தலைப்பு

வெள்ளி, 11 ஜூன், 2021

EP 6: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! - நாரத மகரிஷி நாடி

5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... நாரத மகரிஷி நாடியை வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....


✋ நாடிகள்:

நாடிகள் வாசிப்பதும் அதைப் புரிந்து கொள்வதும் ஒரு கலையே. ரிஷிகளின் அருள் இல்லாமல் ரிஷிகள் எழுதியதை புரிந்து கொள்வது மிகவும் கடினம். பொருள் புரியாமல் அர்த்தங்கள் திரிந்து போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ரிஷிகளின் நிலை மிக உயர்ந்தது... அந்த உயரிய ஞான வெளிப்பாட்டினை அவர்கள் தங்களுக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு மலையின் அடிவாரத்தில் இருந்து அதன் சிகர உச்சியைப் பார்ப்பது போல் ரிஷிகளின் ஞானத்தை நாம் அணுகுவது. அந்த சிகர ஏற்றம் எல்லாம் நமக்கு சுவாமியின் சங்கல்பத்தினால்... ரிஷிகளின் அருளினால் நிகழ்வது!!


🌹நாரத மகரிஷி:


எந்த மகரிஷியை மக்களுக்கு தெரியாமல் போனாலும் நாரத மகரிஷியை தெரியாதவர்களே இருக்க முடியாது. யுகம் கடந்து வாழ்பவர். பிரம்ம குமாரர். மஹதி எனும் தம்புராவை கையில் ஏந்தி ஓம் நமோ நாராயணாய என சுவாமி நாமம் ஜபித்து உலகம் முழுதும் சஞ்சரிப்பவர். இவர் செய்த கலகம் எல்லாம் நன்மையிலும் .. ஞான போதனையிலுமே நிறைந்திருக்கிறது. கருவில் இருக்கையில் பக்த பிரகலாதனுக்கு நாராயண மந்திரம் போதித்ததே நாரத மகரிஷி தான். நாரத பக்தி சூத்திரம் போன்ற பல ஞான பொக்கிஷம் நாரத மகரிஷி வழங்கி இருக்கிறார். அவர் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி பற்றி தனது நாடியில் என்ன பதிவு செய்திருக்கிறார் என்பதில் மிகவும் சுவாரஸ்யமானவற்றை.. முக்கியமானவற்றை மட்டும் வாசிப்போம். 


🌹நாரத மகரிஷி நாடி:


எல்லா மகரிஷிகளும் சிவனை/ சக்தியை / முருகனை இதுவரை நாடி பதிவு செய்ய ஆரம்பிக்கையில் சாட்சிக்கும் அருளுக்கும் அழைத்திருக்கிறார்கள்.

நாரத மகரிஷியோ தனது தாயை துணைக்கு அழைக்கிறார்.

கமலமதில் வீற்றிருக்கும் வீணை நாயகி

காளையவன் வணங்கிட்டேன் உந்தனையே என 

தனது தாய் சரஸ்வதியை வணங்கியே நாடியைப் பதிவு செய்ய ஆரம்பிக்கிறார்.


🌹முக்தி அருளும் சிவசக்தி சாயி:

அவதரிக்கும் நோக்கம் தன்னால் மானிடர்

பூலோகம் தன்னில் கலியவனின் மாயம் தன்னை

தேக நிலை இல்லா செய்ய அன்பு நிலை

வழி கொண்டு தூய எண்ணம் தன்னால்

விரட்டிடவே மகன் பிறப்பு காண  எனும் வரிகளில்...


அவதரிக்கும் நோக்கம் என்பது கலியை விரட்டவும்.. அதற்கே விரட்டிடவே என்கிறார் மகரிஷி. கலியுகத்தில் மாயங்கள் அதிகம்... மயக்கம் அதிகம்... துயரம்/ துக்கம்/ ஏமாற்றம்/ பயம் / தடுமாற்றம்/ குழப்பம்/ வேதனை எல்லாமே மாயையின் ரூபங்கள். அதனை விரட்டிடவே என்கிறார்..

இந்தப் பாடல் வரியில் இரண்டு அர்த்தங்கள்.. ஒன்று கலியின் தேகத்தை இல்லாமல் செய்ய.. அதாவது கலியை சம்ஹாரம் செய்வது.. இன்னொன்று மக்களுக்கு முக்தி அருள்வது.. அதாவது மீண்டும் பிறப்பு இல்லா நிலை அருள்வது.. இதற்கே இறைவன் ஸ்ரீ சத்ய சாயி அவதரிக்கிறார் என்கிறார் நாரத மகரிஷி.


🌹பேரன்பே பிரம்மாண்ட சாயி:



அன்பு வழியில் எடுத்துரைத்தாய் வந்தவர்க்கு

கண்டுரைக்க உந்தனுக்கு செவி கொடுத்த சீடர்கள்

அவர்கள் தொண்டு சிறக்க அருள் பாலித்தாய் நீ

என்கிற வரிகள் சத்தியம் பகர்கின்றன...

பக்தர்களை பேதமன்றி உலகளாவியபடி சேவை செய்ய தொண்டர்களாய் மாற்றியது சுவாமியே... தொண்டு சிறக்க அருள் பாலித்தாய் நீ என்பது எத்தனை நிதர்சன நித்திய வீரிய வரி. நாரத மகரிஷியின் தெய்வீக மேன்மையை .. தீர்க்க தரிசனத்தை அணு அணுவாக உணர முடிகிறது. 

கண்டுரைக்க எக்குறையும் காணாவாட்டம்

அன்பு வழியில் நீயும் செய்திட்டாய் அறங்களை

அரங்கனவன் நீயும் அறங்களைச் செய்ய

செய்திட்டாய் தொண்டர் வழி 

என்று ...

சுவாமியை அரங்கன் என்கிறார்.. அதாவது அரவத்தில் பள்ளி கொண்ட பெருமாள் என்கிறார். நாரதரின் ஞானக் கண்ணில் நடக்கப்போவது படிப்படியாக ஒளிமயமாக அருட்காட்சியாக விரிகிறது. அதையே அவர் தரிசித்த காட்சியையே நடக்கப் போகிற காலத்தை...நடந்த காலமாக விவரிக்கிறார். அறம் (தர்மம்) செய்வதற்கே எடுத்த பேரவதாரம் சுவாமி. அதை அப்படியே.. உள்ளதை உள்ளபடி பதிவு செய்கிறார். தொண்டர் வழியாகவும் சுவாமி அறங்கள் செய்கிறார் என்பதை கூடுதலாக மகரிஷி பதிவு செய்கிறார்.


🌹மரணத்தை சாகடிக்கும் மகா சாயி:


தொடரும் ஒரு பாடலில் ...

செய்திடவே பல உயிர் உந்தனால் மீட்டிட... என தீர்க்கமாய்ப் பதிவு செய்கிறார்.

எப்பேர்ப்பட்ட வரி... சுவாமி எத்தனையோ உயிர்களை மரணத்திலிருந்து மீட்டு ஆயுளை நீட்டித்து வழங்கி இருக்கிறார். இறந்து போய்விட்டார்கள் என மருத்துவர் உறுதி சொல்லிய பிறகும் சுவாமி அவர்களை மீட்டெழ வைத்திருக்கிறார். இதையே மேலே குறிப்பிட்ட வரி சாட்சியம் கூறுகிறது.


🌹ஈஸ்வரன்னை துயர் தீர்த்த சாயீஸ்வரன்:



அன்னையவள் துயரம் நீங்க சுபீட்ச செய்தி சொல்லிடுவாய் என்கிற வரியில் 

அந்த சுபீட்ச செய்தியானது

குடிநீர்/ மருத்துவமனை / பள்ளியாக விரிந்ததை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். 

தனக்கு வேண்டா தயையை தாயாகப் பெற்ற தயாபர சுவாமி தந்த சுபீட்சம் தான் இவை எல்லாம்.. அது நாடு முழுவதும் நாடு கடந்தும் உலகம் முழுவதும் விரிந்தது. ஆகவே தான் அதனை நாரதர் சுபீட்ச செய்தி என்கிறார்.

என் அன்னை உரைத்திட்டாள் நீயே சாயி என்கிறார் சரஸ்வதி தேவியின் பிள்ளையான நாரத மகரிஷி.

எப்பேர்ப்பட்ட வரி...

தெய்வங்களே பிரபஞ்சப் பேரிறைவனை அடையாளங் காண முடியும்.. ஆழமாய் உணரவும் முடியும்.


🌹அதி ருத்ர மகா யாகம் பற்றி...



சுபீட்சம் பல வேள்வி யோகம் முக்தி நிலை சாந்தி நிலை

இரண்டுமே ஒன்று தான் இரண்டு வழி

தொண்டுமே பூலோகத்தில் வையகம் சிறக்க என்கிற வரியில் 

சுவாமியே வேள்வி நாயகனாய் .. அக்னி தேவனுக்கே நெருப்பாக தகிக்கும் சக்தி தரும் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியாய் சுவாமி புரிந்தது வேள்வி யோகம் என்கிறார் மகரிஷி. 

இரண்டு வழி தொண்டு என்பதில் 

ஒரு வழி பலவித உதவிக் கரங்கள் நீட்டிய  நேரடியான தொண்டு.. இன்னொரு வழி யாக வேள்வி வழியாக சுவாமி நிகழ்த்திய தொண்டு.. இவையே இரண்டு வழி தொண்டு. இவை எல்லாம் உலகம் சிறப்பதற்கே என்கிறார் மகரிஷி. 


🌹பிரேம சாயி பற்றி...

அன்னையின் பரிவாரங்கள் பட்டங்கள் கூடிட

முக்தி நிலை விட்டு நீ விலகுவாய் தேக நிலை இல்லா நிலை

மறுபிறவி காண யோகம் உண்டு என 

சுவாமியின் அடுத்த அவதாரமான பிரேம சாயியை குறித்தும் ஆணித்தரமாகக் குறிப்பிடுகிறார் நாரத மகரிஷி. 



தனது அன்னை மேல் பேரன்பு வைத்த நாரத மகரிஷி.. பாடல்களின் பெரும்பாலான இடங்களில் வரிக்கு வரி அன்னை அன்னை என்று சரஸ்வதி தேவியையே குறிப்பிடுகிறார்.

அன்னையின் பரிவாரங்கள் என்பது ஆழமான வரி. சாக்த நிலையில் ஆழமாய்ப் பரிவார தேவதைகளை அது சுட்டிக் காட்டினாலும்... அன்னையின் பரிவாரங்களாய் சுவாமியால் கல்வி கற்பித்த மாணவர்களை இந்த வரி மறை பொருளாய்க் குறிப்பிடுகிறது. 

பட்டங்கள் கூடிட.. என்பதில் சுவாமி தனது கல்வி நிலையங்களில் வழங்கும் கல்விப் பட்டங்களையும் இது வலியுறுத்துகிறது.

(நாரத மகரிஷி நாடி படிக்கப்பட்ட இடம்: வைத்தீஸ்வரன் கோவில்.. நாடி படிக்கப்பட்ட நாள் : 25/05/2011) 


நாவுக்கரசியான சரஸ்வதி அன்னையை முன்னிலைப்படுத்தி பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியை நாடியில் நாரத மகரிஷி பதிவு செய்திருப்பது கூடுதல் சிறப்பு. சுவாமி சரஸ்வதிக்கு என கட்டிய கோவில்கள் தான் சுவாமியின் கல்வி நிலையங்கள். கல்வி ஞானத்தை பரவச இலவசமாக இப்பூமியில் சீராக .. நேர்த்தியாக வழங்கி வருவது சுவாமியே! ஆகவே தான் சுவடிகளைக் கையில் வைத்திருக்கும் சரஸ்வதி அன்னையை தன் சுவடி நெடுக சுவாமியை நாடி பதிக்கையில்... நாடிப் பதிக்கையில் நாரத மகரிஷி வரிகள் எல்லாம் ஞானத்தால் நிரம்பி வழிகிறது!!


நாடியின் துடிப்புகள் தொடரும்...


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக