தலைப்பு

செவ்வாய், 22 ஜூன், 2021

350 பேருக்கு சமைத்த கல்யாண விருந்து சுவாமியால் 2100 பேருக்கு பரிமாறப்பட்டது!

சுவாமி ஸ்ரீ சத்ய சாயி அன்னபூரணிக்கே படி அளப்பவர். அவரால் இயலாத செயல் ஏதும் இல்லை. சுவாமி ஒரு வார்த்தை சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கடைபிடிக்க வேண்டும் என்ற போதனையோடு பரிமாறப் பரிமாற வளர்ந்து கொண்டே வந்த கல்யாண விருந்தும் இங்கே ஞான சுவையோடு பரிமாறப்பட்டிருக்கிறது.... 

திருச்சியில் இருந்த திரு. சிதம்பர கிருஷ்ணன் தீவிர சாயி பக்தராக ஆன பிறகு, அவரது திருமணமும் புட்டபர்த்தியிலேயே நடத்த சுவாமி முடிவு செய்தார். சுரையா, சிதம்பர கிருஷ்ணன் இருவரையும் அழைத்து திருமணத்திற்கு வரக்கூடிய நபர்களின்  எண்ணிக்கையை பற்றி விசாரித்தார் ஸ்வாமி! சிதம்பராவோ 350 நண்பர்கள் வரக்கூடும் என கூற,  சுவாமியோ 1500 நபர்களுக்கு சாப்பாடு தயார் செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னார். திருமணத்திற்கு இன்னும் நாட்கள் இருந்தன!  சுரையாவோ, வெளியே வந்து “அவ்வளவு பேர் வரமாட்டார்கள் 350 பேருக்கு மட்டும் ஏற்பாடு செய்வோம்” என்றார்.

மனிதர்கள் எப்போதுமே வேறு ஒரு தவறான புரிதலோடு சுவாமி வார்த்தையை சட்டை செய்யாமல் நடக்கிற போது அவர்களுக்கு தகுந்தபடியான உணர்தலும்.. தெளிவும் சுவாமியே ஞானமாய் அளிக்கிறார். அப்படி இருக்க சிதம்பராவிற்கு சுவாமியின் கட்டளையை மீற முடியாதே எனத் தோன்றியது. சுவாமியின் சொல் என்பது சாசனம்.. அது நிகழும்.. அது மட்டுமே நிகழும்.. இதை அனுபவம் வர வர பக்குவமான இதயம் உணர்ந்து கொள்கிறது...   

நடுவில் மீண்டும் ஒரு முறை ஏப்ரல் 14 வருட பிறப்பை முன்னிட்டு ஸ்வாமியிடம் வந்தார் சிதம்பரா! 28ஆம் தேதி ஏப்ரல் அன்று கல்யாண கோஷ்டியுடன் வந்தால் போதும். ஆனால் 1500 முதல் 1800 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார் சுவாமி! மேலும் சிதம்பராவின் உறவினர் கைலாசத்தை இரண்டு நாட்கள் முன்பாக காருடன் அனுப்பி வைக்குமாறு கூறினார். அந்த நாட்களில் திருமணங்களுக்கு காய்கறி வாங்குவது பெரிய வேலையாக பக்கத்து ஊர்களுக்குச் சென்று தான் வரவேண்டும்.           

  

மீண்டும் ஒருமுறை சுவாமி ஒன்றை இதயத்தில் பதிய வைக்க வலியுறுத்திச் சொல்கிறார் எனில் அதில் ஆழமான அர்த்தம் இருக்கவே செய்கிறது. ஆனால் மனிதர் தாம் உணர்ந்து கொள்வதில்லை. 

இவ்வளவு தூரம் சொல்லியும் திருமண நாளன்று சுரையா 350 பேருக்கு மட்டுமே உணவு தயார் செய்திருந்தார். அக்கம்பக்கத்தினர் எல்லாம் சாப்பிட வர மாட்டார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டார். எப்பேர்ப்பட்ட தவறான அபிப்ராயம். மனிதர்கள் இவ்வாறே கற்பனை செய்கிறார்கள். தாங்கள் நினைப்பதே சரி என நினைக்கிறார்கள். சுவாமியின் சொல் மனிதர்களின் கற்பனைக்கு மாறாக இருக்கும் போது சுவாமியின் சத்தியச் சொல்லையே ஏற்க மறுக்கிறார்கள். இது அறியாமையே அன்றி வேறேதுமில்லை. சுரையாவோ அவ்வாறு நினைக்க நடந்து கொண்டிருந்ததோ சுவாமி சொன்னது போலவே அமைந்திருந்தது. ஏழைமக்கள், நிறைய கார்கள் வருவதைப் பார்த்து, தாங்கள் பகைமையை மறந்து விருந்துக்கு வந்துவிட்டனர் என ஆச்சர்யமும்.. சுவாமியின் வாக்கில் பொதிந்த சத்தியமும் சமையல் வாசனையோடு சத்திய வாசனையும் வீச ஆரம்பித்தது!

சமையலறையை பார்வையிட்ட ஸ்வாமி கோபமுற்றார். இது கைலாஸத்தின் தவறு என பிறர் நினைத்தனர். ஆனால் உண்மையை உணர்ந்த சுரையா பக்கத்தில் பயத்தில் நடு நடுங்கிவிட்டார். ஜனங்கள்  உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்!  ஸ்வாமி “பரிமாறுங்கள்! அவர்களை காக்க வைக்க முடியாது!”  என்றார். வெளியாட்கள் 1,800 பேர். மற்றும் கல்யாணம் கோஷ்டி 350 பேர் என 2100 பேருக்கு மேல் உணவு கொடுக்க சுவாமியின் "பரிமாறுங்கள்" எனும் அந்த வார்த்தையால் மட்டுமே அத்தனைப் பேருக்கும் அந்த கல்யாண விருந்தை பரிமாற முடிந்தது! 

 சமையற்காரர்கள், பரிமாறியவர், ஏற்பாடு செய்தவர்கள் - இவர்கள் நம்பமுடியாமல் ஸ்வாமியின் அன்பின் சக்தியை கண்டு வியந்தனர்!

ஆதாரம்: Sai Mahimas by, Chidhambara Krishnan P53-55.

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர்


🌻 சுவாமி ஒன்று சொல்கிறார் எனில் அதை அப்படியே கடைபிடிக்க வேண்டும். ஏசுநாதர் உணவை பலவாக படைத்தது அவரின் பரமபிதாவான ஸ்ரீ சத்ய சாயியின் அருளால் மட்டுமே. அதை ஏசுநாதர் ஆகாயத்தை நோக்கி காட்டியே பெருக்கினார். எங்கும் நிறைந்திருக்கும் ஆகாய இறைவனான ஸ்ரீ சத்ய சாயியால் இயலாதது ஏதுமில்லை. எல்லாவற்றையும் விட சுவாமியின் கருணைக்கு அளவே இல்லை என்பதைத் தான் அளவில்லாமல் உருவான கல்யாண விருந்து நமக்கு எடுத்துரைக்கிறது. அதில் அறுசுவை மட்டுமல்ல.. சுவாமியின் கருணை எனும் ஏழாவது சுவையும் இருக்கவே செய்கிறது!!  🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக