தலைப்பு

சனி, 26 ஜூன், 2021

தன் ஒவ்வொரு அசைவிலும் ஓராயிரம் கருணை நிரப்பிடும் தெய்வ சாயி!


ஒவ்வொரு ஸ்வரமும் நாதத்தை குறிப்பது போல இறைவன் சத்ய சாயியின் ஒவ்வொரு அசைவும் கருணையையே குறிப்பிடுகிறது என்பதை உள்ளூற உணர்த்தும் காருண்ய பதிவு இதோ.. 

ஊரிலேன் காணி இல்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரில் உன் பாதமூலம்
பற்றினேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே
என் கண்ணனே கதறுகின்றேன் 
யாருளர் களைகண் அம்மா
அரங்க மா நகருளானே.

- - நாலாயிர திவ்யப் பிரபந்தம்

தீனர்களின் கூக்குரலாக ஆழ்வார் இதை ஸ்ரீ ரங்கனிடம் சமர்ப்பிக்கிறார் இப்படிப்பட்ட தீனர்கள் , அபலைகள், திக்கற்றவர்களின் துயர் துடைக்க அவதாரம் எடுத்த ஸ்ரீ சத்யசாயி பகவான் , வைத்திய நாதராய் , தன்வந்திரியாய், பல்லாயிரக் கணக்கான மக்களின் பிணி தீர்த்த வரலாறு நெடியது.தம்மை நாடியவர் நாடாதவர் , துதித்தவர், நிந்தித்தவர் அனைவரையும் பாகுபாடின்றி- ஆயிரம் அன்னையின் அன்புடன் ஆதரித்த வள்ளல் அல்லவா பாபா.  "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்கிறார் வள்ளலார் ராமலிங்க அடிகள்.  உலக மக்கள் என்னும் பயிரை வாட விடாமல் அருள் மழை பொழிந்து செழிக்க வைப்பவர் அன்றோ நமது பாபா. அவரது   கருணா    சமுத்திர சரித்திரத்தில் மற்றுமொரு ஏட்டை புரட்டி , ஐயனின் திவ்ய லீலையைக் காண்போமா

தேவய்யா, ஒரு சிறந்த சாயி பக்தர். அவர் கர்னாடக மாநிலத்தில் ஒரு சிறிய நகரில் வசித்து வந்தார். மனைவியை இழந்த அவருக்கு ஒரு மகனும் மகளும் இருந்தனர். உடல் உறுப்புகளை நலிவடைவடையச் செய்து, செயலற்றதாக்கும் Alzhimer disease என்ற வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த தேவய்யாவை அவரது மகள் தான் கவனித்துக் கொண்டிருந்தாள்.


ஆகவே அவள் 10ம் வகுப்புடன் தன் படிப்பை நிறுத்திவிட , தேவய்யாவின் மகன் நரேஷ் பெங்களுரில் பாபா கல்லூரி மாணவனாக பயின்று வந்தான். இந்நிலையில் தேவய்யாவுக்கு மற்றும் ஒரு பேரிடியாக இதயக் கோளாறும் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை பெற அவர்  பெங்களூர்ஸ்ரீ சத்யசாயி உயர் சிறப்பு மருத்துவ மனை, சென்றார் அங்கு அவருக்கு செய்யப்பட்ட சோதனையின் முடிவு பயங்கரமாக இருந்தது. அவரது இருதய வால்வுகள் அனைத்தும் அடைபட்டு மரணத்தின் விளிம்பில் இருந்ததால் , உயிர் பிழைக்க உடனடியாக  அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள புட்டபர்த்தி ஸ்ரீ சத்யசாயி அதி சிறப்பு மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கப் பட்டார்.

🌹பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து:

பெங்களூரிலிருந்து , புட்டபர்த்தி செல்ல தேவய்யாவுக்கு அப்போது இருந்த வசதிகள் என்ன? துணைக்கு மகளும் , கையிலே வெறும் 500 ரூபாயும் தான். பர்த்தி செல்ல வழிச் செலவு, அங்கு தங்குமிடம், உணவு போன்ற அத்யாவசிய செலவுகளுக்கு இந்த சொற்ப பணம் போதுமா?  தேவய்யாவிற்கு திக்பிரமை ஏற்பட்டது. உடனிருந்த மகன் அவரை தேற்றி "நான் இருக்க பயமேன்" என்ற பாபாவின் அபயத்தை கூறி, அவரை புட்டபர்த்திக்கு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்.


🌹தரிசன தீஜோ பகவான்.. பரம தயாளோ பகவான்:

பர்த்தி வரும் அன்பர்கள் தங்குமிடம் தேடி அலையாமல், தாய்வீடாம் பிரசாந்தயில் தங்கவதற்கு பாபா பரிவுடன் அமைத்துள்ள ஷெட்டில் அவர்களுக்கு இடம் கிடைத்தது. நாம் சென்று கோயிலில் வணங்கும் தெய்வம், தான்  உவந்து தளிர்நடை பயின்று பக்தர்களுக்கு இடையே  தரிசனம் தரும் விநோத கோயிலாம் பர்த்தியில் அப்போது பகவான் தரிசன நேரம். தேவய்யா சாயி குல்வந்த் வளாகத்தில் அமர்த்தி வைக்கப்பட்டார். ஐயனின் கருணா  கடாட்சத்தினால் அவருக்கு முதல் வரிசையில் இடம் கிடைத்தது. தம் நிலையை விளக்கி எழுதிய கடிதத்தை சட்டைப்பையில் வைத்திருந்தார். இதோ வந்துவிட்டார் பாபா. மந்த ஹாச புன்னகை, மெல்லிய நடை, ஆசீர்வாத கை அசைப்பு. பக்தர்கள் இதயத்தில் சாயிராம் சாயிராம் என ஜெபித்து , கைகள் குவித்து வணங்கினர். தேவய்யா அமர்ந்திருந்த இடத்திற்கு அருகாமையில் பாபா வந்துவிட்டார். தேவய்யா தமது சட்டைப் பையில் கைவிட்டு கடிதத்தை  எடுக்க முயற்சித்தார்.இயலவில்லை. அதற்குள்  அவரைக் கடந்து சிறிது முன்னே சென்ற பாபா தமது முகத்தை சற்றே திருப்பி தேவய்யாவின் சட்டைப்பையை விரலால் சுட்டிக் காட்டினார். இதற்கிடையில் பக்கத்திலிருந்த வேறொரு நபர் அக்கடிதத்தை எடுத்து பாபாவிடம் கொடுத்தார்.

🌹வாங்கிய வேகத்தில் திரும்பிய கடிதம் வாட்டமுற்றார் தேவய்யா:

கையில் வாங்கிய கடித்தை இப்படியும் அப்படியும் திருப்பி , பின்னர் அதை தேவையாவின் மடியில் எறிந்தார். தேவய்யாவின் மனம் வாட்டமுற்றது. பாபாவும் தம்மை கை விட்டு விட்டதாக நினைத்து வருந்தி, மடியில் வீழ்ந்த கடித்தை எடுத்தார்.பாபாவின் செயல் நம்மால் விளங்க இயலாத ஒன்று.


அந்தக் கடிதத்துடன் , அவரை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்படியான ஒரு பொருளும் இருந்தது.  ஆம் அது ஒரு 500 ரூபாய் நோட்டு. தங்க இடம் கொடுத்து, செலவுக்கு பணமும் கொடுத்த பாபா , அவரது உணவிற்கு செய்த ஏற்பாட்டை என்னென்பது.? தரிசனம் முடிந்தவுடன் தேவய்யா ஹாலுக்கு வெளியே தன் மகள் வரவுக்காக காத்திருந்தார். அங்கு அவரை எதிர்பாராதவிதமாக ஒரு உறவினர் சந்தித்தார். தமது நண்பர்களுக்காக  சாப்பாடு டோக்கன்கள் வாங்கியதாகவும் அவர்கள் வராததால் இவரிடம் கொடுப்பணாகவும் கூறறார். தேவய்யா பாபாவின் பரம கருணையை நினைந்து வியந்தார்.

🌹பார்வை ஒன்றே போதுமே பறந்திடுமே நம் வேதனை:

மறுநாள் மருத்துவ மனை சென்ற தேவய்யாவிற்கு, அறுவைச் சிகிச்சைக்கு முன் செய்யப்படும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, முடிவுக்காக இரண்டு நாட்கள் காத்திருந்தார். முடிவுகளை ஆய்வு செய்த மருத்துவர்கள் வியந்து கண்டதென்ன? பெங்களுரில் பரிசோதனையில் கண்டறியப்பட்ட இதய வால்வு ஓட்டை பர்த்தீசன் பார்வையால் முற்றிலுமாக அடைபட்டு,  இதயம் இயல்பாக இயங்குவதைக் கண்டனர். பிறகென்ன.. அறுவைச் சிகிச்சை ஐயனின் கண் அசைவில் ஓடி ஒளிந்துகொண்டது.


தேவய்யா தனது தேவுடுவைப்பற்றி கூறியதாவது.. தரிசனத்தில் பாபா பார்த்தது என் சட்டைப் பையை அல்ல.  என் இதயத்தை. அதை இப்போது நான் உணர்கிறேன்.

கண் அசைவில், கை அசைப்பில், புன் சிரிப்பில், எண்ணிலா மாந்தரின் இன்னல் நீக்கி இன்புறச் செய்யும் தன் நிகர் இல்லாத பாபாவின் தாள் வணங்கி அருள் பெறுவோம்.

ஆதாரம்: Naresh(Devayya's Son) Personal Narration 
தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

🌻 வீசி எறிந்த விரலில் செலவுக்கு பணத்தையும் வைத்து அந்தக் கடித வடிவில் கருணைத் தூது அனுப்பிய இறைவன் சத்யசாயியின் பேரன்பை என்ன சொல்லி வியப்பது? ஆனந்தமாய் அழ ஆரம்பிக்க கடலின் ஆழம் எல்லாம் பக்தர்களின் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிடாதோ! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக