கர்மா என்பதே மனிதனுக்கான ஜென்மாந்தர விதி... அதை மாற்றி அமைக்க அதை உணர்ந்த மகான்களால் கூட முடியாத அம்சம். அதை இறைவனால் மட்டுமே மாற்றி அமைக்க முடியும்.. இதோ சத்ய சாயி இறைவன் அதைப் புரிந்து பக்திக்கு தந்த பரிசுகள் இதோ...
பாபுஜி குப்தா, மீரட் நகரை சேர்ந்தவர். வணிகர். செல்வந்தர். வயிற்று உணவு பாதையில் ஏற்பட்ட கேன்சரால் வேதனைப்பட்டார். குடும்ப டாக்டரும், சிறப்பு டாக்டர்களும் அவரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சாப்பிட்ட அனைத்தும் வாந்தியாக வெளியேறியது. சில ஸ்பூன் திரவ பானங்களும் பழரசங்கள் மட்டுமே உணவாக வழங்கப்பட்டது. ஆறு மாதங்களில் எலும்பும் தோலுமாக மாறி இருந்த குப்தா, அமைதியாக வீட்டில் இறக்கட்டும் என மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார். தற்போதே கேன்சர் நோய்க்கு மருந்துகள் இல்லை, 40 ஆண்டுகளுக்கு முன் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. வியாபாரம் மகன்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
பாபுஜி குப்தாவிற்கு ஒரு நாள், அவரது காதில் யாரோ, "ராதே ஷ்யாம் வீட்டு சாயி பஜனைக்கு செல்!", என்று கூறுவதாக கேட்டது. தொடர்ந்து அந்த குரல் கேட்கவே, விஷயத்தை மகன்களிடம் தெரிவித்தார். இந்நிலையில் ராதே ஷ்யாம் என்பவர் பாபுஜி குப்தாவை தேடி வந்தார். குப்தாவின் உடல் நிலையைக் கண்டு வருந்தினார். குப்தாவிடமும், மகன்களிடமும், சத்ய சாய்பாபாவின் பெருமைகளைக் கூறி, சுவாமியின் விபூதி பிரசாதத்தை கொடுத்தார். மேலும் தனது வீட்டில் தினந்தோறும் நடக்கும் பஜனைக்கு குப்தாவை அழைக்க, தனது கனவில் சுவாமி கூறியதாகவும் தெரிவித்தார். பாபுஜி குப்தா ராதேஷ்யாம் வீட்டு பஜனைக்கு செல்ல ஆசைப்பட்டார். மகன்கள் பஜனைக்கு குப்தாவை அழைத்து சென்றனர். ராதேஷ்யாம் வீட்டில் குப்தா, ஒரு ஓரமாக சுற்றிலும் தலையணைகள் வைத்து அதன் மீது தூக்கி உட்கார வைக்கப்பட்டார்.
பஜன் முடிந்ததும், பிரசாதமாக பூரியும் சப்ஜியும் வழங்கப்பட்டது. குப்தா பூரியை சாப்பிட்டார். மகன்கள் கலவரத்துடன் குப்தாவை பார்த்தனர். விளக்கு அணைவதற்கு முன் பிரகாசமாக எரியும் என்பார்கள். அதுபோல, தந்தையின் கடைசி உணவு இதுவாக இருக்குமோ என அஞ்சினர். அதனால் தடை ஏதும் கூறவில்லை. ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் அவருக்கு வாந்தி வரவில்லை. குப்தா தொடர்ந்து ஒரு வாரம், தினந்தோறும் பஜனையில் கலந்து கொண்டார். பிரசாதத்தை உண்டார். அவருக்கு வாந்தி ஏதும் ஏற்படவில்லை. அதுமட்டுமல்லாமல், அவர் மிக விரைவாக குணமடைய ஆரம்பித்தார். பழையபடி நடமாட ஆரம்பித்தார். டாக்டர்கள் திகைத்துப் போயினர்.
தமக்கு வாழ்வு தந்த பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவை பார்க்க மிகவும் ஆசைப்பட்டார். 1971 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், சுவாமியை முதன்முதலாக சந்தித்தார். 1972 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி, சுவாமி பெங்களூரில் அவருக்கு பாத நமஸ்காரமும், நேர்காணலும் வழங்கினார். அப்போது சுவாமி, குப்தாவிடம், "உன் ஆரோக்கியம் எப்படி உள்ளது?",என ஹிந்தியில் கேட்டார். மேலும், "உனது கேன்சரை நான் குப்பையில் தூக்கி போட்டு விட்டேன். கவலைப்படாதே! நான் இருக்கிறேன்.",என்றார். சுவாமி, குப்தாவை, மீரட் நகரில் சத்திய சாயி சேவா அமைப்பின் தலைவராக்கி, சேவை பணிகளை செய்ய கூறினார். குப்தா, சுவாமியின் தெய்வீகப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
அதனால் மகிழ்ந்த சுவாமி, 1974 ஆம் ஆண்டு ஸ்ரீசத்யசாய் அமைப்பின் மாநில தலைவராக குப்தாவை நியமித்தார். செய்யவேண்டிய பணிகளில் வழிகாட்டுதலையும் சுவாமியின் ஆசியையும் பெற, அவர் அடிக்கடி புட்டபர்த்தி, பெங்களூர், பயணம் மேற்கொண்டார். ஒருமுறை புட்டபர்த்தியில், சத்திய சாயி நிறுவன, மாநில தலைவர்களின் கூட்டம், பகவான் முன்னிலையில் நடைபெற்றது. குப்தாவும் அதில் கலந்து கொண்டார். நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை கூறி வந்த பகவான், திடீரென, குப்தாவை பார்த்து, "உனக்கு சில நாட்களில் பார்வை போய்விடும்.", என்றார். குப்தா ஒன்றும் பேசவில்லை. சுவாமி, "குப்தா! நான் கூறுவது கேட்கிறதா? முந்தைய பிறவிகளின் கர்ம வினையின் பயனாக, சில நாட்களில் நீ குருடனாக போகிறாய்.", என்றார்.
அதைக்கேட்டு அதிர்ந்து போன நிர்வாகிகள், "சுவாமி! குப்தா உங்கள் பக்தர். நீங்கள்தான் அவரை காப்பாற்ற வேண்டும்.", என்று வேண்டினர். சுவாமி, "சரி. நான் காப்பாற்றுகிறேன். அவனது கர்மாவை அடுத்த பிறவிக்கு மாற்றுகிறேன். அடுத்த பிறவியில் நீ குருடனாய் இருப்பாய். சம்மதமா?", என்றார் சுவாமி. குப்தா பகவானிடம், "சுவாமி! நீங்கள் அருகாமையில் இருப்பதால், இடி போன்ற இந்த வார்த்தைகள் என்னை பாதிக்கவில்லை. இந்த அருகாமையும், பாக்கியமும், எனக்கு அடுத்த பிறவியில் வாய்க்குமோ என்னமோ தெரியாது. ஆகையால் எனது பழைய கர்மாவிற்கான அனைத்து கஷ்டங்களையும், இந்தப் பிறவியிலேயே எனக்குக் கொடுங்கள். உங்கள் அருகாமையும், அன்பும், என்னை காப்பாற்றி விடும்.",என்றார். சுவாமி, "நல்லது குப்தா, நல்லது.",என்றார்.
புட்டபர்த்தியில் இருந்து மீரட் வந்த குப்தா, சிலநாட்களில் பார்வையை இழந்தார். மனம் கலங்காமல் விடாமுயற்சியுடன் ஒரு காரியதரிசியை உடன் வைத்துக்கொண்டு, சுவாமியின் தெய்வீகப் பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வரலானார். கண் டாக்டர், சந்தீப் மிட்டல், "ஒரு ஆபரேஷன் செய்து பார்க்கலாம்.", என குப்தாவிடம் தெரிவித்தார். ஆனால் குப்தா, ஆபரேஷன் செய்ய மறுத்துவிட்டார். குப்தா, ரிஷிகேஷில் சுவாமிக்கான ஒரு ஆசிரமத்தை நிறுவ, ஒரு மாளிகையையும், இடத்தையும் விலைக்கு வாங்க, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஒருநாள், ரிஷிகேஷ், லக்ஷ்மண் ஜூலா பாலத்தருகே, தனது காரியதரிசியுடன் அமர்ந்திருந்தார். அப்போது குப்தாவிற்கு அறிமுகம் இல்லாத ஒரு முதியவர், அங்கு வந்தார். அவர் குப்தாவிடம், "நீங்கள் ஆசிரமத்திற்கு ஒரு மாளிகை தேடிக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும். இந்தப் பாலத்தை கடந்து சென்றால், ஒரு மாளிகை விலைக்கு உள்ளது.", என கூறினார்.
குப்தா,"என்ன விலை இருக்கும்?",என முதியவரிடம் கேட்டார். குப்தாவின் காரியதரிசி, "ஐயா! நீங்கள் யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள்? யாருமே இல்லையே.",என்றார். முதியவர் வேடத்தில் வந்தது பகவான் என அறிந்து கொண்டார் குப்தா. முதியவர் கூறியபடியே பாலத்தை கடந்து சென்று பார்த்தபோது, ஒரு மாளிகை, அதை சுற்றியுள்ள இடம் விற்பனைக்கு இருப்பது தெரியவந்தது. காரியதரிசி, அந்த மாளிகை மிகவும் அழகாக உள்ளது என தெரிவித்தார். காவல்காரரிடம் இருந்து, உரிமையாளரின் விலாசத்தை பெற்றுக்கொண்டு குப்தா மீரட் திரும்பினார். குப்தா, ஜபல்பூர் சென்று, மாளிகையின் உரிமையாளர் திரு.பட்டேல் அவர்களை சந்தித்தார். "சுவாமியின் தெய்வீக பணிக்கு அந்த மாளிகை தேவைப்படுகிறது. என்ன விலை எதிர்பார்க்கிறீர்கள்?", என பட்டேல் இடம் கேட்டார்.
பட்டேல், "நீங்கள் என்ன விலை கொடுக்க விரும்புகிறார்களோ, அதையே கொடுங்கள்.", என கூறிவிட்டார். அந்த மாளிகை ஆசிரமத்திற்கு வாங்கப்பட்டது. மாளிகையைப் பார்க்க தனக்கு கண்ணில்லையே என குப்தா வருந்தினார். ஒருநாள், பிரம்ம முகூர்த்தத்தில், குப்தாவிற்கு ஒரு கனவு ஏற்பட்டது. அந்தக் கனவில், சுவாமியும், பல முக்கிய பிரமுகர்களும், ஒரு மாளிகைக்கு வருகின்றனர். அந்த மாளிகையில் ஹோமங்களும், யாகங்களும், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுவாமி அங்கிருந்த எல்லோரையும் ஆசீர்வதிக்கிறார். அந்த மாளிகை அழகாகவும், ரம்மியமாகவும் இருந்தது. இந்த கனவை தனது உதவியாளரிடம் கூறி, தனது டைரியில் குறித்து வைத்துக்கொண்டார்.
நவம்பர் 1976 ஆம் வருடத்திலிருந்து, 1981 வரை குப்தா பார்வையற்றவராக இருந்தார். 1981, அக்டோபர் 9ஆம் தேதியிலிருந்து, இடது கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டது. குப்தாவிற்கு இடது கண்ணிலிருந்து கருப்பு நிறத்தில் ஒரு திரவம் வடிந்து கொண்டிருந்தது. வலியும் வேதனையும் தாங்க முடியாமல் அலறினார் குப்தா. டாக்டர் அவருக்கு வலி நிவாரணியும், தூக்கமாத்திரையும் எழுதிக்கொடுத்தார். பயனில்லை. பார்க்க வந்தவர்கள் அனைவருக்கும், கண்களில் நீர் திரண்டது. சிலர், "பாபா, குப்தாவின் கஷ்டத்தை பாக்க கூடாதா? அவருக்கு இதயம் இல்லையா?", என நிஷ்டூரம் செய்தனர்.
அதேசமயம், அக்டோபர் 10-ம் தேதி, சுவாமி, தனது உதவியாளரான குடும்ப ராவை அழைத்து, "நான் குப்தாவின் கர்மாவை மாற்றுகிறேன். அவனுக்கு நான் தயை செய்கிறேன்.", எனக்கூறி, "குப்தா! உன் இடது கண்ணை ஆபரேஷன் செய்து கொள். சுவாமி உடன் இருக்கிறார்.", என தந்தி அனுப்பச் சொன்னார். மறுநாள், அக்டோபர் 11-ஆம் தேதி, தந்தி குப்தாவிற்கு கிடைத்தது. குப்தாவின் மருமகன், "பிரசாந்தி நிலையத்திலிருந்து டெலகிராம் வந்துள்ளது" எனக் கூறி, தந்தியை படிக்க ஆரம்பித்தார். தந்தியை படித்து முடித்ததும், குப்தாபின் இடது கண்ணிலிருந்து நீர் வடிவது நின்று விட்டது. வலியும் நின்றுவிட்டது. அவருக்கு இடது கண் பார்வை வந்துவிட்டது. சுற்றியுள்ள அனைத்தும் தெரியலாயிற்று. குப்தா, சடுதியில், படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டார்.
டாக்டர். சந்தீப் மிட்டல் உடனடியாக அழைக்கப்பட்டார். அவர் குப்தாவின் இடது கண்ணை பரிசோதித்து பார்த்தார். பார்வை முழுமையாக திரும்பியிருந்தது. அதிசயித்து நின்ற டாக்டர், இவ்வாறு கூறலானார், "ரெடினா முழுவதும் வீணாகி, பார்வை போன ஒரு கண்ணுக்கு, உலகத்திலுள்ள எந்த கண் மருத்துவரும், எந்த மருத்துவமனையும், திரும்ப பார்வையை வழங்க முடியாது. பார்வை போன கண்ணுக்கு பார்வை வழங்கிய ஸ்ரீ சத்ய சாய்பாபா, சாக்ஷாத் கடவுளே." என்று, சுவாமியின் படத்தின் முன் நமஸ்காரம் செய்தார்.
இந்நிலையில், வலது கண்ணிற்கு ஆப்பரேஷன் செய்து கொள்ளும்படி சுவாமியிடம் இருந்து உத்தரவு வந்தது. டாக்டர்.சந்தீப் மிட்டல், பார்வையற்ற வலது கண்ணுக்கு, சுவாமியை வேண்டியபடி ஆப்பரேஷன் செய்தார். குப்தாவின் வலது கண்ணும் பார்வை பெற்றது. சுவாமி, 1982 ஆம் ஆண்டு, ரிஷிகேஷ் மாளிகைக்கு விஜயம் செய்தார். பகவான் வரவை ஒட்டி, ஹோமங்களும், யாகங்களும், சிறப்பாக நடைபெற்றன. அப்போது குப்தா, 1978ல், தாம் குருடராக இருந்தபோது, பிரம்ம முகூர்த்தத்தில், முன்பே பகவான், இந்த மாளிகையையும், இந்த நிகழ்ச்சிகளையும், தனக்கு கனவில் காட்டியது எண்ணி மிகவும் அகமகிழ்ந்தார்.
சுவாமி, குப்தாவிடம், "குப்தா! முன்பு உன் விதியை மாற்றி, உன் உயிரைக் காப்பாற்றினேன். உனது முந்தைய கர்ம வினைகளின் படி, நீ வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவன் ஆக இருக்க வேண்டியது. ஆனால் உன்னுடைய பக்தியின் காரணமாகவும், சேவையின் காரணமாகவும், நான் அதை ஆறு ஆண்டுகளாக குறைத்து விட்டேன்.", என்றார். மேலும், குப்தாவிற்கு, ஒரு முத்து பதித்த மோதிரத்தை, சிருஷ்டி செய்து கொடுத்தார். நீ பஜனை முடிந்தபிறகு, எப்போது என்னை பார்க்க விரும்பினாலும், இந்த மோதிரத்தைத்தின் வழியாக, நான் உனக்கு தெளிவாக தரிசனம் கொடுப்பேன்.", என ஆசி கூறினார். "ஆனால் அடிக்கடி கூப்பிடாதே.", என்று பகவான் கூறி சிரித்தார். இந்த நூலாசிரியை, திருமதி.சரளா ஜோசி அவர்களும், முத்து பதித்த மோதிரத்தின் வழியாக, சுவாமியை தெளிவாக தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகவத் கீதையின் தியான சுலோகம்,
"எவன் கருணை இருந்தால், முடவன் மலை ஏறுவானோ!
எவன் கருணை இருந்தால், குருடன் பார்வை பெறுவானோ!
அத்தகைய கருணை உள்ளவன் ஸ்ரீகிருஷ்ணன்._என்கிறது.
ஸ்ரீ சத்ய சாய் கிருஷ்ணனும், அதே கருணையோடு, குப்தாவை காப்பாற்றினார். சுவாமியின் அனுக்கிரகம் இருந்தால், விதியோ, நவகிரகமோ, நம்மை ஒன்றும் செய்ய இயலாது!
ஆதாரம்: Sai Charan Kamal by Mrs. Sarala Joshi (Hindi)
Compiled by: S. Ramesh, Ex-Convenor, Sai Samithi, Salem.
🌻 இதை வாசித்தவர்களுக்கு நிச்சயம் ஒரு கேள்வி எழும்... நமக்கும் இப்படி எல்லாம் கர்மாவை மாற்றி அமைக்க மாட்டாரா? சுவாமி என..
இறைவன் சத்ய சாயி ஆற்றிவரும் கர்மா மாற்றும் தெய்வீக செய்கை எல்லாம் ஒருவரின் பக்தியை உற்று நோக்கி அவர் ஆற்றுகிற திருச்செய்கையே. நீரின் உயரத்தை வைத்தே தாமரையின் உயரம்.. அது போல் நிர்மல பக்தியின் ஆழத்தை வைத்தே கர்மாவை மாற்றும் கடவுள் சத்ய சாயியின் செய்கை யாவும்! 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக