தலைப்பு

திங்கள், 8 மார்ச், 2021

51-100 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!


இறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..

📝 நிகழ்வு 51:


1959இல் ஒருமுறை ஸ்வாமி காருண்யானந்தா அவர்கள், சித்தூருக்குச் சென்றார்; தனது சங்கம் சம்பத்தப்பட்ட வேலைகளை அங்கே முடித்துக் கொண்டு அவர் புட்டப்பர்த்தியை நோக்கி பஸ்ஸில் பயணமானார். அப்போது, ஹார்ஸ்லீ ஹில்ஸ் என்ற இடத்திற்கு அருகில், பஸ் மேற்கொண்டு செல்லமுடியாமல் ஏதோ ஒரு கோளாறு காரணமாக நின்றுவிட்டது. அது இரவு நேரம் ஆனதால், அதில் பயணித்த குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அந்த நேரத்தில் ஸ்வாமி காருண்யானந்தா அவர்களின் எண்ன அலைகள் இவ்வாறாக ஓடத்தொடங்கின: “ஏன் இந்த பாபா, தரிசனம் வேண்டி வருவதற்கு விழைகின்ற பக்தர்கள் எளிதாக சென்றடைய முடியாமல் கஷ்டப்படும் விதமாக, ஏதோ ஒரு தொலைக்கோடியில் உள்ள இடத்தில் வாசம் செய்கிறார்?” சிலமணித்துளிகளுக்குப் பின்னர் அந்த பஸ் சரிசெய்யப்பட்டு, மீண்டும் நகரத்தொடங்கியது. அது முடிகுப்பா என்ற இடத்தை இரவு இரண்டு மணிக்குச் சென்றடைந்தது. அங்கிருந்து அவர் புக்கப்பட்டணம் நோக்கி வேறு ஒரு பஸ்ஸில் பயணிக்கவேண்டியிருந்தது. மேலும் புக்கப்பட்டணத்திலிருந்து ஒரு மாட்டுவண்டியின் மூலம் புட்டப்பர்த்தி வந்தடைந்தார். 

கஸ்தூரியின் மூலம் அவர் வந்தடைந்த செய்தி கேட்ட ஸ்வாமி அவரை உடனே தன்னிடம் வருமாறு பணித்தார். அவர் வந்தவுடன், ஸ்வாமி அவரிடம், “உன்னிடம் எத்தனை கார்கள் இருக்கின்றன?” என்றார். ஏன் ஸ்வாமி இப்படிக் கேட்கிறார் என்பதனை அறியமுடியாத அவர், பல வற்புறுத்தல்களுக்குப் பின்னர், மிகுந்த பணிவுடன், தன்னிடம் இரண்டு ஜீப்புகள், ஒரு கார் மேலும் ஒரு வேன் இருப்பதாகத் தெரிவித்தார். பிறகு, தனக்கென்று இந்த வசதிகள் இருக்கும்போது, பஸ்ஸில் வரவேண்டிய அவசியம் ஏன் என்று அவரை ஸ்வாமி வினவினார். ஸ்வாமி, மேலும் “நீ பஸ்ஸில் வந்ததோடு மட்டும் அல்லாமல், பக்தர்கள் எளிதாக வந்தடையமுடியாத, தொலைவில், ஏதோ ஒரு மூலையில் உள்ள இடத்தில் ஏன் பாபா வாசித்துக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வியை வேறு கேட்கிறாய்?” என்றார்! இதனைக் கேட்ட ஸ்வாமி காருண்யானந்தா அதிர்ச்சியடைந்தார்!

ஆதாரம்: “விட் அண்ட் விஸ்டம் ஆஃப் ஸ்ரீ ஸத்ய ஸாயி “ என்ற ஸ்ரீ பி. குருமூர்த்தி அவர்களின் (ஆங்கிலத்)தொகுப்பிலிருந்து.


📝 நிகழ்வு 52:


நான் அனந்தபுரம் கல்லூரியில் சேர்ந்த அந்த தொடக்க நாட்களில் நான் மிகவும், அதிருப்தியும் ஏமாற்றமும் கூடிய மனநிலையில் இருந்தேன். நான் மாணவிகளின் பட்டியலில் வெறும் ஒரு எண் மட்டுமே என்று எண்ணினேன். ஸ்வாமி என்னை நன்கு அறிவார் என்பதை நான் நம்பத் தயாராக இல்லை. நான் இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவி என்பதை ஸ்வாமி அறிய வாய்ப்பு இல்லாமலேயே நான் என் படிப்பைப் படித்து முடித்துவிடுவேன் என்று அடிக்கடி எண்ணினேன். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; ஒருநாள் மாலைப்பொழுதில் கல்லூரியின் வாசற்படியில் அமர்ந்துகொண்டு இவ்வாறான எண்ணங்களுடன் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். “ஸ்வாமிக்கு என்னை நிஜமாகவே தெரியுமா?” என்ற கேள்வி என் மனத்தில் மேலோங்கியது. அதே நேரத்தில் ஸ்வாமி என் தந்தையை, ப்ரசாந்தி நிலையத்தில் இன்டர்வியூவிற்கு அழைத்து, “உன் மகள் அனந்தபுரத்தில் இருக்கிறாள். அவள் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு படம் வரைந்துகொண்டு இருக்கிறாள்” என்றார்! நான் உண்மையாகவே அதைச் செய்வதுதான் என் வழக்கம்! மேலும் அவர் என் தந்தையிடம், “என்னுடைய சாந்நித்தியம் அனந்தபுரம் முழுவதும் நிறைந்துள்ளது என்றும், அவள் தன் இதயக் கதவுகளைத் திறந்துவைத்தால் இதனை அறிவாள் என்றும் அவளிடம் கூறு” என்றார்! இந்தச் செய்தி எனக்கு அந்தநேரத்தில் தேவைப்பட்ட சுகமான அதிர்ச்சியை அளித்தது. 

ஆதாரம்: டா. யு. ஸுமா ராவ், செப்டம்பர் 2020, ஸநாதன ஸாரதி


📝 நிகழ்வு- 53:


ஒரு மாணவன், நிறைய குறும்புத்தனமான செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், அவனைக் குறும்புக்காரப் பையன் என்று ஸ்வாமியே அழைப்பார். ஆசிரியர்கள் பலமுறை எச்சரித்தும், அவனைத் திருத்துவதற்கான முயற்சிகள் பல மேற்கொண்டும், தன்னுடைய நடத்தைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு சிறிதளவும் தோன்றவில்லை. ஆகையால் ஒரு தடவை ஸ்வாமி, அவனையும் அவனது பெற்றோர்களையும் இன்டர்வியூவிற்கு அழைத்தார். அங்கு ஸ்வாமி பெற்றோர்களிடம்,” உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மகன் மிகவும் நல்ல பையன். நல்ல கட்டுப்பாடுகளை உடையவன்; ஹாஸ்டலில் தினமும் அட்டவணை நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கு கொள்வான். மேலும் ஹாஸ்டலில் மிக நல்ல முறையில் செயலாற்றுவான். மொத்தத்தில் அவன் ஸ்வாமி இன்ஸ்டிட்யூட்டில் ஒரு தங்கமான மாணவன்” என்று புகழ்ந்தார். தான் செய்த தவறுகள் தனக்கு மட்டுமே தெரியும் என்றும், தன்னைத்தவிர, , உடல்ரீதியாக ஆசிரியர்கள் மூலம் நேராகவும், அனைத்தும் அறிந்தவர் என்ற முறையிலும் ஸ்வாமியும் அறிவார் என்றும் அந்த மாணவன் அறிந்திருந்தான். அப்படி இருந்தும் ஸ்வாமி அவ்வாறு பேசியது அவனுக்கு குற்ற உணர்ச்சியையும் வெட்கத்தையும் ஏற்படுத்தியது. இன்டர்வியூவின் போது அவன் ஏதும் பேசவில்லை. முடிந்து வெளியில் வரும்போது அவன் ஸ்வாமியின் அருகில் சென்று, “ஸ்வாமி, உங்களுக்கு தெரியும், நான் என்னென்ன தவறுகள் செய்துள்ளேன் என்றும், நான் ஒரு கெட்ட பையன் என்றும். பின் எதற்காக என் பெற்றோர்களிடம் என்னைப் புகழ்ந்து பேசினீர்கள்?” என்றான். அதற்கு ஸ்வாமி மிகுந்த அன்புடன், “குழந்தாய், நான் உன் பெற்றோர்களிடம், நீ எப்படி இருக்கிறாய் என்று கூறவில்லை, நீ எப்படி இருப்பதை நான் விரும்புவேன் என்பதைக் கூறினேன். உன்னால் எந்த அளவுக்கு உன்னை நீ மாற்றிக்கொள்ளமுடியும் என்பதைக் கூறினேன். இதுதான் உன்னிடமிருந்து என்னுடைய எதிர்பார்ப்பு. அதனால்தான் உன் பெற்றோரிடம் இவ்வாறு உன்னைப் புகழ்ந்தேன்” என்றார். 

ஆதாரம்: ப்ரசாந்தி வித்வன் மஹாசபா, 2011 இல் டா.சஷாங்க் ஷா அவர்களின் உரையிலிருந்து.



📝 நிகழ்வு 54:


அனில்குமார் அவர்கள் ஒருதடவை ப்ருந்தாவனம் கல்லூரியில் உள்ள ஆடிட்டோரியத்தில் இருந்த ஜன்னல்களின் திரைகளைக் கழற்றி லாண்டரிக்குக் கொடுத்திருந்தார். அவை திரும்பிவந்தவுடன் ஜன்னல்களில் பொருத்திக் கொண்டிருக்கும்போது ஒரு திரை மட்டும் குறைவாக இருப்பதைக் கவனித்த அவர், சமயோசிதமாக யோசித்தார். எந்த ஜன்னலுக்குத் திரை இல்லாமல் போனதோ அந்த ஜன்னலுக்கு எதிரில் மறுபக்கம் இருந்த திரையை நீக்கிவிட்டார். எதிரெதிரில் உள்ள ஜன்னல்களில் ஒரே மாதிரியாக திரைகள் இல்லாமல் இருந்தால் சந்தேகத்தை ஏற்படுத்தாது என்ற நோக்கில் இதனைச் செய்தார். இந்த அமைப்பினால், ஒரு திரை குறைவாக இருப்பது ஸ்வாமியின் கண்களுக்குப் புலப்படாது என்று நினைத்தார். அன்று மாலை ஸ்வாமி ஆடிட்டோரியத்தில் நுழைந்த உடனேயே, திரை இல்லாத ஒரு ஜன்னலைப் பார்த்துவிட்டு, “அனில்குமார்! திரை என்ன ஆயிற்று?” என வினவினார். அவர் பதிலளிப்பதற்கு முன்னரே , எதிரில் உள்ள ஜன்னலை நோக்கிவிட்டு, “ஒரு ஜன்னலில் திரை இல்லாமல் இருப்பது கவனத்தில் வராமல் இருப்பதற்காக அனில்குமார் எதிர் ஜன்னலில் உள்ள திரையையும் நீக்கிவிட்டார்!” என்றார்! பிறகு அனில்குமாரைப் பார்த்து புன்முறுவலுடன், “இனி இத்தகைய செயல்களைச் செய்யாதே. இரண்டு ஜன்னல்களுக்கும் புதிதாகத் திரைகளைத் தைத்துப் போடு” என்றார் !!

ஆதாரம்: “விட் அண்ட் விஸ்டம் ஆஃப் ஸ்ரீ ஸத்ய ஸாயி “ என்ற ஸ்ரீ பி. குருமூர்த்தி அவர்களின் (ஆங்கிலத்)தொகுப்பிலிருந்து.


📝 நிகழ்வு 55:


கொடைக்கானலில் ஸ்வாமி ஒருநாள், “அனில்குமார்! நீ என் காரின் அருகில் நின்றுகொண்டு, உன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விழைகிறேன்” என்றார். உடனே அனில்குமார் காரின் அருகில் சென்று நின்றுகொண்டார். ஸ்வாமி, “இல்லை, இல்லை! நீ ஒரு டிரைவரைப் போல நின்றுகொண்டிருக்கிறாய்! அப்படி அல்ல, இந்த மாதிரி கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு நில், அப்படித்தான் ஒரு காரின் முதலாளி தன் காரின் அருகில் நிற்பார்” என்றார். பிறகு இருவரும் அதேபோல காரின் இருபுறமும் நின்றனர். பிறகு ஸ்வாமி அனைவர் மத்தியிலும் அனில்குமாரை நோக்கி, “நீ என் காரை வாங்கிக்கொள்கிறாயா?” எனக் கேட்டார். உடனே அவர், “ ஸ்வாமி! உங்கள் காரை நான் வாங்குவதா? சற்றும் இயலாத காரியம். என்னிடத்தில் ஒரு சைக்கிள் மட்டும் தான் இருக்கிறது. என்னால் உங்கள் காரை வாங்க முடியாது” என்று பதிலளித்தார். ஸ்வாமி உடனே,” என்ன வெட்கக்கேடு? இந்த பதிலை நான் உன்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. “ஸ்வாமி! நீங்கள் என்னருகில் இருக்கும்போது, இந்தக் கார் என்ன, உலகத்தையே என்னால் வாங்கமுடியும்!” என்று அல்லவா நீ பதிலளித்திருக்கவேண்டும்? உன்னால் இப்படிச் சொல்ல முடியாதா? நான் உன்னருகிலேயே இருக்கிறேன் என்ற நம்பிக்கை உனக்கு இல்லையா?” என்றார்!

ஆதாரம்: “விட் அண்ட் விஸ்டம் ஆஃப் ஸ்ரீ ஸத்ய ஸாயி “ என்ற ஸ்ரீ பி. குருமூர்த்தி அவர்களின் (ஆங்கிலத்)தொகுப்பிலிருந்து.


📝 நிகழ்வு 56:


வெப்பம் மிகுந்த கோடைக்காலத்தில் ஒருநாள் ப்ருந்தாவனத்தில் இந்த நிகழ்வு நடந்தது... 

காலை 10 மணிக்கு தரிசனம் அளித்துவிட்டு தன் பங்களாவிற்குத் திரும்பியிருந்தார் ஸ்வாமி. சுமார் 10.45 மணியளவில், வட இந்தியாவைச் சேர்ந்த கிராமவாசிகள் அடங்கிய ஒரு குழு ப்ருந்தாவனத்தை அடைந்தது. அவர்கள் ஏழைமக்களாக இருந்தனர். பலர் கந்தலான ஆடைகள் அணிந்திருந்தனர். தென்னிந்தியாவிற்கு சுற்றுலா செல்லமுடியும் என்பதைக் கேள்விபட்டு எப்படியோ கஷ்டப்பட்டு கட்டணத்தை செலுத்தி பஸ்ஸில் வந்துள்ளனர். அவர்களுடைய கால அட்டவணை மிகவும் நெருக்கமான முறையில் வகுக்கப்பட்டிருந்ததால் அவர்கள் தரிசனத்திற்காக மாலை வரை காத்திருக்க இயலாமல் இருந்தனர். அவர்கள் அங்கு வருவதற்கு முன்னரே தரிசனம் முடிந்துவிட்டிருந்ததை எண்ணி வருந்தினர். ஒரு வாலன்டியர் அவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தபோது கண்ணீர் வடித்தனர்.

அப்போது திடீரென்று ஸ்வாமி பங்களாவை விட்டு வெளியே வந்து, வேகமாக நடக்க ஆரம்பித்தார். ஸ்வாமி காலணிகள் ஏதும் அணியாமல் நடந்துவருவதைப் பார்த்த நான், உடனே உள்ளே ஓடிச் சென்று, ஸ்வாமியின் காலணிகளை எடுத்துக்கொண்டு ஸ்வாமியின் எதிரே சென்று அவர் பாதங்கள் அருகில் வைத்தேன். ஸ்வாமி என்னைப் பார்த்து முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு தரிசனம் கொடுப்பதற்காக ‘ஸாயிராம் ஷெட்’டை நோக்கி வேகமாக நடந்தார். நான் ஸ்வாமியின் அனுமதியின்றி ஸ்வாமியை வழிமறித்துவிட்டேனோ என்று நினைத்துக் கலங்கிப்போனேன். ஸ்வாமி நேராக அந்த கிராமவாசிகளிடம் சென்றார். அவர்களின் சொந்த ஊர் எது என்றும் மற்றும் பலவற்றை அன்புடன் விசாரித்தார். பின்பு அவர்களை வரிசையில் அமரச் சொன்னார். அவர்களிடையே நடந்து, அவர்களுக்குப் பாதநமஸ்காரம் கொடுத்தார். இரண்டு மாணவர்களை மந்திரத்தினுள் அனுப்பி , இனிப்புகள், ஃபோட்டோக்கள், மற்றும் விபூதி பிரசாதம் ஆகியனவற்றை எடுத்துவரச் செய்தார். தன் திருக்கரங்களாலேயே அவர்களுக்கு வழங்கினார். சுமார் இருபது நிமிட நேரம் அவர்களுடன் இருந்துவிட்டு அவர்களைத் திருப்திப்படுத்திய ஒரு நிறைவோடு திரும்பினார். வரும் வழியில் நான் மிகுந்த வருத்தமான முகத்தோடு நின்றிருந்ததைக் கவனித்த ஸ்வாமி, அன்புடன் என்னை அருகில் அழைத்து, “பங்காரு! அந்த ஏழைமக்கள் எந்தக் காலணிகளும் அணியவில்லை என்பதை நீ கவனித்தாயா? அவர்கள் நடுவே செல்லும்போது நான் மட்டும் எவ்வாறு அணியமுடியும்?” என்றார். இதுதான் ஸ்வாமியின் அன்பு ! இதுதான் ‘பிறர்நலம் பேணுதல்’ என்கின்ற உண்மையான கலாசாரத்தின் வெளிப்பாடு!

ஆதாரம்: கோடைப் பயிற்சி முகாம், 2012 இல், டி. ரவிகுமார் அவர்களின் உரையிலிருந்து.


📝 நிகழ்வு 57:


ஒரு தடவை நானும் ஸ்வாமியும் காரில் புட்டப்பர்த்திக்குத் திரும்பிக்கொண்டிருக்கையில், எங்களுடன் ராமநாத ரெட்டி என்ற ஒரு சாலை இஞ்சினீயர் காரில் பயணித்தார். அவரது பணி, சாலைகளில் தார் இடுவது சம்பந்தமானதாக இருந்ததால், ஸ்வாமி அவருக்கு ‘தார்’ என்ற புனைப்பெயரைச் சூட்டி அழைக்கலானார். ராய்ச்சூரில் உள்ள பயணிகள் மாளிகையில் காலை உணவிற்காக அரை மணிநேரம் தங்கிவிட்டு பிறகு ஹம்பி என்ற ஊரை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். சுமார் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் இஞ்சினீயர் தன் மூக்குக் கண்ணாடி அணியாது இருப்பதை ஸ்வாமி கவனித்தார். தாம் மூக்குக் கண்ணாடி அணியவில்லை என்பதை அறியாமலேயே அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அதைக் கேட்டவுடன் அவர், “ஸ்வாமி, பயணிகள் மாளிகையில் முகம் கழுவுவதற்காக வாஷ் பேசின் அருகில் கழற்றினேன். மறுபடியும் அணிந்துகொள்ள மறந்து அங்கேயே விட்டுவிட்டேன்” என்றார். உடனே ஸ்வாமி வேடிக்கையாக, “கவலைப்படாதே; அது சம்பந்தமாக ராய்ச்சூர் மாவட்ட ஆணையருக்கு ஒரு தந்தி அனுப்பலாம். அவர் அதனைத் தருவித்து உனக்குத் தபால் மூலம் அனுப்பிவிடுவார்” என்றார். இவ்வாறு அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருக்கும்போதே ஸ்வாமி தன் கையைச் சுழற்றினார். உடனே அவர் கையில் மூக்குக் கண்ணாடி இருந்தது! “இது உன்னுடையது தானா?” என்று கேட்டார். உடனே அவர் என்ன சொல்வது என்று அறியாமல் அமைதியானார். ஆனால் நீர் ததும்பிய அவரது கண்கள் , “ஆமாம்” என்று பதிலளித்தன.

ஆதாரம்: கஸ்தூரி அவர்களின் “லவிங் காட்” என்ற புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 58:


1985-இல் பாபாவின் 60-வது பிறந்தநாளின்போது, ஸந்தூர் வாத்தியம் வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. அந்த நிகழ்ச்சி அன்று மாலை ஹில்வியூ ஸ்டேடியம் என்ற பரந்தவெளி மைதானத்தில் நடைபெற இருந்தது. எனக்குக் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் படி , என்னுடைய ஸந்தூர் நிகழ்ச்சிக்குப் பின்னர் பகவானின் சொற்பொழிவு அமைந்திருந்தது. ஆனால், அங்கு வந்தபின்னர், ஸ்வாமி அதனை மாற்றி அமைத்துவிட்டார்!. முதலில் பகவானின் சொற்பொழிவும் பின்னர் எனது நிகழ்ச்சியுமாக மாற்றப்பட்டது. உடனே, பகவானின் சொற்பொழிவிற்குப் பின்னர், யார் என்னுடைய நிகழ்ச்சிக்கு உட்கார்ந்திருப்பார்கள், எல்லோரும் எழுந்து போய்விடுவார்களே என்ற கவலை என்னைப் பிடித்துக்கொண்டது. ஆனால் சொற்பொழிவின் முடிவில், ஸ்வாமி, “இப்பொழுது ஷிவ் குமார் ஷர்மா அவர்கள் ஸந்தூர் வாத்தியம் வாசிப்பார். அவர் என்னுடைய நீண்டநாள் பக்தர். ஆகையால், உண்மையான தெய்வீகத்தை உணரவேண்டுமானால், இவரது இசையைக் கேளுங்கள், எழுந்து சென்றுவிடாதீர்கள்” என்றார் ! இதனைக் கேட்ட நான் மிகவும் உருகிப் போனேன்! என் கண்கள் கண்ணீரை தாரை வார்த்தன. என்னால் சிறிதும் அசையவோ எழுந்திருக்கவோ முடியவில்லை; நான் அப்படியே உறைந்து போயிருந்தேன். என் காதுகளை என்னால் நம்பமுடியவில்லை. இதுவரை ஸ்வாமி தன் திவ்வியமான தெய்வீகக் குரலில் என் பெயரைச் சொல்லிக் கேட்டதில்லை. மிகுந்த முயற்சியுடன் என்னால் எழுந்து மேடைக்குச் செல்லமுடிந்தது. அந்த அதிர்ச்சியில் நான் ஸந்தூர் வாசிக்கும் மனநிலையில் சுத்தமாக இல்லை. ஆனால், ஸ்வாமியின் அருகில் சென்றவுடன் அவர் என் தோளின்மீது தன் கையை வைத்தார். அந்த ஸ்பரிசம், மின்சாரம் பாய்ந்ததைப்போன்ற அதிர்வுகளை ஏற்படுத்தியது. உடனே நான் பழைய நிலைக்குத்திரும்பி, வாசிக்கத் தொடங்கினேன். நிகழ்ச்சியின் முடிவில் ஸ்வாமி ஒரு வைர மோதிரத்தை ஸ்ருஷ்டித்து என் விரலில் அணிவித்தார்.

ஆதாரம்: “பாபா ஈஸ் காட் இன் ஹ்யூமன் ஃபார்ம்” என்ற ப்ரேம் லுத்ரா அவர்கள் தொகுத்த நூலிலிருந்து.


📝 நிகழ்வு 59:


பாபா இரண்டு நாட்களுக்கு முன் வெங்கடகிரியிலிருந்து திரும்பியிருந்தார். பாபா வெங்கடகிரிக்கு சென்றிருந்தபோது, பிரசாந்திநிலையத்தில் வசிக்கும் ஒரு மூதாட்டி தன் சொந்த ஊர் சென்றிருந்தார். ஸ்வாமி வெங்கடகிரி செல்லும்போதெல்லாம் அந்த ஊரைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். ஸ்வாமி வெங்கடகிரியிலிருந்து திரும்பி வரும்போது வழியிலே அவரது காரை நிறுத்தி, ஸ்வாமியைத் தன் வீட்டிற்கு வந்தருளும்படி அழைத்து, தன் வீட்டில் உபசரிக்கவேண்டும் என்று அந்த மூதாட்டி திட்டமிட்டார். அதற்காகத் தன் ஊர் மக்களை, ஸ்வாமியின் கார் வருவதை கவனிப்பதற்கு சாலையின் இருபுறமும் நிறுத்தியிருந்தார். ஆனால், ஸ்வாமி பர்த்தியை வந்தடைந்துவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டதும், உடனே கிளம்பி பர்த்தி வந்துசேர்ந்தார். ஸ்வாமி முதல்மாடியிலிருந்து அந்த நேரத்தில் அங்கு குழுமியிருந்த பக்தர்களுடன் (அப்போது நானும் உள்ளே நுழைந்து கொண்டேன்) பேசிக்கொண்டிருந்தபோது, எங்களிடமிருந்து ஒரு சிறிய தூரத்தில் நின்றுகொண்டு அந்த மூதாட்டி, ஸ்வாமியிடம். “ஸ்வாமி, எப்படி உங்கள் கார், யார் பார்வையிலும் படாமல் எங்கள் ஊரைத் தாண்டி வரமுடிந்தது? எங்களுடைய ஆட்கள் இரவு பகல் என்று பாராமல், சாலையை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார்கள். எந்தக் காரும் கண்களில் தென்படவில்லையே?” என்று கேட்டார். இதனைக் கேட்ட ஸ்வாமி (மாடியிலிருந்து) வேடிக்கையாகச் சிரித்துக்கொண்டிருக்கும்போதே, திடீரென்று அந்த சிரிப்புச் சத்தம் (கீழே நின்றுகொண்டிருக்கும்) எங்கள் பின்புறம் கேட்கத் தொடங்கியது! திரும்பிப் பார்த்தால், ஸ்வாமி நின்றுகொண்டிருக்கிறார் !

“நீ இப்போது பார்க்கிறாய் அல்லவா? மாடியிலிருந்து கீழே கண் இமைக்கும் நேரத்தில் வந்துவிட்டேன். கார், மற்றும் என்னுடன் பயணிப்பவர் உள்பட, உன் ஊரைத் தாண்டி என்னால் வர முடியாதா, என்ன?” என்று ஸ்வாமி கேட்டார்! “காலம், வெட்டவெளி இவற்றால் என்னைக் கட்டுப்படுத்த இயலாது” என்று மேலும் பறைசாற்றினார். இந்த அறிவிப்பைக் கேட்டு நாங்கள் அனைவரும் அதிர்ந்துபோனோம் . என் இதயத்தை ஏதோ ஒன்று பிடித்து இழுப்பதைப் போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. உடனே நான் அவர் கால்களில் விழுந்தேன். அவரது முகத்தில் ஒரு தெய்வீக ஒளியைக் கண்டேன்.

ஆதாரம்: கஸ்தூரி அவர்களின் “லவிங் காட்” என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 60:


1972 இல், ப்ருந்தாவனத்தில் கோடை முகாமில் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. ஒருநாள், தன் வகுப்பிற்காக, பேச்சாளர் டா. வி.கே.கோகாக் அவர்கள் வரும் நேரம் ஆயிற்று. அவர் வருவதற்கு முன்னரே ஸ்வாமி அந்த வகுப்பிற்கு வந்து அங்குள்ள மாணவர்களிடம் நகைச்சுவையாக உரையாடிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் கோகாக் அவர்கள் அங்கு வந்தார். நமது பாரதீய கலாசாரத்தின்படி, ஒரு ஆசிரியர் வகுப்பினுள் நுழையும்போது அங்குள்ள அனைத்து மாணவர்களும் மரியாதையுடன் எழுந்துநின்று, அவர் அமர்ந்த பிறகே தாம் அமர்வது வழக்கம். கோகாக் நுழைந்தவுடன், ஸ்வாமியும் மாணவர்களுடன் சேர்ந்து எழுந்து நின்றார்! இதைப் பார்த்த கோகாக், ஸ்வாமியின் பாதங்களில் விழுந்து வணங்கினார். மாணவன் ஒருவன், ஆசிரியருக்கு எவ்வாறு தன் மரியாதையைத் தெரிவிக்கவேண்டும் என்பதைத் தான் செய்துகாண்பித்தார்.

ஆதாரம்: “நெக்டர் ஆஃப் டிவைன் மெலோடீஸ்” என்ற அனில்குமார் எழுதிய புத்தகத்திலிருந்து.



📝 நிகழ்வு 61:


மைசூருக்கு அருகில் உள்ள பத்ராவதி என்ற ஊரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தன் தாய் மற்றும் தமக்கையுடன் பிரசாந்தி நிலையம் வந்தனர். தமக்கையைத் தாய் சுமந்துவந்தாள். ஊனமுற்ற கால்களைக் கொண்ட அந்தப் பெண்ணால், ஐந்து வருடங்களாக நடக்க முடியவில்லை. அவளது நிலையை நினைத்து அவர்கள் மிகவும் வருத்தத்துடன் இருந்தனர். ஸ்வாமி கருணையுடன் அண்ணனிடம், தன் தமக்கையைத் தாங்கி, இன்டர்வியூவிற்கு வருமாறு அழைத்தார். அவன் அவளைச் சுமந்துகொண்டு அறைக்குள் சென்றான். சிறிதுநேரம் கழித்து அவள் தன் அண்ணனின் கைத்துணையுடன், அறையிலிருந்து நடந்துவருவதை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். ஸ்வாமி, மந்திரத்தை மூன்று முறை சுற்றிவருமாறு அந்தப் பெண்ணிடம் கூறியிருந்தார். இருபுறமும் தாய் மற்றும் அண்ணன் துணையுடன் அவள் வலம் வந்தாள். மறுநாள் காலை அந்தப் பெண், யார் உதவியுமின்றித் தானாகவே மந்திரத்தில் நடந்துவருவதைப் பார்த்த மற்ற பக்தர்களுக்கு ஒரு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இவ்வாறாக, கீதையில் , “பங்கும் லங்கயதே கிரிம் (அவரது ஸங்கல்பம் ஒரு முடவனையும் மலை ஏறவைக்கும்)” என்ற வாக்கின்படி, ஸ்வாமி இந்த அற்புதத்தை நிகழ்த்தினார்.

ஆதாரம்: “பாபா ஈஸ் காட் இன் ஹ்யூமன் ஃபார்ம்” என்ற ப்ரேம் லுத்ரா அவர்கள் தொகுத்த நூலிலிருந்து.


📝 நிகழ்வு 62:


காயனபாடு ஸரஸ்வதி பாய் என்ற பாடகர், ஒரு தசரா பண்டிகையின்போது புட்டப்பர்த்திக்கு வந்தார். வயது முதிர்ந்த பாடகரான அவர் நூற்றுக்கணக்கான பக்தர்களைத் தன் பாட்டுக் கச்சேரியின் மூலம் மகிழ்வித்தார். 70 வயது ஆகிய போதிலும் அவரது உடல், நீண்ட கச்சேரிக்குத் தேவையான வலிமைக்கும் ஞாபகத்திறனுக்கும் ஈடுகொடுத்தது. அவர் பர்த்தியிலிருந்து விடைபெற்றபோது ஸ்வாமி அவருக்கு ஒரு பனாரஸ் புடவையை அன்புப் பரிசாக அளித்தார். அன்றே சிலமணிநேரங்கள் கழித்து, ஸ்வாமி எங்களிடம், “அந்தப் பாடகருக்கு நான் அளித்த 12 முழம் புடவை, அவர் கட்டும் விதத்திற்குப் போதாமல் போய்விடுமோ” என்று கூறினார் . அப்போது அங்கிருந்த சில பெண்மணிகள், “ஆமாம், அவர் 18 முழம் புடவைகளையே அணிவார்” என்றனர். உடனே ஸ்வாமி தான் அதற்காக வருத்தப்படுவதைப்போல் நடித்தார். திரும்பவும் அந்தப் புடவை இருந்த கட்டிலேயே மற்ற புடவைகளை ஆராய்ந்து அவைகளும் அவருக்கு சரிவரா என்று நினைத்தார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பாடகர் எனக்கு எழுதிய கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதத்தில் அவருக்கு நேர்ந்த அற்புதத்தை அவர் மிகுந்த ஆச்சரியத்துடன் பகிர்ந்திருந்தார். அவர் முதலில், ஸ்வாமி அளித்த புடவை தனக்கு மிகவும் சிறியது என்று அறிந்தார். ஆனால் அது ஸ்வாமியின் அன்புப் பரிசு ஆதலால், தன் வீட்டில் பூஜை செய்யும்போது மட்டும் அணிந்துகொள்ளலாம், தன் பூஜை அறையில் வேறு யாரும் பார்க்கப்போவதில்லை என்று முடிவுசெய்தார். என்ன ஆச்சரியம்! அவர் அந்தப் புடவையை உடுத்தத் தொடங்கியவுடன், ஸ்வாமியின் ஸங்கல்பத்தால், 18 முழத்திற்கும் சிறிதுமேலாகவே நீண்டுவிட்டது!!

ஆதாரம்: கஸ்தூரி அவர்களின் “லவிங் காட்” என்ற நூலில் இருந்த

.


📝 நிகழ்வு 63:


ஒருநாள் நாங்கள் ஸ்வாமியின் பாதங்களின் அருகில் அமர்ந்துகொண்டு , ஒரு கலைஞனின் க்ருஷ்ண பக்தியைப் பற்றிய மெய்சிலிர்க்கும் கதையை ஸ்வாமி சொல்லக் கேட்டுக்கொண்டிருந்தோம். அந்தக் கலைஞன் தான் வடிவமைத்த தங்கத்தினாலான அற்புதமான க்ருஷ்ணரின் சிலையை வர்ணித்துக்கொண்டிருந்தார். அந்த சிலை ஒரு தெய்வீகத் தூண்டுதலின் மூலம் உருவெடுத்ததாகக் கூறினார். அதனை உருவாக்கும்போது பகவான் க்ருஷ்ணரே அந்தக் கலைஞனின் ஒவ்வொரு கையசைவிற்கும் காரணமாய் இருந்ததாகத் தெரிவித்தார். திடீரென்று ஸ்வாமி, “நீங்கள் அந்தச் சிலையைப் பார்க்க விரும்புகிறீர்களா?” என்று வினவினார். உடனே நாங்கள் அனைவரும் ஒரே குரலில், “ஆமாம், ஸ்வாமி!” என்று உற்சாகத்துடன் கூறினோம். ஸ்வாமி தன் கையைச் சுழற்றியதும் அந்தச் சிலை ஜ்வலிப்புடன் அவர் கையில் தோன்றியது. பல ரத்தினங்கள் சிலையை அலங்கரித்தன. அந்த உருவம் உயிருடன் இருப்பதைப் போல் ஒரு தெய்வீக ஒளியுடன் பிரகாசித்தது. ஸ்வாமி அந்தச் சிலையை ஒவ்வொருவரும் தன் கைகளில் வாங்கிப் பார்க்கும்படி அனுக்கிரஹித்தார். இறுதியாக அது ஸ்வாமியை வந்து அடைந்தவுடன், ஸ்வாமியின் கைகளில் ஒருசில நொடிகளுக்குப் பிறகு மாயமானது.

ஆதாரம்: “பாபா ஈஸ் காட் இன் ஹ்யூமன் ஃபார்ம்” என்ற ப்ரேம் லுத்ரா அவர்கள் தொகுத்த நூலிலிருந்து.


📝 நிகழ்வு 64:


நம்புவீர்களோ இல்லையோ...

ஸ்வாமியின் பாதகமலங்கள் எல்லா இடர்களிலிருந்தும் எங்களைக் காத்து வருகின்றன. எனது கணவர் பக்கவாத நோயால் பீடிக்கப் பட்டிருந்தார். அசைவுகள் அற்று இருந்தார். என் சொந்தங்களில் சிலரிடம் கணவரையும் வீட்டையும் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு நான் 17 மணிநேர பஸ் பிரயாணத்திற்குப் பின் பர்த்திக்கு வந்தேன். தங்குவதற்கு இடம் வாங்கியபின் தரிசனத்திற்கு வந்தேன். எப்பேற்பட்ட பாக்கியசாலி நான் ! பார்த்ததோடு மட்டும் அல்லாமல், நான் கொண்டுவந்திருந்த பாதுகைகளை ஸ்வாமி தொட்டு ஆசீர்வாதம் செய்தார். இந்த நற்செய்தியை என் கணவரிடம் சொல்வதற்காக மந்திரத்திற்கு வெளியே உள்ள ஒரு ஃபோன் சாவடிக்குக் சென்றேன். ஃபோன் செய்தவுடன் என் கணவரின் குரல் கேட்டு ஆச்சரியம் அடைந்தேன். அவரது படுக்கையறையில் ஃபோன் இல்லை. எப்படி அவரால் ஹாலுக்கு வந்து ஃபோனை எடுக்க முடிந்தது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் மிகுந்த அதிர்ச்சியுடன், “எப்படி உங்களால் ஃபோன் எடுக்கமுடிந்தது ?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் படுக்கையறையிலிருந்து ஹாலுக்கு நடந்துவந்து ஃபோனை எடுத்தேன்” என்றார்! உடனே நான், “எப்போதிருந்து நீங்கள் நடக்க ஆரம்பித்தீர்கள்?” என்று பரபரப்புடன் வினவினேன். அவர்,”இன்று காலை 9:30 மணிக்குதான் என்னால் ஹால் வரை நடக்க முடிந்தது” என்றார். அதே கணத்தில்தான் இங்கு ஸ்வாமி, பர்த்தியில், பாதுகைகளைத் தொட்டு ஆசீர்வதித்தார்! அவரது அந்த ஸ்பரிசம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிடிகுரால்லா என்ற கிராமத்தில் என் கணவரை எழுந்து நடக்க வைத்தது!

ஆதாரம்: “நெக்டர் ஆஃப் டிவைன் மெலோடீஸ்” என்ற அனில்குமார் எழுதிய புத்தகத்திலிருந்து.


📝 நிகழ்வு 65:


ஓரு சமயம் ஸ்வாமி ஹைதராபாதில் இருந்தபோது, இரு விஞ்ஞானிகள் ஸ்வாமி தரிசனத்திற்காகச் சென்றனர். ஸ்வாமி அவர்கள் இருவரையும் இன்டர்வியூவிற்கு அழைத்தார். ஸ்வாமியின் அருகாமையில் இருக்கும்போது, விஞ்ஞானி ஹைகாவா , தான் ஒரு தெய்வீகமான மனிதரின் அருகில் இருப்பதைப்போல ஒரு உணர்வு அவரை ஆட்கொண்டது. அப்போது ஸ்வாமி அவரைநோக்கிப் புன்முறுவல் பூத்து, தன் கையை அசைத்து ஒரு மனித இதயத்தை ஸ்ருஷ்டி செய்து அவரிடம் காண்பித்தார்! அவர் உடனே பயந்துவிட்டார். “இது என்னவென்று தெரியுமா?” என்று ஸ்வாமி கேட்டார். அதற்கு அந்த விஞ்ஞானி “மனித இதயம்” என்று பதிலளித்தார். “இது யாருடையது தெரியுமா?” என்று ஸ்வாமி கேட்டார். அதற்கு அவர், “எனக்கு எப்படித் தெரியும்?” என்றார். உடனே பகவான் அவரிடம், “இது நீ பிறந்த போது உன்னிடம் இருந்த இதயம்!” என்றார். இதைக் கேட்ட ஹைகாவா அதிர்ந்து போனார்! ஸ்வாமி மேலும் பின்வருமாறு கூறினார்: இது உன்னுடைய இதயமேதான். அதிர்ச்சி அடையாதே. நீ பிறந்த நொடியிலேயே உன் இதயத் துடிப்பு நின்றுவிட்டது. நீ இறந்தவனாகிவிட்டாய். உன் உடல் நீலநிறமாக மாறியது. உன் தந்தை மிகுந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர். உனது உடலை என் காலடிகளில் வைத்து இவ்வாறு வேண்டினார்: “கடவுளே, எனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று மனமார உன்னிடம் வேண்டினேன். இப்படியா நீ என் வேண்டுதல்களுக்கு விடை அளிப்பது? இந்த இறந்தபோன உடலினால் எனக்கு என்ன பயன்?”ஆகையால், நான் உன் இதயத்தை சரிசெய்து உனக்கு மறுவாழ்வு அளித்தேன்”.

ஆதாரம்: பி.குருமூர்த்தி தொகுத்த “மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்” (பாகம் 2) என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 65:


கடவுளையே முழுமையாக சார்ந்திருக்கும் தன்மையை நினைக்கும்போது, ஹிஸ்லாப் அவர்களுக்கு நடந்த நிகழ்வு நினைவிற்கு வருகிறது. ஒருமுறை சிவராத்திரி வைபவத்தில் கலந்துகொள்ள அவர் புட்டப்பர்த்திக்கு வந்துகொண்டிருக்கும் வழியில் ஒரு நடுக்காட்டில் அவரது கார் நின்றுவிட்டது. அதைப் பற்றிய விவரம் தெரிந்த அவர் தானே சரிசெய்ய முயற்சித்துத் தோல்வியடைந்தார். அருகில் இருந்தோராலும் இயலவில்லை. இறுதியாக அவர் “ஸாயிராம்! ஸாயிராம்!!” என்று ஸ்வாமியை அழைத்தார். அந்த நேரத்தில் அவரைக் கடந்து சென்ற ஒரு லாரி, உடனே அங்கு நின்றது. லாரி ஓட்டுனர் கீழே இறங்கி, விவரத்தை அறிந்து, பின்னர் அவரே சரிசெய்தார். அவருக்கு ஏதாவது பணம் கொடுக்கலாம் என்று காரிலிருந்து எடுக்கும் முன்னர் அந்த ஓட்டுனர் லாரியுடன் மாயமாகிவிட்டார்! ஹிஸ்லாப் சரியான நேரத்திற்குள் பர்த்தி வந்தடைந்து, தரிசனத்திற்காக அமர்ந்தார். ஸ்வாமி அருகில் நடந்துசென்றபோது, ஹிஸ்லாப், “ஸ்வாமி!, தங்களுக்கு மிக்க நன்றி, ஒரு லாரி ஓட்டுனர் எனக்கு உதவி செய்ததால் என்னால் சீக்கிரம் வர முடிந்தது” என்றார். ஸ்வாமி உடனே, “ஓட்டுனரா? நான் தான் உன்னுடைய ஓட்டுனர். அந்த ஓட்டுனரும் நானே. எதற்கு “ஓட்டுனர்” என்கிறாய்?” என்றார். இதைக்கேட்ட ஹிஸ்லாப் அதிர்ச்சி அடைந்தார். ஸ்வாமி சில அடிகள் முன்னே எடுத்துவைத்து, பிறகு நின்று அவரைத் திரும்பிப் பார்த்து, “நீ ஓட்டுனரை ஆரம்பத்திலேயே அழைத்திருந்தால், நீ இங்கே ஒருமணி நேரம் முன்பே வந்திருப்பாய். ஆனால், நீ என்னவோ ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து என்னை அழைத்தாய். நான் என்ன செய்வது? நான் அங்கு காத்திருந்தேன். ஆனால் நீ அழைக்கவில்லை. நீயே அந்தப் பழுதை நீக்குவதற்கு உன் அறிவை நம்பி முற்பட்டாய். பரவாயில்லை, அப்படியே செய். நான் காத்து அருள் செய்வதற்கு வேறு பலர் உள்ளனர்!” என்று உரைத்தார்.

ஆதாரம்: “ ஸாயி-காலஜி” என்ற அனில் குமார் காமராஜு அவர்கள் எழுதிய நூலிலிருந்து.


📝 நிகழ்வு 67:


பல வருடங்களுக்கு முன்னால், கண்பார்வை அற்ற ஒருவர் புட்டப்பர்த்திக்கு வந்திருந்தார். தரிசனத்தின்போது அவர் ஸ்வாமியிடம் தனக்குப் பார்வை கொடுத்தருளுமாறு வேண்டினார். ஆனால், ஸ்வாமி அவரது வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை. அப்போது கஸ்தூரி அவர்கள் ஸ்வாமியின் பின் சென்றுகொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றபின் ஸ்வாமி கஸ்தூரியைப் பார்த்து, *“நான் அவருக்குக் கண்பார்வை கொடுத்தால் அவரது குடும்பம் சிரமப்படும்”* என்று கூறினார். கஸ்தூரி “குடும்பத்தலைவனுக்குக் கண்பார்வை கொடுப்பதால் அந்தக் குடும்பம் எப்படி சிரமப்படும்?” என்று ஸ்வாமியிடம் கேட்டார். இதற்கும் ஸ்வாமி பதில் அளிக்கவில்லை! 

சில மாதங்களுக்குப் பிறகு அந்த பக்தர் திரும்பவும் பர்த்திக்கு வந்தார். இந்தத் தடவை அவர் தன் குடும்பத்தையும் அழைத்து வந்திருந்தார். அவர் கஸ்தூரி அவர்களைச் சந்தித்து, பார்வையற்றோருக்கான சிறப்பு ஒதுக்கீடு மூலம் தனக்கு அரசாங்க பணி நியமனம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு பக்தருக்குள்ளும் வீற்றிருக்கும் ஸ்வாமியே யாருக்கு எப்போது எதனைச் செய்தால் அவரது வாழ்வு மேம்படும் என்பதை நன்கு அறிவார் என்றும் அந்தக் கணத்தில் நன்மை பயக்கும் என்பதால் மட்டுமே ஒரு செயலை ஸ்வாமி செய்யமாட்டார் என்றும் இந்த நிகழ்வு மூலம் அனைவருக்கும் ஸ்வாமி உணர்த்தினார்.

ஆதாரம்: பி.குருமூர்த்தி தொகுத்த “மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்” (பாகம் 2) என்ற நூலிலிருந்து...


📝 நிகழ்வு 68:

எனது தந்தையான வெங்கடகிரி ஸமஸ்தானத்தின் அரசர், ஸ்வாமி வெங்கடகிரிக்கு அருள் கூர்ந்து வருகை புரியவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஸ்வாமியும் அதனை ஏற்று, முதல் முறையாக வெங்கடகிரிக்கு வர ஒப்புக்கொண்டார். நமது கலாசாரம் சேர்ந்த பழக்க வழக்கங்களின் படி, புகழ்பெற்ற ஒருவரை நாம் வரவேற்கும்போது, நமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அவரது வீட்டிற்குச் சென்று அவரை அழைத்து வருதல் என்பதுதான் முறை. இந்தச் செயலை என் தந்தை என்னைச் செய்யுமாறு பணித்தார். பாபாக்கள், ஸ்வாமிகள், மற்றும் கடவுள்கள் மீது சிறிதும் நம்பிக்கை இல்லாதவனாக நான் இருந்ததால், நான் என் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க மறுத்துவிட்டேன். அன்று இரவு நான் தூங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்வாமி என் கனவில் வந்தார். அவர் எனக்கு இரண்டு மாம்பழங்களைக் கொடுத்து உண்ணச் சொன்னார். எனக்கு மாம்பழங்கள் என்றாலே மிகவும் பிடிக்கும். மேலும் ஸ்வாமி கொடுத்த மாம்பழங்கள் மிகவும் சுவையாக இருந்தன. உடனே நான் விழித்துக் கொண்டேன். அந்தக் கணத்திலேயே நான் உடனே புட்டப்பர்த்தி செல்லவேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டேன். கனவைப் பற்றி யாரிடமும் சொல்லாமல், நான் என் தந்தையைத் தூக்கத்திலிருந்து எழுப்பி “நான் உடனே புட்டப்பர்த்திக்குப் புறப்படுகிறேன்” என்று தெரிவித்தேன். நான் மறுநாள் மதியம் காரில் புட்டப்பர்த்தி வந்தடைந்தேன். அதே நேரத்தில் ஸ்வாமி, பழைய மந்திரத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தார். ஸ்வாமி என்னைப் பார்த்து, நகைச்சுவையாக, “பங்காரு!, நீ புட்டப்பர்த்திக்கு வரவேண்டாம் என்று நினைத்தபோது, இரண்டு மாம்பழங்கள் இங்கே வருமாறு உன்னை விரட்டி ஓடவைத்தன, அல்லவா?” என்றார்!

ஆதாரம்: “பாபா ஈஸ் காட் இன் ஹ்யூமன் ஃபார்ம்” என்ற ப்ரேம் லுத்ரா அவர்கள் தொகுத்த நூலிலிருந்து.


📝 நிகழ்வு 69:

ஒரு தடவை ஸ்வாமி , சில பக்தர்களோடு சிம்லா சென்றார். அவர்கள் சிம்லாவில் தங்கும் இடத்தை மாலையில் வந்தடைந்தனர். இருள் சூழும் 6.30 மணி அளவில், அந்த ஊரில், ஒரு வீட்டில், இரண்டே வயதான ஒரு குழந்தை இறந்துவிட்டான். அவனது பெற்றோர்கள் ஆற்றொணாத் துயரத்தில் மூழ்கினர். இதனை அறிந்த அவர்களது நண்பர் ஒருவர், “ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபா இப்போது நம் ஊருக்கு வந்திருக்கிறார்; உடனே நீங்கள் அங்கே சென்று அவரது பாதங்களில் உங்களது மகனின் உடலைக் கிடத்தி அவனுக்கு உயிர் பெற்றுத் தருமாறு மனமார வேண்டுங்கள்” என்று அறிவுறித்தினார். பெற்றோர்கள் அவனது உடலை ஒரு துணியில் சுற்றிக்கொண்டு உடனே விரைந்தனர். தாய், தன் மகனின் உடலை ஸ்வாமியின் பாதகமலங்களில் வைத்து, “ஸ்வாமி, என் மகனை உயிர்ப்பித்து எழச்செய்யுங்கள்! அவனுக்கு மறுவாழ்வு அளியுங்கள்“ என்று கதறினார். அவ்வாறு தாய் அழுதுகொண்டிருக்கும்போது, கருணைக்கடலான ஸ்வாமி, இரக்கம் ததும்பும் கண்களோடு அந்தக் குழந்தையின் உடலைப் பார்த்தார். அந்தக் குழந்தை உடனே உயிர் பெற்று அழ ஆரம்பித்தான்! பெற்றோர்கள் ஸ்வாமியின் பாதங்களைத் தங்கள் நன்றிகலந்த ஆனந்தக்கண்ணீரால் நனைத்தனர். இந்த அற்புதத்தைப் பார்த்த பக்தர்கள் மனம் உருகினர். அவர்கள் அனைவரும் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று, “ஜெய் ஸாயிராம்! ஜெய் ஸாயிராம்” என்று கூக்குரலிட்டனர். 

ஆதாரம்: பி.குருமூர்த்தி தொகுத்த “மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்” (பாகம் 2) என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 70:

ஒருநாள் ஸ்வாமி இன்டர்வியூ அறையில் (ஆன்மீக)சாதனை என்பதைக் குறித்து இன்ஸ்டிடியூட் ஆசிரியர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பாக்யா என்ற ஆசிரியரை ஒரு கடுமையான பார்வையுடன் , “பாக்யா! நீ என்ன சாதனை செய்ய விரும்புகிறாய்?” என்று கேட்டார். (அன்றைக்கு முதல்நாள்தான், ஆன்மீக சாதனையில் மும்முரமாக ஈடுபடவேண்டும் என்ற முடிவுடன் தன் வேலையை ராஜினாமா செய்வதாகக் கல்லூரி முதல்வரிடம் கடிதம் சமர்ப்பித்திருந்தார். இந்த விஷயம் ஸ்வாமியிடம் எடுத்துச்செல்லப் படவில்லை). இந்தக் கேள்விக்கு அவர், “ஸ்வாமி! நான் ஆத்ம விசாரம் செய்ய விரும்புகிறேன். அதனால் நான் என்னுடைய உலகரீதியான கடமைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள நினைக்கிறேன். நான் கல்லூரியில் இனிமேல் வகுப்புகள் நடத்த விரும்பவில்லை. நான் இத்தகைய உலக வாழ்க்கை சம்பந்தமான செயல்களில் ஈடுபடுவதால் என் மனம் ஆத்மாவை விட்டு விலகிப்போகிறது” என்றார். அவர் மேலும் ஏதொ சொல்ல வந்ததை சொல்லிமுடிப்பதற்குள் ஸ்வாமி, “ஏய், பாக்யா! நீ செய்யும் செயல்களை , உலகம், ஆன்மீகம் என்ற தலைப்புகளில் பிரித்துப் பார்த்தாயானால், இன்னும் ஆயிரம் பிறவிகளில் கூட நீ வேண்டுவதைத் தரமாட்டேன்!” என்று அதிரடியாக பதில் அளித்தார்! ஸ்வாமியின் இந்த வார்த்தைகளின் வெடிப்பைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வார்த்தைகளின் ஆழமான பொருளை உடனே உணர்ந்த பாக்யா, பகவானின் கால்களைப் பற்றிக்கொண்டு மன்னிப்பு கோரினார். “ஸ்வாமி!, என்னை தயைகூர்ந்து மன்னித்துவிடுங்கள். உங்கள் சொற்படியே நான் செய்கிறேன். செய்ய நினைத்த தவறை நான் உணரவில்லை.” என்று வேண்டினார்.

ஆதாரம்: அரவிந்த் சுப்ரமண்யா எழுதிய “ லிவிங் வித் காட்” என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 71:

ஒரு தடவை, டா.ஹெச்.எஸ்.பட் என்ற டாக்டர், வயதான ஒருவருக்கு, வொயிட்ஃபீல்டில் இருந்த ஸ்ரீ ஸத்ய ஸாயி பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டியிருந்தது. அச்சமயம், ஸ்வாமி ஆபரேஷன் தியேட்டரில் டாக்டருக்கு அருகில் நின்றுகொண்டு அனைத்தையும் பார்வையிட்டுக்கொண்டிருந்தார். இது டாக்டருக்கு இயல்பாகவே ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தாலும், நான்கு மணிநேரத்திற்கு மேலாக, டாக்டர் எவ்வளவோ முயற்சித்தும்,அந்த நோயாளி மயக்கத்திலிருந்து தெளியவில்லை. ஒவ்வொரு அரைமணி நேரமும் ஸ்வாமிக்கு இதைப்பற்றி தெரிவிக்கப்பட்டாலும், ஸ்வாமி, “கவலைப் படவேண்டாம்” என்றே சொல்லிக்கொண்டிருந்தார். ஸ்வாமி மாலை 7.30 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்று நேராக அந்த நோயாளியின் அறைக்குச் சென்று , அவரது கன்னத்தில் ஒரு அறை கொடுத்து, “ருக்மணியம்மா!, இந்த வேடிக்கை செய்வதை நிறுத்து!” என்று உரக்கச் சொன்னார். உடனே அந்த அம்மையார் தன் கண்களைத் திறந்து, ஸ்வாமியைப் பார்த்துத் தன் கைகளைக் கூப்பினார்! 
பின்னர் ஸ்வாமி இவ்வாறு கூறினார்: “தான் 80 வயதைத் தாண்டிவிட்டதால், இந்த உலகத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கவேண்டும் என்ற வரத்தைப் பெற மிகவும் முயற்சித்துள்ளார். தான் அறுவை சிகிச்சை மயக்கத்திலிருந்து மீளக்கூடாது என்று வேண்டிக்கொண்டுள்ளார்.” ஆனால் ஸ்வாமி , சரியான நேரத்தில் தான் சரியான முடிவை எடுப்பதாக அவரிடம் கூறியுள்ளார். அந்த அம்மையார் சிலநாட்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இரண்டு வருடங்களுக்குப் பின் ஸ்வாமி அந்த வரத்தை அளித்தார்; அந்த அம்மையார் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.

ஆதாரம்: பி.குருமூர்த்தி தொகுத்த “மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்” (பாகம் 2) என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 72:

மெக்ஸிகோவில் எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு இளைஞன் தோட்டப் பணியாளனாக வேலை செய்துகொண்டிருந்தான். அவன் ஏழையாக இருந்தாலும் துரதிருஷ்டவசமாக அவனுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அவன் அழகான அந்த ஊர் பெண்ணையே திருமணம் செய்துகொண்டான். நாங்கள் இந்தியாவிற்கு வருவதற்குமுன் அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. நாங்கள் ஊரில் இல்லாத அந்த நாட்களில் எங்கள் தோட்டத்தில் உள்ள பூச்செடிகளுக்கு வாரம் ஒருமுறை நீர் ஊற்ற அவனிடம் சொல்லியிருந்தோம். நாங்கள் இந்தியாவிலிருந்து புறப்படும் நாள் ஸ்வாமி எங்களுக்கு இன்டர்வியூ அளித்தார். அப்போது அவர் என் மனைவியை நோக்கி, “உங்கள் வீட்டு வேலைக்காரன்..” என்று ஆரம்பித்தார். உடனே என் மனைவி, “ஸ்வாமி,.. ஆனால் எங்கள் வீட்டில் வேலைக்காரனே இல்லை..” என்றார். ஸ்வாமி, “ஆமாம், ஆனால், ஒருவன் உங்கள் வீட்டுச் செடிகளுக்கு நீர் ஊற்றுகிறான் அல்லவா? இதோ நான் கொடுப்பதை எடுத்துக்கொண்டு போய் அவனது குழந்தைக்குக் கொடு!” என்று சொல்லித் தன் கையைச் சுழற்றினார். ஒரு டாலருடன் கூடிய செயினை வரவழைத்து என் மனைவியிடம் கொடுத்தார்! என் மனைவி, “என்னே அற்புதம், ஸ்வாமி!, அது மிகவும் அழகான குழந்தை, அவனும் நல்லவன்” என்றாள். அதற்கு ஸ்வாமி, “இல்லை, அவனிடையே பெரும் தவறுகள் உள்ளன!” என்று எல்லாம் அறிந்த ஸ்வாமி பதிலளித்தார்.

ஆதாரம்: “பாபா ஈஸ் காட் இன் ஹ்யூமன் ஃபார்ம்” என்ற ப்ரேம் லுத்ரா அவர்கள் தொகுத்த நூலிலிருந்து.


📝 நிகழ்வு 73:

ஓருநாள் கொடைக்கானலில் ஸ்வாமி, அவருடன் சென்றிருந்த அனைவருக்கும் பெப்பர்மின்ட், சாகோபார் போன்ற பல தின்பண்டங்கள் வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர், “இங்கே ஒருவர் மட்டும் நான் கொடுப்பதைச் சாப்பிடாமல் தன் பையினுள் வைத்துக் கொண்டுள்ளார். மாணவர்களே!, வாருங்கள், அனைத்துப் பைகளிலும் சோதனை செய்யுங்கள்!” என்று கூறினார்! அது ஏதோ வருமானவரி அதிரடி சோதனை போல இருந்தது. உடனே நான், ஸ்வாமியின் அருகில் சென்று , மெதுவான குரலில், “ஸ்வாமி, எதற்கு இந்த தொந்தரவு? ஆமாம், நான் தான் சாப்பிடாமல் அவற்றைப் பையினுள் வைத்தேன்.” என்று சொன்னேன். ஸ்வாமி, “நீ எதற்காக அப்படிச் செய்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “ஸ்வாமி , எனக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து ஏதாவது எதிர்பார்ப்பார்கள். நீங்கள் தரும் எந்தப் பொருளும் விலைமதிப்பற்றதாகும். சாதாரணமாகக் கிடைக்கப் பெறாத இவற்றை நான் வீட்டிற்கு எடுத்து சென்றால் அவர்கள் மிகவும் ஆனந்தம் அடைவர்” என்றேன். ஸ்வாமி , “ஓ! அப்படியா!” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த அனைவரிடம், “இனிமேல் எது கொடுத்தாலும், அனில் குமாருக்கு ஐந்தாகக் கொடுங்கள், ஒன்று அவருக்கும், மீதம் உள்ள நான்கு அவரது குழந்தைகளுக்கும்” என்று அறிவித்தார். அதன் பிறகு, என்னிடம், “உன் குழந்தைகள் உண்ணும்போது நீ எப்படி சந்தோஷப்படுகிறாயோ அதேபோல் நீ இங்கு உண்டால் நான் சந்தோஷப்படுகிறேன்” என்று சொன்னதைக் கேட்ட நான் ஒரு நிமிடம் பரவசத்தில் ஆழ்ந்தேன்! என்னால் இதை எப்படி மறக்கமுடியும்? பகவானை விட அதிகம் என்னை நேசிப்பவர் யாரும் இருக்க முடியாது. இது ஒவ்வொரு பக்தருடைய உணர்வும் கூட. உலகம் முழுதும் நிரம்பியிருக்கும் லட்சக்கணக்கான ஸாயிபக்தர்களின் அனுபவமும் இதுதான். 

ஆதாரம்: மே 2006 ஸநாதன ஸாரதி இதழில் பதிவானது.


📝 நிகழ்வு 74:


ஒருநாள் மதிய வேளையில் ஸ்வாமி பழைய மந்திரத்தின் வெளியே வந்து அருகில் அமைந்திருந்த பொப்பிலி அரச குடும்பத்தின் கூடாரத்தினுள் நுழைந்தார். வெளியில் பல பக்தர்கள் அவர் உள்ளே செல்வதைப் பார்த்தபின் அவரது தரிசனத்திற்காக காத்திருந்தனர். ஸ்வாமி, அரச குடும்பத்தைத் தன் அருகில் அழைத்து, தரையில் ஒரு வட்டத்தை வரைந்தார். அதனுள் இருந்து மண்சேறுடன் கூடிய ஒரு வட்டமான பொருளை எடுத்தார். அப்போது சாக்கடையிலிருந்து எடுத்ததைப் போல அதிலிருந்து ஒரு துர்நாற்றம் வீசியது. அவர் தன் வாயால் ஊதிய பின் அதில் ஒட்டிக்கொண்டிருந்த மண் மறைந்தது. அப்போதுதான் அது ஒரு வைர வளையல் எனத் தெரியவந்தது!. ஸ்வாமி அதனை பொப்பிலி மஹாராணியிடம் கொடுத்தார். உற்று நோக்கிய பின் அதில் “பொப்பிலி” என்று பொறிக்கப் பட்டிருந்ததைக் கவனித்தார். உடனே மஹாராணி அவர்கள், அந்த வளையல் தங்களைச் சேர்ந்ததாகக் கூறினார். அப்போது ஸ்வாமி, “27 வருடங்களுக்கு முன்னால், நீ ஒருநாள் குளிப்பதற்காகக் குளியல் அறைக்குச் சென்றாய். வளையல்களைக் கழற்றி அங்கே வைத்தாய். ஆனால் நீ வெளியே வரும்போது அவற்றை அணிய மறந்துவிட்டாய். உன்னுடைய சேவகன் குளியல் அறையை சுத்தம் செய்வதற்காக அங்கு சென்றபோது, தன்னை அறியாமல் இந்த வளையலை வடிகாலுக்குள் போட்டுவிட்டான். அது உடனே கழிவுநீர்த் தொட்டியின் அடியில் வந்து தங்கியது. சிறிது நேரம் கழித்து உனக்கு ஞாபகம் வந்தபின் அவற்றை எடுத்துக்கொள்வதற்காக அங்கு சென்றாய். ஆனால் உனக்கு அங்கு ஒரே ஒரு வளையல் மட்டும் கிடைத்ததால், நீ உடனே அந்த சேவகன் தான் மற்றொரு வளையலை எடுத்திருக்கவேண்டும் என்று அவனை சந்தேகித்து சிறைக்கு அனுப்பினாய்.. அன்று காணாமற்போன வளையலையே இன்று நான் உனக்கு வரவழைத்துக் கொடுத்துள்ளேன்” என்று கூறினார்! இதனைக் கேட்ட நாங்கள் வாயடைத்துப்போனோம்!. இந்தச் சம்பவம் நடந்தபோது நம் ஸ்வாமிக்கு வயது 23 தான்! ஆனால், எங்கும் நிறைந்தவரும், ஸர்வ வல்லமை படைத்தவருமான ஸ்வாமி, 27 வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி விளக்கினார்! 

ஆதாரம்: ஸனாதன ஸாரதி, ஜனவரி 2017 பதிப்பிலிருந்து.


📝 நிகழ்வு 75:

ஓருதடவை ஒரு மாநில ஆளுனரின் மைத்துனி தனது கனவு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால், அவரே மருத்துவராக இருந்தாலும் அதனைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஸ்வாமி அவரது கனவில் வந்து, “நான் ஆபரேஷன் செய்யட்டுமா ?” என்று கேட்டார். அவர் உடனே அதிர்ச்சி அடைந்தார். அவர் கனவிலேயே, “உங்களால் செய்ய முடியுமா?” என்று கேட்டார். ஸ்வாமி, சிரித்துக்கொண்டே ஆம் என்று தலை அசைத்தார். அந்தப் பெண்மணி உடனே சந்தோஷமாக ஒத்துக்கொண்டார். அவர் தன் வயிற்றில் ஒரு வலி இல்லாத கீறலை உணர்ந்தார். ஸ்வாமி, மூன்று நாட்களுக்கு பலவீனமாய் இருப்பாய் என்றும், அதன் பிறகு ஒரு மருத்துவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரிடம் சென்று தையலைப் பிரித்துக்கொள்ளுமாறும் கூறி மறைந்தார். உடனே அவர் விழித்துக்கொண்டு, “ஓ, இது வெறும் கனவு போலும்” என்று வருத்தத்துடன் நினைத்தார். அவர் எழுந்திருக்கும்போது தான் பலவீனமாக இருப்பதை உணர்ந்தார். கனவை நினைத்து, கீறல் விழுந்த அந்த இடத்தைத் தன் கைகளால் வருடினார். அப்போது அங்கே தையல் போட்டு இருப்பதை உணர்ந்தார். மேலும், தன் படுக்கைக்கு அருகில் ரத்தம் தோய்ந்த பஞ்சும் இருந்ததைப் பார்த்தார்! இது ஒரு கற்பனை போல இருந்தது. ஆனால் அது உண்மையில் ஒரு தெய்வீக விளையாட்டாக அமைந்தது. ஸ்வாமி சொன்னதைப் போல மூன்று நாட்களுக்கு அவ்ர் பலவீனமாக இருந்தார். மிகுந்த முயற்சிக்குப் பின்னர் ஸ்வாமி கனவில் சொன்ன மருத்துவரை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. அவரிடம் சென்று வயிற்றில் இருந்த தையலைப் பிறித்துக்கொண்டார். ஒரு கனவில் ஆபரேஷன் நடந்தது என்றால் சாதாரணமாக யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் கடவுளின் வழிமுறைகள், மனித நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவை. சாதாரண மனிதனால் செய்யமுடியாத செயல்களை இறைவன் செய்துமுடிப்பார்.

ஆதாரம்: ஸனாதன ஸாரதி , டிசம்பர் 2014 இதழில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி , ஜஸ்டிஸ். ஏ.பி.மிஸ்ரா அவர்கள் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 76:

ஒருதடவை வித்யாகிரி ஸ்டேடியத்தில் நாராயண சேவை நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று, சாம்பார் குறைந்துபோய்விட்டது என்ற தகவல் கிடைத்தது. உடனே ஸ்ரீ குடும்பராவ் அவர்கள் ஒரு ஜீப்பில் மந்திரத்தில் உள்ள கேன்டீனுக்கு விரைந்தார். மிகச்சூடான சாம்பார் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரம் ஜீப்பில் ஏற்றப்படும்போது சற்றும் எதிர்பாராத விதமாகக் கவிழ்ந்தது. அச்சமயம் அருகில் நின்றிருந்த குடும்பராவின் கால்களை (தொடைகள் முதல் கால்விரல்கள் வரை சாம்பார் நனைத்தது! உடனே அவர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கிருந்த டாக்டர்கள், அவரது கால்கள் சூட்டினால் வெந்துபோயிருப்பதைப் பார்த்தனர். அதற்குத் தேவையான மருந்துகள் கொடுத்து கால்களுக்குக் கட்டுப் போட்டனர். அவர் நொண்டிக்கொண்டே மந்திரத்திற்குச் சென்று ஸ்வாமியை தரிசித்தார். அப்போது அவரது கால் கட்டுகளைப் பார்த்த ஸ்வாமி, “ இது என்ன காட்சி? உன் கால்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே?” என்று நகைச்சுவையாகக் கூறினார். பிறகு அவரிடம் சில “ விருந்தினர்” பேட்ஜுகளைக் கொடுத்து நிலையத்தில் உள்ள வீடுகளில் தங்கியுள்ள பக்தர்கள் சிலரிடம், தானே சென்று கொடுத்துவிட்டு வருமாறு பணித்தார்! ஆணையை உடனே மனமார ஏற்று, நொண்டிக்கொண்டே எல்லாருடைய வீடுகளுக்கும் சென்று கொடுத்துமுடித்தார். அன்று மாலை அவரது மனைவி , கால்களைப் பார்த்துவிட்டு அதிர்ந்துபோனார்! அவரது கால்களுக்கு அடியில் சில தலையணைகளை வைத்து சிறிது ஆறுதல் கிடைக்கச் செய்தார். மறுநாள் காலையில் அவரது மனைவி, கட்டை சிறிது பிரித்து, உள்ளே அந்தப் புண் எப்படி இருக்கிறது என்று பார்க்க முயன்றார். அவருக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும் கொடுக்கும் விதமாக, புண் நன்றாகவே குணமாகியிருந்தது! கால்களில் தோல் எதுவுமே ஆகாதது போல சாதாரணமாகக் காட்சி அளித்தது. கட்டு முழுவதையும் அவிழ்த்துப் பார்த்ததில் கால்கள் பூரண குணம் பெற்று, முன்பு இருந்ததைப்போலக் காட்சியளித்தன. 
அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அந்த சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அருகில் இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், அவர் மிகச்சாதாரணமாக மந்திரத்திற்கு நடந்துசென்றார்! ஸ்வாமி அவரைப் பார்த்தவுடன், சிரித்துக்கொண்டே, “ நான் நேற்றே சொல்லவில்லை? உன் கால்களுக்கு ஒன்றும் ஆகவில்லை!” என்றார்!

ஆதாரம்: பி.குருமூர்த்தி தொகுத்த “மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்” (பாகம் 2) என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 77:

ஓருநாள் ப்ருந்தாவனத்தில், நான் ஸ்வாமியிடம் ஒரு கடிதம் கொடுத்தேன். அதை அவர் ஒரு குறும்புத்தனமான புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். அதில் இருந்த நகைச்சுவையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என் முகத்தில்தான் ஏதாவது குறை இருந்ததோ என்று நினைத்தேன். ஆனால் ஸ்வாமி ஒன்றும் சொல்லாமல் த்ரயீ ப்ருந்தாவன் மதில்சுவர்களைத் தாண்டி சாயிராம் ஷெட்டில் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பதற்காக நடந்து சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் த்ரயீ நோக்கித் திரும்பினார். ஆனால் இப்போது அவர் கைகள் நிறைய, பக்தர்கள் அளித்த கடிதங்கள் நிரம்பியிருந்தன. காற்றில் மிதப்பது போன்ற அவரது தெய்வீகமான நடையுடன் என்னை நோக்கி வந்தார். என்னை உற்றுநோக்கி, தன் கைகளில் இருந்த கடிதங்களின் நடுவே இருந்த என்னுடைய கடிதத்தை மட்டும் லாகவமாக உருவி என்னிடம் வீசிவிட்டு மறுபடியும் ஒன்றும் பேசாமல் நடந்துவிட்டார். இதைப் பார்த்த நான் அதிர்ந்துபோனேன்; ஸ்வாமி என் கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை போலும் எனநினைத்து மனம் வருந்தினேன். பிறகு நான் என் அறைக்குச் சென்று, அந்தக் கடிதத்தைப் பிரித்து, ஏதாவது, ஸ்வாமிக்குப் பிடிக்காதவகையில் எழுதிவிட்டேனோ என்று பார்த்தேன். ஆனால், ஆச்சரியமாக, நான் எழுதிய கடிதம் அந்த உறையில் இல்லை. அதற்கு மாறாக, ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளும் , “உனது சமர்ப்பணத்திற்கு மெச்சினேன். என்னுடைய இந்த ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொள். இதைவைத்து, உகாதிப் பண்டிகைக்கு ஆடைகள் தைத்துக்கொள்” என்று தெலுங்கில் அவர் தன் கையால் எழுதியிருந்த பேப்பரும் அதனுள் இருந்தன! தரிசனத்திற்குப் போய்விட்டுத் திரும்பிய அவர் எப்பொழுது என் கடிதத்தைப் படித்தார்? எப்பொழுது இந்தக் குறிப்பை எழுதினார்? எப்பொழுது இந்தப் பணத்தை உள்ளே வைத்தார் ? உண்மையிலேயே அவர் காலத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்!

ஆதாரம்: பி.குருமூர்த்தி தொகுத்த “மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்” (பாகம் 2) என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 78:

ஸாயி சுப்ரமணியன் என்ற ஒருவர், ஒருநாள் கோவை அருகே ஓடும் ரயில் இருந்து கீழே விழுந்துவிட்டார். தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிலநாட்களில் அவர் கோமா நிலைக்குச் சென்றார். சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த டாக்டர்கள் நம்பிக்கை இழந்தனர். குணமடைந்தாலும், ஞாபகமின்மை மற்றும் வேறுபல மூளை சம்பந்தப்பட்ட கோளாறுகளினால் அவதிப்படுவார் என்று அறிவித்தனர். அவர் 52 நாட்கள் கோமாவில் இருந்தார். ஒருநாள் ஸ்வாமி ஆஸ்பத்திரியில் அவரது அறைக்குள் “வந்தார்”. அதிகாரத் தொனியில், ”எழுந்திரு!, வேலையைப் போய் பாரு!!” என்று தமிழில் கூறினார்! அவர் கோமாவில் இருந்தபோதிலும், இந்த வார்த்தைகளை அவர் கேட்டவுடன் உடனே எழுந்தார். ஸ்வாமி, பூத உடலில், தன்முன் நிற்பதை அவர் கண்டார்! பிறகு சில நொடிகளில் ஸ்வாமி மறைந்துவிட்டார். சுப்ரமணியனின் உடல் முழுவதும் விபூதி படர்ந்திருந்தது. அவர் ஏதோ பேசுவதைக் கேட்டு அவரது அம்மா அறைக்குள் வந்தார். தன் மகன் படுக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். ஸ்வாமி தன் அறைக்குள் வந்து, தன்னை எழுந்திருக்கச் சொல்லிவிட்டு, தன் வேலைகளைத் தொடங்கும்படி கூறியதாகத் தெரிவித்தார். அப்போது அங்கு இருந்த அனைவரும் இதனைக்கேட்டு ஆச்சரியமடைந்து, சுப்ரமணியனை ஆபத்திலிருந்து காப்பாற்றியதற்கு, ஸ்வாமிக்கு நன்றி கூறி, அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்வாமியின் போட்டோவின்முன் கீழே விழுந்து நமஸ்காரம் செய்தனர். சிலநாட்களில் அவர் பூரணகுணமடைந்து, அரசு மருந்தகத்தில் தன் பணிக்குக் திரும்பச் சென்றார்.

ஆதாரம்: பி.குருமூர்த்தி தொகுத்த “மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்” (பாகம் 2) என்ற நூலிலிருந்து.

📝 நிகழ்வு 79:

ஒரு தடவை, ஸாயிசுப்ரமணியன் சேவை நிமித்தம் திருப்பூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு ஊருக்குத் தன் ஸ்கூட்டரில் சென்றார். இரவில் திரும்பிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று ஸ்கூட்டர் நடுவழியில் நின்றுவிட்டது. அதை ஸ்டார்ட் செய்வதற்கு அரைமணி நேரம் போராடியும் அவரால் முடியவில்லை. விளக்குகள் இல்லாத கடும் இருட்டில் அவர் மட்டும் ரோட்டில் தனியாக நின்றுகொண்டிருந்தார். அச்சமயம் அவர் தனக்குள்ளே இவ்வாறு யோசிக்கலானார்: “ஸ்வாமி சேவைக்காகவே வந்திருக்கும்போது ஸ்வாமி ஏன் எனக்கு இந்த இக்கட்டான நிலைமையைக் கொடுக்கவேண்டும்?” அந்த நிமிடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், “என்ன ஆயிற்று?” என வினவினார். உடனே அவரிடம் தன்னுடைய சிக்கலை எடுத்துரைத்தார். அவர் உடனே, பெட்ரோல் டேங்கைத் திறந்து பாருங்கள், என்றார். அப்போதுதான் பெட்ரோல் இல்லை என்பது தெரியவந்தது! உடனே முன்பின் தெரியாத அந்த நபர், கவலைப் படவேண்டாம் என்றும்,தான் சென்று அருகில் உள்ள பங்கில் பெட்ரோல் வாங்கி வருவதாகவும் சொல்லிவிட்டு சென்றார். அரைமணி நேரத்திற்குள் அவர் பெட்ரோல் வாங்கி வந்து டேங்கில் ஊற்றினார். உடனே ஸ்கூட்டர் ஸ்டார்ட் செய்தது. அந்த மனிதர், இவரிடம், “சீக்கிரம் கிளம்பி ஊர் போய்சேருங்கள்” என்று சொன்னார். அந்த மகிழ்ச்சியில் சுப்ரமணியன் ஸ்கூட்டரை உடனே கிளப்பிக்கொண்டு நகர்ந்தார். சிறிது தூரம் செல்வதற்குள், தான் அந்த நல்ல மனிதருக்கு நன்றி கூடச் சொல்லவில்லையே என்ற நினைவுடன் திரும்ப அதே இடத்திற்கு வந்து பார்த்தார். ஆனால் அந்த மனிதரை அங்கேயோ அல்லது அருகிலோ காணவில்லை. அவர் நிம்மதியாக நடு இரவில் வீடு வந்து சேர்ந்தார். இரண்டு வாரங்கள் கழித்து அவர் பர்த்திக்கு வந்திருந்த சமயம், தரிசனத்தின்போது, ஸ்வாமி அவர் அருகில் வந்து, “ நீ திருப்பூரிலிருந்து புறப்படும் முன்னர், தேவையான அளவு பெட்ரோல் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவில்லை. ஸ்கூட்டர் நின்றவுடன் நீ என்னைக் குறை சொல்கிறாய்! இது நியாயமா?” என்று புன்னகையுடன் கேட்டார்!

ஆதாரம்: பி.குருமூர்த்தி தொகுத்த “மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்” (பாகம் 2) என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 80:

பாதுகாப்பு அமைச்சகத்தில் உயர்பதவியில் இருந்த ஒருவர், வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். தன் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாத சமயம், தன்னிடம் இருந்த ரிவால்வரை எடுத்து முதலில் அது சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க ஒரு தரம் காற்றில் சுட்டார். பிறகு தன் நெற்றியில் வைத்து சுடுவதற்குத் தயாரானார். அதே கணத்தில் வாசற்கதவை யாரோ வேகமாகத் தட்டினார்கள். உடனே அவர் ரிவால்வரை ஒளித்து வைத்துவிட்டுக் கதவைத் திறந்தார். அங்கே தனது கல்லூரி நண்பரும் அவரது மனைவியும் நின்றுகொண்டிருந்தனர். அவர்களது பெட்டி படுக்கையை ஒரு சுமை தூக்குபவர் சுமந்துகொண்டிருந்தார். உடனே வேறு வழியில்லாமல் அவர்களை இனிய முகத்துடன் வரவேற்றார். அந்த நண்பர் நகைச்சுவையாகப் பேசியதால் இவர் நன்றாக சிரிக்கத் தொடங்கினார். நண்பரது மனைவி, “உங்கள் மனைவி, மக்கள் எங்கே காணவில்லையே” என்று வினவினார். அதற்கு ஆஃபீசர், “அவர்கள் தற்போது ஊரில் இல்லை, நான் தனியாகத் தான் இருக்கிறேன்” என்று பதில் கூறியவுடன், அவர்கள், “ அப்படியானால் உங்களுக்குத் தொல்லையாக நாங்கள் இருக்க விரும்பவில்லை. ஆகையால் நாங்கள் வெளியே தங்கிக்கொள்கிறோம்” என்று கூறி உடனே அவரிடமிருந்து விடைபெற்று வெளியேறினர். அடுத்த நிமிடம் அவர் தனது அறைக்குச் சென்று பார்த்தால் அங்கு, தான் ஒளித்துவைத்திருந்த ரிவால்வரைக் காணவில்லை! உடனே செய்வதறியாமல் மனம் குழம்பிய அவர், சோர்ந்துபோய், ஒரு சிறு தூக்கம் போடலாம் என்று நாற்காலியில் அமர்ந்த அதே நேரத்தில் ஒரு ஊழியர், அவசரத் தந்தி ஒன்று அவருக்கு வந்திருப்பதாகக் கூறி அதனை அவரிடம் அளித்தார். அதில், “கவலைப்படாதே. உன்னுடைய அந்த உபகரணம் என்னிடம் உள்ளது – பாபா” என்று எழுதியிருந்தது ! தற்கொலை செய்ய நினைத்த அதே வேளையில் அவர் ஸ்வாமியை நினைக்கத் தவறினார். ஆனால், ஸ்வாமி அந்த இக்கட்டான கணத்தில், இந்த ஆஃபீசரை நினைக்கத் தவறவில்லை! இதில் அற்புதம் என்னவெனில், ஒரே ஸ்வாமி, மூவரின் உருவங்கள் எடுத்து, தனது பூத உடல் இருந்த இடத்திலிருந்து வெகுதூரத்திலிருக்கும் இவரது வீட்டிற்கு வந்து, சுமார் 45 நிமிடங்கள் 

ஆதாரம்: பி.குருமூர்த்தி தொகுத்த “மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்” (பாகம் 2) என்ற நூலிலிருந்து.


📝 நிகழ்வு 81:

ஏப்ரல் 1, 1978 அன்றுதான் பகவான் ஸ்ரீ ஸத்யஸாயி பாபா எனக்கு அறிமுகமானார். அன்று நான் ஆம்புலன்ஸில் அவசர சிகிச்சைப் பிறிவுக்குக் கொண்டு செல்லப்பட்டேன். ஒரு சிறப்பு மருத்துவர் குழு என்னை ஆராய்ந்தது. எனக்குப் பலவிதமான பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
அனைத்திலும் நான் தோல்வியடைந்தேன். என் பெயர், என் பிறந்த தேதி, ஃபோன் நம்பர், என் தொழில், நான் வேலை செய்யும் இடம் போன்ற எளிமையான கேள்விகளுக்குக் கூட என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நான் ப்ரமை பிடித்தவன்போல் இருந்தேன். மேலும் என் மனத்தில் குழப்பமும் கவலையும் குடிகொண்டிருந்தன. என் நரம்பு மண்டலம் சரிவர வேலை செய்யவில்லை என்றும் ஆறு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சைபெறவேண்டிவரும் என்றும் மருத்துவர்கள் கணித்தனர். எனது உண்மைநிலை, காலம் , இடம் இவற்றிலிருந்து வேறுபட்ட நிலையில் இருந்த நான், இரவில் ஒரு கனவு கண்டேன். அதில், பரந்து விரிந்த முடியுடன் ஆரஞ்சு நிற அங்கி அணிந்த ஒருவர் என்னை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, சில பஜனைகளைப் பாடியபின், என் தலையைத் தொட்டார். மறுநாள் காலை அந்த மருத்துவக் குழு திரும்ப என்னிடம் வந்து அதே கேள்விகளைக் கேட்டனர். எல்லாக் கேள்விகளுக்கும் எளிதாக பதில் கூறிவிட்டு, எதற்காக இத்தகைய எளிமையான கேள்விகளைக் கேட்கிறார்கள் என்று ஆர்வத்துடன் அவர்களைப் பார்த்தேன். நான் மிகவும் தெளிவாக இருந்ததைப் பார்த்து அவர்கள் ஆச்சரியப்பட்டு, “நேற்று மாலை என்ன நிகழ்ந்தது?” என்று வினவினர். எனக்கு முழுதும் ஞாபகம் இருந்த அந்தக் கனவை அவர்களிடம் விவரித்தேன். அவர்கள், நான் மிகவும் வினோதமான முறையில் மீண்டுவந்திருப்பதாகக் கூறினர். இருந்தாலும் ஒரு கண்காணிப்பு முறையாக என்னை இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் வைத்திருந்தனர். நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபின்னர்தான் என் கனவில் வந்தவர், பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயிபாபா என்று அறிந்துகொண்டேன்.

ஆதாரம்: “பாபா ஈஸ் காட் இன் ஹ்யூமன் ஃபார்ம்” என்ற ப்ரேம் லுத்ரா அவர்கள் தொகுத்த நூலிலிருந்து.



📝 நிகழ்வு 82:


ஒரு தடவை, ஸ்வாமியுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டும், தலையில் ஒரு கனமான கூடையை சுமந்துகொண்டும் சாலை ஓரம் சென்றுகொண்டிருப்பதை ஸ்வாமி பார்த்தார். அன்றைக்கு மறுநாள், அனைவரும் புத்தாடை உடுத்துக் கொண்டாடும் தீபாவளித் திருநாளாக இருந்தது. ஸ்வாமி உடனே காரை நிறுத்தினார். “ ஸாயிபாபா என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று நாங்கள் அவளிடம் கேட்டதற்கு அவள், “ நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்த சிலர் புட்டப்பர்த்திக்கு யாத்திரை சென்றிருக்கிறார்கள். நானும்கூட அந்த யாத்திரையை மேற்கொண்டு அவரை தரிசனம் செய்யவேண்டும் என்று ஒரு வேண்டுதல் வைத்துள்ளேன்.” என்று பதிலளித்தாள். ஸ்வாமி அவளையும் அவளது குழந்தையையும் ஆசீர்வாதம் செய்து, புதிய ஆடைகள் வாங்குவதற்குப் பணம் அளித்து, “உன்னுடைய வேண்டுதல் நிறைவேறியது. நான் தான் ஸாயிபாபா !” என்றுகூறி அவளை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்! அவள் உடனே ஸ்வாமியின் கால்களில் விழுந்து விழுந்து எழுந்தாள்! கார் புறப்பட்டபின் , நடந்தது எல்லாம் நனவா அல்லது கனவா என்ற கேள்விக்குறியுடைய முகத்துடன் தன் கண்களிலிருந்து மறையும்வரை காரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் !

ஆதாரம்: கஸ்தூரி அவர்களின் “லவிங் காட்” என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 83:

ஓரு தசரா பண்டிகையின்போது, ஹொன்னப்பா பாகவதர் என்ற இசை வல்லுநர், பாட்டுக் கச்சேரி செய்தார். நிகழ்ச்சியின் முடிவில் ஸ்வாமி அவருக்கு தங்க நெக்லஸ் ஒன்றை ஸ்ருஷ்டித்து, தன் கைகளால் அவருக்கு அணிவித்தார். பெங்களூருக்கு அவர்கள் காரில் திரும்பச் செல்கையில், அவரும் அவரது நண்பர்களும், அந்தத் தங்கத்தின் காரட் மதிப்பைக் கணித்துக் கொண்டிருந்தனர். அதிலிருந்து அதன் பணமதிப்பையும் பற்றி விவாதித்தனர். ஸ்வாமியின் ஸ்ருஷ்டியின் நிஜத்தையே விவாதிக்கும் அளவுக்கு அவர்களது வாதம் சென்றுவிட்டிருந்தது. சற்றுநேரத்தில் அவர்கள் செல்லும் பாதையில் எதிர்பாராத விதமாக ஒரு ஆற்றுவெள்ளத்தைச் சந்திக்கவேண்டியிருந்தது. ஆதலால், வெள்ளம் வடியும்வரை காரிலேயே இரவைப் போக்க நேரிட்டது. மறுநாள் காலை வெள்ளம் வடிந்தவுடன் அவர்கள் புறப்பட்டபோது, பாகவதர் கழுத்தில் தங்கச் சங்கிலி மாயமாகிவிட்டதைக் கவனித்தனர்! அதனை எங்கும் காணவில்லை. உடனே அந்த பாகவதர் வெலவெலத்துப்போய், உடனே பர்த்திக்குத் திரும்பிச் சென்று ஸ்வாமியிடம் மன்னிப்புக் கோர முடிவுசெய்தார். அவர்கள் புட்டப்பர்த்திக்கு வந்து சேரும் முன்னரே ஸ்வாமி அங்கு நடந்தவற்றை என்னிடம் கூறிவிட்டார்! அந்த பாகவதர், பர்த்தி வந்தடைந்து, நேராக மந்திரம் வாசலில் உள்ள ஒரு தூணின் மேல் சாய்ந்துகொண்டு மிகுந்த சோகத்துடன் தன் கண்ணீரை அடக்கிக்கொண்டு ஸ்வாமியின் வருகைக்காகக் காத்திருந்தார். ஸ்வாமி வெளியில் வந்தவுடன், மடைதிறந்தவெள்ளம்போல் கண்ணீர் பெருகியது. ஸ்வாமி அவரைத் தட்டிக்கொடுத்துப் பலவிதமாக அமைதிப்படுத்தினார். ஸ்வாமி, “எந்தத் தவறும் நடந்துவிடவில்லையே? இது எல்லோரும் செய்வதுதான்! ஆனால் உன்னைச் சுற்றியிருந்தோர் இவ்வாறு எண்ணுவதற்கு ஊக்குவித்தனர். கவலைப்படாதே. இப்பொழுதும் நான் உன்னை நேசிக்கிறேன். நான் சந்தேகத்தை விரும்பி வரவேற்கிறேன். ஏனெனில், அது மட்டுமே நம்பிக்கையை பலப்படுத்தும். இதோ! சற்றும் மாற்றம் இல்லாத அதே நெக்லஸ்! நான் எதை ஸ்ருஷ்டித்தாலும் அது என்னுடையது, ஆகையால் அது என்னிடமே திரும்பிவருவதுதான் அதன் நியதி!” என்று கூறி, தன் கையை அசைத்து அதனை வரவழைத்துத் தன் தவறை உணர்ந்து வருந்திய அந்த பாகவதருக்குத் திரும்பக் கொடுத்தார்.

ஆதாரம்: கஸ்தூரி அவர்களின் “லவிங் காட்” என்ற நூலில் இருந்து.


📝 நிகழ்வு 84:

நான் ஸாயி இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தபின், அங்கே கல்லூரி-ஹாஸ்டல்-மந்திர் சட்டதிட்டங்களும் நடைமுறையில் உள்ள வழக்கங்களும் எனக்குப் பழகுவதற்கு சில காலம் பிடித்தது. ஆனால், ஹாஸ்டல் உணவு மட்டும் எனக்கு சற்றும் ஒவ்வாமல் இருந்தது. சீக்கிரமே நான் பேதியால் கஷ்டப்பட ஆரம்பித்தேன். ஆஸ்பத்திரிக்குச் சென்று டா.அல்ரேஜா அவர்களிடம் மருந்து வாங்கி சாப்பிட்டேன். ஆனால், என் நிலைமையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. ஒருநாள், மனம் வெறுத்து, எல்லா மாத்திரைகளையும் தூக்கி எறிந்துவிட்டேன். வகுப்புகள் முடிந்தவுடன், ஹாஸ்டலுக்குச் சென்று, அங்கிருந்து வழக்கம்போல அனைத்து மாணவர்களுடன் சேர்ந்து வரிசையில் வராமல், நேராகவே தரிசனத்திற்காக மந்திரத்திற்குச் சென்றுவிட்டேன். மந்திரத்தில் இன்டர்வியூ அறைக்கு முன்னால் முதல்வரிசையில் அமர்ந்தேன். ஸ்வாமி, தரிசனத்தை முடித்துவிட்டு, நேராக என்னிடம் வந்தார். நான் என்ன பேசுவது என்று தெரியாமல், நடுங்க ஆரம்பித்தேன். இறுதியில், ஒருவழியாக, ஸ்வாமியிடம், “ஸ்வாமி, நான் வயிற்றுவலியால் அவதிப்படுகிறேன்” என்று கூறினேன். ஒருசில வினாடிகள் நிலவிய நிசப்தத்திற்குப் பிறகு ஸ்வாமி, “எத்தனை மாத கர்ப்பம்?” என்று கேட்டாரே பார்ப்போம்! உடனே அனைவரும் ‘கொல்’லென்று நவ்வினர். ஸ்வாமி அத்தோடு நில்லாமல், “ஆணா, பெண்ணா அல்லது இரட்டைகளா” என்று மேற்கொண்டு வினவினார்! நான் இந்த நிகழ்வை மிகவும் ரசிக்க ஆரம்பித்தேன். இந்த நகைச்சுவை நாடகம் அரங்கேறிய சில நொடிகளுக்குப்பின், ஸ்வாமி விபூதி வரவழைத்துத் தன் கையால் என் வாயில் போட்டார். சிலநிமிடங்களில் என் வயிற்றுவலி முற்றிலும் நீங்கியது.

ஆதாரம்: ஸனாதன ஸாரதி, ஜூன் 2017இல் முன்னாள் மாணவர் எழுதிய பதிவிலிருந்து.


📝 நிகழ்வு 85:

துருக்கி நாட்டில் நடைபெற்ற அகில உலக விஞ்ஞானிகள் மாநாடு ஒன்றில், இந்தியாவின் பிரதிநிதியாக பிரபல விஞ்ஞானி டாக்டர். சூரி பகவந்தம் சென்றிருந்தார். அங்கே அந்த மாநாட்டின் தலைவர் , இவரைப் பேசுமாறு அழைத்தார். தான் எந்த தலைப்பில் பேசலாம் என்று முடிவு செய்து தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தாரோ அதே தலைப்பில் பேசத்தொடங்கினார். பத்து நிமிடங்களுக்குப் பிறகு, தான் எந்த ஒரு புதிய சூத்திரத்தை விளக்கிச் சொல்லவேண்டும் என்று நினைத்தாரோ அதை அவர் முற்றிலும் மறந்துபோய்விட்டார்!. தன் தலையைச் சொறிந்தும் ஞாபகத்திற்கு வரவில்லை. எதாவது ஒரு பேப்பரில் எழுதிவைத்திருக்கலாம் என்று நினைத்துத் தன் பாக்கெட்டுகளைத் துழாவினார்! அங்கும் கிடைக்கவில்லை.
மாநாட்டில் இருந்து திரும்பிவந்த பின்னர், பின்வருமாறு ஸ்வாமிக்குக் கடிதம் எழுதினார்: “ஸ்வாமி! எனக்கு ஏற்பட்ட நிலைமையால், என் கௌரவம் மட்டும் இல்லாமல், நமது இந்தியாவின் கௌரவமுமே பணயம் வைக்கப்பட்டதுபோல் உணர்ந்தேன்! அந்த இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் என்னைக் காத்தருள் புரிந்தீர்கள்!” இது எவ்வாறு நடந்தது எனில், அவர் அப்போது "ஸாயிராம்!” என்று மனதில் உரக்கக் கூவினார். அந்தக் கணமே ஸ்வாமி அவரின் எதிரில் தோன்றி, தன் உள்ளங்கையில் அந்த சூத்திரத்தை ஒளிருமாறு செய்தார்!

ஆதாரம்: “பாபா ஈஸ் காட் இன் ஹ்யூமன் ஃபார்ம்” என்ற ப்ரேம் லுத்ரா அவர்கள் தொகுத்த நூலிலிருந்து.


📝 நிகழ்வு 86:


கொடைக்கானலில் ஒரு சமயம் ஸ்வாமி, மாணவர்கள் மற்றும் சில விருந்தினர்களோடு தெலுங்கில் உரையாடிக்கொண்டிருந்தார். ஸாயி சேவா அனைத்துலக நிறுவனத்தின் அப்போதைய தலைவராக இருந்த டா.கோல்ட்ஸ்டீன் அந்த உரையாடலைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார். அதே சமயம், தனது பருமனான உடலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததை அவர்களது சைகைகளால் அவர் அறிந்து ஒருவிதமான சங்கடமான மனநிலையை அடைந்தார். ஸ்வாமியும் மற்றவர்களும் அவ்வப்போது அவரை நோக்கி புன்முறுவல் பூத்தபடி இருந்தனர். ஒரு நேரத்தில், ஸ்வாமி வாய்விட்டு உரக்கச் சிரித்தார். தன்னைப் பற்றிய நகைச்சுவை தான் என்று தெரிந்தும், கோல்ட்ஸ்டீன் அவர்கள் தானும் ஸ்வாமியுடன் சேர்ந்து சிரிக்கலானார். திடீரென்று சிரிப்பதை நிறுத்திவிட்டு ஸ்வாமி, அவரை நோக்கி, “நீ ஏன் இப்பொது சிரித்தாய்?” என்று வினவினார். அதற்கு கோல்ட்ஸ்டீன், “ஸ்வாமி, நீங்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து நானும் சந்தோஷப்படுகிறேன்” என்று பதிலளித்தார். ஸ்வாமி உடனே மாணவர்கள் பக்கம் திரும்பி, “பார்த்தீர்களா? இதுதான் உண்மையான பக்தி! தன்னப்பற்றிதான் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தும்கூட, என் சந்தோஷத்தைப் பார்த்துத் தானும் சந்தோஷப்படுகிறார். நீங்கள் எல்லோரும் அவரது இந்த அருமையான குணத்தை வளர்த்துக்கொண்டு அவரைப் போன்ற பக்தர்களாக மாறவேண்டும்” என்றார். ஸ்வாமியின் நகைச்சுவைகூட நமக்குப் பாடமாக அமைகின்றது.

ஆதாரம்: “விட் அண்ட் விஸ்டம் ஆஃப் ஸத்ய ஸாய்” என்ற பி. குருமூர்த்தி அவர்கள் தொகுத்த நூலில் இருந்து.


📝 நிகழ்வு 86:

கொடைக்கானலில் ஒரு சமயம் ஸ்வாமி, மாணவர்கள் மற்றும் சில விருந்தினர்களோடு தெலுங்கில் உரையாடிக்கொண்டிருந்தார். ஸாயி சேவா அனைத்துலக நிறுவனத்தின் அப்போதைய தலைவராக இருந்த டா.கோல்ட்ஸ்டீன் அந்த உரையாடலைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார். அதே சமயம், தனது பருமனான உடலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததை அவர்களது சைகைகளால் அவர் அறிந்து ஒருவிதமான சங்கடமான மனநிலையை அடைந்தார். ஸ்வாமியும் மற்றவர்களும் அவ்வப்போது அவரை நோக்கி புன்முறுவல் பூத்தபடி இருந்தனர். ஒரு நேரத்தில், ஸ்வாமி வாய்விட்டு உரக்கச் சிரித்தார். தன்னைப் பற்றிய நகைச்சுவை தான் என்று தெரிந்தும், கோல்ட்ஸ்டீன் அவர்கள் தானும் ஸ்வாமியுடன் சேர்ந்து சிரிக்கலானார். திடீரென்று சிரிப்பதை நிறுத்திவிட்டு ஸ்வாமி, அவரை நோக்கி, “நீ ஏன் இப்பொது சிரித்தாய்?” என்று வினவினார். அதற்கு கோல்ட்ஸ்டீன், “ஸ்வாமி, நீங்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து நானும் சந்தோஷப்படுகிறேன்” என்று பதிலளித்தார். ஸ்வாமி உடனே மாணவர்கள் பக்கம் திரும்பி, “பார்த்தீர்களா? இதுதான் உண்மையான பக்தி! தன்னப்பற்றிதான் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தும்கூட, என் சந்தோஷத்தைப் பார்த்துத் தானும் சந்தோஷப்படுகிறார். நீங்கள் எல்லோரும் அவரது இந்த அருமையான குணத்தை வளர்த்துக்கொண்டு அவரைப் போன்ற பக்தர்களாக மாறவேண்டும்” என்றார். ஸ்வாமியின் நகைச்சுவைகூட நமக்குப் பாடமாக அமைகின்றது.

ஆதாரம்: “விட் அண்ட் விஸ்டம் ஆஃப் ஸத்ய ஸாய்” என்ற பி. குருமூர்த்தி அவர்கள் தொகுத்த நூலில் இருந்து.


📝 நிகழ்வு 87:

ஓருநாள், கொடக்கானலில் ஸ்வாமியின் கார், ‘ஸாயி ஸ்ருதி’ யிலிருந்து கீழே இறங்கி மெயின் ரோட்டில் வந்துகொண்டிருந்தது. அப்போது என் குடும்பத்தினரும் மற்ற பக்தர்களும் ஏரிக்கு மறுபக்கத்தில், சுமார் ஒரு கி.மீ. தொலைவில் இருந்தனர். ஸ்வாமியின் கார் வருவதைப் பார்த்தவுடன் அனைவரும், சாலையின் இருபுறமும் வரிசையாக நின்று தங்கள் கைகளைக் கூப்பிய வண்ணம் இருந்தனர். ஆனால், கார் அருகில் வந்த பிறகுதான், ஸ்வாமி காரினுள் இல்லை என்று தெரிய வந்தது. அவர், பின்னால் வந்த பஸ்ஸில், மாணவர்களுடன் இருந்தார். மக்கள் இவ்வாறு நின்றிருப்பதைக் கவனித்த அவர், தன் மாணவர்களிடம் திரும்பி, “பார்த்தீர்களா? கார் எல்லோருடைய வணக்கங்களையும் வாங்கிக்கொண்டிருக்கிறது. அது கடவுளுடன் தொடர்பிலே இருந்ததால் தான் அதற்கு இந்த மரியாதை. இன்று அது தனியாகச்சென்றாலும் அதனை மக்கள் வணங்குகின்றனர். நீங்கள் யாருடைய சகவாசத்தில் இருக்கிறீர்களோ அதைவைத்துத்தான் நீங்கள் மதிப்பிடப்படுவீர்கள்! நான் உங்களுடன் இருப்பதால், அந்த வணக்கங்களை நான் இழந்து கொண்டிருக்கிறேன்!” என்று கூறினார். 

ஆதாரம்: “விட் அண்ட் விஸ்டம் ஆஃப் ஸத்ய ஸாய்” என்ற பி. குருமூர்த்தி அவர்கள் தொகுத்த நூலில் இருந்து.


📝 நிகழ்வு 88:

நான் கல்லூரி மாணவனாக இருந்த நாட்களில் நான் என்னுடைய விடுமுறை நாட்களை ப்ருந்தாவனத்திலோ அல்லது பர்த்தியிலோ, எங்கு ஸ்வாமி உள்ளாரோ அங்கு கழிப்பது வழக்கம். ஆனால் ஒருதரம் ஸ்வாமி என்னை வீட்டிற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார். ஏன் என்னைத் தன் சன்னிதியிலிருந்து அனுப்புகிறார் என்று நினைத்து மிகவும் வருந்தினேன். என் வீட்டில் ஒருநாள் இரவு உணவிற்குப் பின் மொட்டைமாடிக்குச் சென்று அங்கிருந்த ஒரு பழைய கட்டிலில் படுத்தேன். நான் ஸ்வாமியை இழந்ததைப் போல் தவித்தேன். அப்போது எனக்குப் பிடித்த பாட்டான “நகுமோமு கனலேநி நா ஜாலி தெலிஸி நனு ப்ரோவராதா” (உன்னுடைய புன்முறுவல் பூத்த அழகான முகத்தைப் பார்த்துப்புகழ முடியாத என்னுடைய பரிதாபமான நிலையைக் கண்டு உன்னால் இங்கு வந்து என்னை ரக்ஷிக்க முடியாதா?) என்று தொடங்கும் த்யாகராஜ கீர்த்தனையைப் பாடினேன். மேலும் எனக்குப் பிடித்த வரியான, “ஜகமேலே பரமாத்மா எவரிதோ மொரலிடுது, வக சூபகு தாலனு நன்னேலுகோரா” ( ஓ , இந்த ப்ரபஞ்சத்தின் தலைவா, உன்னிடம் இல்லாது வேறு யாரிடம் என்னுடைய நிலையை நான் விவரிப்பேன்? தயை கூர்ந்து என்னைக் கைவிட்டுவிடாதே, என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. தயை கூர்ந்து என்னை உன் அருகில் சேர்த்துக்கொள்!) கண்ணீருடன், “ஸ்வாமி! என்னை ஏன் உங்கள் சன்னிதியிலிருந்து அனுப்பினீர்கள்?” என்று கதறினேன். விரவில் நான் உறங்கத் தொடங்கினேன். அப்போது கனவில் ஸ்வாமி அழகான புன்னகையுடன் என்னருகில் வந்து நின்று, என்னை பாதநமஸ்காரம் செய்துகொள்ளச் சொன்னார்! பின்னர் மெதுவாக மிதந்து சென்றுவிட்டார்!! நான் மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாகி, ஆனந்தக்கண்ணீர் விட்டேன்.
விடுமுறை கழிந்தபின் நான் ப்ரசாந்தி நிலையம் சென்றேன். விரைவில், ஸ்வாமியின் இன்டர்வியூ அறையில் வைக்கப்பட்டிருந்த புடவை மற்றும் வேஷ்டிகளை சிறிய கட்டுகளாக அடுக்கி வைக்கும் பணிக்கு நான் மிகவும் அதிருஷ்டவசமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் என் வேலையை செய்து கொண்டிருக்கும்போது, ஸ்வாமி என்னருகில் வந்து நின்று, நான் கனவில் பார்த்த அதே புன்னகையுடன் என்னை உற்றுநோக்கி, “பாத எந்துகு, ஜகமேலே பரமாத்மா நீதோனே உண்டகா?” (ஜகத்தை ஆளும் பரமாத்மா எப்பொதும் உன்னுடனேயே இருக்கும்போது எதற்காகக் கவலைப்படுகிறாய்?”) என்றார்! உடனே அளவற்ற ஆனந்தத்தின் எல்லைக்கே சென்ற நான் அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கினேன். 

ஆதாரம்: பி.குருமூர்த்தி தொகுத்த “மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்” (பாகம் 2) என்ற நூலிலிருந்து...
 


📝நிகழ்வு 89:

ஓருநாள் ஸ்வாமி , பள்ளிக்கு வருவதாக இருந்தது. அன்றைக்கு என்று ஒரு ஆசிரியர், துரதிருஷ்ட வசமாக சில நிமிடங்கள் தாமதமாகத் தன் வகுப்பிற்கு வந்தார். பின்னர் ஸ்வாமி பள்ளிக்கு வந்த பிறகு, அந்த ஆசிரியரின் வகுப்பிற்குச் சென்றார். அங்கிருந்த இளம் மாணவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, திரும்பிச் செல்லுகையில், ஆசிரியரைக் குறித்து, “இவர் சரியான நேரத்திற்கு வருகிறாரா?” என்று கேட்டார்! ஆசிரியருக்கு தர்மசங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தும்படி அப்போது அந்த வகுப்பின் கடைசியில் இருந்த ஒரு மாணவி, “இன்று அவர் காலதாமதமாக வந்தார், ஸ்வாமி!” என்று கூறிவிட்டாள்! மிகவும் வருத்தமான முகத்துடன் இருந்த ஆசிரியரை, ஸ்வாமி , தான் அவரது செயலை அங்கீகரிக்கவில்லை என்ற ஒரு பார்வையுடன் நோக்கினார். ஒருமணிநேரம் தாமதமாக அவர் வந்ததாகக் கூறி ஸ்வாமி அவரைக் கடிந்துகொண்டார். அப்போது அந்த ஆசிரியர் ஸ்வாமியிடம், “ ஸ்வாமி, நான் மூன்று நிமிடம் தான் தாமதமாக வந்தேன், ஒருமணி நேரம் அல்ல, ஸ்வாமி!” என்று கூறினார். ஆனால் ஸ்வாமி, “இருபது மாணவர்கள், ஒவ்வொருவரும் மூன்று நிமிடம், ஆக மொத்தம் ஒருமணி நேரம் தாமதம்!” என்று பதிலளித்தார்!

ஆதாரம்: “விட் அண்ட் விஸ்டம் ஆஃப் ஸத்ய ஸாய்” என்ற பி. குருமூர்த்தி அவர்கள் தொகுத்த நூலில் இருந்து.


📝நிகழ்வு 90:

என் தந்தை டெல்லியில் ஸாயி நிறுவனத்தில் ஒரு சுறுசுறுப்பான பணியாளராக இருந்தார். ஒரு புதன்கிழமை இரவு என் அம்மா தன் வேலைகளை முடித்துவிட்டு படுக்கச் சென்றார். மறுநாள் காலை மிகுந்த உற்சாகத்துடன், தனக்கு வந்த கனவைப் பற்றி என் தந்தையிடம் சொல்வதற்குத் துடித்தார். அந்தக் கனவில் ஸ்வாமி தோன்றி என் அம்மாவிடம், “எனக்கு ரசம் குடிக்க வேண்டும் போலிருக்கிறது” என்று எங்களுடைய தாய்மொழியான தமிழிலேயே கூறியுள்ளார்! அன்று வியாழக்கிழமையாக இருந்ததால், பாயசத்திற்குப் பதிலாக ரசம் சமைத்து ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்தார். சீக்கிரத்தில் ஸ்வாமி ஒரு வியாழக்கிழமை அன்று டெல்லி வந்தார். மறுநாள் காலையில், அனைத்து டெல்லி ஸாயி நிறுவன பொறுப்பாளர்களுக்கும் ஸ்வாமியுடன் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்தது. அதனால் என் தந்தைக்கும் அதில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மறுநாள் காலையில் எங்கள் வீட்டிற்கு மாநிலத் தலைவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஸ்வாமிக்கு உணவு தயாரிப்போரின் பட்டியலில் என் அம்மாவின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். உடனே என் அம்மாவிற்குத் தன் கனவு ஞாபகம் வந்ததால் அவர் மிகுந்த சிரத்தையுடன் ரசம் தயார் செய்து மாநிலத் தலைவர் வீட்டிற்குக் கொண்டுசென்று கொடுத்தார். ஸ்வாமி என்ன சாப்பிடப்போகிறார் என்ற நினைப்பிலேயே என் அம்மாவிற்குத் தன் உணவை உட்கொள்ள முடியவில்லை! இரவு உணவு நிகழ்ச்சி முடிந்தபின் ஸ்வாமி தன் இருப்பிடத்திற்குக் கிளம்பினார். உடனே, மாநிலத்தலைவரின் மனைவி, என் அம்மாவின் பெயரை சொல்லி அழைத்துக் கொண்டே ஓடிவந்தார்! அவர் சொன்ன செய்தி அம்மாவிற்கு மாபெரும் ஆனந்தத்தை அளித்தது! ஸ்வாமி, என் அம்மா பக்தியுடன் சமைத்திருந்த ரசத்தை விரும்பிக் குடித்துள்ளார்! கனவு பலித்தது!! அன்று முழுப் பொழுதும் நாங்கள் அனைவரும் விவரிக்கமுடியாத ஆனந்தத்தில் மூழ்கினோம்!

ஆதாரம்: ஸாயி நந்தனா, 1985 (ஸ்ரீ ஸத்யசாயி ஹாஸ்டல் (ப்ரசாந்தி நிலயம்) பதிப்பு)


📝நிகழ்வு 91:

என்னுடைய தந்தை இந்தியன் ஏர்லைன்ஸில் பைலட்டாக இருந்தார். ஒரு தடவை சண்டிகர், ஜம்மு வழியாக டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கும் மறுபடியும் ஸ்ரீந்கரிலிருந்து டெல்லிக்கு அதே மார்க்கத்தில் திரும்புவதாக இருந்தது. “ஸாயிராம்” என்று சொல்லிவிட்டு டெல்லியிலிருந்து புறப்பட்டார். ஸ்ரீநகர் சேரும் வரை எல்லாம் நல்லபடியாக இருந்தது. அப்போது டெல்லியில் மேகங்கள் கூடத்தொடங்கின. ஸ்ரீநகர் ஏர்போர்ட்டில் இந்த விஷயம் அவருக்கு அறிவிக்கப்பட்டது. ஆகையால் அங்கு ஒருநாள் தங்கிவிட்டு மறுநாள் காலை 10 மணிக்கு ஜம்முவை நோக்கிப் புறப்பட்டார். முதலில் ஜம்முவையும் பிறகு அங்கிருந்து சண்டிகரையும் சென்றடைந்தார். அங்கிருந்து டெல்லியை நோக்கிப் புறப்பட்டபோது, தடங்கல்கள் ஏற்பட ஆரம்பித்தன. அவரது விமானம் அடர்ந்த மேகங்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டு பக்கவாட்டில் மிகவும் மோசமாகக் குலுங்க ஆரம்பித்தது. இதனைக் கவனித்த பிரயாணிகள் உடனே குரல்கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால், என் தந்தையும் அவரது சகவிமானியும், தாங்கள் ஒரு மோசமான மேகச் சுழலுக்குள் சிக்கிக்கொண்டதை உணர்ந்தனர். முன்பு ஒருதரம் ஸ்வாமி என் தந்தைக்கு ஒரு மோதிரம் வரவழைத்துக் கொடுத்து , “நீ எப்பொழுதெல்லாம் சங்கடத்தில் சிக்குகிறாயோ அப்போதெல்லாம் என்னை நினைத்துக்கொள்” என்று கூறியிருந்தார். ஆகவே இந்த நேரத்தில் என் தந்தை அந்த மோதிரத்தைப் பார்த்து, “ஸ்வாமி! இப்போது நான் அனைத்தையும் உங்களிடம் விட்டுவிடுகின்றேன். நீங்கள் தான் காத்தருளவேண்டும் “, என வேண்டிக்கொண்டார். உடனே ஆச்சரியமாக, அந்த *மேகக்கூட்டம், விமானத்திற்கு வழிவிடுவதைப்போலத் தோன்றியது. அந்த உயரத்தில்  கதவு ஒன்று திறந்ததைப் பார்த்த என் தந்தை , அதனுள் ஒரு பச்சைநிற ஒளி ஒன்று, அந்த மேகங்களினூடே தன் விமானத்திற்கு வழிகாட்டுவதாக உணர்ந்தார். சிறிது நேரம் கழித்து, கீழே டெல்லி விமான நிலையம் தென்பட்டது. அவர் உடனே, பறந்துகொண்டிருக்கும் உயரத்தைக் குறைப்பதற்காக சில வட்டங்கள் அடித்துப் பின் மிகவும் நல்லபடியாகத் தரை இறங்கினார். பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கும்போது கடவுளுக்கும் என் தந்தைக்கும் நன்றி கலந்த பாராட்டுகள் தெரிவித்தனர். என் தந்தையும் பயணம் செய்த அனைவரின் உயிர்களையும் காப்பாற்றிய ஸ்வாமிக்குத் தன் நன்றி உணர்வுடன் வணக்கங்களைத் தெரிவித்தார்.

ஆதாரம்:  ஸாயி நந்தனா, 1985 (ஸ்ரீ ஸத்யசாயி ஹாஸ்டல் (ப்ரசாந்தி நிலயம்) பதிப்பு)


📝நிகழ்வு 92:


என் அம்மா ஒரு பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. என் தந்தை, சிம்லா மாகாணத்தின் மாநிலத் தலைவர் மூலமாக ஸ்வாமிக்கு உடனே ஒரு கடிதத்தை அனுப்பினார். அதே நேரத்தில் என் அம்மா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஸ்வாமி அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்துவிட்டு, “ஆபரேஷன் நடக்கட்டும்” என்று கூறிவிட்டார். உடனே என் தந்தைக்கு அந்த வார்த்தை பகிரப்பட்டது.. என் அம்மாவை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்கையில் அப்போது அங்கே வந்த டாக்டர், என் அம்மாவிடம் தான் அணிந்திருந்த ஷீரடி ஸாயிபாபா மோதிரத்தைக் காண்பித்தார். என் அம்மா அதை உற்றுநோக்கிக் கொண்டு நம் ஸ்வாமியிடம் ஆழ்ந்து ப்ரார்த்தித்தார். அப்போது அந்த டாக்டர், “நீ உன் ஸாயியிடம் வேண்டிக்கொள், நான் என் ஸாயியிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்றார். 
ஆபரேஷன் மிக நல்லபடியாக முடிந்தது. டாக்டர்கள், “கடவுள் மட்டுமே இந்தக் கஷ்டமான ஆபரேஷனை செய்திருக்க முடியும்”l என்று கூறினர். சில நாட்கள் கழித்து, என் அம்மா, மோதிரத்தைக் காண்பித்த அந்த டாக்டருக்கு நன்றி சொல்ல நினைத்தார். ஆகையால், அவரைப் பற்றிய அடையாளங்களைக் கூறி அவரைப்பார்க்கவேண்டும் என்று கேட்டார். இதைக்கேட்ட சக மருத்துவர்கள், ஆச்சரியத்துடன் அப்படிப்பட்ட டாக்டர் அங்கு இல்லவே இல்லை என்று கூறினர்! ஸ்வாமிக்கு நன்றிகூறவேண்டும் என்ற எண்ணத்துடன் என் தந்தை பர்த்திக்கு வந்தார். ஸ்வாமி அவரை இன்டர்வியூவிற்கு அழைத்து, “ஆபரேஷனை நான் தான் செய்தேன். உன் மனைவி அழைத்தாள், நான் வந்தேன். ‘நீ உன் ஸாயியிடம் வேண்டிக்கொள், நான் என் ஸாயியிடம் வேண்டிக்கொள்கிறேன்’ என்று ஒரு டாக்டர் உன் மனைவியிடம் சொல்லவில்லையா? அது நான் தான்!” என் தந்தையின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்வாமி மீண்டும் தொடர்ந்தார்: “இங்கே பார், ஸாயி, எப்போதுமே எதையும் சரியாகத் தான் செய்வார். உன் மனைவியிடம் அறுவை சிகிச்சையின் தையல்களைப் பார். சீழ் எதுவுமே இல்லை. உடம்பில் அப்போது உயிர் இல்லை. ஸ்வாமி வந்தேன். அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள், “ ஏன் இந்த சிகிச்சையை மேற்கொண்டோம்? தவறிழைத்துவிட்டோமோ?” என்று கூட நினைத்தனர். ஆனால், உன் மனைவி ஒன்பது நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.”

ஆதாரம்: ஸாயி நந்தனா, 1985 (ஸ்ரீ ஸத்யசாயி ஹாஸ்டல் (ப்ரசாந்தி நிலயம்) பதிப்பு).


📝நிகழ்வு 93:

மார்ச் மாதம் 1975. எங்களுடைய வருடாந்திரப் பரிட்சைகள் தொடங்கும் காலம். பரிட்சைக்கு ஒருநாள் முன் எனக்கு கடுமையான ஜுரம் வந்துவிட்டது. என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. அன்று , மதியம் 2 மணிக்கு  எனக்கு அட்வான்ஸ்டு அக்கௌன்டிங் (advanced accounting) என்ற தலைப்பில் பரீட்சை. நான் படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தேன். நான் மெதுவாகக் கண்விழித்துப் பார்த்தேன். என்னுடைய வகுப்பின் சகமாணவர்கள் டைனிங் ஹாலில் மிகவும் சுறுசுறுப்பாகப் படித்துக்கொண்டிருந்தார்கள். நான் என்னுடைய நிலையை நினைத்து மிகவும் நொந்துபோனேன். எங்களது வார்டன் ஸ்ரீ. சுதர்ஷன் அவர்கள் என் உடல்நிலையைப் பற்றி ஸ்வாமியிடம் தெரிவித்தார். உடனே கருணாமூர்த்தியான ஸ்வாமி என்னை அவரது அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். சகமாணவர்கள் இருவர் என்னை ஸ்வாமியிடம் தூக்கிச் சென்றனர். ஸ்வாமி விபூதி வரவழைத்து என் தலை மற்றும் வலது கை முழுவதும் பூசினார். “நீ வெறுமனே சென்று பரீட்சை அறையில் உட்கார். உனக்காக நான் பரீட்சை எழுதுகிறேன்” என்று கூறினார். நான் அவரது பொற்பாத கமலங்களில் விழுந்து வணங்கினேன். பின்னர் பரீட்சை அறைக்குச் சென்று என் இருக்கையில் அமர்ந்து ஸ்வாமியை நினைத்தேன். நான் எப்படி பரீட்சை எழுதினேன் என்ற ஞாபகம் சுத்தமாக இல்லை. ஏதோ ஒரு தெய்வீக சக்தி என்னை ஆட்கொண்டதைப்போல உணர்ந்தேன்; அது மட்டும் தெரிந்தது. மற்றவர்கள் எல்லோருக்கும் முன்னால் நான் பரீட்சை அறையை விட்டு வெளியேறினேன். இதனைப் பார்த்துவிட்டு “ஐயோ பாவம், உடல்நிலை சரியில்லாததால், பரீட்சை சரியாக எழுதமுடிவில்லை போலும்” என்று பலரும் நினைத்தனர். அன்று மாலை வழக்கம்போல ஸ்வாமி பங்களாவின் வெராண்டாவில் எல்லோரும் கூடி அமர்ந்தோம். என்னைப் பார்த்தவுடன், ஸ்வாமி, “ரேங்க் ஒஸ்துந்தி” (ரேங்க் வந்துவிடும்) என்றார்! சிலவாரங்கள் கழித்து பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன.

பெங்களூர் பல்கலைக் கழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களிலும், நான் பி.காம் பட்டப் படிப்பில் மூன்றாவது ரேங்க் பெற்றதாக அறிவித்திருந்தார்கள்!
ஸ்வாமி சொன்னால் அது நடந்தே தீரும்! ஏனெனில், ஸாயியின் வாக்கு, எப்போதுமே சத்ய வாக்கு!!

ஆதாரம்: அக்டோபர் 2020 ஸனாதன ஸாரதி இதழில், ஒரு முன்னாள் மாணவரின் பதிவு.


📝நிகழ்வு 94:


பல வருடங்களுக்கு முன்னால், தார்வாரில் உள்ள கர்நாடக் பல்கலைக்கழகத்திற்கு நான் விஜயம் செய்திருந்தபோது அங்கு நடந்த சம்பவத்தை இப்போது நினைவுகூர்கிறேன். அந்தப் பல்கலைக் கழகத்தின் சமூகம் வீரசைவர்களால் நிரம்பியதாகும். அவர்கள் சிவனின் பெயரைத் தவிர வேறு எந்தக் கடவுளின் பெயரைக் கேட்கும் முன் தன் காதுகளை மூடிக்கொள்பவர்கள்.  அவர்களிடம் நான் என் சொற்பொழிவை கன்னட மொழியில் ஆற்றினேன். அவர்களது தாய்மொழிப்பற்றின் காரணமாக, அவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். ஒவ்வொரு சொற்பொழிவையும் ஒரு பஜனையுடன் நான் முடிப்பது வழக்கம். அங்கு கூடியிருந்தவர்களை நான் உற்று கவனித்து அவர்களது மனநிலையை அறிந்தேன். விஷ்ணு என்றாலே அவர்களுக்குப் பிடிக்காது என்று எனக்கு நன்றாகவே தெரியும். நாராயணா என்றால் காதுகளை மூடிக்கொள்வர்; க்ருஷ்ணரின் பெயரைச் சொன்னால், தலைகளைத் திருப்பிக் கொள்வர். அத்தகைய சூழலில், நான் , “கோவிந்த க்ருஷ்ண ஜெய் கோபால க்ருஷ்ண ஜெய்” என்ற பஜனையைப் பாட ஆரம்பித்தேன். அங்கு கூடியிருந்தோரில் வீரசைவர்களின் குரு ஒருவரும் அமர்ந்திருந்தார். அவரே இந்த பஜனையில் உற்சாகமாகக் கலந்து கொண்டு பாடினார். சொற்ப்பொழிவின் இறுதியில், பல்கலையின் துணைவேந்தரான ஸ்ரீ அட்கே அவர்கள் என்னிடம் ஓடிவந்து, “சத்ய ஸாயிபாபாவின் அற்புதங்கள் எப்படிப்பட்டவை என்று எங்களிடையே ஏற்கனவே சில கருத்துக்கள் இருந்தன. க்ருஷ்ணரின் பெயரை வாழ்க்கையில் ஒரு தரம்கூட சொல்லாதவர்களைக் கூட இன்று க்ருஷ்ணரின் பெயரைப் பாடவைத்துள்ளார் சாயிபாபா! இது நாங்கள் கண்ட ஒரு மிகப்பெரிய அற்புதம்!” என்று கூறினார்.

ஆதாரம்: பகவானின் 20/10/1988 சொற்பொழிவு – அக்டோபர் 2020 ஸனாதன ஸாரதி பதிப்பிலிருந்து.

📝நிகழ்வு 95:


மார்ச் 25ஆம் தேதி எங்களது பரீட்சைகள் முடிவடைந்தபின் நாங்கள் எங்கள் ஊர்களுக்குச் செல்லவேண்டியிருந்தது. நான் சிகந்தராபாத் வழியாக போபால் செல்ல வேண்டும். எனக்கு சிகந்தராபாத் வரை ரிசர்வேஷன் கிடைத்தது. 27ஆம் தேதி காலை 6 மணிக்கு சிகந்தராபாத் வந்தடைந்தேன். எனக்கு அங்கிருந்து போபால் வரை ரிசர்வேஷன் கிடைக்கவில்லை. ஆகையால் நான் மிகுந்த கவலையில் இருந்தேன். நான் சுமார் 15 மணிநேரம் காத்திருக்கும் அறையில் தங்கவேண்டியிருந்தது, ஏனெனில் எனது அடுத்த இரயில் இரவு 9.30 மணிக்குப் புறப்பட இருந்தது. ஆதலால், காலையிலேயே, ஏதாவது ரிசர்வேஷன் கிடைக்குமா என்று அறிய முற்பட்டேன். அங்கு சென்று பார்த்ததில், “நோ ரிசர்வேஷன்ஸ்“ என்ற போர்டு என் கண்களில் பட்டது. நான் சிறிது கோபத்துடன் ஸ்வாமியிடம் என் மனதில், “ஸ்வாமி!, நான் என் பெற்றோர்களுடன் பயணம் செய்யும்போது அவர்கள் எனக்கும் ரிசர்வேஷன் செய்து விடுவார்கள். ஆனால் இப்போது நான் உங்களுடன் பயணிக்கிறேன். ஆகையால் என் ரிசர்வேஷனை நீங்கள் தான் பார்த்துக் கொள்ளவேண்டும்”என்று முறையிட்டேன். அதன்பிறகு நான் காத்திருக்கும் அறையில் உறங்கிவிட்டேன். ஒருமணிநேரம் கழித்து நான் விழித்தவுடன் மறுபடியும் ரிசர்வேஷன் ஆஃபீசுக்கு சென்று பார்க்கலாம் என நினைத்தேன். அங்கு சென்று, ஏதாவது ரிசர்வேஷன் கிடைக்குமா என்று கேட்டேன். அங்கிருந்தவர் என்னுடைய பெயரைக் கேட்டுவிட்டு மாடியில் உள்ள மற்றொரு ஆஃபீசுக்குச் சென்று விட்டுத் திரும்பி வந்து,  என்று தெரிவித்தார்! நான் உடனே பிரமித்துப் போனேன்! நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை!! என் சாயி மாதா தான் இதனைச் செய்திருக்கவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் நிரம்பியது.

ஆதாரம்:  ஸாயி நந்தனா, 1985 (ஸ்ரீ ஸத்யசாயி ஹாஸ்டல் (ப்ரசாந்தி நிலயம்) பதிப்பு).


📝நிகழ்வு 96:


நான் எம்.டி. படிப்பு முடித்தவுடன் குவைத் நாட்டிற்குச் சென்றேன். குவைத் அரசு எனக்கு அந்த நாட்டின் நிரந்தர ஊழியராக நியமித்தது. நான் அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, ஈராக் , குவைத்தை ஆக்கிரமித்தது. உடனே போர் மூண்டது. வெளிநாட்டவர் அனைவரும் விரைவாகக் குவைத்திலிருந்து வெளியேற ஆரம்பித்தனர். இந்தியாவிற்கு வரும் அனைத்து விமானங்களும் முன்பதிவாகி இருந்தன. எனக்கு , குவைத்தில் இருந்து கிளம்பும் இறுதியான விமானத்தில் கடைசியாக ஒரு இருக்கை கிடைத்தது. அதற்காக நான் ஸ்வாமிக்கு மனதார நன்றி கூறினேன். ஆனால், ஸ்வாமியின் லீலை மேற்கொண்டு வரவிருப்பதை நான் அப்போது உணரவில்லை. நான் இறுதியாக, விமானத்தில் ஏறுவதற்கு நடந்து சென்றுகொண்டிருக்கையில், ஒரு ஈராக்கின் போர்வீரன் என் கைகளை இறுக்கப் பிடித்துக்கொண்டான். என்னுடைய பாஸ்போர்ட்டை எடுத்துத் தரையில் வீசினான். மேலும் என்னை பயணம் செய்வதற்கு அவன் அனுமதிக்கவில்லை! என் கண் முன்னால், அனைத்துப் பயணிகளும் விமானத்திற்குள் சென்று விட்டனர், நான் மட்டும் அவனது இரும்புப்பிடியில் இருக்கிறேன் என்பதை உணர்ந்தபோது, எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, சொல்லொணாத் துயர் அடைந்தேன். ஆபத்பாந்தவனான நம் ஸ்வாமியிடம் இதயத்தின் ஆழத்திலிருந்து, என்னைக் காக்கும்படி வேண்டினேன். உடனே அந்த இடத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டது! அமெரிக்கப் படைகள் குவைத்திலிருந்த ஈராக்கியர்களின் இடங்களைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கிவிட்டனர் என்ற செய்தி அங்கிருந்த ஈராக் வீரர்களின் காதுகளுக்கு எட்டிவிட்டது போலும்! இதனை அறிந்தவுடன் என் கைகளை இறுக்கமாகப் பற்றியிருந்த அந்த வீரன் என்னை விட்டுவிட்டு வேகமாக விமானநிலையத்திற்குள் சென்றுவிட்டான்! உடனே நான் வெகுவேகமாக கீழே கிடந்த என் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு, ஓடிச்சென்று விமானத்திற்குள் ஏறினேன். எனக்காக இருந்த ஒரே ஒரு இருக்கையில் அமர்ந்தேன்!சிலநாட்களுக்கு பிறகு தான், அந்த இக்கட்டான நேரத்தில் வந்த அமெரிக்கத் தாக்குதல் பற்றிய செய்தி உண்மையானது அல்ல என்று எனக்குத் தெரிய வந்தது! அந்த நேரத்தில் இத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தியது ஸ்வாமி தான் என்று உணர்ந்தேன்! பிறகு நான் பிரசாந்தி நிலையத்திற்குச் சென்று ஸ்வாமிக்கு தரிசனத்தின்போது, மனதில் நன்றியுடன் வணங்கினேன். நம்மால் ஸ்வாமிக்கு உண்மையாக நன்றி தெறிவிப்பது என்பது இயலாத காரியம்!! 

ஆதாரம்: டாக்டர் சி.கே.ரெட்டி அவர்கள் ஏப்ரல் 2020 ஸனாதன ஸாரதி இதழில் எழுதிய பதிவிலிருந்து.


📝நிகழ்வு 97:


நான் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின் ஒரு நாள் என் சொந்த வேலை காரணமாக மும்பை சென்றேன். அங்கு எனக்கு இதயநோய் இருப்பதாகத் தெரியவந்தது. நான் உடனே பர்த்திக்கு விமானம் மூலம் பயணித்தேன். பர்த்தி விமான நிலையத்தில், எனது நண்பரும் முன்னாள் சகஊழியருமான டாக்டர் செல்வராஜா அவர்கள் என்னை வரவேற்றார். நேராக சூப்பர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்னால் நாங்கள் இருவரும் ஸ்வாமி தரிசனம் செய்துகொள்வது என்று முடிவுசெய்தோம். ஸ்வாமி என்னருகில் வந்தபோது மும்பையில் என்ன நடந்தது என்று நான் ஸ்வாமியிடம் கூறவில்லை. நான் அவருடைய ஆசீர்வாதங்களுக்காக மட்டும் வேண்டினேன். அவர் தனது வலது கரங்களை என் தலைமேல் வைத்து, “ஸந்தோஷமான, ஆரோக்கியமான, நீண்ட வாழ்க்கை வாழ்வாயாக” என்று சொல்லி என்னை ஆசீர்வதித்தார்!. அவ்வளவுதான்! பின்பு இதயநோய் சிகிச்சைப் பிரிவில் பலவிதமான பரிசோதனைகள் செய்தபின் இதயநோய் ஏதும் இல்லை என்பது தெளிவாகியது! என் இதயத்தை சரிசெய்த சில நாட்களுக்குப் பிறகு ஸ்வாமி என்னை சௌதி அரேபியா சென்று பணியாற்றுமாறு பணித்தார்.

ஆனால் நான் ஸ்வாமியிடம், “ஸ்வாமி! தயவுசெய்து மீதம் உள்ள வாழ்நாள் முழுதும் உங்கள் காலடியிலேயே சேவை செய்ய அனுமதியுங்கள்” என்று வேண்டினேன். அவர் உடனே. “மஞ்சிதி (நன்று)” என்று பதிலளித்தார். நான் சூப்பர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரியில், ஒரு கௌரவ மூத்த ஆலோசகராக நியமிக்கப் பட்டேன். இன்றுவரை ரேடியாலஜி (கதிரியக்கவியல்) பிரிவில் பணியாற்றிவருகிறேன்.

ஆதாரம்: டாக்டர் சி.கே.ரெட்டி அவர்கள் ஏப்ரல் 2020 ஸனாதன ஸாரதி இதழில் எழுதிய பதிவிலிருந்து.


📝நிகழ்வு 98:


சில நாட்களுக்கு முன் ஸ்வாமி ஹாஸ்டலுக்கு வந்திருந்தார். “ஸோஹம்” என்னும் மந்திரத்தை மூச்சுப் பயிற்சியுடன் சேர்த்து எவ்வாறு உச்சரிப்பது என்ற முறையை முதலில் விளக்கியபின் தானே செய்தும் காண்பித்தார். நான் அந்தப் பயிற்சியை தினமும் செய்ய முடிவு செய்தேன். மூன்று நாட்கள் கழிந்தன. ஒவ்வொரு நாள் மாலையும், தரிசனத்தின்போது, ஏதோ ஒரு வழியில், ஸ்வாமி என்னுடைய முயற்சியை அங்கீகரிப்பதாகக் காண்பிப்பார் என்று எதிர்பார்க்கத் தொடங்கினேன். ஒரு பார்வையுமின்றி முதல்நாள் கழிந்தது. இரண்டாம் நாள் அவர் என்னைக் கடந்து சென்றபோதுகூட என்னைப் பார்க்கவில்லை. மறுநாள் எனது வகுப்பு மாணவர்கள் தரிசனத்திற்கு வரிசையில் முதலில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் இது நல்ல தருணம் என்று நான் யோசித்தேன். போர்டிகோவில் முதல்வரிசையில் அமர்ந்துகொண்டேன். ஸ்வாமி வெளியே வந்தபோது என் மனம், “ஸ்வாமி!” என்று மெதுவாக அழைத்தது. ஆனால் அவர் என்னைக் கடந்து, எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பையனிடம் பேசிவிட்டுச் சென்றார். அவர் தன் தரிசனச் சுற்றை முடித்துக் கொண்டு, இன்டர்வியூவிற்காக சில பக்தர்களையும் அழைத்திருந்தார். இந்தத் தடவை அவர் என்னருகில் வந்துகொண்டிருந்தபோது, நான், ”நீங்கள் கூறியபடியே நான் மூன்று நாட்கள் பயிற்சி செய்துள்ளேன். ஆனால் நீங்கள் கண்டுகொள்ளவே இல்லை” என்று என் மனதில் உரக்கக் கூறினேன். வந்தவர்களை உள்ளே அழைப்பதற்கு முன்னால் சிறிது நேரம் அவர் இன்டர்வியூ அறைக்குள் சென்றபோது, என் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவர் வெளியே வந்தவுடன், பக்தர்களை உள்ளே செல்லும்படி சொல்லிவிட்டு, அவரது முதுகுப் பக்கம் என்னை நோக்கி இருக்கும்படி என்னருகில் வந்து நின்று கொண்டு அவர்கள் உள்ளே செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது நான் என் கண்களைத் துடைத்துக்கொண்டு, மெதுவாக என் கைகளை அவரது பாதத்தின்மீது வைத்தேன். அவர் உள்ளே செல்வதற்குமுன் என்பக்கம் திரும்பினார். ஏற்கனவே விபூதி ஸ்ருஷ்டித்திருப்பார் போலும், அவர் விரல்களில் விபூதி ஒட்டிக்கொண்டிருந்தது. ஒருகணப்பொழுதில் அவர் என்னை நோக்கி புன்னகைத்துக்கொண்டே ஒரு அடி எடுத்து வைத்தார்! நான் அவரை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். என்னைக்கூர்ந்து பார்த்துவிட்டு, “உனக்கு என்ன பைத்தியமா?” என்று கேட்டுக்கொண்டே என் புருவமத்தியில் விபூதி நிறைந்த தன் கட்டைவிரலால் ஆழமாக அழுத்தினார்!

ஆதாரம்: ஸாயி நந்தனா, 1985 (ஸ்ரீ ஸத்யசாயி ஹாஸ்டல் (ப்ரசாந்தி நிலயம்) பதிப்பு).


📝நிகழ்வு 99:


காவலுக்காக ப்ருந்தாவன் மந்திரத்தில் இரவில் மட்டும் தங்குவதற்கு ஒரு மூத்த ஆசிரியரின் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் குழுவில் நானும் இடம் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஒருநாள் இரவு நானும் அந்த ஆசிரியரும் ஸ்வாமியின் குழந்தைப் பருவத்தில் அவர் செய்த லீலைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். அப்போது நான், “ஸ்வாமியின் கடந்த காலத்தை ஆராய்ந்தோமானால், ஸ்வாமியின் சன்னிதியில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை நிரந்தரமாகத் தங்கியவர் என்று யாருமே இல்லை அல்லவா? ஒருசிலர் 10 அல்லது 15 வருடங்கள் அவரது அருகில் இருந்திருக்கின்றனர். அதன் பிறகு வேறுசிலர் அந்த பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றனர். அப்படியென்றால் நாமும் சிலகாலம் கழித்து அவரை விட்டு விலகிவிடுவோமா? நமக்கு பதிலாக வேறுசிலர் ஸ்வாமியிடம் நெருக்கமாக ஆகிவிடுவரோ?” என்று அவரிடம் கேட்டேன். பின்னர், “ஸ்வாமியின் தெய்வீக அன்பானது, மேலும் எத்தனையோ பேர்களை நல்வழியில் மாற்றவேண்டியிருப்பதால், ஒருசிலரிடம் மட்டுமே அந்த அன்பு தங்கிவிடாது” என்ற ஒரு முடிவிற்கு வந்தோம். அத்துடன் எங்கள் உரையாடலை நிறுத்திக்கொண்டோம். 

மறுநாள் காலை, தரிசனத்திற்குப் பிறகு, ஸ்வாமி, தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக, இறுதி ஆண்டு மாணவர்களை அழைத்தார். ஸ்வாமி ஒரு மரத்தின் முன்னால் நின்றுகொண்டார். ஒவ்வொரு மாணவராக சென்று அவரது அருகில் நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஸ்வாமி திடீரென்று என்னை நோக்கி, ஒரு குறும்புத் தனமான பார்வையுடன், "ஏய் மயூர்! இப்போது பார்த்தாயா? மாணவர்கள் வருகிறார்கள், மாணவர்கள் செல்கிறார்கள், ஆனால், ஸ்வாமி மட்டும் எப்போதும் நிரந்தரமாக இருக்கிறேன்!” இதைக் கேட்ட நான் ஒருகணம் அதிர்ந்துபோனேன்! நான் இரவில் ஆசிரியரிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் அவர் கேட்டிருக்கிறார்! அங்கே குழுமியிருந்த அத்தனை மாணவர்கள் நடுவிலும் நான் எங்கு நின்றுகொண்டிருக்கிறேன் என்பதைத் தான் அறிவேன் என்பதையும் அவர் தன் பார்வையிலேயே உணர்த்திவிட்டார்!!. 

ஆதாரம்: ஸாயி நந்தனா, 1985 (ஸ்ரீ ஸத்யசாயி ஹாஸ்டல் (ப்ரசாந்தி நிலயம்) பதிப்பு).


📝நிகழ்வு 100:

ஒரு நாள் எங்களது கடினமான வாடிக்கையாளர் ஒருவர், எங்களுக்கு அளித்திருந்த திட்டம் பற்றி ஆய்வு செய்வதற்காக அலுவலகத்திற்கு வந்திருந்தார். திட்டத்தை வகுக்கும் பணியில் சந்திக்கவேண்டியிருந்த சிக்கல்களை எடுத்துக்கூறி அவைகளுக்குத் தேவையான எங்களது பரிந்துரைகளை எடுத்துரைத்தபோது, கூடுதல் தொகை தேவைப்பட்டதால், அவர் ஈடுகொடுக்கவே இல்லை. அவர் ஏற்கனவே பேசி முடிவுசெய்திருந்த தொகையிலேயே அனைத்து மாறுதல்களையும் செய்துதரும்படி விடாப்பிடியாகப் பேசினார். இறுதியில் பல கருத்துப் பரிமாறல்களுக்குப் பிறகு நாங்கள் அவரது வேண்டுகோள்களுக்கு இணங்கிய பிறகும், எங்களது இடர்களை மீண்டும் எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் , நான் மட்டும் அவரிடம் தனியாகப் பேசிப்பார்க்க விழைந்தேன். அப்போது என் ஆஃபீசுக்கு வந்த அவர் அங்கிருந்த ஸ்வாமியின் படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அவர் உடனே தன் மனைவி ஸ்வாமியின் பரமபக்தை என்றும், அவர்கள் இருவரும் ஸ்வாமியின் கோட்பாடுகளின்படி, பெங்களூரில் ஒரு சமூக சேவைத் திட்டம் ஒன்றை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அத்தருணத்திலிருந்து எங்களது உரையாடல், எதனைப் பற்றிப் பேச நாங்கள் கூடினோமோ அதனை விட்டுவிலகி, ஸ்வாமியின் பக்கம் திரும்பியது! கடைசியில் அவர் எங்களது பரிந்துரைகளுக்கு ஒத்துக்கொண்டது மட்டுமல்லாமல், எங்களுக்கு தேவைப்பட்ட கூடுதல் தொகையையும் வழங்குவதாக அவரே அறிவித்தார்!!

ஆதாரம்: பிப்ரவரி 2020 ஸனாதன ஸாரதி இதழில், ஒரு பக்தர், 
ஸ்ரீ. என்.டி.அருண் குமார் அவர்கள் எழுதிய பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக