தலைப்பு

வியாழன், 17 ஜூன், 2021

நாம் புல்லாங்குழலாக இருந்தால் - நம் சாயி புருஷோத்தமனுக்கு மிகவும் பிடிக்கும்!


காற்றினிலே வரும் கீதம், அது கண்ணனின் மோகன கீதம். கோவிந்தன் குழல்கொண்டு ஊதியபோது ஆவினங்கள்மேய்ச்சல் மறந்து நிற்க, அவை மடியில் பாலுண்ணும் கன்றுகள் பரந்தாமன் குழலின் இனிய கானம் கேட்டு மயங்கி நின்றனவாம். கண்ணன் அதரத்தின் வழியாக இன்னிசை பொழிய, புல்லாங்குழல் என்ன தவம் செய்ததோ? ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் அந்த நெருக்கத்தை,பெருமையை புல்லாங்குழலுக்கு அளித்தார்?இதற்கு பாபா கூறும் அற்புத விளக்கம் , நம் வாழ்வில் ஒளிகூட்டி வழி காட்டும் கலங்கரை விளக்கம்.


குழல் ஊதி கீதை பொழிந்திட்ட கிருஷ்ணன், தனது பிரியசஹி ராதைக்கு புல்லாங்குழலின் மேன்மையைப் பற்றி உணர்த்தியது என்ன? பகவான் பாபாவின் மனம் மயக்கும் நீதிக் கதையை கேட்போம்... 

மாயக்கண்ணன் அல்லவா. ராதா வருவதைப் பார்த்துவிட்டான். உடனே தூங்குவது போல கண்களை மூடி, கையிலிருந்த புல்லாங்குழலை கீழே சரியவிட்டான். அருகே வந்த ராதா அந்த புல்லாங்குழலைக் கையில் எடுத்து , ஏக்கக் குரலில் கேட்டாள். "ஓ முரளி நீ எவ்வளவு அதிர்ஷ்டம் செய்தவன். கிருஷ்ணர் கைகளில் சதா தவழ என்ன விரதம் அனுஷ்டித்தாய், எந்த நியமங்களை கடைபிடித்தாய், எத்தனை தலங்களை தரிசித்தாய்? பகவான் அருளால் புல்லாங்குழலும் பேசிற்று.

"ஓ அன்னை ராதா! நான் புலன்களின் இச்சையாகிய,பொறாமை, பேராசை, அஹங்காரம் முதலியவற்றிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவிட்டேன். ஆகவே பகவானின் ப்ரேமதாரா என் மூலமாக ஜெகத்தின் படைப்புக்கள் மீது தடையின்றி பாய்கிறது."

இனிதான குழலோசை நம்வழியே ஒலிக்க , பகவான் காட்டிய எளிதான வழி இதுவன்றோ. நாம் அனைவருமே ராதாக்கள் தானே. நம்வழியே பகவானின் ப்ரேமதாரா பெருகட்டும்...


ஆதாரம்: SSSMC

தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக