தலைப்பு

வியாழன், 3 ஜூன், 2021

EP 4: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! - சுகர் நாடி & புத நாடி

5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... சுகர் மற்றும் புத நாடியை  வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்....


✋ நாடிகள்:

எறும்புகள் ஓலைகளில் ஊறுவது போன்ற தமிழ் எழுத்துக்களை சுவடியில் வாசிப்பது ஆனந்தமான அனுபவம். சித்த ரிஷிகள் எழுதி வைத்தது எல்லாம் காலாகாலத்திற்கு சாஸ்வதமானது.. அதில் காலத்தின் சத்தியம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. ஸித்தி அதாவது ஆன்ம இலக்கை அடைந்ததினால் அவர்களுக்கு சித்தர்கள் என்று பெயர். ஆதி மொழி தமிழ்.. ஆதி ரிஷிகள் சித்தர்கள்.. இவர்களின் ஞானத்தைச் சுமக்கும் ஓலைச்சுவடிகளுக்கு தன்னையே தந்த பனை மரங்கள் போதிமரங்களாகவே பரிணாமம் அடைந்திருக்கின்றன என்று தான் சிலாகித்து சொல்லத் தோன்றுகிறது!


ஸ்ரீ சுகபிரம்ம மகரிஷி:


தூய்மையிலும் தூய்மையான மகரிஷி சுகபிரம்ம முனிவர். சில ரிஷிகள் கோபம் அடைவர். இவரோ சாந்த ரூபமானவர். இதயத்தில் விகல்பம் இல்லாதவர். கிளி முகமும் கொண்டவர்.. எப்போதும் நிர்விகல்ப சமாதியில் இந்தப் பூமியை மறந்து இருப்பவர். வியாச மகரிஷியின் தவப்புதல்வர். இவர் பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயி பற்றி எழுதிய நாடிகள் முக்கியமானவை .. சுவாரஸ்யமானவை இதோ...


🌹சுகர் நாடி:



அருள் ஞானத் தத்துவத்தின் ஆசை வேலே என சுவாமி பற்றிய நாடி எழுதுவதற்கு முன் முருகனை நாடி அழைக்கிறார் சுகர். அவர் சுவடி எழுத்துக்கு முருகனை சாட்சிக்கு அழைக்கிறார்!

சொல்வதற்கு சாட்சிபட கலியுக நாயகனே என சுவாமியை கலியுகத்தின் தலைவனாக அழைக்கிறார் சுகர்.

கலிவரதனே என்கிறார்..

வரதன் என்றால் வரங்களை அருள்பவன் என்று பொருள்.. கலி வரதன் என்றால் கலியுகத்தில் வரங்கள் அருள்பவன் எனப் பொருள்..

கலி விலக வந்தவனே என்கிறார்... கலியுகத்தின் மாயக் கொடுமைகளை சுவாமியே விலக்க அவதரித்திருக்கிறார் என்று ஆணித்தரமாக பதிவு செய்கிறார். 

சுவாமியை மண்ணுலகில் மாதவன் என்கிறார்... சுவாமியே கிருஷ்ணர் எனவும் இது உறுதிப்படுத்துகிறது!


🌹சிவசக்தி அம்சமான சுவாமி:

நாயகியும் நாயகனின் சரீரத்தில் மார்பகம் சேர என்று நாயகியான சக்தி நாயகனான சிவாம்சத்தின் சேர்க்கை நிலையைப் பதிவு செய்து சுவாமியை சிவசக்தி அம்சம் என்கிறார்.


தேகம் தன்னில் எண்வான் பஞ்சம் காலமதில் என...

சுவாமியின் தேகத்தில் ஆகாய கோஷம் நிறைந்திருப்பதாக விவரித்து .. பஞ்சம் என்பது பஞ்சபூதத்தை குறிக்கிறது..

சுவாமியின் தேகமானது ஆகாயம்.. பஞ்சபூதம் மற்றும் காலம் என மூன்றாகப் பிரித்து சுவாமியின் இறைப்போராற்றலை ஒரே வரியில் அடக்கி விடுகிறார் சுகப்பிரம்ம மகரிஷி.

(சுகர் நாடி பார்க்கப்பட்ட இடம் : வைத்தீஸ்வரன் கோவில்... பார்க்கப்பட்ட நாள் : 25.05.2011)

இப்படி சுகர் நாடியில் கிடைக்கப்பட்ட சுவாரஸ்ய ஆதாரங்கள் சுகம் தருபவை..

இந்தக் கலியின் இறை அவதாரம் சுவாமியே எனும் ஆதாரத் தவ வரிகள் இவை.. இனிப்பான பொருள் பொதிந்த பூரண வரிகள்.. சுகர் இனிப்பாக இல்லாமல் எப்படிப் பதிவு செய்வார்!! 


🌹புத நாடி:


புத பகவான் பதிவு செய்த நாடியில்..

"சுவாமி எப்போதுமே ஆனந்தத்தில் ஆழ்ந்திருப்பார்" என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

(ஆதாரம் : தபோவனம் -- பக்கம் - 121)


🌹ஓம் ஸ்ரீ சாயி ஆனந்தாய நமக:

ஓம் ஸ்ரீ சாயி ஆனந்ததாய நமக என்பது எத்தனை சத்தியம்.. அந்த பெருஞ்சத்தியம் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை நினைக்கையில் வியப்பே இதயத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது. புதன் கிரகம் என்பது புதுமையை வழங்கக் கூடிய கிரகம். புதுமையான சிந்தனைகள் வழங்குவது அது. புதன் ஒருவருக்கு ஜாதகத்தில் உச்சமாக இருந்தால் கலைகளில் சிறந்து விளங்குவர்.. அத்தகைய புதன் நாடி...


சூரியன் ஒளி தருகிறது எனில் .. ஏன் ?. ஏனெனில்... அது ஒளியாக இருக்கிறது.. அதைப்போல சுவாமி நமக்கு ஆனந்தம் தருகிறார் எனில்.. ஏன் ? அதற்கான விடையைத் தான் இது சுமக்கிறது...

சுவாமி ஆனந்தத்தில் ஆழ்ந்திருப்பவர் மட்டுமல்ல.. அந்த இறைப்பேரானந்தமே சுவாமி தான்...

அதில் ஆழ்ந்திருப்பதால் தான் சுவாமி ஆனந்தத்தில் நம்மை ஆழ்த்துகிறார்.. இறைவன் ஸ்ரீ சத்ய சாயியை நாம் சரணடைவதால்... தன்னில் தானே ஆழ்ந்திருக்கும் சுவாமி.. நம்மையும் அவருள் ஆழ்த்துவார். 

கைகளில் நாடித் துடிப்பது போல் மெய்களின் மெய்யான சுவாமி இறைவனே என்பதை உணர்த்திக் கொண்டே ஓலை உதடுகளால் நாடிகள் சத்தியத்தைத் துடித்துக் கொண்டே இருக்கின்றன...

நாடியின் துடிப்புகள் தொடரும்...


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக