5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... தேவரிஷி நாடியை வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....
✋ நாடிகள்:
அரிய பெரிய சத்தியத்தை சூத்திரங்களாக சுருக்கி பாடல் வடிவில் தருவதற்கு பெரிய ஞானம் தேவைப்படுகிறது.. அதே வரிகளில் ஆன்மீக உள்ளர்த்தங்கள் வைத்து இயற்றுவதற்கு சுவாமியின் அருளே ரிஷிகளுக்கும் அவசியப்படுகிறது.
ஆன்மீக/ தெய்வீக நாடிகள் கேட்பதும்.. வாசிப்பதும் தான் உண்மையில் நம்மை ஞானத்தை நோக்கி நகர்த்தும். நம் வருங்கால வாழ்வை நாடிகள் வழி பார்ப்பதன் மூலம் நிகழப்போவதை அறிந்து கொள்வதில் நிகழ்கால சுவாரஸ்யம் குறைகிறது.. கவலை கூட ஏற்படுகிறது. நடப்பதை முன் கூட்டியே மனிதன் தெரிந்து கொள்வதைக் காட்டிலும் எவ்வாறு அவன் பக்குவமாய் வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்கே அவன் ரிஷிகளின் நாடிகளை நாடினால் மட்டுமே நலம் பயக்கும்.
🌹தேவரிஷி:
வேதகால ரிஷிகளை பிரம்மரிஷி .. ராஜரஷி.. தேவரிஷி.. மகரிஷி எனப் பல்வேறு பட்டங்களை வைத்து அழைப்பர். யாரும் ரிஷிகளின் பெயரை வைத்து அழைப்பதில்லை.. பெயரையும் தங்களது அடையாளங்களையுமே துறந்து பரப்பிரம்மத்தோடு ஐக்கியமானவர்கள் ரிஷிகள்.. ஆகையால் சில ரிஷிகளின் பெயர்கள் அறியப்படாமல் பட்டங்களால் மட்டுமே அவர்கள் நினைவுப்படுத்தப்படுகிறார்கள். ரிஷிகளுக்கு தென்மொழியும் .. வடமொழியும் தெரியும். ஆதி மொழிகள் அவை இரண்டு மட்டுமே. ஆகையால் அவை இரண்டிலுமே ரிஷிகள் தங்களது ஞானத்தை சேகரித்து வைத்திருக்கிறார்கள். அத்தகைய ஒரு தேவரிஷி நமது பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி குறித்து பதிவு செய்திருக்கும் அவரது நாடியில் முக்கியமானவை.. சுவாரஸ்யமானவை மட்டும் இப்போது வாசிப்போம்...
🌹தேவரிஷி நாடி:
ஆத்தாளே மலையரசி மகளே சக்தி
என சுவாமியின் ஓர் அம்சமான சக்தியை ஆராதனை செய்தே பதிவு செய்ய ஆரம்பிக்கிறார் தேவரிஷி.
🌹 அவதாரப் பிரவேச சாயி:
இன்பம் பட சுபீட்சமாய் வந்து உதிப்பான்
பூலோகத்தில் இதனூல் காணும் ஈர்திங்கள் தன்னில்
காட்சிபட வையகத்தில் பூலோக மக்கள்
அத்தருணம் தேவியின் மனம் குளிர
மனக்குமுறல் விலகுமப்பா
சுபீட்சமாய் வந்து உதிப்பான் என்கிறார் சுவாமியை தேவரிஷி. ஆகாயத்திலிருந்து நீல ஒளியாய் உதித்து ஈஸ்வராம்பா வயிற்றில் புகுந்தார் சுவாமி. அந்தக் கிணற்றடி அனுபவத்தை ஈஸ்வராம்பா அன்னையே பகிர்ந்திருக்கிறார். அதனாலேயே தேவரிஷி உதிப்பான் என்பதைப் பயன்படுத்துகிறார்.
🌹பாமா தேவியும் பாபா கிருஷ்ணரும்:
அத்தருணம் தேவியின் மனக்குமுறல் விலகுமப்பா என்கிற வரி.. வியப்பூட்டும் சரித்திர சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. அன்னை சத்யபாமா பெரியவர் கொண்டம ராஜு கனவில் தோன்றி பாரிஜாத மலர் பறிக்கப் போன கிருஷ்ணர் வரவிற்காக காத்திருக்கிறேன்.. மழை பெய்கிறது.. எனக்கான தங்க இடம் ஒன்று கொடு என்கிறார். பிறகு அவரால் அன்னைக்கு கோவில் எழுப்பப்படுகிறது. சுவாமி அவதரிக்கிறார்.. அன்னைக்கு மனக்குமுறல் தணிகிறது.. இதில் தேவி என்பது அன்னை சத்யபாமாவை குறிக்கிறது.
ஒரு பாடலில் சுபீட்சம் காண அன்னைக்கு சுவை திங்கள் ஆகும் என்கிறார் தேவரிஷி. சுவாமியின் திங்கட்கிழமை அவதாரமே அன்னை ஈஸ்வராம்பாவுக்கும் சுபீட்சம் தருகிறது என்பதை இது உணர்த்துகிறது. ஈஸ்வரன்னை சத்யநாராயண பூஜை தீர்த்தம் உண்ட தருணமே சுவாமி அவதரித்ததால் சுவையான தீர்த்தத்தால் ஆன திங்கள்.. சுவை திங்கள் என்கிறார் தேவரிஷி.
🌹ஸ்ரீ நிவாச ஸ்ரீ சத்யசாயி:
வையகம் சிறந்திடவே
தேகம் தன்னில் ஒளிந்திட்ட வேள்வி தன்னை
சுடர் மணி யோகம் கண்டு அன்னையவளை மார்பு தனில் கொண்டுரைக்க
எனும் பாடல் வரியில் .. சுவாமியின் தேகத்தை வேள்வித்தீ என்றே சுவாமியின் ஜோதிர் உடம்பை எடுத்துரைக்கிறார் ரிஷி. சுடர் மணி யோகம் கண்டு என ஜோதிர் (தியானம் ) யோகத்தின் முக்கியத்தை சுவாமி காண வைப்பார் என்பதையும் சொல்லி... அன்னையவளை அதாவது மகாலட்சுமியை மார்பு தன்னில் கொண்ட ஸ்ரீ நிவாசனே ஸ்ரீ சத்ய சாயி என்கிறார் தேவரிஷி.
ஆகையால் உரைத்திட்டேன் வேதியன் யானும்
மனமகிழ்வு கண்டுரைக்க அன்னையர்க்கு வேள்வி தன்னை இது கால் செய்ய
செய்திடவே மாயவனின் தூய நிழல் காண என
தேவ ரிஷி இங்கே தன்னை வேதியன் என பதிவு செய்கிறார். அவர் சுவாமியின் நாடிக்குறிப்புகளைப் பதிவு செய்வதற்கு மனமகிழ்வு அடைகிறார்.
அன்னையர்க்கு வேள்வி என்பது சுவாமி நவராத்திரியில் சக்தியர்க்கு நிகழ்த்தும் யாக வைபவம் மற்றும் தசமி அன்று சுவாமி தெளிக்கும் கலசநீர் போன்ற தெய்வீக மேன்மையை படம்பிடித்துக் காட்டுகிறது. சுவாமியை மாயவன் என சுவாமியே மாயவனாகிய ஸ்ரீ கிருஷ்ணர் என இவரும் மற்ற மகரிஷிகளைப் போல் வழிமொழிகிறார்.
(தேவரிஷி நாடி படிக்கப்பட்ட இடம் : வைத்தீஸ்வரன் கோவில் / நாடி படிக்கப்பட்ட நாள் : 25-05-2011)
தேவரிஷி நாடியில் மூன்று இடத்தில் அன்னை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. மூன்றுமே வேறுவேறு பொருள். ஒரு சொல் சொல்லை வைத்து அல்ல அது பயன்படுத்துகிற இடத்தை வைத்தே பொருள் உணரப்படுகிறது. இப்படி ரிஷிகளும் சித்தர்களும் தனக்கே உரிய பாணியில் சூட்சுமத்தை சூத்திரங்களாக மறைத்து நாடியில் சத்தியத்தை சுருக்கி வைத்திருக்கிறார்கள். அதை கண்டுபிடித்து உணர்ந்து வெளியே கொண்டு வருவது திரியைத் தூண்டி பிரகாசிக்கச் செய்வது போல் அலாதியான சுவாமி அனுபவம்.
நாடியின் துடிப்புகள் தொடரும்...
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக