் கட்டியுள்ளீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பக்தர்கள் ‘ஆமாம்’  என்று கூறிவிட்டு, ‘எதற்காகக் கேட்டீர்கள்?’ என வினவினர். அதற்கு அவர், “இந்தக் கட்டிட நிர்மாணம் தொடர்பாக எதை எப்படி செய்ய வேண்டும், எப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று என்னிடம் இங்கே தினசரி வந்து எனக்கு அறிவுரைகள் கூறிக்கொண்டிருந்தார்!”

புட்டப்பர்த்தி எங்கே, பாலி எங்கே? ஆனால், ஸ்வாமி பாலியில் அந்த வடிவமைப்பாளருக்கு வழிகாட்டிக்கொண்டு இருந்திருக்கிறார் ! தன் பக்தர்களிடம் செல்லாமல், நேராக கட்டிட வடிவமைப்பாளரிடமே சென்று உதவி இருக்கிறார். இதுதான் ஸ்வாமியின் விஸ்வரூபம் என்பது.

ஆதாரம்: ப்ரசாந்தி நிலையத்தில் 2011இல் நடந்த ‘ப்ரசாந்தி வித்வன் மஹாசபா’வில் திரு. ஸஞ்ஜய் ஸஹானி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.


📝 நிகழ்வு 121:

ஒரு தடவை ஸ்வாமி ஒரு மாணவனை மருத்துவப் படிப்பைத் தேர்வுசெய்யும்படி கூறினார். தான் அதற்குத் தேவையான மதிப்பெண்களைப் பெறவில்லை என்று தன் இயலாமையைக் கூறினான். உடனே ஸ்வாமி அவனுக்குத் தான் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார்; அதன் போலவே செய்தார். இந்த விஷயங்களை அறிந்த நாங்கள் ஸ்வாமியிடம், “ஸ்வாமி! எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. தகுதியில்லாத ஒருவருக்கு எப்படி சீட்...?” என்று கேட்டோம்! அதற்கு அவர் அளித்த பதில், அவரிடத்தில் உள்ள மனிதநேயம் மற்றும் கருணையின் உச்சத்தை எங்களுக்கு எடுத்துக் காட்டியது. ஸ்வாமி, எங்களிடம், “அவன் தன் தாயை இழந்துவிட்டான். தன் மகன் மருத்துவர் ஆக வேண்டும் என்பதுதான் அவளது இறுதி ஆசையாக இருந்தது. அவள் இப்போது உயிருடன் இல்லாததால் நான் அவளது பாத்திரத்தை ஏற்று அவனுக்கு உதவுகிறேன். அவன் மருத்துவராவதற்கு ஆவன செய்வேன்!” என்றார்!!

ஆதாரம்: “ஸாயி-சோலஜி” என்ற திரு.அனில் குமார் எழுதிய நூலில் இருந்து.


📝 நிகழ்வு 122:

ஒரு தடவை ஸ்வாமி, மாணவர்களுக்கு ஒரு பெட்டியில் இருந்த லட்டுக்களைப் பரிமாற முடிவு செய்து, அந்த லட்டுப் பெட்டியைக் கொண்டுவரும்படி இந்தப் புத்தகத்தின் ஆசிரியரைப் பணித்தார். பிறகு ஸ்வாமி உள்ளே சென்றவுடன், அவர் ஒரு மாணவனை அழைத்து அந்தப் பெட்டியை எடுத்துவரச் சொன்னார். ஸ்வாமி அந்தநேரத்தில் வெளியே வந்து இவர் ஒரு மாணவனை ஏவுவதைப் பார்த்துவிட்டார். உடனே அவரைப் பின் வருமாறு கடிந்துகொண்டார் : “நானே அந்த மாணவர்களிடம் சொல்லியிருக்கலாம். நான் உனக்குக் கொடுத்த வேலையை நீ ஒரு மாணவனிடம் கொடுத்திருக்க வேண்டாம். நான் உனக்குக் கொடுத்த சேவை செய்வதற்கான வாய்ப்பை நீ இழந்துவிட்டாய். திரும்பவும் இந்த வாய்ப்பு உனக்குக் கிட்டாமல் போகலாம்.”
என்ன நடந்தது? இந்தச் சம்பவம் நடந்தபோது, இந்த ஆசிரியர், கல்லூரியின் முதல்வராக இருந்தார். ஆகையால் மாணவர்களின் நடுவில் ஒரு லட்டுப் பெட்டியைத் தூக்கிச் செல்வது தன் மரியாதைக்குக் குறைந்த ஒரு செயல் என்று எண்ணினார். அவரது ஆணவம் இந்த செயலைச் செய்ய அனுமதிக்கவில்லை. ஆணவம் இருக்கும் வரை அங்கே ஆன்மீகத்திற்கு இடம் இல்லை. அப்போது தன்னைத் தான் உணர்வது என்பது முற்றிலும் இயலாத ஒன்றாகிவிடுகிறது. சேவையே நமக்குப் பணிவைக் கற்றுக்கொடுக்கின்றது. மேலும், நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கும் இரும்புத் திரையான ஆணவத்தை அகற்ற உதவுகின்றது.

ஆதாரம்: “ஸாயி-சோலஜி” என்ற திரு.அனில் குமார் எழுதிய நூலில் இருந்து.


📝 நிகழ்வு 123:

ஒருநாள் மாலை பஜனை நேரத்தில் ஸ்வாமியின் தரிசனத்திற்காகக் காத்திருந்தோம். அவர் தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்து மெதுவாக மகளிர் பக்கம் நடக்க ஆரம்பித்தார். ஸ்ரீ ராஜா ரெட்டி, “ஹே ப்ரம்மா ஹே விஷ்ணு” என்ற பஜனையைப் பாடிக்கொண்டிருந்தார். அந்தக் கணம் ஸ்வாமி ஒரு நிமிடம் அங்கேயே நின்றார். பாடலின் “மஹாசக்தி சிவ ஸாயி சங்கர” என்ற வரி பாடகரின் மிருதுத்தன்மையும் இனிமையும் வாய்ந்த குரலில் ஒலிக்க, அதே நேரத்தில் ஸ்வாமியின் தரிசனமும் ஒன்றுசேர, “நாம் பரம்பொருளின் சன்னிதியில் இருக்கிறோம்” என்ற விழிப்புணர்வு மேலோங்கி, கண்ணீர் பெருகியது. அந்த நொடியில், ஸ்வாமி என்னை நோக்கி வருவதை நான் உணர்ந்தேன். என் ஈரக் கண்களால் பார்க்கமுடிந்தது. அவர் என் முன்னால் வந்து நின்று, நான் அமைதியுடனும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என எனக்கு அறிவுறுத்தும் வகையில் அவரது மிருதுவான கை விரல்களால் என் தோள்பட்டகளை மெதுவாக அழுத்தினார். அவர் எங்கும் இருக்கும்போது எதற்காக பயப்படவேண்டும்? உடனே நான் அழுவதை நிறுத்திவிட்டு பஜனையைத் தொடர்ந்தேன். பஜனை முடிந்தபின்னர் நான் என் குடும்பத்தில் உள்ள மற்றவர்களைச் சந்தித்தபோது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது; அதுதான், ‘ஸ்வாமி அன்று மாலை ஆண்கள் பக்கமே வரவில்லை’ என்ற செய்தி!! ஒரே நேரத்தில் ஸ்வாமி பல இடங்களில் இருப்பார் என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இத்தகைய தெய்வீக நிகழ்விற்கு நான் ஒரு சாட்சியாக இருப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஆதாரம்: ஜூலை 2016 ஸனாதன ஸாரதி இதழில் திரு.வி.ஜானகிராம் பாய் எனும் பக்தரின் பதிவு.


📝 நிகழ்வு 124:

கொடைக்கானலில் ஒரு தடவை ஈஸ்வரம்மா தினத்தன்று நாராயண சேவை மற்றும் புடவைகள் வழங்குதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “இதற்காக எத்தனை பேரால் மலையேறி வரமுடியும்?” என்று என் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. அதற்கான சமையல் முடிந்து உணவு பரிமாறத் தொடங்கினர். ஆனால் பல நூறு பேர் வந்திருந்தனர்! மேலும் பலர் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர்! அந்த நேரத்தில் நான் சமையல் அறைக்குச் சென்றபோது ஒரு மாணவன் என் காதில் கிசுகிசுத்தான்: *“ஸார்! என்ன சமைத்திருந்தோமோ அனைத்தும் தீர்ந்துவிட்டது! நீங்கள் சென்று ஸ்வாமியிடம் தெரிவியுங்கள்”* என்று. நான் உடனே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஸ்வாமியிடம் சென்று, மெதுவான குரலில், “ஸ்வாமி, சமைத்தது அனைத்தும் தீர்ந்துவிட்டது” என்றேன். என்னை மிகவும் கூர்மையாகப் பார்த்துவிட்டு, “நீ என்ன சொல்கிறாய்..? தீர்ந்துவிட்டது என்று யாரும் சொல்லக்கூடாது. தொடர்ந்து பரிமாறிக்கொண்டே இருங்கள்!” என்று கூறினார். நான் உடனே சமையலறைக்குச் சென்று பார்த்தவுடன் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது! அனைத்துக் காலிப் பாத்திரங்களும் இப்போது உணவு வகைகளுடன் நிறைந்து காணப்பட்டன! இப்பேற்பட்ட அற்புதத்திற்கு நானே சாட்சியாக இருந்தேன். பல வரிசைகளில் அமர்ந்திருந்த மக்களுக்கு திரும்பவும் பரிமாற ஆரம்பித்தோம். முடிவில் ஸ்வாமி திரும்பவும் பின்வருமாறு கோபித்துக் கொண்டார்: “ஏன் ‘தீர்ந்துவிட்டது’ என்று கூறினாய்? ‘இல்லை’, ‘தற்போது கைவசம் இல்லை’ போன்ற சொற்களை நாம் என்றும் சொல்லக்கூடாது. ‘தீர்ந்துவிட்டது’ என்பதற்கு பதிலாக ‘போதவில்லை’ என்று சொல்லவேண்டும்” என்று அறிவுறித்தினார்.

ஆதாரம்: ‘நெக்டார் ஆஃப் டிவைன் மெலடீஸ்’ என்ற அனில் குமார் எழுதிய புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 125:

ஸிந்து மாகாணத்தைச் சேர்ந்த அகதி ஒருவர், மன நலம் குன்றிய தனது மகளுடன் ப்ரசாந்தி நிலையத்திற்கு வந்திருந்தார். அவள் எந்த ஒரு காரணமும் இன்றி அழுவாள், சிரிப்பாள், இங்கும் அங்குமாகத் திரிவாள், வெறி பிடித்தவள் போல் காணப்படுவாள். ஒரு சில சொற்களை மட்டும் திரும்பத் திரும்ப முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள். ஒரு சில வாரங்களுக்கு அவளது செயல்பாடுகளை ஸ்வாமி பொறுத்துக் கொண்டார். அவர்கள் பர்த்தியை விட்டுச் செல்லுமுன் அவளைக் குணப்படுத்துவதாக ஸ்வாமி அவளது தந்தையிடம் உறுதி அளித்திருந்தார். அந்த நேரம் வந்தவுடன் ஸ்வாமி அவர்களது அறைக்குச் சென்றார். அவளது புருவங்களின்மேல் விபூதியைத் தடவினார். உடனே அவள் ஸ்வாமியின் நாற்காலியின் முன்னால் ‘பொத்’தென்று கீழே விழுந்தாள். ஸ்வாமி தனது உள்ளங்கைகளை அவளது தலையின் இரண்டு பக்கங்களிலும் வைத்து அழுத்த ஆரம்பித்தார். மேலும் மேலும் அவர் அழுத்த அழுத்த, தலைமுடியின் வேர்களிலிருந்து அடர்ந்த பழுப்புநிறம் கொண்ட ஒரு திரவம் வெளிவரத் தொடங்கியது. ஒரு பத்து ‘அவுன்ஸ்கள்’ இருக்கும் அந்த திரவம் மிகுந்த துர்நாற்றம் கொண்டதாக இருந்தது. அந்த திரவத்தின் வரத்து நின்றவுடன் ஸ்வாமி எழுந்திருந்து, தன் கைகளை சோப்பினால் கழுவிக்கொண்டார். பிறகு அந்தக் குடும்பம் ஒரு மாட்டுவண்டி மூலம் புக்கப்பட்டணம் சென்று அங்கிருந்து தர்மாவரம் புகைவண்டி நிலையம் நோக்கிப் பயணித்தனர். மூன்று வருடங்கள் கழித்து ஸ்வாமி மும்பை சென்றிருந்தபோது அங்கு உள்ள ஸிந்து அகதிகளின் காலனிக்குச் சென்று இந்தத் தந்தை மற்றும் மகளைச் சந்தித்து ஆசிவழங்க விழைந்தார். ஸ்வாமி வரப் போகிறார் என்று தெரிததும் அவர்கள் வீட்டில் குழுமிய பக்தர்களை கவனிக்கும் பணியில் அந்தப் பெண் மும்முரமாக ஈடுபட்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்! மேலும் அவள் மிகுந்த ஆர்வத்துடனும் கணீரென்ற ஒரு குரலுடனும் பஜனைகள் பாடினாள்! அந்த காட்சி, ஆனந்தத்தில் துள்ளும் ஒரு பெண்ணாக ஸ்வாமி தன்னை மாற்றியிருக்கிறார் என்பதை அனைவருக்கும் அவள் நிரூபணம் செய்வது போலிருந்தது.

ஆதாரம்: திரு. கஸ்தூரி அவர்கள் எழுதிய ‘லவிங் காட்’ என்ற புத்தகத்திலிருந்து....


📝 நிகழ்வு 126:

ஒருதடவை, பெங்களூரில் இருக்கும்போது ஸ்வாமி, வில்ஸன் கார்டன்ஸ் என்னும் இடத்தில் உள்ள ‘அசோகா’ என்ற பெயருள்ள என் வீட்டிற்கு வருவதாகத் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் நாங்கள் இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்தோம். பகவானின் வரவையொட்டி என் மனைவி , அவதாரத்தின் தனித்துவத்தைப் பற்றிய ஒரு பாடலைப் பாடுவதற்கு முடிவுசெய்து, பலமுறை பாடிப் பார்த்துக்கொண்டார். என்ன ஒரு ஆச்சரியம் என்றால், ஸ்வாமி காரில் இருந்து, அதே பாடலை மெல்லியகுரலில் பாடிக்கொண்டே இறங்கி, எங்கள் பூஜை அறை வரை வந்தபின், என் மனைவியை, தொடர்ந்து பாடும்படி பணித்தார்! ‘பாபா, பரம க்ருபாநிதியே’ என்ற வரியுடன் அந்தப் பாடல் தொடங்கும். அது மட்டுமல்ல, என் அன்னையிடம் வந்து அவள் இயற்றிய ‘நான் கண்ட மணிகளிலே..’( நான் கண்டு ரசித்த விலை மதிப்பற்ற இரத்தினங்களில் ‘ஸாயிராம்’ என்ற இரத்தினத்தைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை) என்ற பாடலைப் பாடச் சொன்னார். இவ்வாறு என் அன்னைக்கும் அளவற்ற மகிழ்ச்சியை அளித்தார். 
என் அன்னை அவர் பாதங்களில் விழுந்து வணங்கியபோது, “மிக நன்றாகப் பாடினாய்” என்று கூறினார். பிறகு என்னை கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுக்கச் சொன்னார். அப்போது அவர் என்னிடம், “ஸதா ஹ்ருதயதல்லி" ( எப்போதும் என் இதயத்தில்..) என்று தொடங்கும் நான் எழுதிய பாடலைப் பாடச் சொன்னார்! இந்தப் பாடலைத் தான் எங்கள் பெங்களூர் வீட்டில் நடக்கும் பஜனைகளின் முடிவில் ஆரத்தி பாட்டாகப் பாடுவோம்! ( நான் அவரிடம் இதைப் பற்றிக் கூறியதில்லை!) 
“ஆகையால், நம் வீட்டில் நடக்கும் பஜனைகளை அவர் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்” என்று நாங்கள் எங்களுக்குள் சொல்லிக்கொண்டோம்!!

ஆதாரம்: திரு. கஸ்தூரி அவர்கள் எழுதிய ‘லவிங் காட்’ என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 127:

ஸ்வாமி ஒரு குடும்பத்தை இன்டர்வியூவிற்கு அழைத்தார். அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனிடம், “உனக்குப் பிடித்தமானது எது?” என்று கேட்டார். அவனருகில் அமர்ந்திருந்த தாய், “ஸ்வாமிதான் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று அவன் பதில் அளிக்க வேண்டும் என்று ஸ்வாமியிடமே மனதாரப் பிரார்த்தித்தார் ! ஆனால் அந்தச் சிறுவனோ மிகவும் வெகுளியாக, “எனக்கு ரோல்ஸ் ராய்ஸ் (கார்) மிகவும் பிடிக்கும்” என்று பதிலளித்தான்! இதைக் கேட்ட ஸ்வாமி, மலர்ந்த முகத்துடன், “அப்படியென்றால், உனக்கு கார்கள் மிகவும் பிடிக்கும். நீ எனக்கு உன் காரைத் தருவாயா?” என்று கேட்டார். சில நொடிகள் யோசித்துவிட்டு அவன், ”நான் என் காரை உங்களுக்குக் கொடுக்க முடியாது. ஆனால், அதை ஓட்டுவதற்கு உங்களுக்கு உரிமை அளிக்கிறேன்” என்றான்!! 
ஸ்வாமி உடனே ஆனந்தமான ஒரு புன்னகையுடன், “இதையே தான் நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்! உன்னுடைய கார் எனக்குத் தேவையில்லை; ஆனால் அதை ஓட்டும் உரிமையை எனக்கு அளித்துவிடு !”
என்று, அரியதொரு ஆன்மீக இரகசியத்தை மிக எளிதாகக் கூறிவிட்டார்!
ஆகவே, ‘நம் உடல்’ என்னும் வாகனத்தை இறைவன் ஓட்டும்போது, அவர் எப்போதும் நல்ல பாதையையே தேர்ந்தெடுத்து, சரியான இடத்தையே நாம் சென்றடைய வழிவகுப்பார் என்ற உண்மையை நாம் முழுமையாக நம்பவேண்டும்.

ஆதாரம்: அனந்தபுரம் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவி, 
குமாரி. ஜி. ஷில்பா அவர்கள், பிரசாந்தி வித்வன் மஹாசபா-2012இல் ஆற்றிய உரையிலிருந்து.


📝 நிகழ்வு 128:

நவம்பர் 7, 1984 : 
ஒளிமயமான காலைப் பொழுதில், ஸ்வாமியின் தரிசனத்திற்காக ஆவலுடன் காத்திருந்தோம். அவர் வெளியே வந்தவுடன், என்னையும் சேர்த்து நான்கு மாணவர்களைத் தேர்ந்தெடுத்தார்; உள்ளே ஒரு அறையில் பொருட்களை ஒழுங்காக அடுக்கிவைத்து சுத்தம் செய்யுமாறு பணித்தார். அவர் தன் தரிசனத்தை முடித்துக் கொண்டு நேராக எங்களிடம் வந்தார். அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த மான் தோல் ஒன்றைக் காட்டி, எங்களில் ஒருவரிடம், “இதனை எடுத்துக் கொண்டு ஹிமாலயம் சென்று தவம் மேற்கொள்கிறாயா?” என்று கேட்டார்! திடீரென்று தன் மீது தொடுக்கப்பட்ட இந்தக் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அந்த மாணவர் தவித்துப்போனார்! ஸ்வாமி உடனே என்னைப் பார்த்து, “ஹிமாலயத்தில் தவம் செய்வது நல்லதா?” என்று வினவினார்! நான் உடனே,“ ஆமாம், ஸ்வாமி” என்றேன். ஆனால் அவர் திருப்தி அடையவில்லை.
அவர், தன்னைச் சுட்டிக் காண்பித்துக் கொண்டு “அனைத்துத் தவங்களின் குறிக்கோளும் முடிவும் இங்கேயே இருப்பதை உங்களால் உணரமுடியவில்லையா?” என்றார்! அவர் மேலும், “ஹிமாலயத்தில் தவம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நான் அவ்வப்போது ஒரு சில நொடிகள் தரிசனம் அளித்தாலே அவர்கள் கடவுளின் தரிசனம் கிடைத்த ஆனந்தத்தில் திளைக்கின்றனர். அதனை ஒரு மிகப்பெரிய அனுபவமாகக் கருதுகின்றனர். ஆனால், நீங்களோ தினமும் காலையிலும் மாலையிலும் என் தரிசனம் கிடைக்கப் பெறுகிறீர்கள்; ஆனால் அதன் மகத்துவத்தை நீங்கள் உணர முற்படுவதில்லை” என்றார்!

🐘 யானையைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலுடன் மக்கள் காட்டிற்குச் செல்வர். ஆனால் அங்கே ஒரு புதருக்குள் மறைந்து காணப்படும் யானையின் வால் பகுதி மட்டும் தெரிந்தால் போதும்! ஏதோ, யானையை முழுமையாகப் பார்த்த மகிழ்ச்சி அடைவர். ஆனால் உங்களது நிலைமை என்னவென்றால், உங்கள் ஹாஸ்டல் முன்பே ஸாயி கீதா இருக்கும் போதிலும், அதனைப் பார்க்கவேண்டும் என்னும் அவா உங்களிடத்தில் எழுவதில்லை, ஏனெனில், உங்களுக்கு அதனைப் பார்த்து பார்த்துப் பழகிவிட்டது!.

ஆதாரம்: டிசம்பர் 2020 ஸனாதன ஸாரதி இதழில், முன்னாள் மாணவர் 
ரபின் தியாலி அவர்கள் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 129:

பெங்களூரில் நாகரத்தினம்மா என்ற புகழ் பெற்ற பாடகி இருந்தார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தவத்திரு தியாகராஜ ஸ்வாமிகள், அவரது கனவில் தோன்றி, “நீ புட்டப்பர்த்திக்குச் சென்று பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபாவின் சன்னிதியில் பாடு. அவர் எனது தசரத ராமனே ஆவார்” என்று கூறினார். உடனே அவர் புட்டப்பர்த்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அப்போது ஸ்வாமி வெங்கடகிரியில் இருப்பதாகத் தெரிந்துகொண்டார். அவர் மீண்டும் வெங்கடகிரி ராஜாவிற்குக் கடிதம் எழுதினார்; அதில் தனக்குத் தோன்றிய கனவினைத் தெரியப்படுத்தி, தான் ஸ்வாமியின் சன்னிதியில் பாடுவதற்கு அனுமதி கேட்டார். பிறகு ஸ்ரீ க்ருஷ்ண ஜன்மாஷ்டமியன்று அவர் பாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர் ஸ்வாமியின் எதிரில் இரண்டு மணிநேரம் பாடினார்; ஸ்வாமியும் அவருடன் அவ்வப்போது சேர்ந்து பாடினார்! பகவான் அவருக்கு வெள்ளியில் ஒரு ஸ்ரீராமர் சிலையை ஸ்ருஷ்டி செய்து கொடுத்து, ‘நாளை உன்னுடன் பேசுகிறேன்’ என்றார். 
சிலையைப் பெற்ற நொடியிலிருந்து சுமார் 24 மணிநேரத்திற்கு மேல் நாகரத்தினம்மா தன்னை மறந்த பரமானந்த நிலையில் இருந்தார்! ஸ்வாமி மறுநாள் அவரிடம், ‘உன்னுடைய ஆசை என்ன?’ என்று கேட்டார். 
அதற்கு அவர், “நான், என் உதடுகளில் உங்களுடைய நாமத்தை உச்சரித்தபடியே அமைதியாக உயிர் துறக்க வேண்டும்” என வேண்டினார். ஒரு வருடத்திற்குள்
அவரது விருப்பம் அவர் நினைத்தபடியே நிறைவேறியது.

ஆதாரம்: ‘ஸத்யம் சிவம் சுந்தரம்’ , பாகம் 1.


📝 நிகழ்வு 130:

ஒரு முறை நாங்கள் ஸ்வாமியிடன் ஒரு ஊரில் தங்கியிருந்தபோது எங்களுடன் வந்திருந்த இளைஞர் ஒருவர் , மதிய உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னால், எங்களுக்கு விருந்தளிப்பவரிடம் ஒரு டம்ளர் மோர் கேட்டார். அது முறையாக அவருக்குக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டாலும், பதினைந்து நிமிடங்கள் தாமதமாயிற்று. அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இதன் மூலம் அவரது தாகம் தணிந்தது. அந்த நேரம் ஸ்வாமி எதேச்சையாக அங்கு வந்தார். காலியான மோர் டம்ளர் அங்கே ஜன்னலின் அருகே வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். எங்களில் ஒருவர் மோர் தரச் சொல்லி அந்த விருந்தளிப்பவருக்குத் தொந்தரவு கொடுத்திருப்பதாக அறிந்துகொண்டார். இதனால் அவர் மிகுந்த கோபமுற்றார். அந்த வீட்டின் உரிமையாளர்கள் நமக்கு என்ன கொடுக்கின்றார்களோ அவற்றுடன் நாங்கள் திருப்திப் படவேண்டும் என்று ஸ்வாமி வலியுறுத்தினார். நமது ஆசைகளின் உந்துதல்களைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்றும், நமக்கு விருந்தளிப்பவர்களுக்கு நம்மால் ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்காக அனுதாபப் படவேண்டும் என்றும் கூறினார். சகிப்புத்தன்மையை எப்பாடுபட்டாவது வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறித்தினார். மேலும், அவர், நாம் உணவு உண்பதற்காக அமரும்போது நாம் கடைபிடிக்கவேண்டிய நடத்தை முறைகளைப் பற்றி விளக்கினார். ஒரு உணவுப் பொருளை, தனக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக இரண்டாவது முறை அதைப் பறிமாறச் சொல்வதைத் தவிர்க்கவேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வு மிகவும் சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் ஸ்வாமி , நம் இந்திரியங்களைக் கட்டுப்படுத்தும் ஆன்மீக சாதனையை நாங்கள் வளர்த்துக் கொள்வதற்கு ஏதுவாகப் பயன்படுத்தினார்.

ஆதாரம்: திரு. கஸ்தூரி அவர்கள் எழுதிய ‘லவிங் காட்’ என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 131:

கொடைக்கானலுக்கு சென்றிருந்தபோது, ஒருநாள் ஸ்வாமி 25 பஞ்சு மிட்டாய்கள் வாங்கினார்! அவை அவரது கார் முழுதும் நிரம்பியிருந்தன! அவற்றை அங்கிருந்த முக்கியமான நபர்களுக்கு வழங்கினார். அவர்கள் அதைப் பார்த்தவுடன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அதைக் கவனித்த ஸ்வாமி, 
“நான் ஏன் இவற்றை வாங்கினேன் தெரியுமா? இங்கே கொடைக்கானலில் பல முதியோர்கள் உள்ளனர். அவர்களால் நடந்து சென்று தொழிலில் ஈடுபடமுடியாது. அவரது குழந்தைகள் பஞ்சு மிட்டாய் விற்று வாழ்க்கை நடத்துகின்றனர். நான் அவற்றை வாங்கும்போது, அதில் கிடைத்த பணத்தைத் 
தன் பெற்றோர்களிடம் அளிப்பதன் மூலம் அவர்களது வாழ்க்கை தொடர்கிறது” என்று கூறினார். 
25 பஞ்சு மிட்டாய்களுக்கு நாம் கொடுக்கும் விலை சாதாரணமான ஒரு பணமாக இருக்கும். ஆனால் ஸ்வாமி அவர்களுக்கு ஐநூறு ரூபாய் அளித்தார்! அதனால் நான் ஸ்வாமியிடம், “ஸ்வாமி, நீங்கள் அதன் உண்மையான விலையை விட மிக அதிகமாகவே கொடுத்திருக்கிறீர்கள்” என்றேன். உடனே ஸ்வாமி, “அது அந்தப் பொருளின் விலை அல்ல. அவர்கள் மீது ஸ்வாமி கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடு ஆகும்” என்றார்! இந்த நிகழ்வு என்னில் ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆதாரம்: மே 2006 ஸனாதன ஸாரதி இதழில் திரு. அனில் குமார் அவர்கள் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 132:

1978இல், ஒருநாள் என் தந்தை யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டுப் போய்விட்டார். நாங்கள் எங்கள் சொந்த ஊரான ‘கலிம்பாங்’கைச் சுற்றி எல்லா இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. தனது ஜபமாலையையும் சில மத சம்பந்தமான புத்தகங்களையும் அவர் எடுத்துக்கொண்டு சென்றிருப்பது பிறகு தெரியவந்தது. அதன்மூலம், அவர் ஒருவேளை பிரசாந்தி நிலையத்திற்குச் சென்றிருக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றியது. அவரது கைவசம் அப்போது ஒரு ஐநூறு ரூபாய் தான் இருந்தது. அதை நினைத்து நாங்கள் மிகவும் கவலைப்பட்டு, “ஸ்வாமி, நீங்கள் உண்மையிலேயே கடவுள் என்றால், தந்தையை மீட்டுத் தரவேண்டும்” என்று வேண்டினோம்.
தற்செயலாக அன்று மாலையே ஸ்வாமி பர்த்தியில் என் தந்தையை அழைத்து, “உன் குடும்பத்தில் யாருக்கும் தெரிவிக்காமல் நீ ஏன் இங்கு வந்துள்ளாய்? உடனே திரும்பிச் செல்” என்று கூறினார்! ஆனால் திரும்பிச் செல்வதற்குத் தேவையான பணம் அவர் கையில் இல்லை. மறுநாள் ஸ்வாமி வைட்ஃபீல்ட் சென்றுவிட்டார். அவரும் ஸ்வாமியைப் பின் தொடர்ந்து வைட்ஃபீல்ட் சென்றார். மறுநாள் காலை அவர் அங்கு திரிந்துகொண்டிருப்பதைக் கவனித்த ஸ்வாமி, “இன்னும் நீ வீட்டிற்குச் செல்லவில்லையா?” என்று கேட்டார்.

 அதற்கு அவர் பதில் ஏதும் அளிக்கவில்லை. இறுதியில் ஸ்வாமி அவரை இன்டர்வியூவிற்கு அழைத்து பெரும் அளவு விபூதியை ஸ்ருஷ்டித்து, அவரிடம் கொடுத்து வீட்டிலுள்ள அனைவரிடமும் கொடுக்கும்படி கூறினார். அவர் விபூதியைத் தன் நேபாளத் தொப்பியிலே பெற்றுக்கொண்டு தன் அறைக்கு வந்து பார்த்தபோது அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. விபூதியுடன் சேர்ந்து அவர் ஊருக்குச் செல்வதற்கான சரியான தொகையும் அந்த தொப்பியினுள் இருந்தது! அப்போதுதான் ‘தான் ஊருக்குச் செல்லவேண்டும், அதுதான் ஸ்வாமியின் விருப்பமும் கூட’ என்று உணர்ந்தார். உடனே பயணச் சீட்டும் வாங்கிக்கொண்டு ஊர் வந்துசேர்ந்தார்.

ஆதாரம்: ஏப்ரல் 2016 ஸனாதன ஸாரதி இதழில், டாக்டர்.ஆர்.பி.திவாரி அவர்கள் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 133:

இன்டர்வியூ அறையில் புத்தி சுவாதீனம் இல்லாத ஆறு வயது குழந்தையை தன் மடியில் வைத்திருந்தாள் ஒரு தாய். அந்தக் குழந்தை அரற்றிக் கொண்டும், தன் தாயை அடித்துக்கொண்டும் அவள் தலைமுடியைப் பற்றி இழுத்துக்கொண்டும் இருந்தது. அவர்கள் இருவரையும் மிகக் கடுமையான பார்வையுடன் நோக்கி, “இங்கிருந்து வெளியே போ !” என்றார்! உடனே அந்த தாய் எழுந்தவுடன் எனது குரங்கு மனம் , ”ஸ்வாமி! நீ எப்படி இதைச் செய்யலாம்?” என்று கேட்டது. உடனே ஸ்வாமி, “உன்னை வெளியே போகச் சொல்லவில்லை, நீ உட்கார்” என்றார்! நாங்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அந்த நொடியிலிருந்து அந்தக் குழந்தை அமைதியானது. அந்தக் குழந்தையிடம் இருந்த நோயை வெளியே போகச் சொன்னார் போலும்!
ஸ்வாமி தாயிடம் “நீ என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவள்” என்றும், “உன் குழந்தை உனக்குக் கிடைத்த ஒரு தனிப்பெரும் ஆசீர்வாதம்” என்றும் கூறினார். 

ஆதாரம்: ஆகஸ்ட் 2013 ஸனாதன ஸாரதி இதழில் டாக்டர். வி. கே. ரவீந்திரன் அவர்கள் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 134:

ஸ்வாமி பழைய மந்திரத்தில் இருந்த காலங்களில் ஆஸ்பத்திரி, மருத்துவர் மற்றும் செவிலியர் இல்லாததால், நாங்கள் மிகவும் அதிருஷ்டசாலிகளாக இருந்தோம்! நாங்கள் எப்போதும், தெய்வீக மருத்துவரான ஸ்வாமியையே அணுகினோம். என் அன்னை தாங்கமுடியாத கால் மூட்டு வலியால் தவித்தார். அதை ஸ்வாமியிடம் அவர் சொன்னபோது, ஸ்வாமி சர்வசாதாரணமாக, “காலை வெட்டி சித்ராவதியில் போட்டுவிடு” என்றார்! கேட்பதற்கு கேலிசெய்வதைப் போல இருந்தாலும், அவரது மூட்டு வலி அன்றிலிருந்து அடியோடு போய்விட்டது! ஒருவர் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டார். ஸ்வாமி அவருடன் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருக்கையில், திடீரென்று அவரது முதுகில் ஓங்கிக் குத்தினார்!
 அந்த நொடியில் அவர் வலி தாங்காமல் கத்தினாலும், முதுகுவலி அவரைவிட்டு நீங்கியது! என் தந்தைக்கு அவ்வப்போது தலை சுற்றல் வருவது வழக்கம். ஒருநாள் ஸ்வாமி அவரைத் தன் அறைக்கு அழைத்து சுவர் ஓரமாக நிற்கவைத்து அவரது கால்விரல்கள் முதல் தலை வரை உடம்பை அழுத்தமாகப் பிடித்துவிட்டார். பிறகு அவரது இரண்டு பொட்டுகளையும் அழுத்திப் பிடித்தார். அப்போது என் தந்தையால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஸ்வாமியின் முகத்தையும் கைகளையும் பார்த்து, அவர் எவ்வளவு கடுமையாக அழுத்துகிறார் என்பது பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்குப் புரிந்தது. அப்போது கருப்பு நிறத்தில் ஒரு பசை போன்ற ஒரு பொருள் என் தந்தையினது நெற்றியின் மத்தியிலிருந்து வெளிப்பட்டது. ஸ்வாமி, “உங்கள் சொந்தங்களில் ஒருவர் பொறாமை காரணமாக அவருக்கு விஷம் அளித்துவிட்டார். இனிமேல் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என்றார்! 

ஆகையால், பழைய மந்திரம் ஒரு வெறும் சாதாரணமான இடமாக இல்லை; வியாதிகளைக் குணப்படுத்தும் ஒரு கோவிலாகவே இருந்தது. இன்றும் அவர் நமது பல வியாதிகளைக் குணப்படுத்தி வருகிறார்.

ஆதாரம்: அக்டோபர் 2019 ஸனாதன ஸாரதி இதழில் குப்பம் விஜயம்மா அவர்கள் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 135:

ஜனவரி 6, 1963 – வைகுண்ட ஏகாதசி நாள். ஸ்வாமி கிண்டியில் உள்ள ஷிர்டி ஸாயிபாபா கோவிலுக்கு வந்து அங்கு நடைபெற்ற அபிஷேகத்தைப் பார்வையிட்டார். அங்கிருந்து கிளம்பும்போது, ஸ்வாமியுடன் மஹாபலிபுரம் செல்லவிருக்கும் பக்தர்கள் ஆழ்வார்பேட்டையில் குழுமியிருந்ததால் என்னையும் அங்குசென்று அவர்களுடன் சேர்ந்துகொள்ளுமாறு பணித்தார். ஆனால் நான் அங்கு சென்று சேர்வதற்கு முன்னதாகவே அவர்கள் ஸ்வாமியுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். ஆகையால் மிகுந்த ஏமாற்றத்துடன் நான் கிண்டிக்குத் திரும்பினேன்.
மறுநாள் நான் கல்லூரிக்குச் செல்வதற்கு முன்னால் ஸ்வாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றிருந்தேன். அப்போது ஸ்வாமி, ஒரு வெள்ளித் தட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 6 அங்குலங்கள் உயரமுள்ள விஷ்ணு மற்றும் க்ருஷ்ணரின் வெள்ளி சிலைகளை என்னிடம் காண்பித்து, எது எனக்குப் பிடித்திருந்ததோ அதனை எடுத்துக்கொள்ளும்படி கூறினார். முந்தையநாள் அவற்றை மஹாபலிபுரத்தில் ஸ்ருஷ்டி செய்ததாக என்னிடம் கூறினார்.
நான் 1962இல் என் வீட்டைவிட்டு வெளியேறியபோது, ஸ்வாமி எனக்கு ஏற்கனவே கொடுத்திருந்த வெங்கடேஸ்வரர் மற்றும் பல ஸ்வாமி சிலைகள் உள்பட என் அனைத்து உடைமைகளையும் இழந்துவிட்டிருந்தேன். அந்த சமயத்தில் எனது இழப்புகளைப் பற்றி வருத்தத்துடன் நான் ஸ்வாமியிடம் கூறியபோது, அவர், “அழியப்போகின்ற படங்கள் மற்றும் உருவங்களுக்கு நீ ஏன் முக்கியத்துவம் கொடுக்கின்றாய்? உருவங்களுக்கு அப்பால் செல்வதற்கு முயற்சி செய்” என்று கூறியிருந்தார்.
 ஆகையால், இந்த தடவை, அப்போது அவர் கூறியவற்றை எடுத்துச் சொன்னேன்! உடனே அவர் “நான் உன்னை சோதனை செய்து பார்த்தேன்” என்றார்! ஸ்வாமியின் ஒரு சோதனையில் வெற்றி பெற்றுவிட்டதை எண்ணி மனமகிழ்ச்சி அடைந்தேன். 

அவர் மிகுந்த வேலைப்பாடுகள் கொண்ட தங்கத்தினாலான அழகிய அம்ருத கலசத்தை அருகிலிருந்து எடுத்தார். முந்தைய நாள் அந்த கலசத்தில் ( மஹாபலிபுரத்தில்) ஸ்ருஷ்டிக்கப்பட்டிருந்த அம்ருதத்தை ஒரு தங்கத் தேக்கரண்டி மூலம் அவர் எனக்கு அளித்தார்.
அவரது அபரிமிதமான அன்பை எண்ணி என் கண்கள் குளமாயின...
.
ஆதாரம்: எம்.எல்.லீலா அவர்கள் எழுதிய ‘லோகநாத ஸாயி’ என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 136:

1973 இல் ஸ்வாமி ஒருநாள் என் கனவில் வந்து, (ப்ருந்தாவனில் நடந்த) கோடைகால (ஆன்மீக) வகுப்பில் கலந்துகொள்ளுமாறு உத்தரவிட்டார். ஆனால் எனக்கு லீவு கிடைப்பது அரிதாக இருந்தது. ஆகையால் நான் முயற்சி எடுக்கவில்லை. மறுநாளும் என் கனவில் வந்து என்னை ‘சோம்பேறி’ என்று கூறினார்! மேலும் என்னை சமிதிக்குச் சென்று விவரங்களைக் கேட்கச் சொன்னார். நான் அவர்களிடம் கேட்டபோது , ஏற்கனவே உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டதாகத் தெரிவித்தனர்.

ஆகையால், கனவு உண்மையா என்பதைப் பரிசோதிக்க, வகுப்புகள் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக வைட்ஃபீல்ட் சென்று அங்கு உள்ள ‘ஸாயிராம் ஷெட்’டில் மாலை தரிசனத்திற்காக அமர்ந்தேன். தரிசனம் முடித்துத் திரும்பிச் செல்கையில் ஸ்வாமி என்னிடம் வந்து, “நீ எப்போது வந்தாய்?” என்று கேட்டார்! நான், “இப்போதுதான் ஸ்வாமி” என்றேன். உடனே ஸ்வாமி, “இங்கேயே இரு. நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் நாளைக்குச் சொல்கிறேன்” என்றார்! மறுநாள் காலை மற்ற டாக்டர்களுடன் நான் அமர்ந்திருந்தேன். வகுப்பின் தொடக்க நிகழ்ச்சிக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் எங்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர் எங்களுக்கு அடையாள அட்டை (பேட்ஜ்) கொடுத்து என்னை, பங்குகொள்ளும் மகளிர் தங்குமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த வைத்தியசாலையில் ஒரு மாதம் பணிபுரியும்படி பணித்தார். உடனே நான் எனது பணி மேலாளருக்கு ஒருமாத லீவு அளிக்கும்படி தந்தி அனுப்பிவிட்டுத் தங்கிவிட்டேன்.

ஆதாரம்: டாக்டர் சாந்தம்மா எழுதிய ‘டிவைன் டாக்டர்’ என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 137:


நாங்கள் அனைவரும் பால ஸத்ய ஸாயியைச் சுற்றிப் படுத்துக் கொண்டிருப்போம். ஒருநாள் இரவு அவர் 3 மணிக்கு என் 
அம்மாவை எழுப்பி “ராதாம்மா எனக்குப் பசிக்கிறது. தோசை செய்து கொடு” என்றார். அம்மா உதவிக்காக என்னை அழைத்தார். நாங்கள் மாவு தயார் செய்து கல்லில் இடுவதற்குத் தயாரானோம். அப்போது அவர், “தோசை செய்யும்போது ‘உஸ்’ என்ற சப்தம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த சப்தம் கேட்டு மற்றவர்கள் எழுந்துவிடுவார்கள்” என்றார்! என் அம்மாவிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அதனால் அவர் ஸ்வாமியிடம், “சுவாமி நான் என் வேலையைச் செய்கிறேன். கல்லிலிருந்து சப்தம் வராமல் நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்! ஆனால் எங்களுக்கு நம்பவே முடியவில்லை! தோசை தயாராகும்போது எந்த சப்தமும் வரவில்லை! ஸ்வாமி, மூன்று தோசைகளை சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். மறுநாள் காலை ஸ்வாமி கலை உணவிற்கு வந்து உட்கார்ந்தபோது சிறிது நிம்மதியற்றுக் காணப்பட்டார்; தன் வயிற்றைத் தேய்த்து விட்டுக் கொண்டார். எப்போதும் வழக்கமாக அவரது தேவைகளை கவனித்துவந்த சாகம்மா கவலையுடன் ஸ்வாமியிடம் வந்தார். அவர் ஒன்றும் அறியாத நிரபராதி போன்ற பார்வையுடன் பின்வருமாறு முணுமுணுத்தார்:

 "நேற்று நடுஇரவில் ராதாம்மா என்னை எழுப்பி தோசைகளை சாப்பிட வைத்தார். ஆகையால் நான் இப்போது மிகுந்த அசௌகரியத்தை உணர்கிறேன்” என்றார். இதைக் கேட்ட சுற்றியிருந்த எல்லா மகளிரும் எங்கள் இருவர் மீதும் சிங்கங்கள் போலப் பாய்ந்தனர்! சாகம்மா உடனே ஓடிச் சென்று ஸ்வாமிக்கு ஒரு மாத்திரை கொண்டு வந்தார். அவர் அடக்கமான பையன்போல் அதை வாங்கி விழுங்கிவிட்டார்! இதைப் பார்த்த எங்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, ஏனென்றால் ஸ்வாமி ஒருபோதும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டதில்லை! நாங்கள் கவலை கொண்டோம். மாத்திரை உட்கொண்டதைப் பார்த்த சாகம்மா ஒரு மன நிறைவுடன் அங்கிருந்து சென்றுவிட்டார். ஸ்வாமி அப்போது என்ன செய்தார் என்பதை யாராலும் ஊகித்திருக்க முடியாது! அவர் தன் தலையை வேகமாக ஆட்டினார். உடனே அந்த மாத்திரை கீழே விழுந்து விட்டது!! இது ஒரு மனிதப் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

ஆதாரம்: அக்டோபர் 2019 ஸனாதன ஸாரதி இதழில் குப்பம் விஜயம்மா அவர்கள் எழுதிய பதிவு.📝 நிகழ்வு 138:

ஒரு தடவை ஸ்ரீ வி.கே. நரசிம்மன் அவர்கள் வைட்ஃபீல்ட் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஸ்வாமி ஆபரேஷன் தியேட்டருக்குள் வந்தார். அப்போது சில மருத்துவர்கள் இருந்தனர். ஸ்வாமி, ”நான் தொப்பியும் முகக்கவசமும் அணியவேண்டுமா?” என்று என்னைக் கேட்டார்! உடனே நான், “ஸ்வாமி! உங்களுக்குத் தேவையில்லை” என்றேன். “ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “ ஸ்வாமி! நீங்கள் யாருக்கும் தீங்கு செய்வதில்லை.
 ஆகையால் எந்த ஒரு நோய் தொற்றிற்கும் நீங்கள் காரணமாகமாட்டீர்கள் . நீங்கள் இருக்கும் இடத்தில் எந்த ஒரு நுண்கிருமியும் அண்டாது” என்று கூறினேன். ஸ்வாமி சிரித்துக் கொண்டே, “சரிதான். ஆனால் இங்கே இருக்கும் மற்ற மருத்துவர்களுக்குத் தெரியாது. ஆகையால் நீ அவர்களுக்கு எடுத்துச் சொல்லிவிடு. இல்லையெனில் அவர்கள் தவறாக எண்ணிவிடுவார்கள்!” என்றார்! நான் பிற மருத்துவர்களிடம் சென்று விளக்கினேன். ஸ்வாமி சிரித்துக்கொண்டே, “நன்றாகப் புரிந்துகொண்டுள்ளாய்” என்றார்.

முனிவர்களும் துறவிகளும் நதிகளில் நீராடும்போது, நதிகள் சுத்தம் அடைகின்றன என்று சொல்லப்படும்போது, இறைவனின் அவதாரத்தைப் பற்றி என்ன சொல்வது?

ஆதாரம்: டாக்டர் சாந்தம்மா எழுதிய ‘டிவைன் டாக்டர்’ என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 139:

1994இல் என் தந்தை மிகுந்த நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு உடல்ரீதியான பல சிக்கல்கள் இருந்தன. அவரைப் பல சிறப்பு மருத்துவர்கள் பரிசோதித்து அவருக்கு ஏற்ற சிகிச்சைகளை அறிவுறித்தியிருந்தனர். அதன்படி நான் அவரைக் கவனித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் ஸ்வாமி என் கனவில் தோன்றி, “உன் தந்தைக்கு என்ன நேர்ந்துள்ளது?” எனக் கேட்டார்!
நான் அவருக்கு அனைத்தையும் விவரித்தேன். அதற்கு அவர், “நீ என்னிடம் சொல்லவில்லை” என்றார்! நான் உடனே, “ஸ்வாமி! நீங்கள் மாணவர்களுடன் ஊட்டியில் இருந்ததால் நான் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை” என்றேன். அவர், ”நான் ஊட்டியில் இருப்பதால் என்ன ஒரு மாற்றத்தை நீ எதிர்பார்த்தாய்?” என்று நான் சொன்னதை ஏற்காதது போல உரைத்தார். நான் உடனே மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். 

இந்த கனவிற்குப் பிறகு என் தந்தை மிக விரைவாக குணமடையத் தொடங்கினார். இந்த வயதில் அவர் குணமடைய சாத்தியம் இல்லை என்று மருத்துவர்கள் கூறினாலும், மூன்று அல்லது நான்கு வாரங்களில் அவர் முற்றிலும் குணமாகிவிட்டார்.

ஆதாரம்: டாக்டர் சாந்தம்மா எழுதிய ‘டிவைன் டாக்டர்’ என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 140:

நான் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும்போது என் கண்களில் ஒரு புதிய நோய் தோன்றியது. அது எனக்கு மிகுந்த வலியையும் தந்தது. என்னுடைய வேலைகளை சரிவர செய்யமுடியவில்லை. ஆகையால் நான் ஸ்வாமியிடம் என் கண்களை குணப்படுத்துமாறு வேண்டினேன். ஒருநாள் ஸ்வாமி என்னிடம் சிரித்துக் கொண்டே “நீ யாரோ ஒருவரைத் தீய பார்வையால் பார்த்ததால்தான் உனக்கு இந்த துன்பம் ஏற்பட்டுள்ளது” என்றார்! என்னுடைய பிறந்த நாளன்று நான் அவரிடம் என் கண்களுக்காக மீண்டும் மன்றாடியபோது, எதிர்பாராத விதமாக அவர் ஒரு மோதிரத்தை எனக்காக ஸ்ருஷ்டி செய்தார்! அதனை எனக்குக் காண்பித்து, “இதில் உள்ளது யார்?” என்று கேட்டார். நான், “ஹனுமான்” என்றேன். அவர் உடனே என்னைத் திருத்தும் விதத்தில் அவருக்கே உரித்த பாணியில், “அவர் உன்னுடைய அண்ணன்” என்றார்! 

அவரால் ஏற்படுத்திக் கொடுத்த இந்த உறவு, எனக்கு, உடல் வலிமையும் மன வலிமையும் ஒருங்கே பெற்றிருந்த ஹனுமானிடம் ஒரு தனிப்பட்ட முறையில் ஒரு அன்யோன்யத்தையும்  அருகாமையையும் உண்டாக்கியது. அந்த காலகட்டத்தில் இந்த இரு குணங்களும் எனக்கு மிகவும் அவசியமானவைகளாக இருந்தன!

ஆதாரம்: ஆகஸ்ட் 2017 ஸனாதன ஸாரதி இதழில், ஸ்ரீ. விவேக் குமார் கொண்டி என்ற பழைய மாணவரின் பதிவு.


📝 நிகழ்வு 141:

தனது பதினைந்தாவது வயதில், யாரும் பார்த்திராத, உண்டிராத ஒரு பழத்தைத் தன் கையால் ஸ்ருஷ்டி செய்தார். பெத்தவெங்கப்ப ராஜுவின் தமக்கை ஸ்வாமியிடம் அந்தப் பழத்தைப் பற்றி கேட்டபோது அவர் அது ஷீர்டியிலிருந்து வந்ததாகத் தெரிவித்தார். மாலையில் பஜனை நடக்கும் சமயம் அந்தப் பழத்தை நறுக்கி அனைவருக்கும் கொடுக்கலாம் என்று ஸ்வாமி கூறியதற்கு அவர், ஸ்வாமி ஒவ்வொருவருக்கும் ஒரு முழுமையான பழம் அளித்தால் அதன் சுவையை நன்கு  உணர முடியும் என்று ஸ்வாமியிடம் கேட்டுக்கொண்டார். உடனே ஸ்வாமி அவரை ஒரு பெரிய கூடை ஒன்றை மூடியுடன் எடுத்துவரச் சொன்னார். அந்தக் கூடையை மெதுவாகத் தட்டினார். உடனே அந்தப் புதுவிதமான பழங்களால் கூடை முற்றிலும் நிரம்பியது! ஆனால் மாலையில் பஜனை தொடங்கியபோது திடீரென்று நூறுபேர் இருந்ததால், தனக்கு ஒரு பழம் முழுமையாகக் கிடைக்காதோ என்று அஞ்சினார்; ஏனெனில் அந்தக் கூடையில் சுமார் நாற்பது பழங்கள் தான் இருந்திருக்கும்! ஆகையால் தனது பயத்தை ஸ்வாமியிடம் தெரிவித்தார். ஆனால் ஸ்வாமியோ அந்தக் கூடையிலிருந்து நூறு பேருக்கும் தலா ஒரு பழம் கொடுத்து முடித்தார்! அந்தப் பழம் வினோதமாகவும் இனிப்பாகவும் இருந்தது!

ஆதாரம்: திரு. பி. குருமூர்த்தி அவர்களால் தொகுக்கப் பெற்ற “மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்”, (இரண்டாம் பாகம்) என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 142:

ஒரு பக்தர் ஸ்வாமியின் தரிசனத்திற்காகத் தன் மனைவியுடன் புட்டப்பர்த்திக்கு வந்தார். ஸ்வாமி சாதாரணமாக அவரிடம் நலம் விசாரித்தார். மறுநாள் தரிசனத்தின் போது ஸ்வாமி அவரிடம், “நீ வீட்டைப் பூட்டுவதற்கு மறந்துவிட்டாய். உடனே திரும்பிச் செல்” என்றார்! ஸ்வாமி உண்மையாகத்தான் கூறியிருக்கிறார் என்று தான் ஊருக்குச் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது! அவர் பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது ஏதும் களவு போகவில்லை என்பது தெரியவந்தது. அனைத்துப் பொருள்களும் அப்படியே அவைகள் வைக்கப்பட்டிருந்த இடங்களில் இருந்ததைப் பார்த்து நிம்மதி அடைந்தார். அடுத்த வீட்டுக் காவல்காரர் இவரைப் பார்த்துவிட்டு, “நீங்கள் ஊருக்குச் சென்றிருந்தபோது காவலாளி ஒருவரை நியமித்துவிட்டுச் சென்றீர்களா?” என்று கேட்டார்! அதற்கு இவர் ‘இல்லை’ என்று பதிலளித்தார். “அப்படியென்றால், ஆரஞ்சுநிற அங்கியுடனும், பரந்த கூடு போன்ற தலைமுடியுடனும் ஒருவர் கடந்த மூன்று நாட்கள் உங்கள் வீட்டு வாசலில் காவல் பணி செய்தாரே, அவர் யார்?” என்று அந்த பக்கத்து வீட்டு காவலாளி கேட்டார்!

இதனைக் கேட்ட இவர், ஸ்வாமிதான் வந்திருக்கிறார் என்ற உறுதியுடன் ஸ்வாமியின் அளவற்ற கருணையை எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தார்.

ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இண்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.📝 நிகழ்வு 143:

த்ரயீயில் ஸ்வாமியுடன் வழக்கம்போல மாணவர்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. ஸ்வாமி ஒரு மாணவனின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தார். திடீரென்று ஸ்வாமி தன் கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமைதியாகிவிட்டார். பிறகு தன் கண்களைத் திறந்து, வார்டனை அருகில் அழைத்தார். அவரிடம், "கேட்’டின் அருகில் ஒருவர் மிகுந்த கவலையுடன் நின்று கொண்டிருக்கிறார். அவரை உள்ளே அழைத்து வா” என்றார்!. வார்டன் உடனே சென்று அவரை உள்ளே அழைத்து வந்தார். அவர் ஸ்வாமியைப் பார்த்த மறு நொடியே , “ஸ்வாமி…” என்று ஆரம்பித்தவுடன் ஸ்வாமி அவர் பேசுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு, “எனக்குத் தெரியும், உன் மகன் அமெரிக்காவில் ஒரு விபத்தில் சிக்கி அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு அவசரமாக ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் அவர் தன் கண் பார்வையை இழக்க நேரிடும் என்றும் கூறுகின்றனர். ஆனால் நீ கவலைப்படாதே. உன் மகனுக்கு ஃபோன் செய்து, என் ஆசியும் கருணையும் அவருக்கு உள்ளதாகச் சொல். அவரது கண்களுக்கு ஒன்றும் ஆகாது. அவர் தன் பார்வையை மீண்டும் பெறுவார்” என்று ஆறுதல் அளித்தார். ஸ்வாமி தன்னிடம் நேராகவே இந்த உறுதியை அளித்தும் அவர் ஸ்வாமிக்கு எழுதிக்கொண்டு வந்த கடிதத்தை ஸ்வாமி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டியதைப் பார்த்த அனைவர் முகத்திலும் புன்சிரிப்பு தோன்றியது! அவரது மனம் திருப்தி அடைவதற்காக ஸ்வாமி அந்த கடிதத்தை வாங்கிக்கொண்டார்.

ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இண்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 144:

இங்கிலாந்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூனா என்ற பெண்மணி கண்பார்வையற்றவராக இருந்தார். 1994இல் பக்தர்கள் பலருடன் சேர்ந்து அவர் பிரசாந்தி நிலையத்திற்கு வந்தார். ஸ்வாமி அவர்களுக்கு இன்டர்வியூ அளித்தார். அப்போது இந்தப் பெண்மணியிடம் “அனைத்து நோய்களுக்கும் இறைவனே சிகிச்சையும் மருந்தும் ஆவார்” என்று ஸ்வாமி கூறினார். எந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று ஸ்வாமியிடம் அவர் கேட்ட போது ஸ்வாமி அவருக்கு ஒரு மோதிரத்தை வரவழைத்து, அதனைக் கொடுக்கும்போது அவரது காதில் ஒரு மந்திரத்தையும் உச்சரித்தார்! அதனைக் கேட்டு மிகவும் பரவசம் அடைந்த மூனா, “ உண்மையிலேயே நீங்கள் அல்லாவே தான்! உங்களுக்கு என் நன்றி கலந்த கோடி வணக்கங்கள்” என்று உரத்த குரலில் ஸ்வாமியிடம் கூறினார்! பிறகு மூனா தன் நண்பர்களிடம், “பாபா எனக்கு அளித்த மந்திரம் குர்ஆனில் உள்ளது! அது மிகப் பழமையான மந்திரம் ஆகும்! அதன் பொருள்: இறைவன் ஒருவனே; அவனிடம் நாம் சரணாகதி செய்யவேண்டும்” என்பதாகும். நான் முஸ்லீம் மதத்தை சார்ந்தவள் என்பதை அவர் எவ்வாறு அறிந்தார் என்பதை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது! நான் என் மதத்தை மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்பதை இப்போது நான் நன்றாகப் புரிந்துகொண்டேன்! இன்னும் சொல்லப்போனால், நான் மேலும் ஒரு சிறந்த முஸ்லீமாக என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று உணர்ந்துள்ளேன்!” என்று கூறினார்.

ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இண்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 145:

வெளிநாட்டிலிருந்து ஒரு மானிடவியல்(ஆந்த்ரோபாலஜிஸ்ட்) நிபுணர் பர்த்திக்கு வந்திருந்தார். ஸ்வாமி மோதிரம், கைக்கடிகாரம், விபூதி போன்றவற்றை வரவழைப்பதைப் பார்த்தார். இப்படிப்பட்ட வஸ்துக்களைத்தான் ஸ்வாமியால் ஸ்ருஷ்டிக்க முடியும் என் நினைத்தார். ஸ்வாமி அவரை ஒருநாள் இன்டர்வியூவிற்கு அழைத்தார். முதன்முதலாக உலகில் உயிரினம் தோன்றியதன் விதத்தைப் பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனது இடது உள்ளங்கையின் மேல் வலது உள்ளங்கையை வைத்து மூடிவிட்டு சில நொடிகளுக்குப் பின் ஸ்வாமி மெதுவாக வலது கையை உயர்த்த ஆரம்பித்தார். அப்போது ஸ்வாமியின் இடது கையில் மிகச்சிறிய அளவிலான ஒரு குரங்கு இருப்பதைக் கண்டு திகிலுற்றார்! ஸ்வாமி தனது வலது உள்ளங்கையை உயர்த்த உயர்த்த அந்தக் குரங்கு பெரிதாகிக்கொண்டே வந்தது! ஸ்வாமி அதற்கு நடமாடுவதற்கான சக்தியை அளித்தபின்னர் அறை முழுவதும் நடமாடத்தொடங்கியது! ஸ்வாமி ஒரு வாழைப்பழத்தை வரவழைத்து அதற்கு ஊட்டினார். அந்த சமயம் இந்த நிபுணரை நோக்கிப் புன்முறுவல் பூத்தார்! அவர் தனது தவறான எண்ணங்களுக்காக வெட்கப்பட்டு, வாயடைத்து நின்றார்! ஸ்வாமி மீண்டும் அந்தக் குரங்கைத் தன் கைகளால் பிடித்து அதனை மெதுவாக வருடினார். ஸ்வாமியின் கை அழுத்தம் அதிகரிக்க அந்தக் குரங்கு மாயமானது!

ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இண்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 146:

இந்தியாவின் முன்னாள் அமெரிக்க தூதரான கீடிங் என்பவர் ஸ்வாமி தரிசனத்திற்காக புட்டப்பர்த்திக்கு வந்தார். ஸ்வாமி அவருக்கு இன்டர்வியூ அளித்தார். அப்போது அவருக்கு மிக உயர்ந்த விலைமதிப்புள்ள ‘பேடக் ஃபிலிப்பே’(Patek Philippe) என்ற பெயர் உள்ள கைக்கடிகாரத்தை வரவழைத்தார். அவர் அமெரிக்கா சென்றவுடன் அந்தக் கைக்கடிகாரம் விற்கப்பட்ட கடையைத் தேடிக் கண்டுபிடித்தார்; அது விற்பனையான விவரங்களைப் பற்றிக் கேட்டார். அதன் வரிசை எண்ணைக் குறித்துக்கொண்ட விற்பனையாளர், “இந்த கைக்கடிகாரத்தை, ஆரஞ்சு நிற அங்கி அணிந்திருந்த ஒரு துறவி போன்று காட்சியளித்த ஒருவர் வாங்கிக்கொண்டு சென்றார்” என்று பதிலளித்தார்!

இதனை எழுதியவர், “இது ஒரு உலக ரீதியான வணிகமாயினும், நிகழ்த்தியது தெய்வீக சக்தி ஆகும்” என்று குறிப்பிடுகிறார்.

ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இண்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 147:

ப்ரசாந்தி நிலையத்தில் வசித்த சீதாலக்ஷ்மி என்பவர் நீரிழிவு மற்றும் இதய நோய்களால் அவதிப்பட்டார். டாக்டர்.அல்ரேஜா அவர்கள் சீதாலக்ஷ்மிக்கு சிகிச்சை அளித்துவந்தார். ஒருநாள் டாக்டர், மந்திரத்தின் வெராண்டாவில் பஜனைக்காக அமர்ந்திருந்தார். ஸ்வாமி அவரிடம் வந்து, “இப்போதுதான் எனக்குத் தந்தி வந்தது. சீதாலக்ஷ்மிக்கு உடம்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. உடனே சென்று அவருக்கு அவசர சிகிச்சை அளி” என்று கூறினார். டாக்டர் உடனே அவரது இல்லத்திற்கு விரைந்தார். அங்கு சீதாலக்ஷ்மி நினைவில்லாமல் கிடந்தார். அவரது இதயத் துடிப்பு மிகவும் அசாதாரணமாக இருந்தது. இரத்த அழுத்தம் மிகக் குறைவாக இருந்தது. அருகில் இருந்த மேசையின் மேல் ஒரு ஊசியும் உபயோகப்படுத்தப்பட்ட ஊசிமருந்துக் குப்பியும் இருந்தன. சீதாலக்ஷ்மி தானாகவே இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டிருப்பார் என அல்ரேஜா நினைத்தார். உடனே அவர் க்ளுகோசை ஊசி மூலம் உடம்பில் ஏற்றினார். சில நொடிகளில் சீதாலக்ஷ்மி சுயநினைவுற்றார். அவர் தன் வெறும் வயிற்றில் இன்சுலின் எடுத்துக்கொண்டுள்ளார். அல்ரேஜா அவரது மகனைப் பார்த்து , ‘ நீ ஸ்வாமிக்குத் தந்தி அனுப்பினாயா?’ என்று கேட்டார். அதற்கு அவர் ‘இல்லை’ என்று பதிலளித்தார்! சுயநினைவற்றுக் கிடந்த தன் தாயைப் பார்த்த மகன், ஸ்வாமியின் படத்தின் எதிரில் நின்றுகொண்டு தாயைக் காப்பாற்றுமாறு ஸ்வாமியிடம் மனமுருக வேண்டிக் கொண்டுள்ளார். திரும்பி வந்தவுடன் ஸ்வாமியிடம் டாக்டர் இதைப் பற்றிக் கேட்டபோது, ஸ்வாமி, “இறைவனின் உருவம், படம் மற்றும் சிலை முன் நின்று, முழு நம்பிக்கையுடன் இதயத்தின் அடிமட்டத்திலிருந்து எழுப்பப்படும் வேண்டுதல்கள் உடனே அவனிடம் சென்றடைகின்றன. கருணைக் கடவுள் உடனே காப்பாற்றுவார். தூர இடைவெளி என்ற கேள்விக்கு இடமே இல்லை. மிகுந்த வேதனையில் உள்ளோர் பர்த்திக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. அவரவர் எங்கு இருக்கிறார்களோ அங்கிருந்து வேண்டிக் கொண்டாலே போதும்” என்று பதிலளித்தார்.

ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இன்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.📝 நிகழ்வு 148:

ஸ்வாமி பெங்களூரிலிருந்து பர்த்திக்கு தன் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு இடத்தில் பாம்பு ஒன்று சாலையைக் கடந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனர், தான் திடீரென்று பிரேக் போடுவதால் ஒரு குலுக்கல் ஏற்பட்டு ஸ்வாமிக்கு அசௌகரியத்தைத் தரும் என்பதால், அவர் அதை செய்யாமல் பாம்பின் மீதே காரை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டார். பர்த்தியை அடைந்த மறு நிமிடமே கார் ஓட்டுனரைத் தம்முடன் அறைக்கு வருமாறு பணித்தார். உள்ளே சென்றவுடன் தன் அங்கியைத் தூக்கிவிட்டுத் தன் முதுகைக் காண்பித்தார். அங்கே கார் சக்கரத்தின் பதிவு இருப்பதைப் பார்த்த ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார். அதிர்ச்சியிலிருந்து மீண்ட அவர், “ஸ்வாமி! கார் உங்கள் மீது ஓடியதைப் போல சக்கரத்தின் பதிவை நான் காண்கிறேன்!” என்றார். ஸ்வாமி, “உதவியற்ற நிரபராதியான அந்த ஜந்துவின் மேல் ஈவிரக்கமின்றி காரை ஓட்டிவிட்டு வேறு என்ன எதிர்பார்க்கிறாய்? ஆகையால் அதைக் காப்பாற்றுவதன் பொருட்டு நான் குறுக்கிட வேண்டியதாயிற்று. இதில் உனக்கு ஒரு பாடம் அமைந்தது. எந்த ஒரு ஜீவராசியையும் துன்புறுத்தாதே. ஸ்வாமி எல்லா ஜீவராசிகளிலும் உள்ளார். அது துன்பத்திற்கு உள்ளானால், ஸ்வாமியைத் துன்புறுத்தியதற்கு ஒப்பாகும்”.
இதனைக் கேட்ட அவர் ஸ்வாமியின் கால்களில் கண்ணீருடன் வணங்கி மன்னிக்க வேண்டினார்.

ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இன்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 149:

1972இல் ஜஸ்டிஸ் பத்மா கஸ்தகிர் அவர்களுடைய கனவில் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர் தோன்றி ஒரு மந்திரத்தை உபதேசித்தார். காலையில் எழுந்தவுடன் தான் ஒரு புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்ந்தார். கனவின் எல்லா பகுதிகளையும் அவரால் ஞாபகப் படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால் அந்த மந்திரம் மட்டும் அரைகுறையாக ஞாபகத்திற்கு வந்தது. சில நாட்களில் அவர் அந்த மந்திரத்தை முழுமையாக மறந்துவிட்டார். எவ்வளவு முயற்சித்தும் அவரால் முடியவில்லை. அதே வருடம் அவர் பர்த்திக்கு வந்தார். ஸ்வாமி அவரை இன்டர்வியூவிற்கு அழைத்து முழுமையான திருப்தி அடையும் விதமாக அவரிடம் பேசினார். அவரது மகளுக்கு எனாமல்லில் செய்யப்பட்ட ஸ்வாமி படம் உடைய ஒரு பதக்கத்தை ஸ்ருஷ்டி செய்தார். அதன் பிறகு அவருக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அதைக் கேட்ட ஜஸ்டிஸ் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார், ஏனெனில் அது தன் கனவில் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர் உபதேசித்த அதே மந்திரம் தான்!!

ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இன்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.📝 நிகழ்வு 150:

கேரள மாநிலத்தில் உள்ள மஞ்சேரி என்னும் ஊரில் ஸ்ரீ. ராம மோஹன ராவ் என்பவரும் அவரது மனைவியும் ஷீர்டி பாபாவின் மீது ஆழ்ந்த பக்தி உடையவர்களாக இருந்தனர். அவர்கள் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவைப் பார்த்திராவிட்டாலும் அவரது படத்தையும் தங்கள் பூஜை அறையில் வைத்திருந்தனர். அவர்களது மகள் ஷைலஜாவின் பக்திக்கு மெச்சி, 1964ஆம் வருடம் டிசம்பர் 13ஆம் நாள் ஸ்வாமி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் இவர்களது வீட்டிற்கு வந்தார். ஸ்வாமியின் வருகை பற்றிய செய்தி மிக வேகமாக அந்த ஊரில் பரவ, நிறைய பக்தர்கள் அங்கே குவியத் தொடங்கினர். அவர்கள் ஸ்வாமியின் முன் பஜனை செய்தனர்.
ஸ்வாமி சங்குமாலை ஒன்றை வரவழைத்து ராவுக்கு அளித்தார். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரிடமும் ஸ்வாமி அவர்களது தாய்மொழியான கன்னடத்திலும் மேலும் தமிழ், மற்றும் மலையாளத்திலும் பேசினார்.
பிறகு யாரும் தன்னைப் பின் தொடர வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஸ்வாமி வெளியேறிவிட்டார். வீட்டின் வெளியே சென்றவுடன் தான் மாயமாய் மறைவதை யாரும் பார்ப்பதற்கு அவர் விரும்பவில்லை போலும்! பத்து நாட்கள் கழிந்த பின்னர் ( அதாவது 24ஆம் தேதி) ஸ்வாமி மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்து அவர்களுடன் அன்றைய பொழுதைக் கழித்தார்!

வெங்கடகிரி அரண்மனையில் உள்ள குறிப்பேடுகளின் படி, ஸ்வாமி அந்த நாட்களில் வெங்கடகிரியில்தான் இருந்தார்! அது மட்டுமல்ல; 13ஆம் தேதி ஸ்வாமி வெங்கடகிரியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார். அதற்காக அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டிருந்தன! ஸ்வாமி  வெங்கடகிரியை 12ஆம் தேதி சென்றடைந்து, அங்கு 24ஆம் தேதி வரை தங்கிவிட்டு, மீண்டும் ப்ருந்தாவனத்திற்கு வந்துள்ளார்.

 இந்த நிகழ்வை இரு இயல்பு-கடந்த-உளவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, உண்மையான நிகழ்வுதான் என்று ஆமோதித்தனர்!

ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இன்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக