தேர் ஓட்டிய பகவான்.. கார் ஓட்டிய விந்தை...
பாரதப் போரில் தேரை ஓட்டியதும்.. கலியுகத்தில் காரை ஓட்டுவதும்..மனித எண்ண ஓட்டத்தை கவனிப்பவரும் சாட்சாத் இறைவன் ஸ்ரீ சத்யசாயி கிருஷ்ணரே! அவரே இந்த மனித வாழ்வில் ஒரே ஓட்டுநர்.. ஒரே நடத்துனர்.. நாம் வெறும் பயணிகள் மட்டுமே என்பதை உணர்த்தும் பரவசப் பதிவு இதோ...
பகவான் பாபா எங்கே , எப்படி கார் ஓட்டினார். அவருக்கு ஓட்டுனர் உரிமம் இருந்ததா? வியப்பூட்டும் வினாக்களுக்கு விடையை நாம் பார்க்கலாம்.
🌹நம் இன்னல்களை ஓட்டும் ஸ்வாமி... கார்களையும் ஓட்டி இருக்கிறார்:
பகவான் பொதுவாகப் பயணிப்பது கார்களில்தான். காரின் பின் இருக்கையில் அவர் அமர்ந்து பல இடங்களுக்கு பயணித்திருக்கிறார்.
பிறர் மன ஓட்டங்களை துல்லியமாக அறிந்த அவர், கார்களின் இயக்கம் பற்றி அறியமாட்டாரா. ஒரு சமயம் பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்றுபோன காரை தண்ணீர் ஊற்றி ஓடவைக்க வில்லையா?. அதைவிட அதிசயமாக,மற்றொரு சமயம் பகவான் எல்லோரா குகைகளை பாரத்துவிட்டு, காரில் ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தார். பிரயாணத்தின் நடுவே பெட்ரோல் தீர்ந்துபோய் கார் நடுவழியில் நின்றுவிட்டது. பெட்ரோல் பங்க் அனைத்தும்வேலை நிறுத்தத்தால் மூடப்பட்டிருந்தன.காரை தட்டிக் கொடுத்த பாபா "ஓடு "என கட்டளையிட்டார். பெட்ரோல் இல்லாமல் கார் 150 மைல்கள் ஓடி ஹைதராபாத் வந்தடைந்தது. அந்த கார் மனிதர்களைப் போல் அல்லாமல், பூரண சரணாகதியுடன் பாபாவின் கட்டளைக்கு கட்டுப்பட்டது .
இவை எல்லாம் முந்தைய ஷீரடி அவதாரத்தில், விளக்கு எரிய எண்ணெய் தர மறுக்கப்பட்ட போது , தண்ணீர் ஊற்றி விளக்குகளை எரியவைத்த , விந்தையின் தொடர் நிகழ்வுதானே.
🌹ஸ்வாமியின் காரோட்டம்:
அந்த காலத்தில் ஸ்வாமியை தரிசிக்க பெங்களூர் மற்றும் சென்னயில் இருந்து பல பிரமுகர்கள் புட்டபர்த்திக்கு வருவதுண்டு. அதில் சிலர் தங்கள் கார்களை பாபா உபயோகிக்க புட்டபர்த்தியிலேயே விட்டுச் செல்வதுண்டு. பல சமயங்களில் பாபா தாமே கார்களை ஓட்டிக் கொண்டு பெங்களூர் சென்றதுண்டு. சேறும் சகதியும், கரடுமுரடுமான அந்நாளைய பெங்களூர் சாலையில் அதிவேகமாக பாபா கார் ஓட்டிச் செல்வார். புட்டபர்த்தி, பெங்களூர் இடையேயான 154 கிலோ மீட்டர் தூரத்தை 90 நிமிடங்களில் கடப்பார். அதுவும் 1940ம் வருட மாடல் காரில். அந்தக் காரோ மிக ஆர்வத்துடன் பெட்ரோல் குடித்து, ஒரு லிட்டருக்கு 2 அல்லது 3 கிலோமீட்டர் தூரத்தைதான் கடக்கும் திறன் கொண்டது.
ஸ்வாமி வியக்கத்தகு அதிவேகத்தில் காரை ஓட்டுவது வழக்கம். பலமுறை கார் சாலைமிலிருந்து விலகி பக்கவாட்டில் பயணிக்கும். ஆனால் ஒரு தடவைகூட சாலை விதி மீறலோ விபத்தோ நேரிட்டதில்லை. அப்போது காரில் பாபாவுடன் பயணம் செய்த சேஷகிரி ராவ் அவர்களின் நிலை பரிதாபகரமானது. கண்களை இறுக மூடிக்கொண்டு, உதடுகள் பிரார்த்தித்தபடி அவர் பயணிப்பார். காக்கும் கடவுளே கார் ஓட்டினாலும் , மாயையால் மனிதர்கள் மனம் சஞ்சலம் அடையவதை தவிர்க்க இயலவில்லை அல்லவா?
🌹தானே கார் ஓட்டி சென்று பக்தனுக்கு மரணத் தருவாயில் தரிசனம் அளித்த சுவாமி:
மற்றொரு சம்பவம். கேரள மாநில முந்தாள் கவர்னர் B. ராமகிருஷ்ண ராவ் உடல் நலம் குன்றி மரணப் படுக்கையில் இருந்தார். ஸ்வாமி அவர் உயிர் பிரியுமுன் தரிசனம் கொடுப்பதற்காக, அவசரமாக சென்னையிலிருந்து ஹைதராபாத் வரை ஒரு இரவு முழுவதும் தானே கார் ஓட்டிச் சென்றார். பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க பாபாவின் இந்த கரிசனம் , இதயத்தை நெகிழ வைக்கும் நிகழ்ச்சியன்றோ.?
🌹பாபா ஸ்டியரிங்கில் கையை எடுத்தபடி காரை ஓட்டிய சம்பவம்:
வேங்கடகிரி அரசரின் குடும்பத்தை சேர்ந்த மேதகு கோபாலகிருஷ்ண யசேந்திரா கூறிய மற்றொரு திகில் கலந்த பாபா காரோட்ட நிகழ்ச்சி....
அப்போதெல்லாம் நாங்கள் வெங்கடகிரியிலிருந்து , பர்த்திக்கு காரில் வருவதுண்டு. அப்போது ஒரு சமயம் நான் ஸ்வாமியிடம் எனக்கு கார் ஓட்ட கற்பிக்குமாறு வேண்டினேன். உடனே பாபா "சரி இப்போதே நாம் ஆரம்பிக்கலாம்" என கூறி காரின் கதவைத் திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தார். நான் அவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். பழைய மந்திரத்திலிருந்து புறப்பட்ட கார், 300 கஜங்களுக்கு அப்பால் உள்ள, அப்போது உருவாகிக் கொண்டிருந்த புதிய மந்திரத்தை நோக்கி பாய்ந்து சென்றது. புதிய மந்திரை நெருங்குவதற்கு உண்டான சாலை மலையேற்ற சாலை ஆகும். அப்போது ஸ்வாமி தன் கைகளை ஸ்டியரிங் சக்கரத்திலிருந்து எடுத்துவிட்டு, கால்மேல் கால்போட்டுக் கொண்டு சாவகாசமாக உட்கார்ந்து விட்டார்.
அச்சத்தின் உச்சத்தில் நான் உறைந்து போனேன். கார் தானாக ஓடியது. கியர்கள் தாமாக மாறின. கடைசியாக பாபா பிரேக்கை அழுத்தாமலே கார் சாதுவாக நின்றது. காரைவிட்டு இறங்கும் போது பாபா புன்முறுவல் ஒன்றை தம் முகத்தில் தவழவிட்டார். இதன்பின் நான் பாபாவிடம் கார் சவாரி பற்றி ஒருபோதும் கேட்டதில்லை.
ஸ்வாமியிடம் ஓட்டுனர் உரிமம் இருந்ததா? ஆம்.பாபாவும் பலவிதமான தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின், அவரது திறமையான ஓட்டும் பாங்கு கண்டு சென்னையில் தமது 17 வயதில் ஓட்டுனர் உரிமம் பெற்றார்.
🌻 மனித மனம் பிரேக் இல்லாதபடி சுற்றி வருகிறது.. ஸ்பீட் பிரேக்கர் இல்லாத வாழ்க்கை பயணத்தில் இறைவன் ஸ்ரீ சத்யசாயி கிருஷ்ணரே தன் கண் அசைவில் நம்மை நேர்வழி நடத்த நிறுத்தி.. கர்ம விபத்தில் ஆட்படாமல் யூ டர்ன் செய்து நம்மை ஆன்மீக வாழ்வில் திருப்புகிற போது சாதாரண காரின் பிரேக்கை கண்ணால் நிறுத்துவதும்.. ஸ்டியரிங் பிடிக்காமல் சுவாமி கார் ஓட்டுவதொன்றும் சாகசம் அல்ல...
நம் வாழ்க்கையையே அவரின் சங்கல்பம் தான் உலகப் பாதையில் ஒட்டியும் ஒட்டாமலும் ஓட்டிக் கொண்டு போகிறது..
ஒவ்வொரு பக்தர் வாழ்க்கையும் சத்ய சாயி எனும் சம்பூரணத்தை நோக்கி அந்த சத்யசாயி பரம்பொருளே இயக்கி வழிநடத்தும் பயணமே! 🌻
ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கியவர்: பாம்பே சீனிவாசன்
தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.
தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக