தலைப்பு

சனி, 12 ஜூன், 2021

பிரசாந்தி நிலையம் நமது அன்னை இல்லம் (பிரசாந்தி சேவைக்கு ஒரு புது விளக்கம்)


நம் அகங்காரத்தை அகற்றி, கர்ம வினைகளை களைய , பகவான் நமக்கு அளிக்கும் சந்தர்ப்பமே பர்த்தி சேவா. சேவை செய்யும் நாட்களில் பாபா தரிசனமும் பெறும் கூடுதல் பாக்கியமும் நமக்கு கிட்டுவதால், நமது வாழ்க்கை என்னும் பாஸ்புத்தகத்தில், புண்ணியம் என்கிற வரவு , எவ்வித முயற்சியுமின்றி வைக்கப்படுகிறது. பிரசாந்தி சேவா குறித்த உண்மையான விளக்கம், அதை மேற்கொள்ளும்போது இருக்கவேண்டிய மனோபாவம், பற்றி ஒரு சேவாதள தொண்டரின் அபூர்வ விளக்கத்தை இனி காண்போம்.... 


🌹அன்னையின் வீட்டை பராமரிப்பது கடமை- சேவையல்ல:

எனக்கு பிரசாந்தி நிலையம் தாய்வீடு. இங்கு நான் மேற்கொள்ளும் சேவை பிறர் பாராட்டுதலுக்காகவோ, வெகுமதிக்காகவோ அல்ல.இன்னும் சொல்லப் போனால் பாபாவின் பாராட்டதலுக்காக கூட அல்ல. பாபா என்ற அன்னையின் அழைப்பின் பேரில், பிரசாந்தி நிலையம் என்கிற சொந்த வீட்டிற்கு செல்லும் நான், அங்கு சில பணிகளைச் செய்தால் அதன் பெயர் சேவையா? அல்லது கடமையா?

1985 ம் ஆண்டு, என்னை அழைத்த பாபா, மகளிர் தங்கும் ஷெட்டுக்கு அருகில் இரு கழிப்பறைகள் கட்டித்தர பணித்தார். வேலை முடிந்ததும் என்னை தமது நேர்காணலுக்கு அழைத்தார். கால்நடை மருத்துவரான என் சகோதரரும் உடன் இருந்தார். அவரைப் பார்த்த பாபா "உன் சகோதரரைப் பார். அவர் கோடீஸ்வரர்"என்றார். திடுக்கிட்ட நான் மனதிற்குள் நகைப்புடன் எண்ணினேன்.


"என்னைவிட வேறொரு பிச்சைக் காரனை பார்க்க முடியுமா?" மனதில் ஓடிய எண்ணங்கள் மாதவன் அறிய மாட்டாரா? பிறகு பாபா கூறினார் "இந்த பிரசாந்தி நிலையம் அனைத்தும் உன்னுடையது. என்ன நான் சொல்வது சரிதானே.?" பாபாவின் அன்பால் நெகிழ்ந்து மனம் விம்மியபடி நான் கூறினேன். "அம்மா... நீ என்தாய். ஆகவே இந்த பிரசாந்தி நிலையம் எனதல்லவா? இதைக் கேட்ட பாபா மகிழ்ந்து "இனி இந்த வீட்டை நன்கு பராமரித்து கவனித்துக்கொள்" என்றார்.

ஸ்வாமியின் இந்த உத்தரவை சிரமேற்கொண்டு, அடுத்த ஆண்டே பிரசாந்தி நிலயத்தில் ஒரு "பராமரிப்பு சேவா கேம்ப்" நடத்தினோம். அதில் 90 சேவாதளத் தொண்டர்கள் பங்கேற்றனர். பாபா அனைவருக்கும் நேர்காணல் அளித்தார். தனித்தனியே ஒவ்வொருவரையும் நலம் விசாரித்த பின், நாங்கள் தங்குமிடம், மற்றும் உணவு பற்றியும் கேட்டறிந்தார்.இது முடிந்ததும், ஆசிரம பொறுப்பாளர் சிரஞ்சீவி ராவ் அவர்களை அழைத்தார். "நீ என் குழந்தைகளுக்கு உணவளிக்க பணம் பெற்றுக் கொள்ளலாமா, அதை உடனே அவர்களுக்கு திருப்பிக் கொடு" என்றார். அதன்படி எங்களுக்கு நாங்கள் செலவழித்த பணம், கடைசி பைசா வரை கணக்கிடப்பட்டு, திருப்பி தரப்பட்டது.


இவரது தன்னலமற்ற சேவையைக்காக ரேடியோ சாய் இவரைப் பேட்டி கண்டு, இவரது 30 ஆண்டு சேவையை பாராட்டினர். அதற்கு அவர் கூறிய பதில்:

சேவை என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. நம் வீட்டில் நாம் அன்றாடும் செய்யும் காரியங்களை சேவை என்று அழைக்கிறோமா? அதுபோல இது( பிரசாந்தி நிலையம்) எனது தாய்வீடு. இதை பராமரிப்பது எனது கடமை. பாபாவை சாயிமா" என்றழைக்கிறோம். ஆனால் அந்த அன்னையின் இல்லத்தில் நாம் மேற்கொள்ளும் பணி மிகச் சிறியது தான். ஆண்டுக்கு ஒருமுறை 15 நாட்கள் இங்கு வருகிறோம். அன்னையை தரிசிக்கிறோம், சில பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறோம். இதற்காக நம் அன்பு அன்னையாம் பாபா நமக்கு அளிக்கும் வெகுமதி அளவிடற்கு அரியது.தங்க இடம், உணவு மற்றும் நமது தேவைகள் அனைத்தும் சாயிமாதாா பார்த்து பார்த்து பரிவோடு கவனிக்கிறார். ஆகவே பாபாவை சாயிமா என்றே அழைக்கிறோம். அன்னையின் உறவு ஆண்டவனுக்கு பெரிது.

🌻 சாய்ராம்... நமக்கு அன்னையும் பாபா, ஆண்டவனும் பாபாவாக இருப்பதால் உறவு இருமடங்காக இறுகுகிறதல்லவா. இனி பர்த்திசேவைக்கு சென்றால், அது அன்னைவீட்டின் அரும்பணி என்ற நினைவோடு, சேவைப் பணியாற்றி மன வளமும், உடல் நலமும் பெற்றுத் திரும்புவோம். ஓம் ஸ்ரீ சாய்ராம். 🌻


ஆதாரம்: ரேடியோ சாய் 

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக