தலைப்பு

திங்கள், 7 ஜூன், 2021

பழம்பெரும் பக்தை செல்வி. ராணி ஜாவா அவர்களின் மெய்சிலிர்க்கும் சத்ய சாயி அனுபவங்கள்!

-பம்பாய் தர்மக்ஷேத்ராவின் 50வது ஆண்டு நிறைவுவிழாவில் செல்வி.ராணி ஜாவா அவர்களின் உரை... 

செல்வி. ராணி ஜாவா, தமது உடல் குறைபாடுகளை புறக்கணித்து, பகவான் பாபாவின் அருள் நிழலிலே இளைப்பாறி, பெறற்கரிய பேறு பெற்றவர்.  பல துறைகளில் பயின்று பட்டங்கள் பலபெற்றவர். சிறந்த தொழிலதிபராக மிளிர்ந்தவர். கல்லூரி முதல்வராக பதவி வகித்தவர். அதற்கும் மேலாக பகவானின் பரிபூரண பக்தை... 



குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றோர்களே சுமையாகக் கருதும் போது, அன்னையாம் சத்யசாயி , தமது ஷீர்டி அவதார பக்தரை இனம்கண்டு , குறை நீக்கி, உயர்வடையச் செய்த மனம் உருக்கும் கருணாரச சரித்திரம்...

எனது தந்தை ஜாவா அவர்கள் பம்பாயில் ஒரு  தொழில் அதிபர். பம்பாய் மலபார்ஹில்லில் உள்ள எங்களது வீட்டிற்கு பாபா வந்தபோது எனக்கு நான்கு வயது. நான் போலியோ மற்றும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு செயல் இழந்த ஒரு சிறுமியாக இருந்தேன்.


முதல் பார்வையிலேயே எனக்கு பாபாவை பிடித்துவிட, அவரை "பாபாகுரு" என்று அழைக்கத் துவங்கினேன். சிறிது காலம் சென்றது. எனக்கு அறுவைச் சிகிச்சை செய்து நலமாக்க என் தந்தை எண்ணினார். அதற்காக டாக்டர் ஓருவரை ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வரவழைத்தார். எனக்கு அறுவை சிகிச்சையில் உடன்பாடில்லை. பாபாகுருவை கேளாமல் நான் எந்த சிகிச்சைக்கும் தயாராகமாட்டேன் என அடம்பிடிக்கவே, என் அன்னை என்னை புட்டபர்த்திக்கு அழைத்துவந்தாள்.


(அந்நாட்களில் புட்டபர்த்தி பயணம் கடினமானதொன்று. புக்கப்பட்டினம் வரை பயணித்து அதன்பின் மாட்டுவண்டியில் புட்டபர்த்தியை அடையவேண்டும்)  பாபா எங்களை அன்புடன் வரவேற்று, அறுவைச் சிகிச்சை செய்யத் தேவையில்லை என்று உறுதியாகக் கூறினார். இந்த விஷயம் என் தகப்பனாருக்கு டெலிபோன் செய்து கூறப்பட்டதுடன், அவர் ஏற்பாடு செய்திருந்த டாக்டர் தமது தாய்நாடு திரும்பும் வரை நாங்கள் புட்டபர்த்தியிலேயே தங்கிவிட்டோம்.


பிறகு வீடு திரும்பிய எங்களை மிகுந்த கோபத்துடன் வரவேற்றார் எனது தந்தை. இதை அறிந்த பாபா கூறியதாவது. "அவளுக்கு அறுவைச் சிகிச்சை நடந்திருந்தால், வலது கை, பின் வலது கால் , இடது கை, இடதுகால் என எல்லா உறுப்பிலும் அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கும். அவள் தனது போன ஜென்மத்தில், ஷீரடி சாயியின் பரம பக்தையாக இருந்து சேவை செய்தவள். அவளைத் துன்புற விடமாட்டேன்." என் தந்தை இதைக் கேட்டு மனம் சமாதானமடைந்தார்.


🌹சித்ராவதி கரையில் கிடைத்திட்ட தெய்வீக அன்னை:

அந்நாளில் என்னை பராமரிக்க ஒரு வாத்சல்யமான பணியாளர் இருந்தார். என் நிலைகண்டு, நெஞ்சு பொறுக்காத அவர்,  ஒருநாள் சித்ராவதி கரையில்  பக்தர்கள் புடைசூழ ஸ்வாமி  அமர்ந்திருந்தபோது  என்னை அவரது காலடியில், மணலில்  தூக்கிப்போட்டார்."ஸ்வாமி இந்த நிலைமையில் இந்தக் குழந்தை உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம், இவளைக் கொன்றுவிடுங்கள் என கதறினாள். 


மணலில் வீசப்பட்ட நான் கதறி அழுத போது, ஸ்வாமி அவளைக் கண்டித்து. என்னை தமது மடியில் கிடத்தி, மணலிலிருந்து ஒரு இனிப்பு ஸ்ருஷ்டித்து அளித்தார். ஆயிரம் தாயின் அன்புக்கு சமமான பாபா எனக்கும்  அன்றே தாயுமானார். அதுமட்டுமல்ல, எனக்கு தமது கையாலே உணவளித்து, என் கை கால்களை மசாஜ் செய்து, "நட நட கீழே விழுந்தாலும் பரவாயில்லை" என அபயமளித்து என்னை தேற்றினார். பர்த்தியில்,  பாபாவின் அருளால், பூரணமாக குணமடைந்து நடக்க ஆரம்பித்தேன். 

என் தாயின் வற்புறுத்தலால், என் தந்தை புட்டபர்த்தி வந்து ஸ்வாமிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். கோட் சூட்டுடன், கையில் சுருட்டுக் குழல் புகைத்துக் கொண்டு, ஸ்வாமியை நம்பாத என் தந்தை, பிறகு தலைகீழாக மாறி பகவானின் தாசானுதாசன் ஆனார். அவர் பாபாவின் பம்பாய் பிரயாணங்கள் அனைத்தையும் முன்நின்று நடத்தினார். தர்மக்ஷேத்ரா பம்பாயில் உருவாகும் போது, அதன் ஒவ்வொரு கட்டுமானப் பணிகளையும் நான் அறிவேன்.           


தற்போது அதன் 50 வது ஆண்டு நிறைவு விழாவில் உரை ஆற்றுவது என்பது  பெருமையாக உள்ளது. அந்நாட்களில் புட்டபர்த்தியில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. தற்போதைய பர்த்தி உருவாக்கத்திற்கு 9 ஆண்டுகள் பிடித்தன. ஆகவே ஸ்வாமி, அந்த கால கட்டத்தில், அனைவரையும் புட்டபர்த்தி வரவேண்டாம் என கூறியிருந்தார். ஆகவே நான் அடிக்கடி பெங்களுர் சென்று பாபாவைத் தரிசித்தேன்.என் பள்ளிப் படிப்புக்கு இடையில், வார மற்றும் தேர்வு விடுமுறைகளில் பெங்களுர் சென்றுவந்தேன். என் படிப்பு, என் நடை உடை பாவனைகள், என் நட்பு அனைத்தையும் பகவானே தீர்மானம் செய்வார். ஸ்வாமியை கடவுளாக பார்க்காமல் நண்பனாகவே பார்த்தேன். 


ஸ்வாமியின் இண்டர்வியூ வை வேண்டாமல் , இன்னர்வியூ வேண்டும் என அவரிடமே விண்ணப்பித்தேன். ஸ்வாமி ஆப்பிரிக்கா விஜயம் செய்தபோது , அன்னை ஈஸ்வராம்மா எங்கள் வீட்டில் தங்கினார்கள். பெண்கள் கல்வி கற்பது பற்றி அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக பேசினார்கள். ஸ்வாமி ஆப்பிரிக்கா விஜயம் முடித்து திரும்பியபோது, நான் சரியாகப் படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கேட்டார். இதன் பின்ணணியில்தான்  மகளிர் கல்லூரி ஒன்றை நிறுவ பாபா முடிவு செய்து என்னை அனந்தப்பூரில் இடம் பார்க்க சொன்னார். ஆனால் அங்கு ஏற்படுத்தப்பட்ட கல்லூரியில் படிக்க என்னை அனுமதிக்கவில்லை. மாதம் ஒருமுறை அவரைப் பார்க்க நான் வருவேன். அது விதிமுறைகளுக்கு புறம்பானது என தெரிவித்தார். ஆகவே நான் பம்பாயில் படிப்பைத் தொடர்ந்துவார விடுமுறைகளில் பாபாவை பார்க்க வந்து கொண்டிருந்தேன். இதன்பிறகு என் வாழ்க்கையில் ஆன்மீகத்தை தேட ஆரம்பித்து, பல இதிகாச புராணங்களை படித்தேன். ஸ்வாமியின் கோடைக் கால முகாமில் கலந்து கொண்டு முதல் பரிசுக்கு தகுதியானேன். ஸ்வாமி "நீ என் குழந்தை ,  ஆகவே இந்த பரிசை வேறு ஒருவருக்கு தருகிறேன். உனக்கு பிறகு வேறு அரிய பரிசைத் தருகிறேன்" என்றார். அதன்படி தன் கையொப்பமிட்ட போட்டோ ஒன்றை பரிசாக அளித்தார்.


பகவானின் வழிகாட்டுதல்களின்படி இளங்கலை, முதுகலை மேலும் பல சிறப்பு படிப்புகளை படித்தேன். அமெரிக்கா சென்று படிக்கவும் வாய்ப்பு கிட்டியது. ஆனால் பகவானைப் பாராமல் இருக்க முடியாததால் , படிப்பை முடிக்காமல் பாதியில் திரும்பி வந்து விட்டேன். பிறகு பகவான் என்னை கணிணித் துறையில் படிக்கச் சொல்லவே அதையும் படித்தேன். உளவியல் கல்வியும் கற்றேன். அந்த சமயம் ஸ்வாமியின் மாணவர்கள் பம்பாயில் "பஜகோவிந்தம்" என்ற நிகழ்ச்சியை நடத்தினர். அது நேராக என் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்வாமி என்னை பல கல்விகள் கற்பித்து தயார்படுத்தியது, அவர் சேவையில் நான் ஈடுபடத்தான் என உணர்ந்தேன்.


🌹அன்னையான ஸ்வாமியின் அன்பும்... அவரது அன்னையின் அதீத அன்பும்:

என் உடல்வாகு பருமனாக இருந்ததால் ஸ்வாமி என்னை "பகோடா" என குறும்பாக அழைப்பார். என் உடல் இளைக்கச் செய்ய அவர் ஒரு உபாயம் சொன்னார்.   த்ரயீ பிருந்தான வளாகத்திலிருந்து 2  கிலோ மீட்டர் தூரத்தில் என்னை குடியிருக்க சொன்னார். "நீ தினமும் காலையில் அங்கிருந்து புறப்பட்டு, நடந்து த்ரையீ பிருந்தாவனம் வரவேண்டும். நான் வாசலில் உனக்கு இரண்டு குளுகோஸ் பிஸ்கெட்  தருவேன். அதுவே உன் காலைச் சிற்றுண்டி" இந்த ஏற்பாடு சரிவர அனுசரிக்கப்பட்டாலும், என் உடல் இளைக்கவில்லை. ஏன் தெரியுமா?.. 


அன்னையாம் சாயியின் அன்னை ஈஸ்வராம்மா மற்றும் வெங்கடம்மா, பார்வதி அம்மா இவர்கள் என்னை தம் குழந்தையாக பேணியவர்கள். இவர்கள் பகவானின் இந்த "குளுகோஸ்" வைத்தியம், என் பசியை போக்காது என்று பரிதாபப்பட்டு ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். அதன்படி பகவான் தரிசனம் தர  சாயி ரமேஷ் ஹாலுக்கு சென்றபின் என்னை அழைத்து வகைவகையான தோசை, பூரி, பரோட்டா என்ற சிற்றுண்டிகளை அளித்து சாப்பிட வைத்தனர். நானும் ஆனந்தமாக அவற்றை உண்டு கொண்டிருந்த வேளை... ஒருநாள்.. அன்னையர் களின் அரவணைப்பில் நான் ஆனந்தமாக உண்டு கொண்டிருந்தபோது, ஸ்வாமி அதை பார்த்து சப்தம் இட ஆரம்பித்தார். "நான் உன் உடல் இளைக்க முயற்சிகள் செய்தால், நீ இங்கு வந்து வயிறுபுடைக்க சாப்பிடுகிறாயே" நான் கூறினேன். "என்ன செய்வது ஸ்வாமி அன்னையர்களின் அன்பை நான் மறுக்க முடியவில்லை" இதைக்கேட்ட ஸ்வாமி , "இதற்குமேல் எந்த முயற்சியும் வேண்டாம்." என்றுகூறி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 



🌹பத்ரிநாத், கைலாஸ்... புண்ணிய க்ஷேத்ராடனம்:

எனது க்ஷேத்ராடன அனுபவங்கள் பகவானின் அனுக்ரஹங்கள். நான் பத்ரிநாத் செல்ல விரும்பியபோது, முதலில் மறுத்த ஸ்வாமி பிறகு என்னை அனுமதித்தார். அது அக்டோபர் மாத கடைசி தினங்கள். நான் சென்ற பஸ் ரிஷிகேஷ் வரை சென்றது. பத்ரி செல்ல பயணிகள் இல்லாததால் நான் அங்கேயே இறக்கி விடப்பட்டேன். செய்வதறியாது திகைத்த எனக்கு எதிர்பாராத விதமாக காரில் பயணம் செய்த இரு தம்பதியினர் ஒரு இடம் கொடுத்து பத்ரிக்கு அழைத்துச் சென்றனர். படிகளில் கால்ஊன்றி நடக்க முடியாத என்னை, கை அணைத்து வழி நடத்தினர். பத்ரிநாத்தின் திவ்ய தரிசனம் பர்த்திநாதன் அருளால் கிடைத்தது. இதன்பிறகு நமது நாட்டிலுள்ள பல திவ்ய க்ஷேத்ரங்களை தரிசித்தேன். 


இமயமலை எனது மனதின் இன்ப நினைவு. கைலாஷ் மானசரோவர் யாத்திரை என் நெடுங்கனவு. கைலாஷ் யாத்திரை தொடங்க நான் நினைத்தபோது, என் தகப்பனார் ஸ்வாயிடம் பேசி உத்தரவு பெற்றார். அனைவரின் பதைபதைப்புக்கு இடையே நான் யாத்திரையை தொடங்கினேன். விமான பயணம் முடிந்ததும் எங்கள் குழு ஒரு வேனில் கைலாஷ் நோக்கி புறப்பட்டது. வழியில் ஒரு காட்டாற்று வெள்ளத்தில் வேன் சிக்கி தடுமாறி உருண்டுவிடும் அபாயம். அந்த இக்கட்டான தருணத்தில் பாபாவை வேண்ட, ஒரு ஆபத்துமின்றி வேன் மெதுவாக அந்த ஆற்றைக் கடந்தது. பிறகு கைலாஷ் தரிசனம் ஆனந்தமாக கிட்டியது. 108 சிவலிங்கம் வைத்து வழிபட்டேன். அப்போது சிவ தாண்டவ ஸ்தோத்ரம் ஒலி நாடாவை போட்டேன். ஓடி வந்த சீன உதவியாளர் "மேடம் , நிறுத்துங்கள், மலையில் சிவத் தாண்டவத்தால் பனிப் பொழிவு அதிகரித்துள்ளது என்றவுடன் ,ஒலி நாடாவைஅணைத்துவிட்டேன்.என்னுடன் வந்த ஒரு பக்தருக்கு காலில் பனிப்புண் ஏற்பட்டது. அது குணமாகாவிட்டால் காலை வெட்டி எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறப்பட்டது. நான் பாபாவை துதித்து , விபூதியை தினமும் அவர் கால்களில் தடவியதில், ஆச்சர்யப்படத் தக்கவிதத்தில் அவர் கால் காயம் குணமானது. 


🌹சாய்ராம் சாய்ராம் என்று கூப்பிட.... வந்தார் ஸ்வாமி காப்பாற்றிட:

கைலாஷ் தரிசனம் முடிந்தது கீழே இறங்கும் சமயம், Landslide எனப்படும் பனிச்சரிவு ஏற்பட்டது. அனைவரும் வேகமாக நடக்க, என்னால் அந்த மேடு பள்ளமான இடங்களில் நடக்கமுடியவில்லை. "நான் இங்கேயே இருந்து கொள்கிறேன், நீங்கள் செல்லுங்கள்" என கூறினேன். மற்றவர்கள் அதை ஒப்புக் கொள்ளாமல் என் கை அணைத்து, நடந்து செல்ல எனக்கு உதவினர். இவ்வாறு எவ்வளவு தூரம் செல்லமுடியும் என நினைத்து, சாய்ராம் சாய்ராம் சாய்ராம் என்று ஜெபிக்க ஆரம்பித்தேன். தூரத்தில் இருந்து ஷெர்பா ஒருவர் என் அருகில் வந்தார். தமது வலிமையான கைகளால் என்னைப் பற்றி, "பனியில் என் கால்தடம் பதிந்துள்ள இடத்தில் உன் காலை வைத்து நட" என்று கூறி என்னை வழி நடத்தினார். ஆச்சர்யப்படத் தக்கவிதத்தில் நாங்கள் யாவருக்கும் முன்னதாக பத்திரமான இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த ஒரு டீ கடையில் தேனீர் அருந்திவிட்டு, திரும்பிப் பார்த்தால் அவர் காணவில்லை. உதவி செய்து விட்டு எதையும் எதிர்பாராமல் அவர் சென்றுவிட்டார். பிறகு காட்மாண்டு வந்து என் தகப்பனாரிடம் பேசினேன். 


அப்போது தான் தெரிந்தது வழித் துணையாக வந்த ஷெர்பா நமது இருதயவாசியான பாபா என்பது. பாபா கூறினாராம் "என்ன செய்வது, அவள் சாய்ராம் சாய்ராம் என ஓயாமல் அழைத்தாள். ஆகவே நான் சென்று காப்பாற்ற வேண்டியதாயிற்று". இதுமட்டுமல்ல, எனது ஸ்விடசர்லாந்து பயணத்தின் போது ஸ்வாமி என் சுமைகளை சுமந்து, வழி நடத்தி ரட்சித்த கருணையை என்னென்பது. என் பயண திட்டப்படி பாரீஸ் விமான நிலையத்தில் இறங்கி, பிறகு ரயில் பயணம் செய்து , நான் தங்கும் சாயிபக்தர் இல்லம் செல்ல வேண்டும்.ரயில் நிலையம் சென்று நுழையும் அந்த கணத்தில் நான் பயணிக்க வேண்டிய ரயில் என் கண் எதிரே புறப்பட்டு சென்று கொண்டிருக்க செய்வதறியாது திகைத்தேன். அப்போது நீண்ட முகமும், மஞ்சள்நிற கோட்டும் அணிந்த ஒரு நபர் என்னை அணுகினார்". ரயிலைத் தவறவிட்டு விட்டாயா, கவலைப்பட வேண்டாம் "நீ அடுத்த ரயில் பிடித்து ஜெனீவா செல்.அந்த ஸ்டேஷனும் நீ தங்கப் போகும் இடத்திற்கு அருகில்தான் இருக்கிறது" என்று கூறி பாரீஸில் நான் தங்க இடம் கொடுத்த நபருக்கு தொலைபேசியில் தகவலும் கொடுத்தார். 


பிறகு என் லக்கேஜ் அனைத்தையும் தானே சுமந்து ஜெனீவா செல்லும் ரயிலில் என்னை ஏற்றிவிட்டார். காலையிலிருந்து நீ ஒன்றும் சாப்பிடவில்லை, என்று கூறியது மட்டுமல்லாமல், ரயிலில் உள்ள உணவகத்தில் இருந்த சைவ உணவு வகைகளை சுட்டிக் காட்டி என்னை உணவருந்தச் செய்தார். அவரது சேவைகளுக்கு நான் பணம் அளிக்க முயன்றபோது அதை வாங்க மறுத்து விட்டார். நான்ஜெனிவா சென்றபின் என் புரவலர் வீட்டில் இதைச் சொன்னபோது அவர்கள், இது ஸ்வாமியின் கருணைக்கரங்களின் திருவிளையாடல் அல்லவா என்றனர். பின்னர் பாபாவும் இதுபற்றி கூறும்போது "என்ன செய்வது. அவள் தனிமையில் அந்த ரயில் நிலையத்தில் நின்றுகொண்டு சாய்ராம் சாய்ராம் என்று கூப்பிடும்போது, நான் எப்படி உதவாமல் இருக்க முடியும்." பாரீஸிலிருந்து, ஸ்விட்சர்லாந்து சென்றேன். ஸ்வாமியின் பக்தர்கள் என்னை நன்கு கவனித்துக் கொண்டனர். ஸ்வாமி கூறி இருந்தார் ஸ்விட்சர்லாந்தும் இமயமலைப் பிரதேசம் போல என்று. ஆனால் நான் சென்றபோது அங்குள்ள மலைகளில் பனிப் பொழிவை காண முடியவில்லை. ஸ்வாமி என்னை ஏமாற்றிவிட்டார் என நினைத்தேன். அப்போது ஒர்நாள் இரவு மிகுந்த பனிப்பொழிவு நிகழ்ந்து, மறுநாள் காலையில் பார்த்தால் மலைகள் அனைத்தும் பனி ஆடை உடுத்தியபோல் பளபளத்தன. ஏப்ரல் மாதத்தில் அத்தகைய நிகழ்வு அங்கு நடந்தது பலருக்கு வியப்பாக இருந்தது. 


மேலும் ஸ்விஸ்ஸர்லாந்தில் நான் இருந்தவரையிலும், பிரயாணத்தின் போதும் பூரி மற்றும் யோகர்ட் உணவு வகைகள் எனக்கு அனைத்து நேரங்களிலும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகள் யாவிலும் பாபாவின் கருணைக் காப்பைக் காண முடிந்தது. இதன்பின் ஸ்விட்சர்லாந்த் எனக்கு இரண்டாவது தாயகமாகிவிட மேலும் ஒன்பது முறை அங்கு சென்று வந்தேன். இந்த கால இந்த கால கட்டத்தில்தான், என்னால் மேடைப்பேச்சு பேச முடியாதென்ற அவநம்பிக்கையை ஸ்வாமி அழித்து, என்னை ஒரு மேடைப் பேச்சாளராக மாற்றினார். சில காலம் சென்றது. என் குடும்ப பின்னணியின்படி ஒரு தொழில் தொடங்க நினைத்தேன். அதற்காக வங்கியில் கடனும் பெற்றேன். 

 மிகவெற்றிகரமாக தொழில் நடந்த வேளை, என் தாயாரின் கண் பார்வை நலிவடைய அதை சரிசெய்ய முழு நேர கவனம் அதில் செலுத்த நேர்ந்தது. அதனால் தொழிலில் கவனிப்பு முழுவதுமாக குறைந்தது.இதனால் ஏற்பட்ட தொழில் சரிவில் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட, என் வங்கிக்கடன் வட்டி மற்றும் பல சுமைகளுடன் விஸ்வருபம் எடுத்தது. வங்கியினர் நெருக்கடி தந்தனர். என் நிலைகண்ட வங்கித் தலைவர் என்னை அழைத்துப் பேசினார். எனக்கு அன்னையிடம் இருந்த பற்று கண்டு அவர் மனம் நெகிழ்ந்து, அனைத்து வட்டிகளையும் தள்ளுபடி செய்து , வாங்கிய கடன்மட்டும் கட்டுப்படி கூறினார். பகவானின் சங்கல்பத்தினால் நான் அந்த இக்கட்டிலிருந்து மீண்டேன். ஆசிரியர் பணி என் நெடுநாளைய கனவு. பகவானின் அருளால் ஆசிரியர் வேலைக்கும் விண்ணப்பிக்க, மாறாக கல்லூரி முதல்வராகவே பதவி கிடைத்தது. 


🌹1972ம் ஆண்டு சிவராத்திரி - பாபா  ஜோதிர்லிங்கம் உற்பவிப்பு:

1972ம் ஆண்டு சிவராத்திரி. புட்டபர்த்தி சென்றேன். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஸ்வாமி லிங்கோத்பவம் நிகழ்வை நிறுத்தி இருந்தார். ஸ்வாமி அப்போது பெங்களூரில் இருந்தார். ஆயினும் வழக்கம்போல பர்த்தியில் சிவராத்திரி பஜன் நடை பெற்றுக் கொண்டிருந்தது.


திடீரென கார் வரும் சப்தம் கேட்டது. ஆம் பாபாதான் வந்து கொண்டிருந்தார். தமது ஆசனத்தில் அமர்ந்த பாபா, அனைவரும் எதிர்பாராவண்ணம் லிங்க உத்பவம் நிகழ்த்த, அனைவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். ஸ்வாமி அந்த லிங்கத்தை மகளிர் பக்கத்தில் முதலில் அமர்ந்திருந்த எனக்கு காண்பித்தார். "இது ஜோதிர் லிங்கம். இதனுள்ளே மாறி மாறி சுற்றிவரும் ஒளிக் கற்றைகளைப் பார். அவை மாறி மாறி வரும் உலக சிருஷ்டிகள் ஆகும்" என்றார்.

அன்று இரவு முழுவதும் ஜோதிர் லிங்கத்திற்கு என்னை காவலாக நிற்கச் சொன்னார். மறுநாள் காலை. பாபா என்னிடம் கூறினார். "இந்த ஜோதிர் லிங்கத்தை தரிசித்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது. மோட்சம்தான். உனக்கு மோட்சம் வேண்டுமா" நான் கூறினேன்"பாபா உங்களுக்கு எது சம்மதமோ அதைச் செய்யுங்கள்" என்றேன். அப்போது பாபா கூறினார் "நீ பெங்களுர் சென்று நாடி சோதிடம் பார்த்து வா". 

பாபாவின் உத்தரவை ஏற்று, நான் பெங்களூர் சென்று நாடி சோதிடரை பார்த்தேன். அவர் கூறியதாவது. "உன் முகத்தில் ஒரு ஒளிவட்டம் தெரிகிறது. நீ வழிபடும் இறைவன் மிக மிக உயர்ந்தவர். இந்த காலகட்டத்தில் உன் உயிரைப் பறிக்க எமன் வந்தான். அதற்கு உன் தெய்வம் ஸ்ரீ சத்யசாயி இவளது செல்வத்தை எடுத்துக்கொள், இவளை விட்டுவிடு என்றுகூற, யமன் உன்னை விட்டுவிட்டுச் சென்றான். இனி உன் வாழ்க்கை அவர் வழிகாட்டுதல்படி நடக்கும்" அதன்படியே இப்போது என் வாழ்வு பகவானின் சித்தப்படி இயங்கிக் கொண்டுள்ளது. பகவான் எனக்கு எப்போதும் பாதுகாப்பாக உள்ளார். எனக்கு பெரும் பொருள் நஷ்டம் ஏற்பட்டபோது அவர் நேரடியாக அதை தீர்க்கவில்லை. அது அவரது கருணை. என் கர்ம வினைகளை தீர்க்க நான் அனுபவிக்கவேண்டிய எதிர்வினை. அதில் அவர் தலையிட்டு என் கர்ம வினைகளின் சுமையைக் கட்டவில்லை. இதுவும் ஸ்வாமியின் அருட் கடாக்ஷமே. சாய்ராம்.

🌻இந்த மனம் உருக்கும் நிகழ்வுகளை கூறிய ராணி ஜாவா அவர்கள் கீழ்க்காணும் அழைப்பை நம் அனைவர்க்கும் விடுத்துள்ளார். "அனைவரும் புட்டபர்த்தி வாருங்கள். பகவானின் தரிசனத்திற்காக பலமுறை நாம் மணிக் கணக்கில் காத்திருந்த காலம் உண்டு. இப்போது பகவான் நமக்காக காத்திருக்கிறார். வாருங்கள் அவர் தரிசனம் கண்டு உய்வடைவோம்." 🌻


ஆதாரம்: பம்பாய் தர்மக்ஷேத்ராவின் 50வது ஆண்டு நிறைவுவிழாவில் செல்வி.ராணி ஜாவா அவர்களின் உரை.

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 



.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக