தலைப்பு

சனி, 12 ஜூன், 2021

கொரோனா எனும் அசுரப் பந்தை சிக்ஸர் அடித்தபடி சேவையாற்றிடும் சாயி பக்தர்!


கொரோனா தொற்று இந்தியாவில் பரவுவதற்கு முன்பே இங்கு சுவாமி சேவையை தொடங்கிய ஒரு கிரியா ஊக்கி இந்த சுவாமி பக்தர்.. இவர் அனுபவித்த கொரோனா காலத்து சேவை நிகழ்வின் ஆச்சர்ய அனுபவங்களை வாசிப்போம் இதோ..

பெயர் சாயி ஸ்ரீதர். கீழ்கட்டளை சமிதியின் கன்வினர். மத்திய அரசு அதிகாரி ஆயினும் இம்மி அளவிற்கும் செயல் கர்வம் இல்லாதவர். 1981 ல் இருந்தே சாயி பக்தராக இருப்பவர். செய்தி தாள் போடும் தொழிலில் (பேப்பர் பாய்) ஆரம்பித்த இவர் வாழ்க்கை சுவாமி சங்கல்பத்தால் இன்று உயர்ந்திருக்கிறது. நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் என்று கண்ணதாசன் இவரை மனதில் வைத்தே பாடல் எழுதி இருக்க வேண்டும்.5 Feb.1990ல் வேலூர் செட்டியார் சாயி பக்தர் ஜெயராமன் அவர்களின் வீட்டில் சுவாமிக்கான பைலட் சேவை ஆற்றிய போது சுவாமிக்கு உணவு பரிமாறக்கூடிய பெரும்பாக்கியம் பெற்றவர் இவர்.


March 23 2020 ல் இருந்தே இவரது கொரோனா கால சேவைக்கான முதல் விதை சுவாமி சங்கல்பத்தால் விதைக்கப்படுகிறது. இவரின் சீன நண்பர் மூலமாக கொரோனா தொற்றின் விபரமும்.. அங்கே நிகழும் கொடுமையைக் கேட்டறிகிறார். அறிந்தவர் இந்தியாவில் கூட பரவும் வாய்ப்புள்ளதை உணர்ந்து அந்நொடியே சேவைக்கான அஸ்திவாரம் அமைக்கிறார். சமூக இடைவெளியை சமூகம் சொல்வதற்கு முன்பே ஆன்லைன் வகுப்புகளை பாலவிகாஸ் குழந்தைகளுக்கு ஆரம்பித்து .. ஆன்லைன் பஜன் வழி ஆன்மீக நெறியை முன்னெடுக்கிறார். இவை எல்லாம் சேவா நிறுவனம் தந்த ஊக்கம் என்கிறார். அதில் சந்தேகமே இல்லை. இவர் சாயி பக்தராக ஆனதற்கு காரணமே "சத்ய சாயி சேவா நிறுவனம்" என்பதில் இடம் பெற்ற சேவா என்ற திருச்சொல்லால் ஈர்த்து சுவாமியின் பாதத்தில் விழுந்தவர். அன்றிலிருந்து சாயி சேவகராய் எழுகிறார்.


அப்போது கொரோனா தனது இடது காலை பையப் பைய திருட்டுத் தனமாய் தமிழ்நாட்டில் அடி எடுத்து வைத்த ஆரம்ப காலகட்டம். 

கீழ்க்கட்டளையில் ஒரு குடும்பத்திற்கே கொரோனா தொற்று ஏற்பட கூடவே பயத் தொற்றும் ஏற்பட... இவரிடம் செய்தி சென்று சேர்ந்த அடுத்த நொடி.. அங்கே இருக்கும் தெரிந்த நண்பர் மூலமாக அந்த குடும்பத்திற்கே உதவிக் கரம் நீட்டுகிறார். சத்தான உணவு.. சுவையான பழம் வீட்டிற்கும்.. தீவிர பாதிப்பு ஏற்பட்ட அந்தக் குடும்பத்தில் ஒரு பெண்மணிக்கு (Mrs.Manohar) மருத்துவமனையிலும் அளிக்க ஆவன செய்கிறார். இவை எல்லாம் 2020 ஆரம்ப நாட்களிலேயே...


கொரோனா முளைத்து மூன்று இலை விடுவதற்கு முன்பே அதைக் கிள்ளி எறிய தனது விரலை நீட்டிய சுவாமியின் ஆத்மார்த்த பக்தர் சாயி ஸ்ரீதர். சென்னைப்பகுதி.. மற்றும் அதன் புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி..  மற்றும் இதர மாவட்டங்களான மதுரை, சேலம், திருச்சி.. சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் போன்றவற்றுக்கும் கொரோனா காலத்து அவசர சேவையை மேற்கொள்கிறார். மேலும் ஆக்ஸிஜன் வசதியோடு கூடிய படுக்கை வசதிகளை பல மருத்துவமனைகளில் கிடைக்க வழிவகைகளையும் அவசர தேவையை கருதி சிரத்தையாய் சிறப்பாய் மேற்கொண்டிருக்கிறார்.

Western toilet commode மாற்றாக  உபகரணங்களை வாங்கியும் நோயாளிகளுக்கு வழங்கி இருக்கிறார்.

இவரின் முதல் கட்ட சேவை சத்தான உணவு / பழங்களை வழங்க ஆங்காங்கே வசிக்கும் நண்பர்கள்/ சாயி பக்தர்கள் வழியாக சேவையாற்ற வைப்பது.. அதிலும் சேவா தளத் தொண்டர்கள் .. சாயி இளைஞர்கள் இணைந்து .. தாங்களே முன் வந்து உணவு பகிரும் சேவையாற்றியது பெரும் பங்கு வகிக்கிறது.

இரண்டாவது சேவை வழங்குபவர்களுக்கு பாதுகாப்பு அரண் அமைத்து தருதல் (முகக் கவசம்..போன்றவை)

மூன்றாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங்.. தினந்தோறும் அவர்களிடம் தொலைபேசியில் உரையாடி அவர்களின் தனிமையைப் போக்குவது.. 


அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய ஆவன செய்வது.. இதற்கு முக்கியமான காரணம் திரவப் பேரன்பான (liquid love)  இரத்த தானம் வழியாக இவருக்கு கிடைத்த அன்பர்கள்.. அறிமுகமான மருத்துவமனைகள். 60 முறைக்கும் மேலாக ரத்த தானம் வழங்கியிருக்கிறார். இவற்றையும் கடந்து அனைவரும் பயந்து வீட்டில் முடங்கும் இந்தக் காலக்கட்டத்தில் மிகுந்த பாதுகாப்போடு வீட்டிலேயே அழைத்துச் சென்று கொண்டு வந்து சேர்க்கும் சிறப்பு சேலையோடு இதுவரை 500 க்கும் மேற்பட்டவர்களை ஊக்குவித்தி ரத்ததானம் வழங்க வைத்திருக்கிறார். எப்பேர்ப்பட்ட விஷயம். 

சேவை செய்வது புண்ணியம்.

சேவை செய்ய ஊக்குவிப்பது மகா புண்ணியம். மகா புண்ணியவான் ஸ்ரீதர்.

மே 2 - 2021 வரை இந்த உணவு பிரசாதங்களை எல்லாம் சாயி அன்ன பிரசாதம் என்ற பெயரிலேயே வழங்கிக் கொண்டு வந்திருக்கின்றனர். ஒரு வருடம் கடந்த பிறகு மே 3 - 2021 ல் இருந்து ஸ்ரீ சத்ய சாயி அமுதம் என்ற பெயரில் சுவாமி நிறுவனம் தமிழகம் முழுவதும் நீள் சேவையாக மிகச் சிறப்பாக  ஆற்றி வருகிறது.

இவர்கள் சில அடுக்ககங்களில் உணவு கொண்டு செல்வதைப் பார்த்து எங்கிருந்தோ வருகிறீர்களே.. நாங்கள் இங்கேயே இருக்கிறோம்.. நாங்களே தொற்று பாதித்தவர்களுக்கு உணவு வழங்குகிறோம்...எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என சிலர் முன்வந்திருக்கிறார்கள்.

இப்படி கொரோனா தொற்றும் பயத் தொற்றும் இருக்கும் இதயங்களை சேவா தொற்றாக மாற்றிக் காட்டியிருக்கிறது சுவாமி சேவை. இதில் சுவாமி பக்தர் அல்லாதவர்களும் உணவு பொட்டலம் வழங்கி சேவை ஆற்றி இருக்கிறார்கள். 


பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சுவாமி பிரசாதம் உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை என்ற அளவிலும்.. மகிமை வாய்ந்த படி  சுவாமியின் ஸ்தூல இருப்பையும் உணர்ந்திருக்கிறார்கள். சுவாமியின் கருணையை நினைத்து மெய் சிலிர்த்துப் போயிருக்கிறார்கள். இந்த மெய் சிலிர்ப்பில் எல்லா மதங்களுமே அடங்கி இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களில் இந்து அல்லாதவர்களும் சுவாமி விபூதி பிரசாதங்களை ஏற்றிருக்கிறார்கள்.

உணவோடு சேர்த்து பாலவிகாஸ் குழந்தைகள் தன் கைப்பட வரைந்த Get well soon card டுகளும் புதுத் தெம்பை பாதித்தவர்களுக்கு வழங்கி இருக்கிறது.


மூன்று நாள் உணவே இறங்காதவர்கள் சுவாமி பிரசாதம் வந்ததிலிருந்து நன்றாக சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் 100 சதவிகிதம் பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

பாதித்தவர்கள் குணமானவர்களாய் மாறி அவர்களும் இந்த சேவையாற்றுகிறார்கள். இது தான் சுவாமி சேவையின் மகிமை. சேவையின் ருசி உணர்ந்து விட்டால் சுவாமி சேவை ஒருவருடைய வாழ்வில் கடைசி வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒருமுறை புதுச்சேரியில் ஒரு முதிய பெண்மணிக்கு கொரோனா தொற்று ஏற்பட மருத்துவப்படுக்கைகளே கிடைக்காத சூழ்நிலையில் ஸ்ரீதர் அவர்கள் இரவு 10 மணி முதல் 1 வரை பலரோடு பேசி அவர்களுக்கு அனைத்தும் கிடைக்க வழிவகை செய்து .. சத்தான உணவு வழங்க வைத்து.. தெம்பாக நடந்து வீட்டிற்குப் போகும் வரை இவரின் சேவை அஸ்திவாரமாக இருந்திருக்கிறது. இப்படி சாயி ஸ்ரீதர் அவர்களுக்கு ஏராளமான அனுபவங்கள். சுவாமி எவ்வாறு ஒருவரை கருவியாகப் பயன்படுத்தி செயல்பட வைக்கிறார் என்பதை அணு அணுவாக உணர முடிகிறது. ஆன்லைன் பஜனிலும் பங்கேற்காதவர்களை பங்குபெற வைத்ததில் அவர்களுக்கும் பஜன் ருசி ஏற்பட்டிருக்கிறது. 

கீழ்க்கட்டளை பகுதியில் 80 வயதுக்கும் அதிகமானவர்களின் இல்லம் தேடியே தடுப்பூசி செலுத்த வழிவகை செய்திருக்கிறார். இப்படி Doorstep vaccination அடுக்ககங்களில் வழங்க ஆவன செய்கிறார். 


உலகத்திலேயே சேவை என்றால் முதல் ஆளாக முன்வரும் நம் தாய் வீடான சுவாமி நிறுவனம் சேவைகளுக்கான எல்லா ஆதரவையும் தருகிறது.. நிறுவனம் இல்லையேல் நானில்லை என்று கூறி நன்றிப் பெருக்கால் கண்ணீர் உகுக்கிறார். நம் சுவாமியின் சேவா நிறுவனம் போன்றவை இருப்பதால் தான் பூமிப்பந்தை கொரோனா பந்தாகவே மாறிவிடாமல் சுவாமி சங்கல்பம் பார்த்துக் கொள்கிறது.

ஆண்டவன் கட்டளையை அன்புக் கட்டளை இட்டே அறங்கள் செய்யும் இந்தக் கீழ்க்கட்டளைக்காரருக்கு ஒரு ராயல் சல்யூட்!!


  பக்தியுடன்

வைரபாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக