தலைப்பு

ஞாயிறு, 20 ஜூன், 2021

ஒரே ஒரு நூறு ரூபாயை பல கோடிகளுக்கு சமமாக்கிய ஸ்ரீ சத்யசாயி இறைவன்!

கடிதத்தை வாங்கிக் கொண்டு அதைப் பிரித்துப் பார்க்காமலேயே அதில் உள்ளவற்றை ஒன்று விடாமல் ஒப்பித்த சுவாமி அந்தச் சிறுவன் இணைத்திருந்த சின்னஞ்சிறு தொகையை ஏன் எதனால் சிகரமாக்கினார்.. அப்படி என்ன அந்த பையனின் கடிதத்தை எழுதப்பட்டிருந்தது என்பதை விளக்கும் அருமையான சுவாமி அனுபவப் பதிவு இதோ...


சில வருடங்களுக்கு முன்பு புட்டபர்த்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கட்டி முடித்து, பணி சேவை-தொடங்கும் சமயம். பாபாவும் மற்றவரும் மிக வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். சில மாதங்களாக பாபாவிற்கு மாலை சிறுவர்களை சந்தித்துப் பேசவே நேரம் இல்லை! இது ஒரு மாணவனுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்க அவன் ஒரு கடிதம் பாபாவிற்கு எழுதித் தயாராக வைத்திருந்தான்! 

கடிதம் கொடுப்பது பக்தர்களின் / மாணவர்களின் உள்ளப் பரிமாற்றம். கடிதங்களில் தங்களது இதயங்களை தூதாக அனுப்பியும்.. வார்த்தைகளில் தங்கள் கோரிக்கைகளை எழுதியும் சுவாமி அதை ஏற்று அனுகிரகமும் புரிகின்ற திருநிகழ்வு அப்போது தினந்தோறும் நடக்கும். டன் கணக்கில் இதுவரை கடிதங்கள் குவிந்திருக்கிறது. பக்தர்களின் கர்ம மூட்டை பாரங்களை சுவாமியின் கருணையே கரைத்திருக்கிறது.

அன்று மாலை பஜன் ஹாலில் ஸ்வாமி வந்தார்,  இப்பையனோ சில வரிசைகள் பின்னால் அமர்ந்திருந்தான். எப்படியோ பாபா நன்கு  முன்னால் வளைந்து கடிதத்தை வாங்கிக் கொண்டு விட்டார். பிறகு தங்களை பாபா சந்திக்க வருவார் என்று எதிர்பார்த்துக்  காத்திருந்த மாணவர்கள் டாக்டர்களுடன்  பாபா இன்டர்வ்யூ  நடத்த சென்று விட்டதைப்  பார்த்து, “இன்றும் நாம் சந்திக்க முடியாதே  என வருத்தம் கண்டனர். ஆனால் திடீரென பாபா கதவைத் திறந்து கொண்டு, வெளியே வந்து, மாணவர்களின் அருகே வந்து கடிதம் கொடுத்த பையனைக், கூப்பிட்டு, இக்கடிதத்தில் உள்ளதை உரக்கப் படிக்கவா எனக் கேட்டார். மாணவன்- ஸ்வாமியின் சித்தப்படி செய்யுங்கள்  என்றான், பாபா உரக்கப் படித்தார் அதில் எழுதியிருந்ததாவது.... 

   “ஸ்வாமி, எனக்கும் என் நண்பர்களுக்கும் இலவசமாக கல்வி, உடை உணவு அளிப்பதுடன், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அதிக செலவாகக் கூடிய வைத்தியத்தை இலவசமாக செய்ய தாங்கள் ஏற்பாடு செய்துள்ளீர்கள். நான் ஏதாவது என் பங்கிற்கு செய்யலாம் என்றால் நான் ஏழை! ஆனால் மாதம் ஒரு சிறு தொகை என் பெற்றோர் அனுப்புவர், நான் மூன்று மாதமாக என் துணிமணிகளை நானே துவைத்துக் கொண்டு, செலவை  மிச்சப் படுத்தி 100 ரூபாய் சேமித்துள்ளேன். இதில் வைத்துள்ளேன், இந்த சிறு காணிக்கையை செங்கல்லுக்கு (சில) மட்டுமாவது  ஆகுமெனில் ஏற்றுக் கொள்ளுங்கள்" 

இப்படிக்கு 

உங்கள் அன்பு மகன்

என்று இருந்தது.  

ஸ்வாமி அந்த நூறு ரூபாயை உயர்த்திப் பிடித்து, “இதோ ஒரே ஒரு நூறு ரூபாய் அல்ல இது எனக்கு கோடான கோடி ரூபாய்க்கு சமம்“ என்றார்!

ஆதாரம்: Gems of Sai – Garland of 80. P-111,112

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர். 


🌻அந்தக் கடிதம் முழுக்க பக்தியே பிரதிபலிக்கிறது. அதன் எழுத்துக்கள் முழுவதும் இதயங்களின் ECG வடிவங்களாகவே காட்சி அளிக்கின்றன... சுவாமி அவரவர் இதயம் பார்த்தே அவரவர்க்கு அனுகிரகம் புரிகிறார். பாத்திரத்தின் அளவே பாயாசத்தின் அளவு. அது போலவே இதயத்தின் அளவே அனுகிரகத்தின் அளவு.. இந்தச் சிறுவனின் இதயம் கடலாக விரிந்திருக்கிறது. ஆகையால் மட்டுமே அவன் அளித்த வெறும் நூறு பெரும் கோடியாக சுவாமியின் காலடியில் குவிந்தது. இறைவன் ஸ்ரீ சத்ய சாயிக்கு எவ்வளவு என்பது முக்கியமே இல்லை.. எவ்வாறு என்பதே முக்கியம்! இதயவாசியான இறைவன் ஸ்ரீ சத்ய சாயி இதயத்தையே பார்க்கிறார். வேறெதையும் அல்ல!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக