தலைப்பு

சனி, 5 ஜூன், 2021

ஸ்ரீ சத்ய சாயி ஏன் எந்த செய்தி ஊடகத்திற்கும் பேட்டி அளிக்கவில்லை??


கேள்வி: உங்கள் சத்யசாயி இதுவரை எந்த செய்தி ஊடகத்திற்காவது பேட்டி அளித்திருக்கிறாரா? அதில் ஏன் ஒன்று கூட ஒளிபரப்பப்படவில்லை?

பதில்: அதனாலும் தான் அவர் இறைவன்...அவதாரம்!! 
விளம்பர சாமியார் அல்ல... 
ஸ்ரீ சத்ய சாயியின் அவதார நோக்கமே தனிமனித அக மாற்றத்துக்கானது.. இதை ஆங்கிலத்தில் One to One Transformation மற்றும் Self Transformation என்கிறோம். 
தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள அவர் எந்த செயலும் செய்ததே இல்லை.. சேவைக்காக மனித வடிவெடுத்த பேரவதாரம் அவர்.

தான் ஷிர்டி சாயிபாபாவின் மறுஅவதாரம் என அவர் பிரகடனம் செய்த காலம் (1940) முதல் அவரின் நோக்கமும் பாதையும் மனிதகுல சேவைக்காகவே நிகழ்ந்தது.. இப்போது அதுவே இம்மி அளவிலும் பிசகாமல் அவ்வாறே தொடர்கிறது... 


இதுவரை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட அவரின் ஒரு நேர்காணல் கூட வந்ததே இல்லை.. பிறகெப்படி உலகளாவிய இத்தனை பக்தர்கள்? என நீங்கள் நினைக்கலாம்.
இவர்கள் அனைவரும் தங்களுடைய தனிப்பட்ட அனுபவத்தால் பக்தர்கள் ஆனவர்கள்.. பிறர் கேட்க தங்கள் அனுபவத்தை பகிர்ந்ததன் வழியாக அப்படியா என ஆச்சர்யம் அடைந்து தரிசிக்க வந்தவர்கள் பல்லாயிரம் பேர். ஸ்ரீ சத்ய சாயி இறைவனை நேரிலேயே தரிசிக்காமல் வெறும் அவர் புகைப்படம் வைத்தே வழிபட்டு நலம் பெற்றவர்கள்.... வளம் பெற்றவர்கள்.. பலம் பெற்றவர்கள் ஆண்டுகள் செல்லச் செல்ல சுவாமி இவ்வளவு கருணை புரிகிறாரே இவரை ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் வந்து தரிசித்து ஆனந்தம் அடைந்தவர்கள் இன்னும் பலபேர். 



சுவாமி எந்த நொடியிலும் என்னைப் பற்றி விளம்பரப்படுத்து என ஒருவரிடம் கூட சொன்னதில்லை... அவரின் ஒன்றே ஒன்று தான் உலகம் அனைத்தையும் இழுத்தது.. அது அவரின் தன்னலமில்லா தூய்மையான பேரன்பு மட்டுமே...
அந்த பேரன்பின்.. பெருங்காவலின் வெளிப்பாடே சுவாமி செய்த சிருஷ்டிகள்... 
ஒரு தாய் மகனுக்கு அளிக்கும் பரிசுகள் போல் அவர் அளித்தது.. தாய் மகனுக்கு அளிப்பது பெருமைக்காகவா? விளம்பரத்திற்காகவா? இல்லையே...
ஒரு கோடித் தாயன்மையின் ஒட்டுமொத்த பேரன்பு சுவாமியிடம் மட்டுமே இருக்கிறது... தாய் கூட சிலசமயங்களில் குழந்தைகளை மன்னிப்பாளா? தெரியவில்லை.. அவரின் மன்னிக்கும் குணத்திற்கு முன் இந்த பூகம்ப பூமிக்குக் கூட அத்தனை பொறுமை இருப்பதில்லை..
இதை விளக்குவதற்கு காரணம்.. இவை எல்லாம் சுவாமியின் கல்யாண குணங்கள் (ஓம் ஸ்ரீ சாயி கல்யாண குணாய நமக).. அந்த இறை குணங்களாலேயே உலகம் அனைத்தையும் அவர் தன் காலடியில் விழச் செய்தார்.


இன்றைய காலத்து நவீன சாமியார்கள்
போல் எந்த ஒரு விளம்பர நோக்கம் வாய்ந்த செயலிலும் இறைவன் சத்ய சாயி ஈடுபட்டதே இல்லை. அது அவருக்கு அவசியமும் இல்லை...
அவர் பிழிந்து அளித்த ஞான ரசம் போல் எளிமையாக எவரும் இதுவரை அளித்தது கூட இல்லை...

எத்தனையோ ஊடகத்துறையினர் / ஊடக நிர்வாகிகள் சுவாமியை தரிசிக்க வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சுவாமி தனது பேரன்பையும்... கருணையையும் பொழிந்திருக்கிறார். அவர்கள் எல்லாம் பூர்ண புண்ணியத்தால் இழுத்து வரப்பட்டவர்கள். 
காந்தம் தூய இரும்பைத் தான் கவரும்... துருப்பிடித்த இரும்பைக் கவருமா?
அப்பேர்ப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட நேர்காணல் வழங்கி இருக்கிறார். நேர்காணல் அறை என்றே சுவாமி அதில் பல லட்சம் பேரோடு பேசியிருக்கிறார்.
அவை எல்லாம் அவரவர்களுக்கான தனிப்பட்ட பேரனுபவங்கள் மட்டுமே...
அவற்றை எல்லாம் ஒளிபரப்பி தன்னை விளம்பரப்படுத்த வேண்டும் என ஒரு நொடி கூட அவர் நினைத்ததில்லை.


அனுபவம் பெற்ற உலகத்தவர் தங்களது அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அனுபவம் என்பதைப் பெற்றவுடன் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள உள்ளம் துடிக்கும்.. அப்படி சிறகு முளைத்துப் பறந்த சுவாமி அனுபவங்கள் / சுவாமி லீலைகள் தான் கடல் கடந்து பயணித்தன... அப்படியே சுவாமியை பற்றி உலகம் உணர்ந்து கொண்டன...


நீங்கள் யாரை வழிபட்டாலும் என்னிடமே வந்து சேர்கின்றன என சத்தியம் சொல்லும் சுவாமியே பரப்பிரம்மம் என்பதால் தான் அவரின் காலடியில் உலகமே விழுந்து கிடக்கிறது.
ராமர் வாழ்ந்தது தெரியாது
கிருஷ்ணர் வாழ்ந்தது தெரியாது
ஒரு அவதாரம் இப்படித்தான் வாழும் என்பதற்கு நமக்கான உதாரணம்.. சான்று.. இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே!!
அதனால் தான் அவர் பெயர் / புகழுக்காக எதையும் செய்யவில்லை...
அன்புக்காகவே அன்பை வழங்கும் அறம் போல் சேவைக்காகவே .. நம்மையும் மனிதகுல சேவையாற்ற வைக்கவே 
எழுந்த இந்தக் கலியுகத்தின் ஒப்புயர்வற்ற அவதாரம் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி!!

பிரபஞ்சமே சுவாமி இயக்கும் ஒரு மாபெரும் தொலைக்காட்சி தான்...
நமக்குள் எழும் ஞானமே நமக்கு அவர் நிகழ்த்திவரும் நித்திய நேர்காணல் தான்.

பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக