தலைப்பு

வியாழன், 3 ஜூன், 2021

ஆண்டவன் சாயி அளித்த அட்சய பாத்திரங்கள்!


இறைவன் சத்ய சாயி இந்தக் கலியுகத்தில் எந்தெந்த மகா பக்தர்களுக்கு அட்சய பாத்திரம் அளித்திருக்கிறார் என்பதன் பரவசத் தொகுப்பு இதோ... 

துவாபர யுகத்து அற்புதப் பாத்திரம். அன்னமோ ஏதேனும் ஒரு வகை உணவோ அந்தப் பாத்திரத்தில் இட்டால் அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்து கொண்டே வரும்...

துரௌபதிக்கு சூரிய பகவான் கொடுத்த பாத்திரம் அது. அவர்களின் வன வாழ்க்கைக்கு மிக உபயோகமாக இருந்தது.
தாங்கள் உண்ணவும்.. வனத்தில் வாழ்ந்த தவசிகளுக்குப் பகிரவும் மிக ஏதுவாக அமைந்தது.
ஒவ்வொரு முறை உணவருந்தும் போதும் கிருஷ்ணா கிருஷ்ணா என்றே சுவாமி பெயரை உச்சரித்து உணவருந்துவாள் துரௌபதி.


ஒருமுறை துரியோதனன் சொல்லி துர்வாச முனிவர் பஞ்சபாண்டவரின் வனப் பகுதிக்கு நேரம் கழித்து சாப்பிட வருகிறார் தனது சிஷ்யர்களோடு . பாத்திரத்தில் உணவேதும் இல்லை. கையிருப்புப் பொருளும் இல்லை.
குளிக்கப் போகிறார் முனிவரும் அவர் சீடர்களும். கண்ணீர்க் குளியல் நடத்துகிறாள் துரௌபதி. கிருஷ்ண சுவாமி தோன்றுகிறார்.
பசிக்கிறது என்கிறார். எல்லாம் அறிந்த கிருஷ்ணக் குறும்பு அது.
ஏதுமில்லையே எனப் புலம்புகிறாள்.

கவிழ்த்திய பாத்திரத்தை நிமிர்த்தி உற்றுப் பார்க்கிறார் ஒரு அன்னப் பருக்கையும்... கீரைத் துளியும் ஒட்டிக் கொண்டிருக்கிறது..
இதுவே போதும் துரௌபதி என எடுத்து உண்கிறார் நம் கிருஷ்ண சுவாமி.


குளிக்கச் சென்று தலைத் துவட்டிக் கொண்டிருந்த முனிவருக்கு பசி போய் உணவு உண்டபின் வரும் ஏப்பம் வருகிறது. சீடர்களுக்கும் அந்த ஏப்பம் வாய்விட்டு வாய் தொடர்கிறது.. நடக்கமுடியவில்லை..

பஞ்ச பாண்டவர்களின் விருந்தை ஏற்காமலேயே பஞ்சாய் பறந்து போகிறார் முனிவரும் அவரது சீடர்களும்.
நடந்ததை எண்ணி கண் மூடிச் சிரிக்கிறார் கிருஷ்ண சுவாமி. அப்பேர்ப்பட்ட மகத்துவ பாத்திரம்.. மணிமேகலையிடமும் இருந்தது.

ஆனால் அதை எல்லாம் விட மேன்மையான அட்சயப் பாத்திரத்தை தவசிகளான பதினோரு பேர்களுக்காக அளிக்கிறார் இறைவன் சத்ய சாயி.
அவர்களுக்கு வொயிட் ஃபீல்ட் டில் மேன்மை தியானப் பயிற்சி அளித்து இமயம் சென்று குகையில்  தங்கி தியானத்தைத் தொடரச் சொல்கிறார்.

அந்த பதினோரு பேர்களின் தலைவரை அழைத்து இந்த அட்சயப் பாத்திரம் அளித்து இது துரௌபதி வைத்திருந்த பாத்திரம் விட மேன்மையானது. அதில் சிறிது உணவிட்டால் மட்டுமே உணவு வளரும். இதில் எதுவும் இடத் தேவையில்லை வேளா வேளைக்கு உங்களுக்கான உணவை இது அளிக்கும். நிம்மதியாக தியானியுங்கள். சென்ற பிறவியில் விட்டதைத் தொடர்ந்து பரபிரம்மமான என்னோடு கலந்திடுங்கள் என்று நேர்காணல் அளித்து அட்சயப் பாத்திரத்தையும் அளிக்கிறார் ஆண்டவன் சத்ய சாயி.


இந்த பதினோரு பேரும் இமயத்து ஊர்வசி குண்டம் வருவதற்கே ஒருவருடம் ஆகிறது. ஸ்ரீ மன் நாராயணன் உருவாக்கிய குளம் (குண்டம்) ஊர்வசி குண்டம்..
அடிவாரத்திலிருந்து 18000 அடி மேல் நோக்கி நகர்கிறார்கள். அங்கே ஒரு குளம் தென்படுகின்றது. அருகில் ஒரு குகை.. ஆனால் குகையின் எந்தப் பகுதியும் ஈரமாக இல்லை.. அந்த குகையே நர நாராயணர்கள் தவம் இயற்றிய நரநாராயணா குகை. இதில் தான் வேத வியாசர் மஹா பாரதத்தை இயற்றினார். பஞ்ச வேதத்தைத் தொகுத்தார்.

அங்கேயே தங்கி முதலில் இறைவன் சத்ய சாயியிக்கு திருக்கோவில் அமைக்கிறார்கள். இருவேளையும் பூஜை ஆரத்தி பிறகு நெடுந்தியானம்.

மூடியைத் திறந்தால் அட்சயப் பாத்திரத்தில் இவர்களுக்காகவே உணவு சுடச்சுட தயாராக இருக்கும். மாலையில் பழரசம் சிருஷ்டி ஆகும். இப்படி அவர்களின் தவத்திற்கு ஊட்டச்சத்தும் அருட்சத்தும் இறைவன் சத்ய சாயி வழங்கி வருகிறார்.


ஒரு மண்டலம் கடந்து அங்கே அவர்களின் முன் தோன்றுகிறார் இறைவன் சத்ய சாயி. மெய் சிலிர்த்துப் போகிறார்கள்.
ஏதுமில்லா அட்சயப் பாத்திரத்தில் மீண்டும் பழரசம். இறைவனோடு உடன் அருந்தும் பாக்கியம் பெறுகிறார்கள்.
அப்போது அந்த ரசம் கசப்பாக இருக்கிறது..
"என்ன கசக்கிறதா?" என சுவாமி கேட்க .. தன் குவளையில் இருந்து பழரசத்தை தன் அமுதவிரல்களால் அனைவர் குவளைகளிலும் தெளிக்கிறார்.. பிறகு அருந்துகின்றனர் அந்த பதினோரு தவசிகள்.. இப்போது இனிக்கிறது.
சுவாமி சிரிக்கிறார்.. அனைவரின் தியானம் மட்டுமல்ல சிரிப்பும் சுவாமியோடு சேர்ந்து ஐக்கியமாகின்றன..

இந்த தபஸ்விகளின் தலைமை ரிஷியை நேரில் கண்ட மகேஷ்வரானந்தா (தென்பிரசாந்தி பின்புறம் வசித்தவர்) தன் "Sai Baba and Nara Narayana Gufa Ashram" புத்தகத்தில் அதை ஆங்கிலத்தில் எழுதி... இன்னும் வேறு பல மொழிகளில் பெயர்ப்பாகி இருக்கிறது.


ஒரு அவதூதர் காசியில் தவம் இயற்றுகிறார் . அவருக்கு இறைவன் சத்ய சாயி தியானத்தில் காட்சி அளிக்கிறார். அதே போல் ஒரு முனிவர் கங்கை நதியில் மிதந்து இறைவன் சத்ய சாயியின் மடியில் வந்து சேர்வது போல் ஒரு ராணுவ அதிகாரிக்கு கனவு வருகிறது. அந்த கனவு லயிப்பில்.. அந்த முனிவரைத் தேடி அலைகிறார். காசியில் கண்டுபிடிக்கிறார்.  வீட்டிற்கு அழைக்கிறார். தான் யோகி ஆகையால் ஆசிரமத்தில் தான் தங்க முடியும் எனக் கூற .. ஆசிரமத்தில் சேர்க்கிறார் ராணுவ அதிகாரி.

அந்த ஆசிரமத்தில் சுவாமி மீண்டும் தியானக் காட்சி அளிக்கிறார். இறைவனோடு ஐக்கியமாக வேண்டும் என்ற தாகமும் மேலோங்க.. புட்டபர்த்தி வருகிறார் 106 வயதான அந்த முனிவர். ராணுவ அதிகாரியின் அந்தக் கனவும் பலிக்கிறது. அவரை சுவாமி வரவேற்று அவரையும் இந்த நரநாராயண குகைக்கு அனுப்புகிறார் இறைவன் சத்ய சாயி.
 அந்த முனிவர் தான் வாமதேவ அவதூதர்.

இந்த அட்சயப் பாத்திரம் போலவே..


ஒருவரின் தியானத்தில் அசரீரி கேட்கிறது..
"மஹா விஷ்ணு புட்டபர்த்தியில் வாழ்ந்து வருகிறார். அவர் உனக்கு மோட்சம் தருவார்" என
புட்டபர்த்தி வருகிறார். அவர் தான் கிருஷ்ணதாஸ் பாபா.
சுவாமியிடம் மோட்சம் கேட்க.. அதற்கு முன் மனிதகுல சேவை இருக்கிறது என அவரை சுவாமி மஹாராஷ்ட்ரா செல் அங்கே உள்ள குரு தத்தாத்ரேயருக்கான மலைக் கோவிலில் (ரேவ்தந்தா மாவட்டம்) உன்னிடம் பூஜை செய்யக் கேட்பார்கள்.. ஒப்புக் கொள்.. அங்கேயே தங்கி தியானம் செய்
500 படிகள் ஏறக்கூடிய அந்த மலைக்கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஔஷத விபூதி அளி எனச் சொல்கிறார் சுவாமி. தியானத்தையும் மலை மேலேயே  தொடரச் சொல்கிறார்.


ஒருமுறை டாக்டர் காடியா வர.. அவர் வருகையை சுவாமி இவருக்கு தியானத்தில் கூற... இவர் வரவேற்கையில்..
கிருஷ்ண தாஸ் பாபாவின் தங்கும் அறையைப் பார்க்கிறார் டாக்டர் காடியா.
அதில் ஷிர்டி சாயி.. சத்ய சாயி என இரண்டுப் புகைப்படங்கள். சத்ய சாயி படத்திலிருந்து விபூதி வந்து கொண்டே இருக்கிறது அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கிறார். அதையே நோய் நிவாரணியாக கோவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குகிறார்.

இன்னொரு பாத்திரம் மூடி போட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதுவே அட்சய பாத்திரம். அதில் இறைவன் சத்யசாயி கிருஷ்ண தாஸ் பாபாவுக்காக வேளா வேளைக்கு உணவு தோன்ற வைத்து அவரின் தியானத்திற்கும் மனித குல சேவைக்கும் தடை வராமலும் .. மலைவிட்டு கீழ் இறங்கும் சிரமம் வராமலும் கவனித்துக் கொள்கிறார்.

(ஆதாரம் : Sai Baba and Nara Narayana Gufa Ashram By Maheshwaranand PART 1,2 & 3)

தியானமே ஒரு அட்சயப் பாத்திரம் தான். அதில் அள்ள அள்ளக் குறையாமல் இறைவன் சத்ய சாயியின் அருளமுதத்தைப் பருகிக் கொண்டே இருக்கலாம். அதுவும் பெருகிக் கொண்டே இருக்கும். தேவையில்லாத எண்ணங்களே அந்த அட்சயப் பாத்திரத்தைக் கவிழ்த்தி வைக்கிறது. சரணாகதி அடைந்த பக்தியே அதைத் திறந்து வைக்கிறது.

  பக்தியுடன்
வைரபாரதி ✍️ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக