தலைப்பு

ஞாயிறு, 27 ஜூன், 2021

ஒரு ஏழை கிழவியின் ஆசையை நிறைவேற்றிய தயாள சாயி! 

சுவாமி இறைவன். எப்படி? எப்படி எனில் இறைவனுக்கு ஏழை பணக்காரன்.. நல்லவன் கெட்டவன் என்ற எந்த பாகுபாடும் இல்லை. தன்னை தூற்றியவரையும் வாழ வைப்பவன். அனுபவம் தந்து மனம் மாறச் செய்பவன். அப்பேர்ப்பட்ட இறைவனே ஸ்ரீ சத்ய சாயி எனும் சத்தியம் விளக்கும் கருணை ததும்பிடும் பதிவு இதோ..

பின் வரும் சம்பவம் இறைவன் பணக்காரன் ஏழை என்ற பாகுடின்றி தூய அன்பிற்கு மட்டும் செவிசாய்ப்பவர் என்பதை விளக்குகிறது!

ஒரு ஏழைக் கிழவி தன் வறுமை காரணமாக தான் பஜனை ஹாலில் நுழைய தகுதியற்றவள் என தானே கருதிக்கொண்டு பஜனை ஹாலுக்கு வெளியே அமர்ந்தாள். யாவரும் அவளை உள்ளே அழைக்கவில்லை. அந்தப் பக்கம் பாபா வரமாட்டார் என்று தெரிந்தும், எப்படியோ அவர் அன்பு தனக்கு கிட்டிவிடும் என்று நம்பினாள். ஒருநாள் மாலை 4 மணிக்கு பாபாவின் ரூமுக்கு எதிரே இருந்த வராண்டா, பஜனை ஹால் எல்லாம் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அப்பொழுது, அப்போதைய உ. பி. கவர்னர் ராமக்ருஷ்ண ராவும் வந்திருந்தார். வெளியே வந்த பாபா வழக்கத்திற்கு விரோதமாக எதிர்திசையில் நடந்து இந்த பெண்மணியருகே வந்தார். பெண்கள் ஓடி வந்து என்ன நடக்கிறது என வியப்புடன் பார்த்தனர்.

பாபா இந்த வயதான ஏழைப் பெண்மணியிடம் வந்து, அம்மா, “நான் உங்கள் குழந்தை வந்திருக்கிறேன். கொஞ்சம் வெற்றிலை இருந்தால் கொடுங்கள்” எனக் கூறி அவளது அழுக்கு சுருக்குப் பையை தானே எடுத்து வாடிய வெற்றிலையும் பாக்கையும், காய்ந்து போன சுண்ணாம்பையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்! மிகவும் சுவைத்து சாப்பிட்டார்!!!

அந்த ஏழைக் கிழவி ஆனந்த கண்ணீர் பெருக்கினாள் கடவுளே வந்து தரிசனம் கொடுத்தது தனது ஆசையை நிறைவேற்றினாரே! தங்கத் தாம்பாளத்தில் பிரத்தியேகமாய் பாபாவுக்கு என தயாரிக்கப்பட்ட உயர்ந்த வகை வெற்றிலை வாசனை பாக்கை ஸ்ர்வ ஸாதாரணமாக மறுத்து தள்ளும் பாபா, இந்த ஏழைக் கிழவியின் அன்புக்காக உயர்ந்த வெற்றிலையை சுவைத்தார். அங்கிருந்த பெண்களும் கிழவியின் ஆனந்தக் கண்ணீர் மல்க அனுபவித்தனர்!!!

 ஆதாரம்: Baba Sathya Sai – Part II P - 289

தமிழில் தொகுத்தளித்தவர்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர். 


🌻 வெற்றி இ(ல்)லை என்பவருக்கும் சுவாமி மேல் கொண்ட பக்தி வெற்றியை இலையில் வைத்து தரும். ஆகச்சிறந்த வெற்றி என்பது சுவாமியிடம் சரணாகதி அடைவது மட்டுமே! மற்ற எந்த வெற்றியும் மனத் திருப்தி தருவதில்லை.. சுவாமி உள்ளிருக்கும் பக்தியை மட்டுமே பக்தர்களிடம் உற்று நோக்குகிறார். பக்குவம் அடையாமல் அவர் பக்கம் வருவதில்லை. அந்தக் கிழவியின் பழுத்த பக்திக்கே சுவாமி காட்டிய கருணை வெற்றிலை மாலையைக் கழுத்தில் அணிந்த அனுமனாய் இதயம் பூரித்துப் போகிறது!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக