5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... நந்தீஸ்வரர் மற்றும் கோரக்கர் நாடியை தான் வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....
✋ நாடிகள்:
மகான்கள்/ ரிஷிகள்/ சித்தர்கள் இவர்களிடம் மனிதர்கள் நெருங்க நெருங்க.. மனித வெளி நகர்வை அவர்கள் உள் நகர்வாக்கி நம்மை ஆன்ம ஞானம் நோக்கி நகர்த்துகிறார்கள். இந்த அகப் பயணத்தை நாம் நமது குண மாற்றங்களாலும்... பக்குவமான தன்மையாலும் உணரலாம். அந்த அகப் பயணத்துக்கான பாதையில் கைவிளக்காக ரிஷிகள் எழுதி வைத்திருக்கும் ஞானப்பொக்கிஷங்கள் பயன்படுகின்றன...
🌹நந்தீஸ்வரர்:
சிவ கணங்களில் முதன்மையான கணம் நந்தியம் பெருமான். ஒவ்வொரு சிவன் கோவிலிலும் இவரை தரிசித்த பிறகே சிவபெருமானை தரிசிக்கிறோம். சிவ லிங்கத்தின் முன் நாம் வைக்கும் கோரிக்கையை அவரிடம் சென்று சேர்வதற்குள் நந்தீஸ்வரரே நிறைவேற்றி சிவனின் தியானத்தை யாரும் கலைக்காமல் பார்த்துக் கொள்ள சதா சிவனையே உற்று நோக்கும் தவசீலர் நந்தீஸ்வரர். ஆகவே அவருக்கு ஈஸ்வரப் பட்டம் அளித்திருப்பது பொருத்தமே! அவரின் காதுகளில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை தூது சொல்லி இன்றளவும் சமாதானம் அடைகிறார்கள். கயிலாய வாசியான நந்தீஸ்வரர் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயீஸ்வரரை குறித்த நாடிப் பதிவுகளில் முக்கியமானவை ... சுவாரஸ்யமானவை மட்டும் வாசிப்போம்.
🌹நந்தீஸ்வர நாடி:
எடுத்த எடுப்பிலேயே இவர் பதிவு செய்யும் பாடல் அதி அற்புதமானது.. சுவாமியின் ஓர் அம்சமான சிவத்தை தனது பாடல் பவத்தால் பரிணமிக்க வைக்கிறார் ...
அருள் காட்டி பொருள் காட்டி அன்பும் காட்டி
அகிலமுயர் பெருங்கருணை சோதி காட்டி
இருள் நீக்கி எமை காத்த ஈகபரத்தில்
ஈடேற வழி செய்யும் ஈசா போற்றி
என.. ஈசா உன் அடி போற்றி இயம்பிட்டேன் என்று சுவாமியை அடி பணிந்தே சுவாமி பற்றிய நாடியைப் பகர்கிறார்..
எப்படி கங்கை வழிபாடு என கங்கையை கையில் ஏந்தி கங்கைக்கே அர்ப்பணிப்பது போல்.. மஞ்சளைப் பிடித்து பிள்ளையாராக்கி அந்த மஞ்சளாலேயே அர்ச்சனை செய்வது போல்... சுவாமியை பாட சுவாமியையே வேண்டுகிறார் நந்தீஸ்வரர்.
சுவாமியின் அவதாரத்தை ரிஷிகள் பதிவு செய்கையில் சுவாமியை பாலகன் என மகன் என பதிவு செய்து அவரின் நித்திய இளமைத் தோற்றத்தை முன்நிறுத்துகிறார்கள்.
சொல்வதற்கு சாட்சிபட என் தேவனின் நாமம் உதித்திடவே என்கிறார்.
நாமமே பிறகு ரூபமானது என்கிறார்.
இவரும் உதித்திட எனும் பதத்தைப் பயன்படுத்தி சுவாமி ஜோதி வடிவானவர் என்பதை எடுத்துரைக்கிறார்.
அதையே பெருங்கருணை சோதி காட்டி என வள்ளலார் உணர்த்திய அருட்பெருஞ்சோதியை நிரூபிக்கிறார்.
அந்த நாமம் தன்னில் உதித்திட்ட பாலகனுக்கு
உயர்வு கூட இளமை யோகம் என்கிறார்.
அந்த இளமை யோகமே.. நித்திய இளமையானவராக.. சுவாமியை சிரஞ்சீவி இறைவனாக வாழ்வதை உணர்த்துகிறது.
🌹சுவாமியின் படைப்புகள்:
சுவாமியின் படைப்பே இப்பிரபஞ்சம்.. இவ்வுலகம் என்பதை தெளிவாக்குகிறார் நந்தீஸ்வரர்...
உதித்திட்ட மண்ணதுவும் மாயவனின் மாயக் கட்டிடம் என்பதில் பூமியில் தெரிகின்ற படைப்புகள் எல்லாம் மாயை என்கிறார். அதுவும் மாயவனாகிய கண்ணனின் மாயை என்கிறார். அந்தக் கண்ணனே சுவாமி என்பதை மறைபொருளாக உணர்த்துகிறார். இதனால் ஒரே வரியில் அத்வைத போதம் ஊறித் ததும்புகிறது.
🌹சுவாமியின் தரிசன அனுபவம்:
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தான் தரிசித்த பேரனுபவத்தை.. நாம் தரிசிக்க இருந்த அதே அனுபவத்தை ...
ஆதவனின் பொலிவுடன் அனைவரையும் திகைக்க வைத்தார் என்ற வரியில் வீரியம் மிகுந்து பதிவு செய்கிறார்.
வரும் காலம் எல்லாம் ரிஷிகளுக்கும் சிவ கணங்களுக்கும் கண்முன் திரைப்படமாய் ஞானக் கண்ணில் நகர.. நிகழ்காலத்தில் எதிர்காலம் கூட கடந்தகாலமாகி விடுகிறது. அதுவே காலம் கடந்த தன்மை!
சுவாமியின் தேஜோ மய தரிசனத்தை ஆதவனின் பொலிவுடன்... என்கிறார் நந்தீஸ்வரர்.
🌹சுவாமியின் தொண்டுகள்:
என் இனத்தை குலமாகக் கொண்டவரே
எனும் வரி எத்தனை மறை பொருளை உள்ளடக்கி இருக்கிறது. அவரின் இனம் எது? சிவ இனம்.. அதாவது சிவகணம். சுவாமி அவதரித்த இல்லம் இப்போது என்னவாக கொண்டாடப்படுகிறது? இதில் குலம் என்பது மனிதர்க்குத் தான் குடும்பம். சுவாமிக்கு அவரின் பக்தர் புடைசூழ இருந்ததே குலம். காரணம் இரண்டாம் வரியில் புரிகிறது..
அதன் வழியில் அவர் தானம் செய்திடுவார் இதனாலே
வழி வகை யோகங்கள் கண்டுரைக்க
என்பதாக.. தனது பக்தர்களாகிய தொண்டர்களை வைத்தே சுவாமி தானம் செய்வார் என்கிறார்.
தானம் என்பதில் தண்ணீர் தானம்/ கல்வி தானம்/ மருத்துவ தானம்/ ஞான தானம் என சகல சேவாக்களையும் உள்ளடக்கி இருக்கிறது. வழிவகை யோகங்கள் என்கிறார்.. பக்தர்களை கருவியாக்கி சுவாமி செய்யும் தொண்டுகள் அந்தக் கருவிக்கும் கர்ம நிவர்த்தியை தந்துவிடுகிறது. எதிர்பாராமல் வருவது தான் யோகம்.. இந்த கர்ம நிவர்த்தியும் அவர்கள் எதிர்பாராமல் செய்வதிலேயே வந்துவிடுகிறது. ஒரு வரியில் ஒரு கடலையே உள்ளடக்கி இருக்கிறார் நந்தியம்பெருமானார்.
🌹பிரேம சாயி பற்றி...
தன்னுடைய உடலை விட்டு ஆத்மா விலகும் காலம் தன்னில்
என ஆரம்பிக்கும் பாடலில்...
வந்துதிப்பாய் பூலோகத்தில் உதிக்கும் காலம்
உயர்வு நிலை சொல்ல பின்னுமாய் மாயமாய் தோன்றுவாய் என...
சுவாமியின் அடுத்த அவதாரமான பிரேம சாயியை குறிப்பிடுகிறார். இதில் மாயமாய் தோன்றுவாய் எனும் பதம்.. பிரேம சுவாமி அவதரிப்பது யாருமே அறியா வண்ணம் மாயமாகவே அதாவது மறைவாகவே .. ஒரு ரகசியமாகவே இருக்கும் எனப் பொருள்படுகிறது. பிரேம சுவாமியின் அவதாரப் பிரகடனத்திற்குப் பிறகே அனைத்து ரகசியங்களும் வெளிப்படும் என்பது இதன் மறைபொருளாக புரிந்து கொள்ள முடிகிறது.
🌹எட்டு வருடம் கடந்த ஸ்ரீ சத்ய சாயி அவதாரம்:
எண்வான் அட்டம் காலம் தன்னில் அன்னையவள்
நாட்டம் கூட மனமகிழ்வு மகிழ்வு கூட
பின்னதுவுமே வலயோகம் பாருலகில் உண்டு சொல்ல
கண்டு யுகம் மகன் நவசூல் காலம் தன்னில் எனும் பாடலில்
சுவாமி எட்டு வருடம் கடந்து பிறந்ததையும்.. சுவாமி கருவில் இருந்த போதும் நிகழ்ந்த அற்புதங்களையும் நந்தீஸ்வரர் தெளிவாகப் பதிவு செய்கிறார்.
அஷ்ட என்றால் எட்டு.. இதை தமிழில் அட்டம் என்போம். எட்டாண்டுகளையே அட்டம் சுட்டிக் காட்டுகிறது. நவசூல் என்கிறார். நவ என்றால் புதுமை என்று பொருள். இதுவரை நிகழாததை புதுமை என்போம்.. ஆகையால் இதுவரை நிகழாத சூல் (கர்ப்பம்) என்று பொருள். வலயோகம் என்பது அற்புதங்கள் என்று பொருள். வாத்தியக் கருவிகள் வாசிதத்தை எல்லாம் மறை பொருளாக வரியில் நிறுத்துகிறார் நந்தீஸ்வரர்.
(நந்தீஸ்வரர் நாடி படிக்கப்பட்ட நாள் : 14/06/2011/ நாடி படிக்கப்பபட்ட இடம் : வைத்தீஸ்வரன் கோவில்)
🌹கோரக்கர்:
கோரக்கர் பெரிய சித்தர். பதினெட்டு சித்தர்களில் ஒருவர். போகரின் சீடர். கோரிப் பிறந்ததால் அதாவது கோரிக்கை வைத்து பிறந்ததால் கோரக்கர். சாம்பலே கோரக்க பாலகராய் உருமாறியது. அத்தகைய கோரக்கர் சுவாமி பற்றி பதிவு செய்த மிக முக்கியமானவை மட்டும் வாசிப்போம்..
🌹கோரக்கர் நாடி:
தங்கமான மழுவோடு ஏந்தி தண்மதி தலையில் கொண்டோன் என சிவத்தை வழிபட்டே சிவசக்தி நாதனின் மேன்மையான அவதாரத்தைப் பதிவு செய்கிறார்.
நவக்கோள்களும் சுற்றிடும் வண்ணம் என தொடரும் பாடலில் ...
பாலகன் உதித்திட்டான் அத்தன் அம்மை கூட என்று பதிவு செய்து அத்தன் என்றால் சிவன்.. அம்மை என்றால் சக்தி.. இருவரும் கூடுவது சிவசக்தி அம்சம்.. இதையே கோரக்கர் வலியுறுத்துகிறார்.
பிறப்பதுவும் கடைபிறப்பு யோகம் இல்லை
சிவசக்தி அம்சமான சுவாமி அவதரித்தது.. அதன் வழியே மேன்மைகள் பிறந்ததைத் தான் பிறப்பதுவும் என்கிறார்.
அந்த மேன்மைகள் தொடரப்போகின்றன.. முடியவில்லை.. மீண்டும் ஒரு அவதாரம் இருக்கிறது என்பதற்கே கடை பிறப்பு என்கிறார். கடை என்றால் கடைசி. பொதுவாக கடைசி பிறப்பு மனிதர்க்கு யோகம். கடைசி அவதாரம் இறைவனால் உலகத்திற்கே யோகம்.. இதற்காகவே பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தினால் உலகம் பெற்ற யோக நன்மைக்கு கடைசி இல்லை .. அடுத்த அவதாரத்தில் அந்த யோகம் தொடரும் என்கிறார்.
(கோரக்கர் நாடி படிக்கப்பட்ட இடம் : வைத்தீஸ்வரன் கோவில் / நாடி படிக்கப்பட்ட நாள் : 14/06/2011)
சித்தர்களும்... ரிஷிகளும் தங்களுடைய பாணியில் இறைவனின் மேன்மையைப் பதிவு செய்கிறார்கள். அதனை உள்ளர்த்தங்கள் வைத்தே எழுதி இருக்கிறார்கள். அப்படி இல்லை எனில் பாடல்வழியாக அவர்கள் சத்தியத்தை ஏற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.. இதனை எல்லாம் பாடல் வடிவில் உள்ள ஞானக் கூற்று எனலாம். பெரும்பாலான மனிதர்கள் இறைவனைப் புகழ்வதற்குள் சுயநல ஆதாயமே நிறைந்திருக்கிறது.. ஆனால் சித்தர்களும் ரிஷிகளும் இறைவனை புகழ்வதற்குள் சத்தியமே நிறைந்திருக்கிறது.
நாடியின் துடிப்புகள் தொடரும்...
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக