தலைப்பு

ஞாயிறு, 6 ஜூன், 2021

ஷிர்டி சாயியும் நானே.. சத்ய சாயியும் நானே!


சாயியின் தோற்றமே இரண்டாக இருக்கிறது. பேரருள் ஒன்று தான். கண்கள் இரண்டாக இருப்பதனால் காட்சி இரண்டாக இருப்பதில்லையே..
இரு சாயியும் ஒரே சாயி தான்.. என்பதை ஆழமாய்ப் புரிய வைக்கிறார் ஒரு பரவச அனுபவத்தில் இறைவன் சத்ய சாயி இதோ... 

தம்மிராஜு, மஞ்சி ராஜு உரவ கொண்டாவில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஸத்யா இந்த பள்ளியில் தான் படித்தார். பாபா இறைவன் அவதாரம் என்பதை அறிந்தவர்கள். இவர் தனது மனைவியுடன், தெலுங்கு பண்டிதரான சேஷமராஜு வீட்டுக்கு அடிக்கடி சென்று பாபாவை தரிசிப்பது வழக்கம். ஒரு நாள் அவரது மனைவி பாபாவின் மலரடியில் வீழ்ந்து வணங்கிய போது “நீ எதைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம்... உனது சுமைகளை நான் சுமப்பேன், மகிழ்ச்சியாக இரு” என்று கூறி மஞ்சள் அரிசியை ஸ்ருஷ்டித்து அவர் அணிந்திருந்த கப்னியில் கட்டி பூஜையில் வைக்குமாறு கூறினார். ஒரு நாள் அவரது மனைவி தண்ணீர் கொண்டுவர கிணற்றுக்குச் செல்லும் சமயம், தனது ஐந்து வயது மகனை தனியாக விட்டுச் செல்ல அஞ்சி அக்கம் பக்கம் உள்ள சிறுவர் சிறுமியரை அழைத்து அவர்களிடம் சிறிது சர்க்கரையை கொடுத்து “எல்லோரும் ஸாயி பஜனை செய்து இதை பிரஸாதமாக சாப்பிடுங்கள். நான் விரைவில் வந்து விடுகிறேன்” என்று கூறிச் சென்றாள். குழந்தைகளும் பூஜை அறையில் சென்று, தங்களுக்கு தெரிந்த பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர்.


அப்போது அவர்களுக்கு முன்னால் ஷிர்டிபாபா அமர்ந்திருப்பதைக்கண்டு, அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். பாபா அந்த பிரஸாதத்தில் தாமும் கொஞ்சம் எடுத்துக் கொண்டு, குழந்தைகள் எல்லோருக்கும் அளித்தார். தன் தாய் இந்த வயதான மனிதரைக் கண்டால் மிகுந்த சந்தோஷம் அடைவாள் என்று நினைத்த மகன் ஓடிப்போய் தாயாரை அழைத்து வந்து பார்த்தால் அவர் அங்கு இல்லை. அவர் எங்கே போயிருப்பார்? என்று வியந்தபோது ஷிர்டிபாபாவின் படத்தைக் காட்டி “இதற்குள் சென்று விட்டார்” என்று குழந்தைகள் கூறினார்கள். 


சில நாட்கள் கழித்து தம்மிராஜு தனது குடும்பத்துடன் புட்டபர்த்திக்கு சென்றபோது பாபா “நீ வந்தபோது நான் அங்கு இல்லாமல் புட்டபர்த்திக்கு வந்துவிட்டது உனக்கு வருத்தம் அல்லவா? நான் அங்கும் இருப்பேன். இங்கும் இருப்பேன். இரண்டு உருவமும் என்னுடையவையே” என்றார். கள்ளம் கபடமற்ற குழந்தைகள் தூயமனதுடன் செய்த பஜனை! அவர்கள் இதயங்களில் வசிப்பவனை அவர்கள் முன்னே தோன்றச் செய்தது!

🌻 கள்ளம் கபடமற்ற குழந்தைகள் போல் இருந்தால் மட்டுமே இறைவன் சத்ய சாயி அகத்தில் குடி இருப்பார். பஜனைகள் பாடும் போதும்.. ஆன்மீக சாதனை புரியும் போதும் அகத்திலிருந்து வெளியே தோன்றி காட்சியும் அளிப்பார் என்பது இந்தப் பேரனுபவத்தின் மூலம் சர்வ சாத்தியமாகிறது. 🌻



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக