ஒருமுறை
சிவபெருமானும், தாயார் பார்வதியும் வான்வெளியில்
உலாவிக் கொண்டிருந்தனர். அவர்கள் பூமியில் ஒரு மனிதன் தான் அமர்ந்திருந்த மரக்கிளையினையே
வெட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அக்கிளையானது முற்றிலுமாக வெட்டப்பட்டு எந்நேரமும் விழுந்துவிடும் ஆபத்தான நிலையில் இருந்தது.
பார்வதி
பதட்டத்துடன் சிவபெருமானிடம் “ஓ இறைவா! அவன்
பூமியில் விழாவண்ணம் தயவுசெய்து காத்தருளுங்கள்” என்று வேண்டினார். ஈஸ்வரன் அதற்கு “நீயே அவனை முதலில் பார்த்தாய். தான்
அமர்ந்திருக்கும் கிளையினை வெட்டுவதன் காரணமாக அவன் விழுந்துவிடுவான் என
உணர்ந்தவளும் நீயே. ஆகவே அவனைக் காப்பது உனது கடமை” என்றார்.
அப்பொழுது
பார்வதி “ஸ்வாமி! பொதுவாக
எந்த ஒரு மனிதனும் உயரத்திலிருந்து விழும்பொழுது, 'அம்மா' அல்லது 'அப்பா' என பயத்தில் அலறுவான். இம்மனிதன் 'அம்மா' என்று அலறினால், நான் அவனைக்
காக்கிறேன். மாறாக, அவன் 'அப்பா'
என்று கதறினால், நீங்கள் அவனைக் காத்திட வேண்டும்” என்று விண்ணப்பித்தார். ஈஸ்வரனும் இந்த யோசனையை ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில்,
வெட்டிய மரக்கிளையும் விழுந்தது. அதன்மேல் அமர்ந்திருந்த மனிதனும் விழுந்தான். தாயார்
பார்வதியும் அவனைக் காத்திடத் தயாரானார். ஈஸ்வரனும் தயார்நிலையில் இருந்தார். ஆனால், அம்மனிதன் 'அம்மா' என்றும் கூறவில்லை, 'அப்பா' என்றும் சொல்லவில்லை. “ஐயோ!” எனக் கதறினான்.
ஈஸ்வரனும், தாயார்
பார்வதியும் அவனைக் காத்திடத் தயாராக இருந்தபோதிலும், அவன் அவர்களைக் கூப்பிடவில்லை.
இந்தக் கதையானது,
நாம் நமது
பெற்றோரை எப்பொழுதும், எங்கிருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் தள்ளப்பட்டாலும்,
நினைவில் கொள்ளவேண்டும்
என்பதையே ஞாபக மூட்டுகிறது. பெற்றோர்கள்
நம்மைப் பாதுகாத்து, வழிநடத்திச் செல்லும் வாழும் தெய்வங்களாவர்.
உபநிஷதங்கள் “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ” (உனது தாய், தந்தை, ஆசான் மற்றும் விருந்தினரைத் தெய்வமாகக் கருது) என்று அறைகூவுகின்றன.
🌻நீ பெரிய படிப்பு
படித்தவனாக இருக்கலாம். இந்த உலகில் உள்ள அனைத்துத் துறைகளிலும் அறிவு பெற்றவனாக இருக்கலாம்.
ஆனாலும் உனது தாய்க்கு நீ குழந்தையே. உனது தாயாரின் ஆசீர்வாதங்கள் எப்பொழுதும்
உன்னுடன் இருக்கும். அத்தகு தாயைப் புறக்கணிக்கும் மகனுடைய வாழ்வு மதிப்பற்றதாகவே
இருக்கும். 🌻
17-02-2007 சிவராத்திரி
அன்று பகவானின் தெய்வீக அருளுரை.
நன்றி: ‘சனாதன சாரதி’ – ஜூன் 2007
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக